Friday, 29 January 2021

விரல் சூப்பி (சிறுகதை )


ன்றாம்   வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை           என்னுடன்தான் பள்ளிக்கூடத்திற்கு  வந்து போகிறான். அந்த காலத்திலிருந்து  ஐந்தாம் வகுப்புவரை என்னுடன் படித்து வரும் ரசாமாணிக்கம் ஒரு நாள் கூட முன் வரிசையில் உட்கார்ந்ததில்லை. அதற்கான காரணம் பலவாக  இருந்தது. அவற்றில்  முக்கியமானதாக அவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்பதுதான். மற்றவை என்பது அவனது உடை சம்பந்தப்பட்டதுதான்.

 அவன் எப்போதும் கால் சட்டை போட்டதில்லை.பெரும்பாலும் இடுப்பில் ஒரு பழைய  துண்டை கட்டியிருப்பான். உடலின் மேற் பரப்பில் அவன் மேல் சட்டை போடுவதில்லை. காரணம்  என்பது எளிதானதுதான். அவன்  மேல் சட்டை போடக்கூடாது என்ற ஓரவஞ்சனை அல்ல, மாறாக சட்டைத்துணி மணிகள் வாங்க அவனிடத்தில் காசு இல்லை என்பதுதான்.  ஒன்றாம் வகுப்பிலோ, அல்லது இரண்டாம் வகுப்பிலோ என்று நினைக்கிறேன் ராசமாணிக்கம் மேல் சட்டை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் வந்திருக்கிறான்.இன்னமும் எனக்கு  ஞாபகம் இருக்கிறது. ஆனால் அந்த சட்டை அளவில் சிறியதாய் இருக்கும். அதுவும்கூட காமராசர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட   இலவச  சீருடையாகும், அவைகள் எல்லாம் ஒரே அளவில் தைக்கப்பட்டதாகும். எந்த வயது பேதமும் இல்லாமல் ஒரே அளவாகத்தான் இருக்கும், குட்டையானவ்ர் ,நெட்டையானவர் அனைவருக்கும் ஒரே  விதமான சட்டைதான். சிலருக்கு இது ஓரளவு பொருத்தமாக இருக்கும், உயரம் குறைவானவர்கள் , மெலிந்த உடலமைப்பு உள்ளவர்களுக்கு  குடு குடுப்பைக்காரன் மாட்டிக்கொண்டு வரும்  தொளதொள சட்டைப்போலத்தான் இருக்கும், அதைத்தான் எல்லோரும் போட்டுக்கொண்டு வருவார்கள். ஒருவருக்கும் சட்டை வாங்க காசு பண வருமானத்திற்கு  வழியில்லை. அதை  ராசமாணிக்கம் போட்டுக்கொண்டால்,பெண்கள்  ரவிக்கை  அணிந்ததை போல இருக்கும், ஆனாலும் ராசமாணிக்கம்  விட மாட்டான். அந்த இலவச சீருடையின் மேல் சட்டையை மட்டும் போட்டுக்கொள்வான்.அதோடு மட்டுமின்றி  அவனுடைய மேல் சட்டையிலிருக்கும் பொத்தான்கள்  அத்தனையையும் பல்லால் கடித்து துப்பி விடுவான். அதனால் அவனுடைய  சட்டையில் எப்போதும் பொத்தான்கள் இருப்பதில்லை . பொத்தான்  உள்ள இடத்தில் எப்போதும், பொத்தல் பொத்தலாகவே இருக்கும்.அதைப்பற்றி எல்லாம்  கவலைப்படாமல் சட்டையின் காலரை வளைத்து கடித்து  மென்று கொண்டிருப்பான்.

 உடல் நல்ல பருமனாக இருக்கும். இடுப்பில் கட்டியிருக்கும் துண்டு  அவனுடைய தொப்புளை விட்டு கீழாக இருக்கும் . மழை வற்றினாலும் வற்றும். ஆனால் ராசமாணிக்கத்தின் மூக்கிலிருந்து சளி வருவது நிற்பதில்லை .ஒரு மூக்கிலோ அல்லது  இரண்டு மூக்கிலுமோ காலத்திற்கு ஏற்றார்போல மஞ்சள் நிற வடிவத்தில் கெட்டியான பிசினை போல சளி தொங்கிக்கொண்டிருக்கும். அவன் என்னொடு பேசிக்கொண்டிருக்குபோதே அது வெளியிலிருந்து பாம்பு வெளி வருவதை போல மெல்ல எட்டிப்பார்க்கும் கொஞ்சம் கொஞ்சமாக மூக்கிலிருந்து கீழிறங்கி உதட்டை வந்ததையும் “சட்டென “மிக லாவகமாக அதை ராசமாணிக்கம் உறிஞ்சி உள்ளிழுத்து விடுவான். உள்ளிழுத்தவன் அதை பெரும்பாலும் விழுங்கிவிடுவான்.

 ராசமாணிக்கத்திற்கு பிடித்தமான நண்பன் நானாக இருந்தான்.அவனை சேரி பையன் என்பதற்காக எல்லோரும் வெறுத்தார்கள்.அவனது சாதியை சொல்லி எல்லோரும் திட்டினார்கள். அவன் அடிக்கடி ‘குசு’ விடுகிறான் ,அது கடுமையாக வகுப்பறையே நாற்றமெடுக்கிறது என்பதற்காக    இரண்டாம் வகுப்பு சண்முகசுந்தரம் ஆசிரியர் அவனை புழுத்தமாடு தின்கிற பயலே” என சொல்லி பிரம்பால் அவனுடைய உடம்பில் கண்டமேனிக்கு அடிப்பார்.ராசமாணிக்கம் ‘அம்மா’ ‘அப்பா ‘ என வலியில் துடிப்பான்.பெரும்பாலான மாணவர்கள் சிரிப்பார்கள்.சிலர் ஏதும் பேசாமல் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் மேல்சாதி மாணவர்களாய் இருந்தார்கள். ஆசிரியர்   தனது சாதி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள அடித்த அடியின் தழும்பு அவன் உடலெங்கும்  பட்டை பட்டையாக இருக்கும். இதுபோல  அவர் அடிக்கும் அடிகளையெல்லாம் அவன் தாங்கிக்கொள்ள பழகிகொண்டான். அவன் அடிவாங்கும் போதெல்லாம் அவனுக்காக வருத்தப்படும் ஒரு நண்பனாக இருந்தேன். ஒவ்வொரு தடவையும் அவன் சண்முகசுந்தரம் ஆசிரியரிடம் அடிவாங்கி திரும்புகின்ற அவன் என்னைநோக்கியே வரும் அவன் என்னருகில் அமர்வதை எல்லா மாணவர்களும் உன்னிப்பாக பார்ப்பார்கள்.வந்தவன் தரையில் உட்கார்ந்தவுடன் ஒரு தாயற்ற குழந்தையின் பார்வையில் ததும்பும் ஏக்கமும் பரிதவிப்பும் அவன் கண்களில் ததும்பியது. அவன் படிக்கவில்லை என்பதற்காக வாங்கிய அடிகளைக்காட்டிலும்,அவனுடைய பரிதாபமான தோற்றமே அவனை எல்லோருக்கும் அவன்மீதான  வெறுப்பை ஏற்படுத்தியது. அவனுடைய தகப்பானாருக்கு கல்வி குறித்தெல்லாம் ஏதும் தெரியாது.  அவர்தான் மாரி. ஊரில் பெரிய குடித்தனக்காரகளுக்கு  பண்ணையாக  வேலைக்கு  செல்வார்.கூடவே ஊரில் வேட்டிவேலையும் செய்து வந்தார்.  மாரி மிக உயரமான மனிதர்.பெருத்த உடலமைப்பை கொண்டவர். இடுப்பில் கீழ்பாகு அணிந்திருப்பார். நல்ல கருப்பான உருவம். அவருக்கு  ராஜமாணிக்கம் ஒரு மகன்தான். மகள்கள் இருந்தார்களா என்று தெரியவில்லை .பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள்.வருபவர்கள் சும்மா போகிராகளா என்றால் அப்படி  இல்லை!.மாறாக  வாத்தியாரிடம் என் மகன எவ்வளவு வேணுமின்னாலும் சக்கையா அடிங்க வாத்தியாரே! .ஆனால் அவன் ‘ஆனா’ ‘ஆவன்னா ‘ படிக்கணும் என கொளுத்திபோட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.இதுவரை லேசா அடித்துக்கொண்டிருந்த வாத்தியார்கள் பெற்றோர்கள் இப்படி தங்களுக்கு உத்தரவு கொடுத்தபின்பு அநியாயத்திற்கு  அடித்துக்கொல்கிறார்கள்.

இப்படி ஈவு இரக்கமில்லாமல் அடித்ததால்தான் ராசேந்திரன் என்ற ஏன் சக மாணவன் காட்டாமணக்கு விதையை சாப்பிட்டுவிட்டு  சாகப்போனான். நல்லவேளை அவன் கூட்டாளிகள் வீட்டிலபோயி  எல்லாத்துகிட்டயும் சொல்லி  அழைத்துவந்து அவனுடைய வாயில் புளியை கரைத்து ஊற்றி  காப்பாற்றினார்கள்.இல்லன்னா அவன் செத்தாலும் செத்திருப்பான்!. நல்ல வேளை அவனை எல்லோரும் காப்பாற்றினார்கள்  எங்க;ள் நிலைமை என்பது வேறு, வாத்தியார் என்ன வேணும்னாலும் செய்யலாம். கொன்னாலும் யாரும் வந்து கேள்வி கேட்க நாதி இல்லாமல் இருந்தோம்.

 ஆனால் ராசமாணிக்கம் நிலைமை என்பது வேறானது.அவனுடைய அப்பா மாரி ஒருநாள் கூட பள்ளிக்கூடத்திற்கு வந்து வாத்தியார்கிட்ட என  மகனுக்கு நல்லா படம் சொல்லிக்கொடுங்க என சொல்லியதில்லை. நானும் பார்க்கிறேன் ,ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை  ஒன்றாகத்தான் என்னோடு வகுப்புகள் மாறி மாறி வருகிறான்.\மாரி ஒருநாள்கூட பள்ளிக்கொடத்தின் பக்கம் வந்ததேயில்லை. ராசமாணிக்கம் அவனிடம் உள்ள இன்னொரு விரல் சீப்பும் பழக்கம்.அவன் எப்போதும் விரல் சூப்பிக்கொடிருப்பான்.இதற்காகவும் பலதடவை வாத்தியாரிடம் பூசை வாங்கியிருக்கிறான். பள்ளிகூடத்தில் உட்கார்ந்திருப்பவன் வாத்தியார் தன்னை உற்றுப்பார்த்தால் வாயில் வைத்துள்ள விரலை சடக்கென்று எடுத்துவிடுவான். அல்லாவிட்டால் கீழை குனிந்துக்கொண்டு விரலை தீவிரமாக சூப்பிக்கொண்டிருப்பான் .சிலர் ராசமாணிக்கத்தை  விரல் சூப்பி என அழைக்கலாயினர். ஆனால் அவன் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டான் . எனது அருகில் அமர்ந்திருக்கும் அவன்  வகுப்பு ஆரம்பித்தவுடனேயே  உட்கார்ந்தபடியே தூங்கத்தொடங்கிவிடுவான். வாத்தியார் அவன் தலையில ஒரு குட்டு போடுறா! என்பார். தலையில் குட்டுபோட்டவுடனேயே  சடக்கென எழுந்து உட்காருவான்.ஆனால் மீண்டும் மீண்டும் தூங்க தொடங்கிவிடுவான் ராசமாணிக்கம். சரியாக மதியான சாப்பாட்டு மணி அடிக்கதொடங்கியதும்,அவனுடைய தூக்கமெல்லாம்  கலைந்துபோகும்,பட்டென்று அவனுடைய பையில் வைத்திருக்கும் பழைய சுதேசி வட்டியை வெளியே எடுத்துவைத்துக்கொண்டு  தற்போது மூன்றாம் வகுப்பு உள்ள அறைக்கு தெற்குபுறமாக ,ஆறு ,ஏழு,எட்டு வகுப்புகள் கொண்ட நீண்ட  வரண்டாவில்தான்  இரட்டை வரிசையில் நேரெதிரே  மாணவர்களை அமரவைத்து சாப்பாடு போடுவார்கள்.  நம்ம சுத்தமல்லி தியாகராசன்தான் சாப்பாடு போடுவார். நாள் ஒன்றுக்கு ஒரு சாப்பாடு வீதம் மாறி மாறி போடுவார்கள். ஒரு நாளைக்கு கோதுமை சாதம் கூடவே சியாசம்,ஒருநாளைக்கு கஞ்சி சோறு என மாறி போடுவார்கள். மாணவர்களுக்கு அவர்கள் போடும் சாதம் போதுமானதாக இருக்காது. குறிப்பாக ராசமாணிக்கம்  தனக்கு சோறு போதவில்லை என அடிக்கடி சொல்வான்.    ராசாமாணிக்கம் பள்ளிக்கூடம் வருவதே சோறு சாப்பிடத்தான். அவனுக்கு வீட்டில் போதுமான அளவுக்கு சோறு கிடைப்பதில்லை . வயதான அவனது அம்மாவால் உலக்கையை பிடித்து கம்பு இடித்து சோறாக்கி ,மொளகாய் அரைத்து குழம்பு வைப்பது மிக சிரமமான காரியமாய் இருந்தது . அப்படி கஷ்டுபட்டு ஒரு வேளை  சாப்பாட்டோடு விட்டுவிடுவார்கள்.

 

அவனுக்கும் எனக்கும் ஆழ்ந்த சிநேகிதம் இருந்தது. “வாடா மாணிக்கம் எங்க கொல்லிக்கு போவோம்” என அவனை அழைத்துக்கொண்டு எங்கள் மேலைக்காட்டு கொல்லைக்கி போய் கள்ளைக்கிழங்கை நோண்டி தின்போம். கம்பங்கதிரை ஓடிச்சு கையால் நிமிட்டி தின்போம். பச்சைகம்பு அவ்வளவு ருசியாய் இருக்கும்.பச்சைக்கம்பை  மண் வர  ஓட்டில்போட்டு வறுத்து உரலில் போட்டு  இடித்து முறத்தால் புடைத்து விட்டால் அதை எல்லோரும்  ‘கம்பு அவல்’ என்பார்கள் .அதற்கு இணையான சுவை உலகத்தில் இல்லை.அவ்வளவு ருசியாய் இருக்கும், சிறு தானியங்களிலேயே  கம்புக்குத்தான் முதல் மரியாதை.கம்பை வித விதமான பண்டம் செய்து சாப்பிடுகிறார்கள்.கம்பு புட்டு,கம்பு இட்டிலி ,கம்பு அடை ,கம்பு வடை கம்புசோறு என எத்தனை ரகம் ,சொல்லிமாளாது, கால்காணி ,அரைகாணி சின்ன சின்ன  ,ஏழை பாழை  வீட்டில் விளையும்  அரை மூட்டை ,ஒரு மூட்டை  கம்பைஎல்லாம் அடுக்கு பானையில் பத்திரப்படுத்திக்கொண்டு கோடைக்காலத்தில்  இடிச்சு தண்ணியிலே மொண்டு போட்டு எல்லோரும்  காலையில  சிதோசி குண்டுல எடுத்து போட்டுக்கொண்டு மிந்திரிக்கொல்லைக்கு  போயி  கரைச்சு குடிச்சுட்டு கொட்டப்பொறுக்குவாங்க,அதெல்லாம்  அந்தகாலம்.இப்பெல்லாம் கம்பை கொல்லைக்காட்டில பார்க்கவே முடியறதில்லை.யாரும் கம்பு விதைக்கிறதில்ல. எல்லாம் அழிஞ்சு போச்சு. இப்பெல்லாம் டவுன்ல கம்பங்கூழ் பைசாவுக்கு விக்குது.

 

கூப்பிட்டகுரலுக்கு தட்டமாட்டான் ராசமாணிக்கம். பள்ளிக்கொடத்தை மறந்துவிட்டு எங்காவது குட்டையில மீனு புடிக்க வாடான்னு சொன்னாபோதும்  பய துள்ளிக்கிட்டு அலே! நானும் வரேன்னு !’ஓடி வந்துடுவான்.அப்புறம் குப்பைக்குழியில நோண்டுனா  நாக்குப்பூச்சி கிடைக்கும் .அது இருந்தாதான் தூண்டி முள்ளுல கோத்துபோட்டாதான் மீனு வந்து கொத்தும், ராசமாணிக்கமும் நானும் நாக்குபூச்சி நோண்டிகிட்டு சின்ன எரியில மீனு புடிப்போம்.குளத்திலுள்ள மீனெல்லாம் என்ன நினைக்குமோ தெரியாது. எங்கள் தூண்டிலை அவ்வளவு எளிதாக கொத்தாது. ஒன்னொரு பயம் எங்களுக்கு. எங்கள் அய்யனின் கண்களில் மாட்டினால் அவ்வளவுதான் ,மனுஷன் கொன்னே போட்டுடுவான். அதற்கெல்லாம் பயந்துதான்  குளத்திற்கு போக வேண்டியிருக்கிறது.

 அவனும் நானும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து  மூணாம் வகுப்பு வரைக்கும் ஒன்றாகவே வந்துட்டோம்.படிச்சோமோ இல்லையோ எங்கள் நட்பு தொடர்ந்தது.  அவன் அம்மா இல்லாத பிள்ளையாக இருந்தான். அவனுக்கு  யார் சோறு ஆக்கிவைப்பார்கள்  என்பது எனக்கு தெரியவில்லை.அனேகமாக அவனுடைய அப்பாதான் சோறு ஆக்கிவைப்பார் என நினைக்கிறேன். நான் சோற்றுக்கு ஊர் ஊராய் அலைந்ததைப்போல அவனும் சோற்றுக்கு திண்டாடியிருக்க வேண்டும். அடிக்கடி காணாமல் போய்விடுவான்.என்னடா ரெண்டு நாளா ஆளையே காணும்,எங்கடா போயிருந்த என்று கேட்டால் இன்னைக்கு கள்ள ஆய போயிட்டேன்.,பயிறு பறிக்க போயிட்டேன்.அந்த ஊட்டுல கல்யாணம் சோறு போட்டாங்க. அம்மாயி ஊட்டுக்கு போயிருந்தேன்!’ என நிறைய பதில்கள் வைத்திருந்தான்.  

 திடீரென கண்  முன்பு தோன்றுவான். அதே துண்டு இடுப்பில்,மூக்கில் காயாத  சளிப்படலாம்,கட்டை விரலை சூப்பிக்கொண்டு ‘அலே’ என்பான். ‘அலே’ என்பது ஒருவகையான மரியாதைக்குரிய வார்த்தையாக தலித் மாணவர்களிடத்தில் புழக்கத்தில் இருந்தன . பின்னாளில்  நான் செந்துறையில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது  நக்கம்பாடி காமராஜ்கூட  என்னை அலே என்றுதான்  அழைப்பான். இன்னும் நினைவில் இருக்கிறது.நம்ம ராசமாணிக்கமும் என்னை அப்படித்தான் அழைத்தான்.

 அவன்  பள்ளிக்கூடத்தில் ஒன்றும் படிக்கவில்லை.  வாத்தியாருக்கு  வரும் கோபத்திற்கெல்லாம் ராசமாணிக்கம்  அடிவாங்கிக்கொண்டு அழுதுகொண்டிருப்பான். சண்முகசுந்தரம் வாத்தியார் புழுத்த மாடு தின்கிற பயலே என ராசமாணிக்கத்தை போட்டு அடித்து துவைத்தது நாற்பது ஆண்டுகளுக்குப்பின்பும்  என நினைவில்விட்டு அது இன்னும் அகலவில்லை. இவன் மேல்சட்டை போடாமல் இடுப்பில் துண்டை  கட்டிக்கொண்டு விரல் சூப்பிக்கொண்டிருக்கிறான் என்பதற்காக சகமாணவர்கள் இவன் முதுகில் அடிப்பார்கள். எவன் ‘குசு’ விட்டாலும்  இவன்தான் குசு விட்டதாக நினைத்து  இவனைப்போட்டு எல்லோரும்  அடித்தார்கள்.  அஞ்சாம் வகுப்பு வந்து கொஞ்ச நாளைக்குப்பின்பு ராசா மாணிக்கம்  பள்ளிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.  எப்பவாச்சும் சின்ன ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருப்பான்.ஏண்டா பள்ளிக்கூடம் வல்லியா என கேட்டால், ஒரு நாள் அவனுடைய அப்பா அவனுடைய முதுகை பார்த்து “என்னடா தண்டிப்பு தண்டிப்பா இருக்கு?”என கேட்டதாகவும்,அதற்கு வாத்தியாரும் ,பசங்களும் அவனைப்போட்டு சக்கையாக அடித்த கதைகளையெல்லாம் சொன்னதும் ,அவனுடைய அப்பா கோவென அழுததாகவும் பின்னர்  “ நீ பள்ளிக்கொடம் போக  வேணாண்டா தம்பி !’ என சொல்லிட்டதால நான் பள்ளிக்க்கொடம் வரலே ‘அலே’ என்றான். எனக்கு பெருத்த ஏமாற்றம்  ! ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரை ஒன்றாக வந்தவன் .இப்படி சொல்லாமல் கொள்ளாமல் பள்ளிக்கு வருவதை நிருத்திவிடானே !” இனி நமக்கு வகுப்புத்தோழன் என்று யாரும் இல்லை.  எல்லாம் ஒன்றாக படிக்கிறோம் என்ற பேருதானே தவிர ஒருத்தனோடவும் நமக்கு ஆழ்ந்த சிநேகிதம் இல்லை . எல்லா பசங்களும் சரியான தந்திரகாரனாக இருக்கிறார்கள். கூடிக்கிட்டு இருப்பானுவோ, எல்லாம் பேருக்குத்தான்  ராசமாணிக்கத்தைப்போல ஒரு கூட்டாளிய  இனிமே பார்க்கமுடியாது. .நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்து இன்னும் நான் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  எல்லோரும் ஆளுக்கொரு திசையில்  பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால்  ராசமாணிக்கமும் நானும் பழகிய நாட்களின் மிச்சங்கள் இன்னும் எனது சேமிப்பில் உள்ளன. ராசமாணிக்கந்தான் எங்கோ காணாமல் போயிருந்தான் .

 

                               

 

 

 

 

 

 

No comments:

Post a Comment