Sunday, 31 January 2021

குள்ள வாத்தியார் (சிறுகதை )

 

ண்டா புகழேந்தி பள்ளிக்கூடம் போகலையா ? என கேட்டாள் கிழவி.

“இல்லை ஆயி நான் போகல’ரெண்டு நாளா உன்கூடவே கொல்லைக்காட்டுக்கு கூலி வேலைக்கு வந்துட்டேன்ல, அப்புறம் எப்படி நான் பள்ளிக்கூடம் போறது, வாத்தியாரு  கோவமா இருப்பாரு!’ என்றான்  புகழேந்தி.

“இல்ல கட்டையா !” (புகழேந்திக்கு கட்டையன் என்ற பெயருண்டு) நான்  சொல்றேன் நீ போ !” எனறாள் கிழவி.

“இல்ல நான் போகமாட்டேன்,அவரு குச்சியால அடிப்பாரு !’ என்றான்.

இதை உற்று கவனித்துக்கொண்டிருந்த  என்னை பார்த்த கிழவி ‘தம்பி , ரவி ! கட்டையன நீ அழைச்சுகிட்டு போய் பள்ளிக்கூடத்திலே உட்டுட்டு வா !’ என்றாள். கிழவி சொன்னால் மறுபேச்சுக்கு அட்டியில்லை.உத்தரவை தலைமேல் சுமந்தபடி கட்டையனை பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்விட ஆயத்தமானேன். நானா அவனை கிளம்புடா என்று சொல்வதற்கு முன்பே அவன் ஒரு கிழிந்த தூக்குபையை  தோளில்ளில் மாட்டிக்கொண்டு நடப்பதற்கு தயாராகி விட்டான்.

 அவனைபார்க்குபோது எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை.குளிக்கமாட்டான்.வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டே இருக்கும். எப்போதும் அவன்மேல்  மூத்திர வாடைஅடித்துக்கொண்டே இருக்கும். அதுக்கு காரணமே  அவன் ராத்திரியில் கிழவிவீட்டில்தான் படுத்துக்கொள்வான்.அவன் என்னுடைய நடிய மாமனின்  நான்கு மகன்களில் இரண்டாவது மகனாவான்.அவனுடைய குடும்பம் கொஞ்சம் ஏழ்மையான குடும்பம் என்பதால்,அவன் எப்போதும் கிழவியின் வீட்டிலேயே கிடப்பான். கிழவிக்கு சட்டி கழுவுவான்.கம்பு இடித்துகொடுப்பான்.அம்மியில் மிளகாய் அரைப்பான்.கிழவியின் சேலையை துவைப்பான்.இரவில் கிழவியின் சேலை ஒன்றை போர்வையாக போர்த்திக்கொள்வான்,அதன் அடுத்த கட்டம்தான் சிரிப்பானவை.அவன் தூங்குபோது படுக்கையிலேயே தினசரி இரவுகளில் மூத்திரம் விட்டுவிடுவான்.அதனால் இரவுவேளைகளில் அவனருகில் யாரும் படுக்க மாட்டர்கள். அதனால் அவன் மீது எப்போதும்    மூத்திர வாடை வீசிக்கொண்டேயிருக்கும். பத்து வயதை அவன் கடந்தபின்னரும் அவன் மூத்திரன் விடும் பழக்கத்தை அவன் விடவேயில்லை.அல்லது அவனைவிட்டு அது இயற்கையாக விலகவில்லை என்றே சொல்லலாம்.

 அந்த கிழிந்த பையை  கடைக்காரனிடமிருந்து வாங்கியதிலிருந்து இதுவரை துவைத்ததில்லை என்று பார்க்கும்போதே தெரிகிறது. அந்த பைக்குள் என்ன இருக்கிறது என்றுகூட நான் இதுவரை திறந்து பார்த்ததில்லை.அவனும் அதை திறந்து பார்த்ததை நானும் பார்க்கவில்லை.அந்த பையை எங்கு மாட்டி வைக்கிறான் என்பதும் தெரியவில்லை;ஆனால் எந்த அடுக்கு பானை அடியில் போட்டு வைத்திருந்தானோ,திடீரென வெளியே எடுத்து வருகிறான். அவனுக்கு உண்மையிலேயே பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றெல்லாம் விருப்பமில்லை.கிழவி சொல்கிறாள் என்பதற்காக வேண்டா விருப்பாகத்தான் அவன் கிளம்பி நிற்கிறான். ஆள் நெடு நெடுவென வளர்ந்திருக்கிறான்.கால் சட்டையில் பின்பக்க இரண்டு பீடத்திலும் தேய்ந்து ஓட்டையாக உள்ளன. மேலே போட்டுக்கொள்ள மேல் சட்டையில்லாமல் முண்டமாக  நிற்கிறான்.

கட்டையனை வாடா போவோமா !’ என்று நான் கூப்பிடும் முன்பே.அந்த குறுக்கு சந்து வழியாக கிழக்கு தெருவை நோக்கி சென்றான். நானும் ஏதும் பேசாமல் அவனை பின் தொடர்ந்து சென்றேன்.நேரே வடக்கே சென்று ,கிழக்கே திரும்பும் மூலையில் உள்ள  கோணச்சி ஆயி வீட்டின் முன்பு நின்று வாசல் படியேறி நின்றான். மேற்கு பார்த்த வீட்டின்  தெற்கு திண்ணையில் சின்ன பிள்ளைகளின் சத்தம் கேட்டது. நானும் கட்டையனை தொடர்ந்து  திண்ணையை நெருங்கி .பார்த்தபோது பத்து பிள்ளைகளுக்கும் குறையாமல் உட்கார்ந்து சிலேட்டில் அ’ னா ஆவா’ ன்னா  எழுதிக்கொண்டிருந்தனர்.வயதான ( நான்கு அடிக்கும் குறைவான உயரத்தில்) உருவத்தில் மிகச்சிறிய மனிதர் ஒருவர் மாணவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் புகழேந்தியையும்,என்னையும் ஏற இறங்க பார்த்தார். பின்னர் புகழேந்தியுடன்

“இது  யார் ?’ என கேட்டார்.

இது எங்கள் அத்தைமகன் !’ புகழேந்தி.அவனை தொடர்ந்து என்னிடம் கேட்க தொடங்கினார்.

“என்ன படிக்கிற? வாத்தியார்.

“ வேண்டா விருப்பாக ஐந்தாம் வகுப்பு சார் “ என்றேன்.

“என்ன ஊர்ல படிச்ச ? ‘அவர்

நான் படிச்ச ஊரை சொன்னேன் .அவரும் அதை அத்தோடு  விட்டு விட்டார். அவனை

“ஏண்டா ரெண்டு நாளா பள்ளிக்கூடம் வரல?’

ஆயி கூட களைவெட்ட போயிட்டேன் சார் !’

சரி !சரி ! உட்கார் ! என சொன்னவுடன்,கொஞ்சம் பயம் குறைந்தவனாக தெற்கு திண்ணையின் தெற்கு மூலையில்  போய் கட்டையன் உட்கார்ந்து கொண்டான்.ஒரு வேளை என் முன்னால் கட்டையனை அடிக்கூடாது என்பதற்காகக்கூட அவனை சற்று விட்டுப்பிடித்திருக்கலாம்.

அந்த வாத்தியார்  என்னை  ஒரு கணம் உற்றுப்பார்த்தார்.அதன் அர்த்தம் என்பது ‘நீ போகாலாம் !’ என்பதுதான். அதை ஒருவாறு புரிந்துகொண்டு,நான் அங்கிருந்து ஆயி வீட்டுக்கு திரும்பினேன்.

எனக்கு பிடிபடவில்லை இதை இன்றே கேட்டுவிட வேண்டும். இது எனக்கு பெரிய வியப்பாகவும்,ஆச்சிரியமாகவும் இருக்கிறது. வத்தலும் கொட்டையும் ஒன்றாக கொட்டிக்கிடந்த  முட்டில்   கிழவி வேப்பங்கொட்டையையும் ,வத்தலையும் தனித்தனியாக  பொறுக்கிக்கொண்டிருந்தாள்.

 “ஆயி அவரு யாரு ஆயி ,கட்டையன் பள்ளிகொடத்திலே குட்டையா ஒரு ஆளு உட்கார்ந்திருக்கிறாரே அவரு யார் ?

“ஒ அவரா ! அவருதான் குள்ள வாத்தியாரு”

“அந்த இடம்’

“அதுதான்  திண்ணைப்பள்ளிக்கூடம்” என்றாள் கிழவி.

“அது ஊடு மாதிரி இருக்கே”

“அது ஊடுதான்,அந்த திண்ணையிலேதான் இந்தபள்ளிக்கூடம் நடக்குது “

“ஏன் இந்த ஊர்ல வேற பள்ளிக்கூடம் இல்லையா ‘!

“இருக்கே!’

எங்கே நான்  பார்த்தவரை இந்த ஊரில்  இங்கு எங்கும்  பள்ளிக்கூடத்தை காணுமே !” என்றேன்.

அது காலனியில் இருக்கு !”

ஏன் நீங்க யாரும் அங்க படிக்க போக மாட்டீங்களா ?” என்றேன்.

“நாங்க யாரும் போகமாட்டோம்!’

“ஏன்?”

அந்த பள்ளிக்கூடத்துக்கு போன தீட்டு ,அதனால நாங்க யாரு காலனி பள்ளிக்கூடத்திற்கு குடி தெருவிலிருந்து யாரும் பிள்ளைகளை காலனி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புறதில்ல !’ என்றாள் ஆயி.

“இந்த ஊரில் ஏன் பள்ளிக்கூடம் இல்லை ?”

“இல்லடா தம்பி!” என பீடிகையை தொடங்கிய கிழவி பள்ளிக்கூடம் இந்த ஊரில் இல்லாத கதையை சொல்லத்தொடங்கினாள்.

ஒருகாலத்தில இப்ப காலனியில இருக்கிற பள்ளிகூடம் இங்க குடி தெருவிற்குத்தான் வந்தது”

ஆனால் ...

“இந்த ஊரு கிராம காரணம்தான்  அரசாங்கத்துகிட்ட எங்க ஊருக்கு பள்ளிக்கூடம்

வேணாம்னு அதை காலனிக்கு திருப்பி அனுப்பிட்டாரு” என சொல்லிய ஆயி அதற்கான காரணத்தையும் அவளே அவிழ்க்க தொடங்கினாள்.

கர்ணம் கணக்கப்பிள்ளைக்கு ரெண்டு நூறு காணி நிலம்டா தம்பி “

“அதுக்கு” .

அந்த நிலத்தில கூலிவேலை செய்ய ஆளுங்க வேணும்ல”

எல்லோரும் பள்ளிக்கூடம் போயிட்டா யாரு கொல்லைக்கு  கூலிவேலை செய்ய வருவார்கள்?” அதனால்தான் இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வேணாம்னு சொல்லி  அதை  காலனி தெருவில கொண்டு போயி கட்டிக்க  சொல்லி அரசாங்கத்துகிட்ட கர்ணம்   சொல்லி புட்டாரு!’ என்றாள் ஆயி.

“சரி  இங்குள்ளவங்க படிக்குணும்னா என்ன பண்றது?”

விரும்புறவங்க பக்கத்துல டவுனுக்குத்தான்  போவாங்க “ முடியாதவங்க குள்ள வாத்தியார்க்கிட்ட பிள்ளைகளை அனுப்புவாங்க “

“அவரும் அவரால முடிஞ்சத சொல்லிக்குடுப்பாறு,கொடுகுறதை வாங்கிக் கொள்வார் !” என்றாள்.

‘எனக்கு அவரை அவரைப்பார்க்கவேண்டும்,அவரோடு பேச வேண்டும்  என்ற ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது”

ஆனால் .. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை

வலிய  சென்று அப்படி ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை.ஆனால் நான் நினைத்தமாதிரி அப்படியொரு வாய்ப்பு ஒன்று கனிந்தது. நான் பள்ளிக்கூடத்தில் மதிய இடைவேளை ! கேட்டுக்கு வெளியே வந்தேன் ‘

“என்ன ஆச்சர்யம்!”

அதோ தூரத்தில் குள்ளவாத்தியார் !’

தலையில் கைகளால் தைத்த  இலைக்கட்டுகளுடன் பாய் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்.எனக்கு அவரோடு  பேச வேண்டும் போலிருந்தது .ஆனால் அறிமுக மில்லை !

“பிறகு என்ன செய்வது ?”

நாமே வழிய சென்று பேச்சுகொடுத்து பார்க்கலாமே என  மனதுக்கு தோன்றியது. நேரே விடு விடென்று நடந்து சென்று,அவருக்கு முன்னால் நின்றேன்.

என்னை அவரால் அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை.மிகவும் களைப்பாக காணப்பட்டார்.

“வணக்கம் சார்” என்றேன்.

“வணக்கம்,யாரப்பா நீ ? என்றார்.

“நான்தான் குடிக்காட்டு  சின்னப்பிள்ளை ஆயி பேரன்!”

“ஓ அன்னைக்கு கட்டையனை அழைச்சுகிட்டு வந்த பையனா நீ ?” என்றார்.

அவர என்னை அடையாளம் கண்டு கொண்டதில் எனக்கு சற்று மகிழ்ச்சி.

“இங்கு என்னப்பா பண்ற? படிக்கிறீயா?”

“ஆமாம் சார் ! நன் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்”

“ரொம்ப மகிழ்ச்சி ! நல்லா படிப்பா”

மறுபடி ஊரில பார்ப்போம்  !”  என தலையில் உள்ள இலைக்கட்டுகளை கடைக்கு கடை கொடுத்து காசு வாங்கி கொண்டு கிழக்கே அருகிலுள்ள ஓட்டல் கடையை நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினார் குள்ளவாத்தியார்.

 அதன்பின்பு  பல நாட்களுக்கு பின்பு  ஒருநாள்  அவர் கிழவியிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அவரை  நெருக்கமாக அருகிலிருந்து பார்க்கிறேன்.

மிகவும் வெளுத்து காணப்படுகிறார் பார்ப்பதற்கு மிகவும் பாவமாக இருந்தது. என்னையறியாமலேயே  அவர் மீது ஒருவித இரக்க உணர்வு தோன்றியது .அது அவரின் உருவத்தை வைத்தா ? அல்லது அவரும், நம்மைபோன்றதொரு   ஆதரவற்ற மனிதர்தானே!” என்ற உணர்வில் தோன்றிய எண்ணத்தின் விளைவாக இருக்கலாம்.

 அதன்பின்பு  “நேற்றுக்கூட உடையான் குடிக்காடு தோப்பேரியின் ஆலமரத்தில் இவர் தனித்தனியாக  மேலே ஏறி ஆல இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் நானும் மணிவேலும் பள்ளிக்கூடத்திலிருந்து ஊருக்கு கால நடையாக நடந்து வந்துகொண்டிருந்தோம். ஏரியின் திருப்பத்தில் கிழக்கே திரும்பியபோது கீழே பச்சை  ஆல இலைகள் நிறைய கிடந்தன .அருகினில் யாரும் இல்லை.சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தபோது, யாரும் தென் படவில்லை. எட்டும் தூரத்தில் எங்கும் யாரும் ஆடு மேய்ப்பதற்கான

அறிகுறி தென்படவில்லை.

“என்னடா மனிவேலு !மந்திரமாயிருக்கு!”

“ஒண்ணும் புரியல!” என்றேன்.

“ஆமாண்டா !” என மனிவேலும் ஆமோதித்தான்.

எனினும் மழை பொழிவது போல ஆலமரத்தின் மேலிருந்து உதிர்ந்து கொண்டிருந்து.

“திடீரென மரத்தை அண்ணாந்து பார்த்தோம்!

என்னே ஆச்சர்யம் !”

நம்ப குள்ள வாத்தியார். எந்த சலனமும் இல்லாமல் இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தார்.

முன்பு ஏற்கனவே அவரிடம் எனக்கிருந்த சின்ன அறிமுகத்தால்  எனக்கு எந்த கூச்சமும் இல்லாமல் இருந்தது.

 “வணக்கம் சார்”

“யாருப்பா நீ !”

“நான்தான் சார் ஆயி பேரன் !”

“உன் பேரு “

“ரவி சார் “

“ஓ அன்னைக்கு பார்த்த பையனா!” ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க ?”

“இல்ல சார் .இன்னைக்கு சினிமாக்கு போகலாமுன்னு  ஐந்தாவது பீரியடோட பேர் கொடுத்துட்டு வந்துட்டோம் சார் !”

“ஒழுங்கா பள்ளிக்கூடம் போகணும்ல!”

“ஆமாம் சார் !”

சரி இந்த இலைகளையெல்லாம் பொறுக்கியெடுத்து  இங்க கொண்டு வாங்க ! என பணித்தார். நானும் மனிவேலும் இலைகளை எல்லாம்சேகரித்து குள்ள வாத்தியாரிடம் கொடுத்தோம்.அவர்  அவைகள் அனைத்தையும் ஒரு கித்தான் சாக்கில்  உள்ளே அள்ளி போட்டு சாக்கின் கழுத்தை கட்டிப்பிடித்து கயிற்றால் கட்டி தலையில் வைத்து கொண்டு எங்களுடன் நடக்க தொடங்கினார்..

 

குள்ள வாத்தியார் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்குப்பின்னால் ஊரை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.அவர் ஏதாவது பேசுவார் என்று நானும் நடந்து கொண்டிருக்கிறேன்.

மணிவேல் பேசாமல் பக்கத்தில்  ரோட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும் புளியன் கிளைகளிளிருந்து புளியன்காய்களை பறித்து தின்று கொண்டு, எனக்கும் அவற்றில சிலவற்றை கொடுத்தான். நானும் அவற்றில் ஒன்றை தின்றவாறு வாத்தியாரை பின்தொடர்கிறேன். முத்தம்மன்  குளத்தை நெருக்கி விட்டோம். இன்னும் கூப்பிடு தூரம்தான்.காரையாக்குளம் வந்து விடும் அப்புறம் ஊர்தான்.

ஆனாலும் ....

இந்த வாத்தியாரின் மவுனம் உடையாமல்,தொடர்ந்து ஊரை நெருகிவிட்டார்.கீழத்தெரு வழியாக அவர் போய்விட்டார். நான் மேலத்தெரு வழியாக இருப்பிடத்தை நோக்கி நகர்கிறேன்.நட்பு வேண்டு நெருகுபவனின் நெஞ்சத்தை புரிந்து கொள்ளாமல் போகிறாரே! என்ற வருத்தம் வாத்தியார் மீது தோன்றியது.!

 அவர் அந்தகாலத்தில் ஐந்தாவது படித்தவராம்.அது பெரிய படிப்பு. அவருக்கு சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் திறமையிருக்கிறது என்பதை கண்டறிந்து  பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு  படிப்பு சொல்லிக்கொடுக்க  இவரை ஒரு சிலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.குடும்பம் இல்லாதவர் ,சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்.திண்ணைப்பள்ளிக்கூடம் போட்டால் ஆளாளுக்கு  ரெண்டு ரூவா கொடுப்பாங்க,

அல்லது எதாவது சாப்பாட்டுக்கு  தானியம் கொடுப்பாங்க அது கஷ்ட ஜீவனம் செய்யும் இவருக்கு உதவியாக இருக்கும் என சிலர் நினைத்திருக்கலாம்.

 “தம்பி  குள்ளவாத்தியாருகுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடி  ஒரு பொண்ணோடு  கல்யாணம் ஆச்சு,அவ இவர விட ரெண்டு  மடங்கு உயரம்!”

ஆனால்...

“அவ இவருகூட இருந்து வாழல !”

“ஏன் என்னாச்சு ?”

இவர புடிக்கல,குள்ளமா இருக்காராம் !” அப்படின்னு,

“உள்ளூரிலேயே வாக்கப்பட்ட

அவ அவளுடைய அக்கா வீட்டுக்கு போயிட்டா!”

இவரும் போயி அவர் பொண்டாட்டிய கூப்பிட்டாரு “ரப்பு கொண்டவ!” வர மாட்டேண்ணுட்டா !’ என சொல்லி முடித்த ஆயி. அதற்கப்புறம் வாத்தியாரு ஊட்டுக்கு ஊடு ,ஊட்டுக்காரங்க ஒத்துக்கிட்டா  திண்ணையில எங்காவது தங்கிக்குவார்,ஊட்டுக்காரன்கா ஏதாச்சும் “கர்முர்ன்”னா அந்த எடத்துவிட்டு  ஏதும் சொல்லாமல் துணிமணியை சுருட்டிக்கிட்டு யாராச்சும் இரக்கம் காட்டினா போயிடுவார்.நல்ல மனுஷன் ‘டா தம்பி !” என சொல்லி முடித்தார் ஆயி..

 வழக்கம்போல ஒரு கையில் அலுமினிய தூக்குவட்டாவை பிடித்து கொண்டு.மரு கையால் புத்தகப்பையை தோளில் சுமந்து படி கரையாக்குளத்தின் வடக்குகரை வழியா மேற்கே போனால் காரையா குளத்தை ஒட்டி இருக்கும் செட்டிக்குளத்தின் வடக்குகரையில்  குடியிருக்கும்  தொம்பன் கோவிந்தன் கொட்டாயை கடந்து ரயில் ரோட்டில் ஏறி தெற்கு நோக்கி நடக்கத்தொடங்கினேன். சற்றுத்தொலைவில்  இருக்கும் கிழக்கு மேற்காக இருக்கும்  ரயில்வே கேட்டை கடந்து சென்றுக்கொண்டிருந்தேன். 

 நண்பர்கள்  யாரும் இன்னும் என்னுடம் வந்து இணைய வில்லை.!

ஆனால் ... ரயில்வே சாலையை ஒட்டி வரிசையாக இருக்கும் மாமரத்தில் அல்லது நாவல் மரத்தில் யாராவது  ஒருவர் இருக்கக்கூடும் என்ற ஒரு நம்பிக்கை.

 கூப்பிடு தூரத்திலுள்ள உள்ள முத்தம்மன் குளத்தை  அடைந்துவிட்டால் பள்ளிக்கு செல்வதற்கு மண் ரோட்டிலோ அல்லது ரயில் ரோட்டு வழியாகவோ விருப்ப படி செல்லலாம்.முத்தம்மன் குளத்தை ஒட்டி மண்ரோடும் ,ரயில் ரோடும் அருகருகே செல்கின்றன. பாதசாரிகளுக்கு விருப்பமான பயணத்தை தேர்ந்தெடுக்க ஒரு தெரிவாக இருக்கின்றன.

 

முத்தம்மன் குளத்தை சென்றவுடன் என்னையறியாமல் திரும்பிப்பார்க்கிறேன்.அன்கிருந்து பார்த்தால் மண் ரோடு .ரயில் ரோடு  இரண்டு திசையிலிருந்தும் யார் வந்தாலும் தெரியும்.

அந்த பொட்டால் மண் சாலை வழியே தூரத்தில் ஒரு புள்ளியாய்

பழக்கமான ஒரு உருவம் தலையில் இலைக்கட்டுகளுடன் எந்த வழித்துனையும்   இல்லாமல் தனியே வந்துக்கொண்டிருக்கிறது. சிறு புள்ளி கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி விரிவடைந்துகொண்டேஇருந்தது.

 “கண் மலர்கள் வியப்பால் விரிகின்றன!”

“சார் வணக்கம்!”

ஒ ரவியா ? நீ பள்ளிக்கூடம் போகலையா?

ஏன் நிக்கிறே?” என குள்ள வாத்தியார் கேட்டார்.

“உங்க கூட சேர்ந்து போகலாம்னு நிக்கிறேன் சார் !”

“இம்!” என ஆமோதித்தார்!

“மணி இன்னிக்கு வரவில்லையா?”

“அவன் அப்பாக்கூட கொல்லைக்கு போயிட்டான் சார்“

“இன்னிக்கு நீ மட்டும்தான்னு சொல்லு”

“ஆமாம் சார்!”

“நீ நல்லா படிப்பியா ?”

“இல்லை சார் “

“அப்பிட்டின்னா ?”

“சுமாராதான் சார் !”

இம்” என்றவர் ஆயியும்,அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படறாங்க,நல்லா படிக்குனும்ல! என்று அவர் கூறியவற்றை நான் காதில் போட்டுக்கொள்ளும்

மன நிலையில் இல்லை.

“மத்தியானம் சோறு கொண்டு போறீயா?”

கொண்டு  போறேன் சார் !”

“என்ன சோறு ?”

“சோள சோறு “

“தொட்டுக்க என்ன வச்சிருக்க ?”

“ஒன்னும் இல்ல சார் !”

தினமும் சோறு எடுத்துட்டு போவியா?”

இல்லசார் !” ஒருநாள் விட்டு ஒருநாள் எடுத்துட்டு போவேன்!”

“சோறு இல்லாமல் பசிச்சா என்ன செய்வே ?”

ஒரு ரூவாய்க்கு பொட்டுக்கடலை வாங்கி பசங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்!” என சொல்லி முடித்தேன்.

சிறுது நேரம் எதுவும் பேசாமல் பயணித்தோம். 

தோப்பேரியை கடந்து செந்துறையை நெருகிக்கொண்டிருந்தோம்.

“எப்ப வீட்டுக்கு வருவ ?” என்றார்.

“அஞ்சாவது பீரியடோட வந்துடுவேன் சார்?”

“எலைக்கட்டை சீக்கிரம் வித்துபோச்சுன்னா,நான் முன்னாடு வந்து துரை கடைகிட்டே  நிக்கிறேன் !”

“அப்படி ஒரு வேளை !”....

“நீ முன்னாடி  வந்தா .... துரை கடைகிட்ட நில்லு! நாம் சேர்ந்து போவோம்!’ எனக்கூறிவிட்டு செந்துறையை வந்ததும் எனைவிட்டு பிரிந்து  ஓட்டல் கடைக்கு கடை இலைக்கட்டுகளை விற்க பிரிந்து சென்றார் குள்ளவாத்தியார்.

 பள்ளியியில் முதல் பீரியடில் சண்முகம் உள்ளே நுழைந்தார். எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். வரும்போதே அவரின் கண்கள் அனைவர்மீதும் பரவி இறுதியில் என்னை கண்ணுற்றவர் பேசாமல் போய் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அட்டென்டன்சை மேசைமீது வைத்து திறந்து ஒவ்வொருவரின் பெயரையும் வாசிக்கத்தொடங்கினார்.

 எல்லோரும் எழுந்து ‘ப்ரெசென்ட்’   சார் சொல்லி அமர்ந்துகொண்டனர்.எனது முறை வந்தபோது “இன்னைக்குதான் வழி தெரிந்ததா?“ அருகிலிருந்த குச்சியை எடுத்து என் உடலெங்கும் விளாசித்தள்ளினார்.அவரால் முடிந்தவரை அடித்துவிட்டு,முடியாமல் விட்டுவிட்டு எப்படியாவது நாசாமாபோடா !” என  உட்கார்ந்து விட்டார்.

 எனக்கு எப்போதுமே பள்ளிக்கல்வியில்மீது நாட்டம் இருந்ததே இல்லை.ஒருவேளை சின்ன வயதில் எனக்கு கல்வியின்மீது ஒருவேளை நான்  ஆர்வம் கொள்ளும் அளவுக்கு எவராகிலும் சொல்லிக்கொடுத்திருந்தால் வந்திருக்கலாம்.

ஆனால்...

அவ்வாறான ஒரு சூழல் இயற்கையாக அமையாதது எனது பிழையல்ல, பள்ளிக்கூடம் செல்வதை வெறும் சடங்காக வைத்திருந்த்தேன்.பள்ளிப்படிப்பின் மீது எனக்கு அறவே விருப்பமில்லை. எதோ மற்றவர்கள்  சொல்வதற்காக என் பள்ளி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.  எனது ஏக்கம்,தேடல்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு வெளியே என்னை இழுத்துக்கொண்டு சென்றது.

 பீரியட் கடந்து கொண்டிருந்தது.யாரோ வந்தார்கள்,யாரோ போனார்கள் யார்யாரென அனைத்தும் நினைவில் இல்லை. ஐந்தாவது பீரியட் கடக்கும் வரை பரபரப்பிற்குள் மொத்தமாக மூழ்கி கிடந்தேன்.

 மணியடித்ததும் பையை தோளில் போட்டுக்கொண்டு மெயின் காலுக்கு தெற்காலே உள்ள மூத்திர சந்து வழியாக கிழக்கு வழியாக கடந்து நாவல் மரத்து வழியாக வெளியேறி நேரே  துரை டீ கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

டீகடையில் நெருங்கும் போதே  எனது வருகையை எதிர்பார்த்து மேற்கு திசையைப்பார்த்தபடியே டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் குள்ள வாத்தியார்.

“சார் போகலாமா ?” என்றேன்.

“இம் !” என்ற இணக்கமான குரலோடு நடக்கத்தொடங்கினார். கையில் வைத்திருந்த  கைப்பையில் கொஞ்சம் கனமாகஇருந்தது. கொழம்பு சாமான் வாங்கி வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

பையில் என்ன வாத்தியாரே ?” குழம்பு சாமானா ?”

ஆமா ரவி !” அரிசி ரெண்டு படி வாங்கினேன் .கொஞ்சம் காய் ,கொழம்பு சாமான்  அவ்வளவுதான் !” என்றார்.

 மெல்ல அங்கிருந்து வடக்கு நோக்கி நடக்கத்தொடங்கினோம் !

 இப்போதுதான் நான் முன்பு மனதில் அவரிடம் கேட்க  நினைத்த அந்த செய்தியை கேட்க எண்ணினேன்.

 “சார் அந்த திண்ணைப்பள்ளிக்கூடம் என்ன சார் ஆச்சு !”

 “அத ஏன் கேட்கிற ரவி ?” கொஞ்ச காலம் அதை மல்லுக்கட்டி நடத்தினேன். ஒருத்தரும் சரிவர பணம் கொடுக்கல ! பணம் கொடுக்காட்டியும்  பரவாயில்லை .பிள்ளைகளாவது ஒழுங்கா அனுப்புங்களான்னா“ அதுவும் இல்ல! அதனால வேண்டா விருப்பா அதை நிறுத்திட்டேன். இருந்தாலும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு!”

எனக்கும் வேறு வழிஇல்லை! இலை தைக்க ஆரம்பிச்சுட்டேன்! என சொல்லி முடிக்கவும் தோப்பேரி வரவும் சரியாய் இருந்தது.

“ரவி இலை பறிச்சிட்டு போவோமா ?” என்றவர்

ஆலமரத்தில் ஏற முயன்றார்.

வேண்டாம் சார் ! நான் இருகிறேன்.நீங்கள் வயதான காலத்தில் கீழே விழுந்துடுவீங்க!’ என்றவாறு  ஆலமரத்தில் மேலேறி இலைகளை பரித்துப்போட்டேன்.அதை அவ்வப்போது வாத்தியார் கோணிப்பையில் அள்ளிப்போட்டுக்கொண்டிருந்தார். சாக்குப்பைக்குள் நிரம்பியதும்

“போதும் ரவி !” “மரத்திலிருந்து இறங்கி வா!“ என்றார்.

மரத்திலிருந்து இறங்கி இருவரும் பயணிக்கத்தொடங்கினோம்.

அரிசி மூட்டை பையை தலையில் வைத்துக்கொண்டு,  இலை சாக்கினை தோளில் போட்டுக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.

அவரை அடியொற்றி நானும்  நடந்து கொண்டிருந்தேன். அவரின் சுமைகளில் ஒன்றை சுமக்க எண்ணிய என்னிடம் ,அவற்றை தர மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் உரையாடல் தொடர்ந்தது !

“இப்ப எங்க சார் தங்கியிருக்கீங்க?”

“கீழத்தெருவில”

“ஆயிகிட்ட சொல்லி ஆயி வீட்டுத்திண்ணையில தங்கிக்க கேட்கட்டுமா?”

“வேண்டாம் ரவி!”

“இல்ல சார் “ஆயி வேண்டாம்னு சொல்லாது”

முத்தம்மன் குளத்தை கடந்து கொண்டிருந்தோம்.

“ஒரு நாளைக்கு சினிமா பார்க்க வர்றீங்களா சார் ?”

“வேண்டாம் ரவி ! நான் அதெல்லாம் விரும்பறதில்லை!”

இருவரும் காரியாகுளத்தை கடந்து  ஊருக்குள்  சென்று

அவர் கிழக்கு தெரு வழியாக  சென்று கொண்டிருந்தார். நான் மேற்குதெரு வழியாக வடக்கே ஆயி வீட்டுக்கு  சென்று கொண்டிருந்தேன். ஆனால் ....

ஏனோ அவரின் நட்பு வேண்டி மனதின் அடிவானத்தில் ஒரு ஏக்கக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.

 இரவு வட்டிலில் போடப்பட்ட கம்மஞ்சோறுசாப்பிட்டவாறே ஆயிடம் கேட்டேன்,

“ஆயி குள்ள வாத்தியாரு நம்ப திண்ணையில தங்கிகிட்டுமா?”

எண்டா தம்பி !?”

“இல்ல ஆயி !” அவரு பாவம் !அவருக்கு வீடு இல்ல!”

“அதுக்கு நாம என்ன பண்றது ?”

நம்ப தின்னையில கொஞ்ச நாளைக்கு தங்கிட்டு போகட்டுமே! அவருக்குத்தான் யாருமில்லையே !” என்றேன் .

அதுலதான் ஆட்டுக்குட்டிகளை கட்டியிருக்கோமே!”

“அத எங்க கொண்டுபோயி விடுறது”

அதுகளை நம்ப சந்துல மொளகுச்சிகளை அடிச்சு அதுல கட்டிக்குவோம்!” என்றேன்.

அதுல அவள் உடன் பட்டிருக்க வேண்டும்.அதற்குமேல் அவள்   மறுப்பேதும் சொல்லவில்லை. “ பாவம் அந்த ஆளும் நல்லவருதான்” என சொல்லிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.

 

ஆயியின் சம்மதத்தை பெற்றப்பின்னர்

ஒருநாள் குள்ளவாத்தியாரிடம் இதை சொன்னேன். என்னிக்கு சார் வரீங்க ?” என்றேன்.

‘வரேன் ரவி என்றவர் “இதில் என்ன நாளும் கிழமையும் இருக்கு”?  நாளுக்கு வருகிறேன் என்றவர் மறுநாள் காலை ஒரு சாக்கு மூட்டையை தலையில் சுமந்தபடி ஆயி வீட்டிற்கு வடக்காலே உள்ள பீ சந்தின் வழியாக  கிழக்கு தெருவிலிருந்து வந்தவர் வடக்கு திண்ணையில் இறக்கிவைத்தார். ஆயியும் பார்த்துக்கொண்டிருந்தார்.ஏதும் சொல்லவில்லை.

பின்னர் சாக்கு மூட்டையை அவிழ்த்து  அதிலிருந்து தன்னுடைய வாழ்வாதாரங்களை ஒவ்வொன்றாக தரையில் எடுத்துவைத்து   ஒழுங்குப்படுத்தி வைத்தார். மேலே ஓட்டு  வீட்டின் சாத்தில் ஒரு முயல் வலைக்கம்பியை கட்டி ,அவருடைய துணிமணிகளை அதில் மாட்டி வைத்தார்.

 

 

 

“எனக்கு ஒரு ஆத்மா திருப்தி”   தங்குவதற்கு வீடின்றி சாதி பிள்ளையைப்போல  தெருவுக்கு தெரு,வீட்டுக்கு வீடு பண்ட பாத்திரங்களை தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதரின் மனதிற்கு ஓரளவு அமைதி கொடுத்ததில்  கொஞ்சம் மகிழ்ச்சி !

“ரொம்ப நன்றி ரவி !” என்றார்.

அப்படியெல்லாம் சொல்லாதிங்க சார் !” இது என் கடமை சார் !” என்றேன்.

“அவரின் கண்களில் நீர்  கோர்த்திருபதை கண்டு,என் கண்களும் கலங்கிபோயின!”

“கவலைப்படாதீங்க !” நான் இருக்கும்வரை நீங்க பாட்டுக்கு இங்கே இருங்க ,எதுக்கும் கவலைப்படாதீங்க !” என்றேன்.

“சரி ரவி !’ என்றார்.

 பரந்த மணம் கொண்ட வாத்தியார்  அந்த சிறிய இடத்திற்குள்ளே தன்னை தகவமைத்து கொண்டார். சமைத்து சாப்பிடும் நேரம் போக மற்ற நேரங்களில்,இலைகள் பறித்து அதை பாடம் செய்து ,பின்னர் தண்ணீர் தெளித்து  தைக்க துவங்குவார்.

 அவர் இலைகளை தைக்கும் நுட்பம் மிக அழகானது .அதை நுட்பமாக பல நாட்கள் கவனித்து வந்திருக்கிறேன். நானும் அவரை பார்த்து இலைகள் தைத்து அவரிடம் காட்டி

“சார் எப்படி இருக்கு?” என்பேன்.

“அவரும் நன்றாய் இருக்கிறது!” என சொல்லி சில திருத்தங்களை சொல்வார்.அதை நாளடைவில் பின்பற்றி நானும் ஆலிலைகளை நன்கு தைத்து அவருக்கு உதவ தயாராகிவிட்டேன்.அவர் ஏதும் சொல்லாமல் மவுனமாய் இருப்பார்.

 தோப்பேரி ஆலமரத்தை தவிர்த்து வழக்கம் போல இலைகள் பறிக்க மாற்று இடம் ஒன்றை வைத்திருந்தார்.  ஊருக்கு வடக்கே ரயில்வே கேட்டிற்கு கொஞ்சம் ரயில் சாலையை ஒட்டி கொஞ்சம் வடக்கே  நடந்து சென்றால்,மிகப்பெரிய ஆல மரங்கள் இருந்தன . அவரை அநேக நாட்களில் அவரை அங்கு நான் பார்த்திருக்கிறேன். கிழவி வீட்டிற்கு வாத்தியார் குடிவந்தபின்னர் அவரும் நானும் ரயில்வே கேட் ஆலமரத்திற்கு இலைகள் பறிக்க செல்வோம்.நான் மரத்திலேறி இலைகள் பறித்து போடுவேன்.அவர் அவைகளை சாக்கில் அள்ளிப்போடுவார்.

 பள்ளிக்கூட வாழ்க்கையெல்லாம் பரணுக்கு போய்விட்டது.

எனக்கும் படிப்பு பிடிபடவில்லை .சொல்லி சொல்லி பார்த்தேன்.

“என்னை விட்டு விடுங்கள் என்றேன்!”  எனக்கு படிப்பு ஏறவில்லை.யார் யாரிடமோ சொல்லிப்பார்த்தேன். இறுதியாக யாரும் எதுவும் சொல்லாததால் அதுவே சம்மதமாய் இருக்குமோ! என பள்ளிக்கூடம் போவதற்கு முழுக்குப்போட்டேன்.

 பள்ளி என்ற  சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஒரு சுதந்திர பறவையானேன்.

“எனது சுகந்திர வானில் இரண்டு விண்மீன்கள்”!

“ஒன்று குள்ளவாத்தியார்”

“மற்றொன்று நான்!”

எனக்கு விருப்பமில்லா வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலைக்கிடைத்த பின்பு விருப்பமான ஒரு நட்பு கிடைத்ததில் ஒரு மகிழ்ச்சி!”

குள்ள வாத்தியார்  எனதின் வெற்றிடத்தை நிரப்பினார்.

 அவரும் நானும் இலை தைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முயலை  பிடிப்பதற்கு கம்பியிலான  வலை பின்னுவதும்,அதை களிர் காடுகளில் கொண்டுபோய் கட்டி,இரவெல்லாம் காவல் காத்து  முயல் பிடித்து விற்பதும், அந்த பணத்தை கொண்டு செந்துறை சந்தைக்கு சென்று வாத்தியாருக்கு ஒத்தாசையாக குழம்பு சாமான்கள்,காய்கறி,அவருக்கு பிடித்தமான பன்றி கறி போன்றவற்றை எடுத்துக்கொண்டு வருவோம்!”

 “அவர் உருவத்தில் மிகவும் குறைவானவர்!”

ஆனால்....  “உள்ளத்தில்  இமயமலையை விட உயர்ந்தவர்!”

என்னை காணாது போனால் வைத்தகண் வாங்காமல்  தெருவின் விளிம்பிவரை பார்த்துக்கொண்டிருப்பார்”

இரவின் வெளியெங்கும் எண்ணற்ற கதைகளால் நிரப்பிக்கொண்டிருப்பார்!”

அவற்றில் “ஒன்றில் கண்ணீர் இருக்கும் “

மற்றொன்றில் துயரம் இருக்கும்”

மற்றொன்றில் ஏமாற்றம் இருக்கும்”

ஒன்றில் ஆறாத புண்களின் வலி இருக்கும்!”

மற்றொன்றில் அடங்காத தவிப்புகள் அலை அலைஅலையாய் வீசும்”

மொத்தத்தில் இரவின் மவுனத்தின் ஒரு மெழுகாய் உருகிக்கொண்டிருந்தார்.அந்த சின்னஞ்ச்சிறிய விளக்கொளியில்

நான் மனதளவில் உரு மாரிக்கொண்டிருந்தேன்!”

தன்னந்தனிமையில் அவரை  பலதடவி வெளிப்படுத்தியிருக்கிறார்.

 “அவருக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்து,,அது ஆரம்பத்திலேயே எவ்வாறு   சிதந்துபோனதும்,அதனால் மதளவில் எவ்வாறெல்லாம் நொறுங்கிப்போனார்!” என்பதை நானும் அவரும்  செந்துறைக்கு நடந்து போகும் போதெல்லாம் என்னிடம்  சொல்லுவார்.அது ஏதோ எனக்குள் வேதியல் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும்.

பொறந்தாலும் ஒரு ஊனமா பொறக்கூடாது !” அதுலயம் குள்ளமாக பொறக்க கூடாது” ரொம்ப அவமானமா இருக்கு, ரவி !” எதுக்கு இந்த வாழ்க்கை”  என முனியப்பா குளத்தில்   தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது என்னிடம் சொன்னார் வாத்தியார். 

அவரின் வயதில் கால் பங்கு கூட இல்லாத சின்ன பொடியனான  என்னிடம் உண்மையான ஒரு நண்பனாய் கடைசிவரை. இருந்திருக்கிறார்.

வயதைக்கடந்த ஒரு நட்பு  எங்களுக்கிடையில்  எங்கள் இருவரையும் பிணைத்திருந்தது.

 ஒரு நாள்  “ரவி எனக்கு வயிறு கடுப்பு!” என்றார்.

“என்ன சார் செய்யுது?” என்றேன்

“ரத்தம் ரத்தமாய் போகுது.கடுமையான வயிற்றுவலி”  

கொஞ்சம் ஆவாரம் கொழுந்து கிள்ளிக்கிட்டு வரீயா ?”

“சரி சார் “ என ரயில் ரோட்டுக்கு மேலே ஏறி ஓரத்தில் இருக்கும் ஆவாரம் கொழுந்துகளை கிள்ளிக்கொண்டு வந்து,ஆயிடம் கொடுத்து அதை நன்கு அம்மியில் வைத்து அரைத்து, அதை பசும் பாலில் கலந்து காலை வேளை வெறும் வயிற்றில் குடிக்கக்கொடுத்தேன்.

அதில் கொஞ்சம் குடித்தவர், குடிக்க முடியாமல் பாதியை வாந்தி எடுத்துவிட்டார். எனினும் தொடர்ந்து வயிற்று கடுப்பு நிற்காமல் போய்கொண்டிருந்தது.

ஆயிடம் “வாத்தியார்  பாவம் ஆயி” ஏதாவது பண்ணு ஆயி!” என்றேன்.

சோளக்கஞ்சி வைத்து  சுட சுட ரெண்டு கூசா கொடுத்து

“குடி வாத்தியார!” எனக்கொடுத்தாள்

அதில் ஒரு முழுங்கு குடித்தவர்,அதற்குமேல் “குடிக்கமுடியவில்லை” என கைகளால் சைகை காட்டினார்.

நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை  மோசமாகிக்கொண்டு வந்தது.ஆறுதல் அளிக்கக்கூடிய எந்த முன்னேற்றமுமில்லை. அவரின் உறவினர்கள் ஊரில் இருந்தும் ஒருவரும் வந்து பார்க்கவில்லை.

வயிறு கடுப்பு கண்டு ஒரு வாரத்திற்குள்ளாகவே உடலெல்லாம் வற்றி

களைப்புடன் காணப்பட்டார்.இரவெல்லாம் முனகிக்கொண்டே இருந்தார். அவரின் அருகில் அமர்ந்தவாறு அவரை தொடர்ந்து உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்.

 

ஏதும் பேச முடியாத அளவுக்கு  அவரின் பேச்செல்லாம் சுருங்கிவிட்டன. ஆசை ஆசையாய் எனக்கு கதை சொல்லிய உதடுகள் மவுனத்தில் மூடிக்கிடக்கின்றன.

 அருகில் அமர்ந்து கொண்டிருந்த என்னை ஒரு கணம் மெல்ல  கண் திறந்து பார்த்தார்.அவரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் வெளியேறின.அதனை  பொறுக்கமாட்டாமல்  எனக்குள் நான் உருகிக்கொண்டிருந்தேன். என் நெஞ்சமெல்லாம் காரிருள் சூழ்ந்து  பார்வையெல்லாம் திக்குமுக்காடியது. வாத்தியார் என்னைவிட்டு மெல்ல மெல்ல தூரத்தில் சென்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

 இரவெல்லாம் நெடுநேரம் வாத்தியாரை  அருகிலிருந்து பார்த்து கொண்டிருந்த நானும் அடுத்த திண்ணையில் படுத்திருந்தேன். ஆயி வீட்டின் உள்ளே  சென்று படுத்துக்கொண்டாள்.

 நள்ளிரவை கடந்தபின்னர் ஆயி மெல்ல எழுந்து வாத்தியாரை  எழுப்பினாள்.

அருகில் அம்மாவும் நின்று கொண்டிருந்தாள்.

“வாத்தியார் செத்துபோயிட்டார் ரவி!” என்றாள்.

எனக்கு தூக்கி வாரிபோட்டது.

அருகில் சென்று பார்த்தேன்.

வாத்தியாரின் உடல் அமைதியாக இருந்தது.

எப்படியெல்லாமோ என்னிடம் பேசிய அவரின் வாய்மலர்  பேசாமல்

எந்த உணர்வும் இல்லாமல் மூடி கிடந்தது. சிறிது நேரத்திற்குள் தெரு விழித்துக்கொண்டது .வாத்தியார்  உயிரோடு இருந்தவரைக்கும் அவருக்கு  ஒரு வாய் தண்ணீர் தராதவர்கள்,வாத்தியார் செத்தபின்பு  அவரின் உறவினர்கள் அவரின்  உடலை அவர்களின் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

உடலை எடுத்து சென்றவர்களுக்கு ஒரு சுமை குறைந்ததே என்று கவலையற்று செல்கின்றனர்.

அனால்...

எனக்குத்தான் நெஞ்சில்  ஒரு சுமையாய்   எனக்குள் ஆழ்ந்து க்கொண்டிருந்தார் குள்ள வாத்தியார் !

 

                                 

 

 

 

 

No comments:

Post a Comment