Sunday, 30 June 2019

எழுத்து முயற்சியும்,வாசிப்புத்தளமும்.

           
                                       
      அன்று அம்மாயி  வீட்டின் எதிர்  வீடான  மணி மொழி  வீட்டுத்திண்ணையில் ஒருநாள் மாலை வேளையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன் ராஜேந்திரன் ,மணிவண்ணன்  இன்னும் நினைவுக்கு வராத பல நண்பர்கள் இருந்தார்கள் . அந்த நேரம் பார்த்து  வடக்கிருந்து தெற்கே இருந்த  கிணத்திற்கு தண்ணீர்  மொள்ள போனாள்செல்வி.அவள் கழுத்தில் அட்டிகை அணிந்திருந்தாள். ஒரு பருவப்பெண் என்பவர் அட்டிகை அணிந்திருப்பது மகவும் அரிதானது.அந்த  அணிகலனை பெரும்பாலும் வயதான பெண்களே கழுத்தினில் அணிந்திருப்பார்கள்.ஆனால்  செல்வி  அதை கழுத்தில்  அணிந்திருப்பதை  எனது  தனிக்கவனத்தில்  நான்   எடுத்து கொண்டேன். அவள் போனதை நான் பார்த்தேனே தவிர ,என் நண்பர்கள் செல்வியை பார்க்கவில்லை அப்போதுதான் அந்த இரண்டு வரிகள்   என் கற்பனை வானத்தில் வந்து போனது .
அது -
 "அட்டிகை அணிந்த ஆரணங்கே  - உன் 
    அழகிய புன்னகை  என்ன விலை ?" - என்பதுதான்  அது .

 எல்லோரும்  கொல்லென சிரித்துவிட்டார்கள். பெரிய கண்ணதாசன் போல ஆகிவிட்டான்  என எல்லோரும்  கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னால் 'போதும் போதும்' என்னுமளவிற்கு  புகழ்ந்து தள்ளிவிட்டார்கள் . "ஒருவன் அது யாரை பார்த்து எழுதியது என்றான் ? மற்றொருவன்  இந்த கவிதைக்கு சொந்தக்காரி யார் என்றான் ?  ஒருவன் அவளா ?" என்றான் . ஒருவன்   இவளா ?"என்றான். ஆளாளுக்கு  ஒவ்வொரு கேள்வியாக கேட்டார்கள் . நான் யாரிடமும் இதை சொல்லவில்லை .ஆனாலும் அதில் ஒருத்தனுக்கும் மட்டும் தெரிந்தது அந்த பாட்டு வரிகளுக்கு சொந்தக்காரி யார் என்பது.

அதுதான் நான் எழுதிய முதல் கவிதைவரிகள் நினைக்கிறேன் .அதற்கு முன்பு எழுத்து வடிவில் கவிதை என்று  எதையும் எழுதவில்லை .ஆனால்  உள்ளுணர்வு தூண்டலின் விளைவாக எதையாவது  எழுதிப்பார்த்திருக்கிறேன். எழுபத்தி ஏழுக்கு முன்பு  சிறு கதாப்பாத்திரங்களை உள்ளடக்கிய  சிறு சிறு நாடகங்கள் எழுதி வந்திருக்கிறேன். அதை பொழுது போக்காக நண்பரகளிடத்தில்  இரவு வேளைகளில் நண்பர்களெல்லாம் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஊர் கதை பேசும் வேளைகளில்  சொல்லுவதுண்டு.கூடுதலாக  அவற்றை வானொலிக்கும்  எழுதி அனுப்பியிருக்கிறேன்  ,ஆனால் அவற்றில்  ஒன்று கூட வெளி வந்ததில்லை . நண்பர்கள்  எல்லாம்  தனி இடத்தில்  ஒன்று கூடும்  போது   எதையாவது  எழுதி ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வோம்.அவைகள் முறைப்படி எந்த இலக்கண வரம்பிற்குள்ளும்  உட்படாமல் ,காட்டாற்று வெள்ளமென  கொச்சைத்தனமாய்  இருக்கும்.ஆனாலும் அதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சி தந்தது . இது குறித்து  எங்களின்  ஆசிரியர்களின்  கவனத்திற்கு போன போதெல்லாம்  "இதுகள்  எங்கே உருப்படப்போகுது !"கவிதை எழுதுகிறார்கள்  என்றால் ,அது வீணா போற  கேசுங்க செய்யுற வேலைங்க !" என சொல்லியிருக்கிறார்கள் .
        ஆனால் மனதுக்குள் ஏதோ ஒரு வகையான  ஏக்கமும், உள்ளக்குள் குமுறலும் இடைவிடாத தேடலும் தொடர்ந்து  இருந்தே வந்தது . ஆனால் அது எதனால் வருகிறது ? அது ஏன் வருகிறது ? அதை எப்படி வெளிப்படுத்துவது ?  அதற்கு எவ்வாறெல்லாம்  எழுத்துவடிவம் கொடுப்பது என்பது தெரியாமல் வெறுமனே  தவிப்புகளினூடே கடந்துகொண்டிருந்தேன் . எனக்குள்  புதைந்திருப்பது  ஒரு கவிஞனா ? கதாசிரியனா ? இலக்கிய விமரிசகனா? என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் நீடித்தே வந்தன .எனக்குள் நிலவும் தனித்தன்மைகளை  இனம் காண்பதில் தொடரந்து தொல்வியடைந்தே    வந்திருக்கிறேன்.

ஆனால் நினைப்பதை  எழுத்துக்குள் கொண்டுவரும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறேன்.ஆனால் அதை தொடர்ந்து செய்ய வில்லை .வாசிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. ஆனால் அவ்வப்போது அதை பதிவிடும் முயற்சி இல்லாமல் போனது.அதன் விளைவாக  இன்னும் எழுத்துலகில் ஒரு அடையாளம் இல்லாமல் இருந்து வருகிறேன்.
நூலக வாழ்க்கை
1982 ஆண்டு  ஒரு  மழைக்காலத்தில்   உடையாரபாளையம் அரசு பொது நூலகத்தில் ஒரு உறுப்பினராக சேர்ந்தேன்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாடகை  சைக்கிளில் சென்று எனது வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.அது வரை போதுமான நூல்கள் கிடைக்காமல் முறைபடுத்தப்பட்ட வாசிப்பு இல்லாமல் ,ஏனோதானோவென்று  ஒரு சினிமாத்தனமே எனக்குள் மேலோங்கியிருந்தது. ஆனால் நூலகத்தில் சேர்ந்து  மதிப்புக்கு மிக்க பல நூல்களை வாசிக்கத்தொடங்கிய பின்பு ,இது வரை நான் கொண்டிருந்த  எனது கருத்தியல்களில்  நிறை மாறுதல்கள் ஏற்பட்டு வருவதை உணர்ந்தேன்.
        குடும்ப நிலைகளில்  எவ்வளவோ  இடர்பாடுகள்   பின் தொடர்ந்த  போதிலும் ,சிலவேளைகளில்  வாடகை சைக்கிளில் செல்ல முடியாத சூழ்நிலையிலும் ,இரவலாக  சைக்கிளைப்பெற்று நூலகம் சென்று வாசித்து வந்தேன்.கொஞ்சம் மாறுதலுக்காக பேருந்திலும் பயணிப்பதுண்டு ,நேராக  நூலகம் சென்றால்  பொழுதுபோவதே தெரியாது. நூலக நேரம் எப்போது முடிகிறதோ ,அப்போதுதான் வெளியேறும்  பழக்கத்தை நான் வைத்திருந்தேன் . நூலகர்  செல்வகணபதி  ஒரு தந்தையைப்போல  எனக்கு ஆதரவு தந்தார்.ஆரம்பத்தில் ஒரு  உறுப்பினர்  என்ன்ற அளவில் கணக்கு வைத்திருந்த நான் ஒரு கட்டத்தில்  பன்னிரெண்டு  உறுப்பினர்  அளவுக்கு  கணக்கு எண்ணக்கையை  அதிகப்படுத்திக்கொண்டேன் . எனது வாசிப்பின் தாகத்தை புரிந்தது கொண்ட நூலகர்  எனக்கு எல்லா வகையில் ஒத்துழைப்பு நல்கினார்.  தனியாக ஒரு நோட்டு வாங்கி வரச்சொல்லி  அதில் வேண்டிய புத்தகங்களை  எடுத்துக்கொள்ளுமாறும் ,அந்த புத்தகங்களின் கணக்குகளை அதில் எழுதிகொள்ளுமாறும்  அறிவுரைக்கூறினார் . என்னுடைய  வாசிப்பை மெல்ல மெல்ல முறைப்படுத்தினேன் .
             ஒரு புறம் வாசிப்பை  தரப்படுத்திக்கொண்டு  மறுபுறம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன் . சின்ன  சின்ன கவிதைகள் ,குறிப்பாக  அறுசீர் விருத்தம் ,எண்சீர் விருத்தம் ஆசிரியம் போன்ற  வடிவங்களை  கையாள துவங்கினேன் .ஆனால் அவற்றையெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை.ஆனால் தீபாவளி, பொங்கல் மலருக்கு  கவிதைகளை அனுப்புவதை வாடிக்கையாக  செய்து வந்தேன். அது போல  1985 ஆண்டின் ஒரு தினகரன் பொங்கல் மலரில்  கவிஞர் மணிமேகலைதாசன்  என்ற புனைப்பெயரில் ஒரு கவிதை  எழுதி  அனுப்பினேன் . அது  அந்த பொங்கல் மலரில் வெளி வந்து  எனக்கு  மகிழ்ச்சியையும் ,புதிய உற்சாகத்தை தந்தன . அதன் பின்பு எப்போதும் வெறும் கவிதைகளாகவே எழுதி வந்தேன். அப்போதும் கூட அந்த எழுத்துக்களை தொடர்ந்து  இதழ்களுக்கு அனுப்பவேண்டும் ,அது இதழ்களில்              வெளிவரவேண்டும்  என்ற  எந்த உள்தூண்டுதலும் இல்லாமல் இருந்தேன்.

சிற்றிதழ்  அறிவுக்கூர்வாள்
          எனினும்  எழுதுவது எனக்குள் ஒரு  வடிகாலாக இருந்தது .  எனக்குள் தோன்றும் உள்மன இறுக்கங்களை  எழுதிதான்  தீர்க்க வேண்டியிருந்தது . எழுதாத பொழுதுகளெல்லாம்  எனக்கு வீண் பொழுதுகளாகவும், வாழ்க்கையை  இழந்ததும் போலிருந்தது. 1984 மழைக்கால பொழுதொன்றில் இரும்புலிக்குறிச்சி மதிப்பிற்குரிய  வா.உலகநாதன்  மளிகைக்கடைக்கு  பீடி வாங்க போனேன் . அப்போது நானும் ,எனது நண்பர்களும் சேர்ந்து தனிப்பயிற்சி பள்ளி நடத்திக்கொண்டிருந்தோம். பீடி குடிக்கும் பழக்கம்  எனக்கிருந்தது .அதனால் மாலை வேளைகளில்  திரு உலகநாதன் மளிகை கடைக்கு பீடி  வாங்க செல்வதை வாடிக்கையாக  வைத்திருந்தேன் .அதுபோலத்தான் அன்றும் அவரது கடைக்கு சென்று  பீடி வாங்கி கொண்டிருக்கையில் ,அவருடைய கடையில்  மேலே சுற்றப்பட்ட காகித உறை பிறிக்கப்படாமல் இரு இதழ் கிடந்தது .அதை அவரிடமிருந்து வாங்கி அவரின் அனுமதியுடன்  அந்த உறையை அகற்றி,அந்த இதழை திறந்து பார்த்தேன் .அது முற்றிலும் இலக்கிய  இதழாக இருந்தது ,அதன் ஒவ்வொரு பக்கத்தையும்  மிகப்பொறுமையாக புரட்டிப்பார்த்தேன் ,அதை எளிதில் படித்து புரிந்துக்கொள்ளக்கூடியதாய் இருக்கவில்லை .முற்றிலும் இலக்கிய இதழாய் இருந்தது .அதை அவரின் அனுமதியுடன்  வீட்டுக்கு எடுத்து சென்று  அதை வாசிக்கத்தொடங்கினேன் .பக்ககங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தபோதிலும், மிகுதியான  இலக்கிய செறிவுடன் இருந்தது. அந்த  இதழ்தான்  சென்னை பல்கலையின் முன்னாள்  துணைவேந்தர் பொற்கோ  அவர்களை ஆசிரியராக கொண்டு நடத்தப்பட்ட அறிவுக்கூர்வாள்  இதழ் ஆகும்.

                          புதல்வர்கள் (இளவேனில் -புரட்சிக்கனல்)
        அறிவுக்கூர்வாள் பன்முகத்தன்மை வாய்ந்ததாய் இருந்தது.அதில் காணப்பட்ட படைப்புகள்  என்னைக் கவரவே நாமும் இந்த இதழுக்கு  ஏன் எழுதக்கூடாது  என்ற எண்ணம் ஏற்படவே , ஒருநாள்  புதுக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன் .அதன் பின்பு அதை பற்றி முற்றிலும் மறந்து விட்டேன். ஒரு நாள்  எதிர்பாராத  மதிய வேளையில்  அஞ்சல்காரர்  ஒரு  தனிச்சுற்று இதழைக்கொண்டு    வந்து  என்னிடம் கொடுத்தார் . அதைபிரித்துப்பார்த்தேன் .அது அறிவுக்கூர்வாள்   இதழ்தான்,  அதை ஒருவித பதட்டத்துடன் பிரித்துப்பார்த்தேன்.ஆம் நான் எழுது அனுப்பிய  கவிதை அந்த இதழில்  வெளிவந்திருந்தது.

"உண்மையுள்ள 
உன் நினைவைத் தூங்கவிடாதே
உன்னிடத்தில் தோன்றும் 
மறந்துவிடாதே ....... 

          இது  மிகவும் அழகிய ,படித்தவுடன் சுருக்கென்று நெஞ்சில் தைக்கும் விதமாக வசீகரமிக்கதாக இருக்கவில்லை .ஆனால் அதற்குள் உள்ளீடாக எதையோ சொல்ல விழைகிறேன் என்பதை இதை வெளியிடுவதற்கு தேர்வு செய்த  ஆசிரியர்  உணரந்திருக்க வேண்டும். அதனால்தான் இதை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனாலும்  இதுவும் ,விபத்தைப்போலத்தான்  என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் .

          மேலும் கூடுதலாக  நிறைய கவிஞர்கள்  கவிதைகள்  எழுதியிருந்தனர் . குறிப்பாக தத்தனூர்  கவிஞர் தமிழ்மணி எழுதியிருந்த  மரபு கவிதை  என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
"கொட்டிவிட்ட பாலை மீண்டும் அள்ளலாமோ
குறிவைத்து  விட்டஅம்பு  திரும்பலுண்டோ
கெட்டமணம் கொண்டுரைத்த கீழ்மை சொற்கள்
கிளிமொழியே என்றாலும்  ..........
கொட்டு நீல மழையென  அன்பை கொட்டு 
கொள்கை பொதுவுடமைஎன முரசம் கொட்டு !"  

கவிஞர் தமிழ்மணி அவர்கள  காலஞ்சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிசெயலாளர் அறிவுச்செல்வனின்  தந்தை ஆவார்.
பொற்கோவின் கவிதையான 
"சூழ்ச்சிகளில் அலைமோதி 
தொடர்ந்துங்கள்  
தோழர்களை 
தொலைக்கவேண்டும் !

சூழ்ச்சிதனை வீழ்த்துதற்கு 
சூழ்ச்சி யொரு   
சூழ்ச்சியல்ல 
சூழ்ச்சி தோற்கும் !"

என்னை மிகவும் ஈர்ப்பனவாய் இருந்தன . அறிவுக்கூர்வாள்  எனும் இலக்கிய சிற்றிதழே  என்னை இலக்கியத்தின்பால்  முதன் முதலில் அறிமுகப்படுத்தியதாகும் .

அதன்பின்பு  1985 ஆம் ஆண்டில் தினகரன்   தீபாவளி  மலரில் எனது கவிதை வெளிவந்து  கவிதையின்பாபால்  அதிக  ஈர்ப்பை   ஏற்படுத்தின .
அது -
பட்டாசு வெடிக்கும் தோழர்களே -நம் 
பாரதத்தின் நிலையை  பாருங்களே !
எட்டாத வான்வெளியில் பறந்தீர்கள் -இந்த 
ஏழைகளின் துயரினை மறந்தீர்கள் !

நடைபாதை மன்னர்கள் பலகோடி -இங்கு 
நடைபிணமாய் அலைந்திடுவார் பசித்தாடி!
எடைபோட முடியாத வ்றுமைகளாம் -இன்னும் 
எத்தனை காண்பது  பொறுமைகளாம் !

சிங்களத்   தீவினில்  மடியும்  - தமிழன் 
சிந்துகின்ற  கண்ணீர் என்று முடியும் !
தங்களினை தொலைக்கின்றார்  நாளும் - ரத்த 
தடாகத்தில் மிதக்கின்றதே தோளும் !
      இதுவெல்லாம்  எனக்கு பெரும் கனவாய் தோன்றியது . ஏதோ ஒரு உலகத்தில் பிரவேசிப்பது  போலிருந்தது . மனதுக்குள் நம்பிக்கை   ஒளிக்கீற்றுகள்  எல்லா திசையிலிருந்தும் வீசத்தொடங்கின. கவிதைகள்தான் நாம் பிரவேசிப்பதற்கான  பொருத்தமான  உலகம் என  எனக்குள் தீர் மானித்து  எனக்கு உள்ளிருந்தும் ,வெளியிலிருந்தும்  எந்த வழிக்காட்டுதலுமின்றி  கவிதை பயிர்களுக்கு உரம் சேர்க்கும் வகையில்  எனது கவிதை பயிலரங்கை விரிவுபடுத்தினேன். வழக்கம் போல  என்னை பலரும்  வேலையற்ற வேலை என என் கண்முன்னே என்னை விமர்சிக்கவே செய்தார்கள் . எனினும் தொடர்ந்து  பல வார இதழ்களுக்கு அனுப்பினேன் . அதில் பெரும்பாலான இதழ்கள் ஒன்றில்கூட வெளிவரவில்லை. ஆனால்வலம்புரிஜானை ஆசிரியராகக்கொண்ட   தாய் இதழ்கள்  சிலவற்றில்  சில கவிதைகள்  வெளிவந்துள்ளன ,ஆனால் அவைகளில்  ஒன்றுகூட  தற்போது கைவசமில்லை.
              இளமைக்காலங்களில்  எனது உலகை பற்றி நின்ற  எண்ணற்ற  கனவுகளையும் ,கற்பனைகளையும்  ஒரளவு பதிவு செய்யும் முயற்சியில்  இருந்து வந்திருக்கிறேன் . எனது  தாகம் கடலையே பருகிடும் அளவுக்கு இருந்தது .ஆனால் கிடைத்தது என்னவோ  கையளவுதான். பள்ளியில் நான் பெற முடியாத  வாழ்வின் அனுபவத்தை பள்ளிக்கு வெளியில்தான்  பெற்றேன்.

       1977 இல் எனது மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்த நகசல்பாரி இயக்க சிந்தனைகளால்  ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.அதன்விளைவாய்   எனது எழுத்துகளில் அதன் தாக்கம் மேலோங்கியிருந்தன .அதனால் நான் எந்த இதழுக்கு  எழுதி அனுப்பினாலும், அவைகள் பெரும்பாலும்  வணிக இதழ்களாக இருப்பதால்,அவைகள் பெரும்பாலும் வெளி வருவதில்லை. ஆரம்பத்தில் சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும்,போக போக மனம் எல்லாவற்றையும்  கடந்து போக  பழகிக்கொண்டது.
       
          1984 ல் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து  இரும்புலிக்குறிச்சியில் பள்ளி
மாணவர்களுக்காக தனிப்பயிற்சி நிலையம் ஒன்றை துவங்கினோம் . அதன் விளைவாக  மாணவர்களோடு சேர்ந்து நானும்  நிறையக் கற்றுக்கொண்டேன். மற்ற மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன். சிறிய மாணவர்களின் கல்விகுறித்த தரவுகளின் தேடுதலில் எனது  தேடுதலும்  சற்று  களைப்பாறிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அறிவு புலத்தில்  நான் எந்த  தளத்தில் நிற்கிறேன் என்பதை  என்னால் ஆழமாக ஊகிக்க  முடிந்தது . சமூக புரிந்துணர்வில்  எனக்கு முன்புள்ள முரண்களை   எந்த     காரணியைக்கொண்டு களையவேண்டும் என்பதற்கான  தேடுதலை  எனது பெரும்பாலான நேரங்களை  நூலகங்களில் செலவிட்டேன் . எனினும் முடிவற்ற  கணங்களோடே பயணம் தொடர்ந்தது. காலப்போக்கில்  நான் ஏற்கனவே  கொண்டிருந்த  பழைய  கருத்தியல் பிடிமானங்களை  மெல்ல மெல்ல தகர்க்கின்ற  ஓரு முற்போக்கான   ஒரு அரசியல் புரிந்துணர்வை நோக்கி  நகர்ந்துக்கொண்டிருந்தேன். எனது  தீவிர  திராவிட அரசியல்  கருத்தியல்களை  தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தியது .நக்சல்பாரிகளின் எழுச்சியும்  அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே காரணமாகும்.  அதன் விளைவாக  நான் மார்க்சீயத்தை  முறையாக   பயிலத்தொடங்கினேன்.
       
           எனது எழுத்து புலத்திற்கு எண்ணற்ற நூல்களும் ,ஆசிரியர்களும்  அடிப்படையாய்  இருந்திருக்கிறார்கள். அதற்கான முன்னணி வரிசைகளில் பாரதியை சொல்லலாம்.பாரதியாரின் கவிதைகளில் முற்றாய் கரைந்து போனவன் நான். அவரை வாசிக்காத நாளே இருக்காது .தினமும் அவனுக்குள்  எங்கோ ஒரு மூலையில்  சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அவனை வாசித்து வாசித்து  அவன் எனக்குள் முற்றாக கரைந்து போனான். அவனுடைய  ஞான ரதம் ஈடு இணையற்ற காவியமாகும். இறவா  வாழ்வு பெற்றதாகும். அவனுடைய  கவிதைகளில் காணப்பட்ட  செறிவு , அவனை  வாசிக்கும் என்னைப்போன்ற  துவக்க நிலை  வாசகனுக்குள் பெரும் தாக்கத்தையும்,பிரமிப்பையும் ஏற்படுத்தி வந்தான் . பாரதியை வாசிப்பதற்கு  முன்பே  எழுத்துலகிற்கு  நுழைந்துவிட்டாலும், பாரதிதான்  எனக்குள் ஒரு ஒழுங்கமைவை  ஏற்படுத்தியவன்.





 .