Friday, 21 June 2019

காவேரி வந்தாள் (13)



Related image
என் புள்ளைககுத்தான் இந்த சொதனைக்காலமே தவிர,மற்றபடி எங்களுக்கு அப்படி  ஒண்ணும்  தலை போற கஷ்டம் எதுமில்லை ண்ணா, இருக்கிறத வச்சிக்கிட்டு,அக்கம் பக்கத்துக்கு எந்த பங்கம் எதுவும் வராம, கவுரமா காலந்தள்ளிக்கிட்டு வரோம்” என சொல்லி முடித்தாள் பார்வதி.
கருப்பன் ஏதும் பேசாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தார்..சற்று தூரத்தில் வீட்டுத்தின்னையின் கிழக்கு பகுதியில் மகன் கலியபெருமாள் உட்கார்ந்திருந்தான். கருப்பன் அருகே சின்னப்பிள்ளை திண்ணையின் சுவர்மீது  சாய்ந்தவாறு நின்றாள். பார்வதியும் காவேரியின்   கருப்பன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சற்றுதள்ளி வடக்காலே  உட்கார்ந்திருந்தார்கள்..எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ஒரு சில மணித்துளிகள் அமைதிக்காத்தனர். கணங்கள் வெறுமையாக நீடித்துக்கொண்டிருந்தன. யாருக்கு என்ன சொல்வது? யாரிடம் என்ன சொல்வது? எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்சினையா இது ?” என்றவாறு ஒவ்வொருவருடைய மனமும் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டன. எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் நகரும் மரண கணங்களின் உள்ளே ஒவ்வொருவரும் புழுங்கிக்கொண்டிருன்தனர். இப்படியே நீடிப்பது  சின்னப்பிள்ளையின் பொறுமையை மேன்மேலும் சோதிப்பதாய் இருந்தது. அவளால் பொறுமையாக இருக்கமுடியவில்லை.எதையாவது கேட்டுவிடவேண்டும் என்ற முடிவோடு“ இப்படியே பேசாம உட்கார்ந்துக்கிட்டே இருந்தா என்னய்யா பண்றது? எதையாவது சொல்லுய்யா ! புள்ள வேற நாளைக்கு  ஊருக்கு போகணும்னு சொல்லுது, அங்க எங்க அண்ணன் ஒண்டியா கிடந்து  கஷ்டப்படுவாறு!” என்றாள்.
ஒருகணம் தனது  நினைவுக்கு திரும்பியவாராய் “ஆமாம் !ஆமாம் ! என்ற ஒரு ஒப்புதலோடு “பார்வதி  நான் ஒண்ணு சொல்றேன், காவேரி  இங்கேயே  கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும். நான் மாப்பிள்ளைக்கிட்டே சொல்லிக்கிறேன்” என்று  சொல்லி  முடித்தான் கருப்பன். ஆனால்  பார்வதி உடனே  இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது நாத்தனார்  புருஷனின் இந்த முடிவை அவள் எதிர் பார்க்கவில்லை.காவேரியின்  முகத்தை ஒருகணம் உற்றுப்பார்த்தாள். கருப்பனின் அந்த யோசனையைப்பற்றி காவேரியின்  மனதில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. அவள் எப்போதும் போல எந்த சலனத்துக்கும் ஆட்படாதவளாய் இயல்பாய் இருந்தாள் “ஒரு வேளை இவள் அத்தை வீட்டில் இருக்க விரும்புகிறாளா ? என பார்வதியின் மனதும் ஐயம் ஏற்பட்டன. எனினும் பார்வதி இதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை.'என்ன செய்வதென ஒரு கணம் குழம்பிக்கொண்டிருந்தாள். நாத்தார் புருஷன் சொல்வதையும் தட்ட முடியவில்லை .அந்த பக்கம் தன புருஷன் என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு,  ஏதும் பேசாமல் ஊமையாய் நின்றுகொண்டிருந்தாள். உன் புருஷன் ஏதாவது சொல்வாருன்னு நினைக்கிறாய் பார்வதி? அவர் ஒன்னும் சொல்லமாட்டாரு, அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்றார் கருப்பன்.
இல்லண்ணே ஒரு வார்த்தை அவர்கிட்ட கேட்டுகிட்டா நல்ல இருக்கும்ண்ணே !”
‘அவர் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டாரு’  தம்பியை கூட அனுப்பி வைக்கிறேன்.  உன்னை சைக்கிளில அழைச்சுக்கிட்டு தம்பி ஊரில கொண்டாந்து விட்டுட்டு மச்சனங்கிட்ட ,ஒரு வார்த்தை சொல்லிட்டு வரட்டும,நீ ஒன்னும் பயப்பட வேண்டாம் ,எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் “ என உறுதியளித்தார் கறுப்பர்.
ஏதும் மறு  பேச்சு பேசாமல் நின்ற பார்வதி, தன் மகள் கங்கையை தோடத்துப்பக்கம் அழைத்துக்கொண்டு போயி என்ன “பேசாம  நிக்கிற, உனக்கு இதுல இஷ்டமா?  உங்க அப்பா என்னை பேசமாட்டாரா” என்றாள். ‘அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா ‘ அத்தை வீடுதானே! நானும் அடிக்கடி இங்கு வந்ததில்ல, கொஞ்ச நாளைக்கு இருந்துட்டே வறேன்” என்றதும்,தனது மகளுக்கும்  இங்கு இருக்கவேண்டும் என்பதில் ஆசைப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்ட பார்வதி தனது மன இறுக்கத்தை குறைத்துக்கொண்டு,ஊருக்கு பயணப்பட ஆயத்தமானாள்.வீட்டின் வாசலில் கலியபெருமாள் அவன் வைத்திருந்த அந்த கால பழைய சைக்கிளுக்கு ஆங்காங்கே சிறிய  ஆயில் கேனால் எண்ணை விட்டுக்கொண்டிருந்தான்.சின்னப்பிள்ளை சின்ன சாக்குப்பையில் வீட்டிலிருந்த  பொருட்களை வைத்து முடிந்து சைக்கிளின் ஒரு பக்கத்தில் கேரியருக்கு கீழே பக்கவாட்டில் வைத்து சணல் கயிற்றால்  கட்டி முடித்த பின்பு புறப்பட தயாரானான் கலியபெருமாள்.   
      வீட்டின் உள்ளே சென்ற சின்னப்பிள்ளை  ஐந்து ரூவாவை  எடுத்துவந்து  கலியன் கைகளில் கொடுத்து, தம்பி போகும்போது எங்கேயாச்சும் பொட்டிக்கடையில மாமனுக்கு  திங்கிரத்துக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போ !” என்றாள். சைக்கிளை தள்ளிக்கொண்டு அத்தையை அழைத்துக்கொண்டு  பீசந்து வழியே நடந்து சென்று,கிழக்குத்தெருவை அடைந்தவுடன் சைக்கிளை நிறுத்தி  பார்வதியை  அதில்  உட்கார சொன்னான். அவள் ஒருகணம் சின்னப்பிள்ளையின் கைகளைப்பிடித்துகொண்டு  என் புள்ளைய பத்திரமாய் பாத்துக்கோ ஆச்சி என்றவள்,கங்கையை கொஞ்சம் அழுத்தமாக பார்த்தாள். அவளின் மொழியை புரிந்துகொண்ட கங்கை அதெல்லாம் ஒண்ணுமில்லை,பயப்படாத போய்ட்டு வாம்மா !” என்றாள். தன மகள் நல்ல தெளிவோடுதான் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவளாய் கொஞ்சம் மன தெம்புடன் பார்வதி கலியபெருமாள்  சைக்கிளை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள  பார்வதி அதில் அமர்ந்து கொள்ள கலியன் சைக்கிளை மிதிக்கத்தொடங்கினான், வண்டி மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து,வாணச்சி ஆயி வீடு முக்கம் போயி திரும்பும் வரை வைத்தகண் வாங்காமல் கடந்து சென்றாள் பார்வதி..
     கங்கைக்கு தெரியும்  தன அம்மா அரைகுறை மனத்துடன்தான் தன்னை இங்கு விட்டு செல்கிறாள்  என்பது. ஒரு  நிமிடம்கூட தன்னைவிட்டு பிரியாதவள் முற்றாக பிரிந்து செல்கிறாள் என்பது சாதாரணமானதல்ல,அவளின் உடல்தான் இங்கிருந்து போகிறதே தவிர ,அவளின் ஆவி முழுக்க கங்கையைத்தான் சுற்றிக்கொண்டிருக்கும். தனியே வீட்டுக்கு சென்று தவியாய் தவிக்கப்போகிறாள் என்பது கங்கைக்கு நன்கு தெரியும்.எனினும் தன் தாயிடம் தனது  ஆற்றாமையை அவள் வெளிப்படுத்தவில்லை.  தனது துயரால்  தனது பெற்றோர் படும் வேதனையை சற்று மறக்கச்செய்யும் விதமாகத்தான் கங்கை இங்கிருக்க சம்மதித்தாள். தன் தந்தையிடம்  தன் தாய்  என்ன பதில் சொல்வாள் ? தன  தந்தை  இங்கிருக்க அவ்வளவு எளிதில் சம்மதிக்கமாட்டார். அவள் அம்மாவை நிச்சயம் திட்டுவார் , எனினும் நாத்தனாரும் ,நாத்தானாரின் புருஷனும் கட்டாயப்படுத்தியதால்தான்  அம்மா தன்னை விட்டு செல்கிறாள் என்பதை கங்கை நன்கு உணர்ந்திருந்ததாள்.  எப்படியும் மாமா போவதால் அப்பாவின் கோபம் குறைய  வாய்ப்பிருக்கிறது என மனதுக்குள் அமைதியடைந்தாள்  கங்கை.

‘கங்கை  கங்கை’  என   சின்னப்பிள்ளை   அழைத்தாள். அத்தை நான் இங்குதான்  இருக்கிறேன்’ என குரல் கொடுத்தவள் மெல்ல அத்தையிடம் வந்து  வடக்கால வீட்டில்தான் அத்த நின்னுக்கிட்டிருந்தேன்’
சரி!” சோறு தின்னியா !”
ஏதும் பேசாமல் நின்றாள்!"
சரி !போ ! போயி சோறு போட்டு சாப்பிட்டு! ஒண்ணுக்கும் நீ பயப்படதே அம்மாவ அண்ணன் ஒன்னும் திட்டாது . எங்க அண்ணன் அவ்வளவு மோசமானவரு இல்ல, எனக்குத்தெரியாதா!” எதுவானாலும் நான் பாத்துக்கிறேன் என்றவாறு சின்னப்பிள்ளை வீட்டின் வாசலில் தானியங்களை காயவைத்துக்கொண்டிருந்தாள். கங்கை வீட்டினுள்ளே சென்று   சாப்பிடத்தொடங்கினாள்.  அம்மாவை கொண்டவிட போன மாமன் திரும்பி வந்து நல்ல சேதி  சொல்லாதவரை,என்னதான் தேனாதான் பொரிச்சு வச்சாலும் அது வேப்பங்காயகத்தான் கசக்கச்செய்யும். மாமன் பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்து விடலாம். ஆனால் ... அப்பா ஏதாவது பிரச்சினை பண்ணினால்தான் நிலைமை சிக்கலாகும். என வித விதமான கற்பனை கடலுக்குள் மிதந்து கொண்டிருந்தாள்.
“என்ன சாப்பிட்டுவிட்டாயா?”  என  அத்தை கேட்டாள்.
சாப்பிட்டாச்சு அத்தை!”
அப்படீன்னா .துணிமணிய அள்ளிக்கிட்டு வா ஏரிக்கு போவோம்!”
சரி அத்தை !”  என்  அத்தையினுடைய சேலை துணிமணிகளை அள்ளி சுருட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
சின்னப்பிள்ளை தயாராக நின்று கொண்டிருந்தாள். இருவரும் ஏரிக்கு கிளம்பினார்கள். வீட்டு  திண்ணையில் கருப்பன் பக்கத்து வீட்டு
குழந்தைவேலோடு ஊரு கதை ,ஒலகத்து கதைகளை பேசிக்கொண்டிருந்தார்.
“ஏய்யா வாசல்ல போட்டிருக்கிற கம்பை அள்ளி சாக்கில கொட்டி கட்டி வை! தம்பி வந்தா வடக்காட்டிலே போய் மாட்டுக்கு  பில்லு கொண்டு வரச்சொல்லு ,இல்லேன்னா நீயாவது போய் மாட்டுக்கு பில்லு அறுத்துக்கிட்டு வா !” என்றவாறு  மளமளவென கங்கையை அழைத்துக்கொண்டு ஏரிக்கு புறப்பட்டாள்.

அவளுக்கு புது அனுபவமாயிருந்தது. மிக சின்ன வயதில் இந்த ஊருக்கு அப்போவோடு இரண்டொரு தடவை வந்திருக்கிறாள்.அதோடு சரி.அதற்கப்புறம் இந்த ஊருக்கு வந்ததில்லை. ஆனாலும்  அப்படி வந்துபோகின்ற வாய்ப்பும் அவளுக்கு கிட்டவில்லை. பார்க்க மிரட்சியாக இருந்தது. கரும் புகையை கக்கிக்கொண்டு ஊளையிட்டபடி  ரயில் போவதை முதன் முதலாக  அவள் பார்த்தபோது ,பயத்துடன் கூடிய வியப்பை வெளிப்படுத்தினாள். ரயிலின் முதல் இஞ்சின் தொடங்கி கடைசி பெட்டி பொய் மறையும் வரை  வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை சின்னப்பிள்ளை கவனித்தாள். என்னடி பயந்துட்டியா ?” என்றாள்.  இல்ல அத்தை !” நான் இன்னமுட்டும் ரயில பார்த்ததில்லை.இப்பதான் மொதல்ல ரயில பார்க்கிறேன்.அதான் கொஞ்சம் மாதிரியா இருந்தது. மற்றபடி ஒன்றுமில்லை.. குளத்தின் நடுவே குடிநீர் கிணறு,அங்கு போவதற்கு  பாதை  வசதி ,நிழல்தரும் அரச மரம் ,இலுப்பை தோப்பு ,ஏரியின் முகப்பில் தொன்மையான சிவாலயம்.  இந்த இயற்கையான புது சூழல் கங்கையின் உள்ளத்தில் புது உணர்வையும் , மனதுக்குள் பரவிக்கொண்டிருக்கும் இனம்புரியாத ஒருவகை வேட்கையையும் அவள் உணர்ந்தாள். அவளுக்குள் காட்டுச்செடிகளைப்போல பரவிக்கிடந்த அவளின் பழைய நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து அவளைவிட்டு கடக்கத்தொடங்கின. அவள் புது உலகத்துள்  சஞ்சரிக்கத்தொடங்கினாள்.
குளத்தில் நீந்திக்குளித்தாள்.  ‘ஏண்டி உனக்கு நீச்சல் தெரியுமா?  சொல்லவே இல்லையே.நான்கூட பயந்தேன். என்னடி புதுசா இருக்கு! கெட்டிக்காரிதான். என அடுக்கடுக்காக  புகழ்ந்து தள்ளினாள். அத்தையின் பாராட்டு அவளை மேலும் உற்சாகப்படுத்தின. அவளின் விருப்பம்போலவே அவளின் நாட்கள் நகர்ந்து கொண்டிருப்பதில் அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. குளித்ததுமுடித்துவிட்டு   துணிமணியை சுமந்து  கொண்டு அத்தையும் கங்கையும் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்கள்.


  கலையில் கிளம்பி பத்து மணிக்குள்ளாகவே பார்வதியை  அழைத்துக்கொண்டு அவர்களின் ஊருக்கு பொய் சேர்ந்தான் கலியன். வீட்டுக்கு போன  நேரத்தில் வீட்டில் ஒருவருமில்லை .வீடு பூட்டியிருந்தது .வீட்டு படல் சாத்தியிருந்தது. அனேகமாக  வீட்டு பட்டியில் ஆடு  மாடு எதுவும் இல்லாத காரணத்தால் ஆறுமுகம் கொல்லைக்கு போயிருக்கவேண்டும். “தம்பி வா திண்ணையில் உட்கார் !” நான் சோறு ஆக்குறேன் !” என்றவாறு சமைக்க துவங்கினாள். வேண்டாம் அத்தே ,நான் ஊருக்கு போறேன் !” என்று சொல்லி பார்த்தான்..ஆனால் பார்வதி கேட்கவில்லை. மாமன் கொல்லையிலிருந்து வந்த பின்புதான் போகவேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை.   “சரி அத்தை !” . என்றவாறு அங்கிருந்து தெருப்பக்கம் சென்றுவிட்டான். பார்வதி சமையலில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள்.  “எப்படியும் இன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடன்  மகளை  அங்கேயே விட்டுட்டு  வந்துட்டியா' என  கணவர் சீறப்போகிறார்!” அதுக்குத்தான் கலியபெருமாள் கூட இருந்தா பேசாம உட்டுடுவார், அதை மனசுல வச்சுதான் தம்பியை அவரு வருகிற வரைக்கும்  இங்கேயே இருக்க  சொன்னேன் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.  பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தெருப்பக்கம் போன கலியபெருமாள் அப்படியே கோயில் குளம் என நேரத்தைக்கடத்திவிட்டு  பொழுது சாய்ந்தவுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்  ‘ தம்பி திண்ணையில் உட்கார் , என சொல்லிவிட்டு கையில் தண்ணீர் சொம்பை கொடுத்து கையை கழுவிட்டு வா தம்பி  சோறு சாப்பிட்டு என்றாள் !” இல்ல அத்த! மாமனும் வந்துடட்டும், அப்புறம் சாப்பிடலாம் என்றவாறு திண்ணையில் உட்கார்ந்தான். ஒருத்தர் முகம் ஒருத்தருக்கு தெரியாத அளவுக்கு இருட்டி போயிருந்தது.”என்ன இன்னும் இவர காணுமே?” என லேசாக மனதுக்குள் படபடக்கத்தொடங்கினாள். அப்போதுதான் தூரத்தில் மாடுகளின் கழுத்து மணி ஓசை கேட்டது .அந்த  ஓசை மெல்ல மெல்ல வீட்டின் அருகில் நெருங்கி வர தொடங்கியது.அவளுக்கு புரிந்து விட்டது. நிச்சயம் அது அவர்தான் என சொல்லி முடிப்பதற்குள் மாட்டு கொட்டகைக்கு சென்று புல்லுக்கட்டை தரையில் போட்டார் ஆறுமுகம். 

                                             











No comments:

Post a Comment