Sunday, 3 February 2019

காவேரி வந்தாள் (3)

Image result for an tamil traditional lady in modern painting
Add caption
ஒருவரும் சோறு போடலைன்னா என் அம்மாவின் பேரைச்சொல்லி “அஞ்சலை அஞ்சலை“ என  புலம்ப ஆரம்பிச்சுடுவா கெங்க! என்ன செய்யுறது? ஆரம்பத்துல நமக்கு கஷ்டமாத்தான் தெரிஞ்சாலும் போக போக அவளும் நம்மோடு  அருகருகே வாழும் ஒரு உயிர்தானே என்னும் ஆனப்புறம் அவளைப்பட்டினியாய போட்டுவிட்டு நாம மட்டும் எப்படி வயிறுமுட்ட நிம்மதியாக சாப்பிட்டு தூங்கமுடியும்?
அதனால்தான் அவளுக்கு வேணுங்கிறதை போடாட்டியும்,கம்பந் தீசையையோ ,இல்லாட்டி பழைய சோl  சோத்தையை தண்ணியாட்டும் கரைச்சு காவேரி  வச்சிருக்கிற குண்டு கிண்ணியில ஊத்துகிறோம். கொஞ்சம் பழைய புளிச்ச கீரையை பக்கத்திலுள்ள மடக்கு சட்டியில் போட்டுட்டா காவேரி  அந்த சோத்த குடிச்சுட்டு ,புளிச்சகீறைய நாக்கால் நக்கிக்குவா !” என ஆயி எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

    கேட்பதற்கு மிகவும் ஒரு துயரமாய் தெரிந்தது.எதையும் சீர்த்தூக்கி பார்க்கத்தெரியாத அந்த வயதிலும் அவளை பார்த்ததும் எனக்கு கோபம் வரவில்லை.ஏனோ உடனே பிடித்துவிடவும் இல்லை..கொஞ்சம் அருவருப்பும் தோன்றினாலும் ,அவள் கிடக்கிற இந்த முட்டு சந்தில்தானே நாமும்  குடியிருக்கப்போகிறோம் என்ற ஒரு இயல்பு தன்மை மட்டும் தெரிந்தது.கூண்டுக்குள் வசமாக சிக்கிக்கொண்ட வேறுவழி தெரியாமல் இருக்கும் நிகழ்வோடு தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஒரு கிளியின் மனோ நிலையில்தான் நான் அப்போது இருந்ததாக நினைக்கிறேன்.

மண்வீட்டின் சுவரோரம் படுத்துக்கிடக்கிறாள் காவேரி .அவளுக்குள் இந்த திறந்தவெளிதான் சற்று வசதியாக இருக்க வேண்டும்.அந்த இடத்திலேயே மூத்திரம் விட்டுவிடுகிறாள். நான் துவக்க காலங்களில் பார்த்தபோது கிழவி வீட்டை ஒட்டி வடக்கு பகுதியில் கிழக்கு மேற்காக நடைபாதை சந்து இருந்தன. சனங்கள்  அந்த சந்து வழியாகத்தான் கிழக்குத்தெருவிற்கு போவார்கள்.ஆனாலும் இரவில் அந்த தெரு சனங்கள் அந்த தெருவிலுள்ள அந்த சின்ன நடைபாதை  சந்தில்தான் மலம் கழிப்பார்கள்.விடிந்தால் அந்த சந்துவழியே செல்வோர்கள் வாயில்வந்தபடி கண்டமேனிக்கு திட்டிக்கொண்டே செல்வார்கள். பொழுதெல்லாம் அந்த சந்தில் யாரும் மலம் கழிக்கமாட்டார்கள். நடைபாதையனைத்தும்.மிகவும் சுத்தமாக இருக்கும். ஆயியும் விளக்குமாறால் தினமும் காலையில் கூட்டுகிறாள்,ஆனால் பொழுது சாய்ந்தால் போதும் படக்கென வந்து பேண்டுவிட்டு போய்விடுகிறார்கள்.என்ன சாமர்த்தியமோ ? கிழவி வியந்து போவாள்.

    காவேரிக்கு  ஆரம்ப காலங்களில் கொஞ்சம் பார்வை இருந்தபோது இந்த சந்தில்தான் ஆயி போவாள் போலிருக்கிறது.அதன்பின்பெல்லாம் அவளை அந்த பீ சந்தில் நான் பார்த்ததாக ஞாபகமில்லை. மற்றபடி எல்லாம்  படுக்கையிலேயே மலம் போய்விடுவாள்,ஆயி மண்ணை அள்ளிப்போட்டு விளக்குமாற்றால் கூட்டி கொண்டுபோய் குப்பையில் கொட்டிவிடுவாள். ஒரே பீ நாத்தமும் ,மூத்திர நாத்தமும் குடலை குண்டுகட்டா பிடுங்கும், “என்னடா பெரிய இழவா இருக்கிறதே!” என அடிக்கடி சலித்து கொள்வதுண்டு.யாரிடம் யார் சொல்லிக்கொள்ள? எல்லோருக்கும் இந்த அவஸ்தை இருந்தது .அதனால் ஒருவருக்கொருவர் மூஞ்சியை பார்த்துகொண்டனர்.ஆனால் ஒருவரும் சொல்லிக்கொள்வதில்லை.

    எத்தனைக்காலம் மழையின்றி இருந்தாலும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு வரட்சியானாலும் எப்படியும் சமாளித்துக்கொள்ள வாழ்க்கை கற்றுத்தந்திருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீரே இல்லாமல் நாக்கு வறண்டு,குடிக்க தண்ணி மொள்ள ரொம்ப தூரம் பொடியில கால நடையாக நடந்து போயி, தலயில ஒரு குடம், இடுப்புல ஒரு குடத்த  பொம்பளைங்க சுமந்து வந்தாலும், தண்ணீர் வறட்சியை சில வேளைகளில் சமாளிக்க முடிவதில்லை.அப்போதெல்லாம் வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு சொட்டு மழைத்துளி வானத்திலிருந்து முகத்தில் விழாதா? என மனம் ஏங்குகிறது. 

சில வேளைகளில் எப்போதாவது திடீர் மழை ஒன்று வருவதுண்டு.அது தடதவென பெரிய பெரிய தூத்தலாக பெய்யும்.அந்த மழையினால் பெரிதாக செடிகொடிகளுக்கு பயன் ஒன்றுமில்லை என்றாலும்,அந்த மழை பெரிய உற்சாகம் தருவதுண்டு.பிள்ளைங்க எல்லோரும் தெருவில் இறங்கி எல்லோரும் துள்ளிக்குதிப்பாங்க.தூத்தல் துளி பெரிசா தெரியும்.சமயத்தில் அத்திக்கா ஆலங்கட்டி மழையாகவும் இருக்கும்.அழிஞ்சல் பழத்தை பிதுக்கி போட்டமாதிரி வெள்ளை வெள்ளையாய் , பெரிசு பெரிசா இருக்கும். 

அதை எடுத்து பாட்டில போட்டு வச்சா.தேள் கடிக்கும்போது,இந்த ஆலங்கட்டி மழைத்தண்ணியை அதிலவச்சா தேள்கடிச்ச வலி சுத்தமாக இறங்கும்“என  கிழவி சொன்னாள். பத்துவருஷ வறட்சிய தாங்கலாம்.ஆனால் பத்து நாள் மழைய தாங்க முடியல, மழைதரும் சுகத்தைக்கட்டிலும் ,கோடை தரும் வெம்மையை உடலும் உள்ளமும் தாங்கி கொள்ள பழகிக்கொண்டது.

     ஆனால் காவேரி  விஷயத்தில்  நிலைமை என்பது முன்பு நான் கூறியதிலிருந்து நிறைய வேறு பட்டதாயிருந்தது. அவளுக்கு மழை என்பது சுகம் தரக்கூடியதல்ல,வலி தரக்கூடியதாய் இருக்கிறது. வடக்கிழக்கு பருவ மழை என்பது இயற்கையின் ஒரு பிரசவகாலம்தான்.  இந்த புரட்டாசி மாதம் மழை தொதொடங்கினால்,ஐப்பசி ,கார்த்திகை ,மார்கழி ,தைமாதம் என இறுதிவரை நீண்டுகொண்டே போகிறது .தீபாவளிக்கூட மழையில் கொண்டாடுவதுண்டு. அதுமாதிரி பொங்கல் திருநாளையும் வீட்டுதாழ்வாரத்தில் வைப்பதுண்டு. விடாமல் மழை பெய்யும்.தொடர்ந்து நான்கு நாட்கள் கூட விடாமல் மழை தொடரும், மல சலம் போவதென்றால் மிகவும் கஷ்டகாலம்.எங்கும் வெள்ளம் புகுந்து போகிறது.எங்கு உட்கார்ந்து ?,எங்கு கழுவி?பெரிய உபத்திரவம்தான்.

வாசல் முட்டத்திலே முந்தரி கட்டையிலே  கணப்பு கத கதன்னு எரிந்து கொண்டிருக்கும், பொழப்பில்லாத பக்கத்து வீட்டு சனங்களேல்லாம்  கணப்பை சுற்றி உட்கார்ந்து கண்டு வெற்றிலை எச்சியை நெருப்பில் துப்புவார்கள். .அது சுர்ர்;ன்னு புகையை கிளப்பிக்கொண்டு மேலெழும்பி கண்ணில் சாம்பலை கொட்டும். 

எல்லோரும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்ற ஒருவகையான பெருமிதத்தில் இருப்பார்கள்.போதாக்குறைக்கு  பரணில் முந்தரி விறகை அடிக்கி வைத்திருக்கிறார்கள்.ஆயி அதை அடிக்கடி மேலே பார்க்கிறாள்.எப்படி போனாலும் இன்னும் இரண்டு மழைக்கு போதும் ! எனும் நம்பிக்கை அவளிடத்தில்இருந்தது. ஈர விறகை வைத்ததுண்டு மாரடிக்க வேண்டியதில்லை. ஆயி வீட்டுக்கும் அதன் முன்புறத்திலுள்ள பாதி இடிந்த நிலையிலுள்ள மண் சுவற்றால் ஆனா  ஓடு போட்ட வீட்டில்தான்  எல்லோரும் முட்டு போடுகிறார்கள்.இந்த இரண்டு வீட்டுக்கு இடையிலுள்ள சந்தில் தாழ்வாரம் கொஞ்சம் நீண்டிருக்கிறது. .மழைக்காலத்தில் இது கொஞ்சம் நன்றாயிருக்கும்.ஆனால் மழைக்காலத்தில் அதில் படுத்து தூங்குதல் என்பது அதிகமான ரணவேதனை கொண்டதுதான்.  



       ஆனால் காவேரி  விஷயத்தில் மழை என்பது அவளது உயிருடன் மரண வேதனை தரக்கூடியது .எல்லோரும் பகல் வேளையிலே எல்லோரும் குளிருக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றாகள். இவள் மட்டும் இந்த தாழ்வாரத்தில் பழைய கித்தான் சக்கை விரித்துபோட்டு அதன் மீது படுத்துக்கிடக்கிறாள்.   


வடக்கத்தி குளிர்க்காற்று முகத்தில் ஊசிபோட்டு குத்துகிறது.வயிற்றுக்கு இன்னும் ஏதும் கிடைக்கவில்லை ஐயோ .அம்மா ! என கத்துகிறாள் . வெற்றிலைப் போட்டுக்கொண்டு தூங்காமல்  விழித்துக்கொண்டு  உட்கார்ந்திருக்கும் கிழவியின் காதில் விழுகிறது. இந்த சத்தத்தை கேட்டதும் கிழவி கடுப்பானாள். ‘பேசாம,வாய மூடுடி முண்ட ? என உரக்க சத்தமிட்டாள். அது எப்படியோ   கெங்கையின் காதில் விழந்திருக்க வேண்டும், முக்கல் முனகல்களில் கிடந்த காவேரி  தனது அழுகை சத்தத்தை நிறுத்தினாள்.ஆனால் கிழவி பேசினால் பேசிவிட்டு போகட்டும். வயித்துக்கு ஏதாவது கொடுக்கமாட்டாளா ? என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள்.

நிலைமை ஒன்றும் நினைத்தவாறு நடக்கவில்லை .சத்தம் போட்ட கிழவி பேசாமல் அப்படியே  படுத்துக்கொண்டாள் .ஆனால்  கெங்கை  மட்டும்அந்த குளிரிலும் ஏதாவது பழைய நீராகாராமாவது கொஞ்சம் கிடைக்காதா ? என அவளுடைய வயிறு மட்டும் மனதுக்குள் நினைத்து கொண்டிருந்தது.யாருடைய  காலடி ஓசையாவது  கேட்காத என அவளுடைய காது கூர்மையடைந்து கொண்டிருந்தது.ஆனால் அவளுடைய பசியின் கூக்குரலின் ஓசை கொஞ்சம்கூட விடாமல் தொடர்ந்து கும்பலாக கத்தும் தவளைகளின் சத்தங்களில் கரைந்து போனது.விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந் தது இரக்கமற்ற வானம்.

தொடரும் ....