Monday, 1 February 2021

காத்து (சிறுகதை )

 


வனை எல்லோரும் ‘காத்து’ என்றுதான் அழைப்பார்கள். அவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட நாள் முதலாக எல்லோரும்  அவனை அவ்வாறு  ஏன் அழைக்கிறார்கள் என  அவனை நான் கேட்டதில்லை. அவனை அப்படி அழைப்பதால்,அவனுக்கு பெரிய பாதிப்பு எதுவுமிருப்பதாக     தெரியல்லை. அதனால் அதற்கு அவன்  எந்த எதிர்வினையும் காட்டுவதில்லை. எருமைமாட்டின்மீது மழைபெய்வது போல அவன் எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

 ஒருநாள் மாணிக்கம் மாமாவிடம் கேட்டேன் . மாமா முத்துவை ஏன் மாமா எல்லோரும் காத்து காத்து என அழைக்கிறார்கள்?”

அதுவா? உனக்குத்தெரியாதா? அது ஒண்ணுமில்ல மாப்பிள்ள ! அவன் ஓட்டம் பிடிச்சான்னா காத்துமாதிரி பொகையாய்  ஓடுவான் !  அதனாலத்தான் எல்லோரும் அவனை காத்து’ன்னு கூப்பிடுவாங்க’ என சொல்லி முடித்தார்.

 பொசுக்குன்னு அவர் சொன்ன பதிலால்  எனக்கு அப்படியே ஆர்வம் கொறைஞ்சு போச்சு , ஆனாலும் நானும் பார்த்திருக்கிறேன், அவன் உடல் ஓரளவு மெலிந்த உடல்தான். நல்லா ஓடுவான். அவன் நின்று பேசிக்கொடிருக்கும் பாணியைப்பார்த்தாலே அவன் ஓட்டம் எடுப்பதற்கு தயாராக இருப்பது போலத்தான் தோணும், நானும் அவனு,ம் ஒரே நேரத்தில் ஓட்டப்பந்தயத்தில்  ஓடியிருக்கிறோம். சில வேளைகளில் அவன் முதல் ஆளாய் வந்திருப்பான்.சிலவேளைகளில் நாங்கள் இருவரும்  சமமாக ஓடி வந்திருப்போம். நானும் நன்றாக ஓடுவேன் , ஆனால் அவன் அளவுக்கு என்னால் ஓடமுடியாது .மிக திறமையாக ஓடுவான்.அப்போது முடிவு செய்தேன் .அவனை காத்து என்று அழைப்பதில் தவறில்லை. அதற்கு அவன் தகுதினாவன்தான் .

 முத்துவும் நானும் ஆறாம் வகுப்பில் ஒன்றாகத்தான் சேர்ந்தோம்.

ஒன்றாகத்தான் தினந்தோறும்  செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கால் நடையாகத்தான்  நடந்து செல்வோம். சிலவேளைகளில் அவன் அவனுடைய அப்பாவின்  சைக்கிளில் வருவான். கூடவே என்னையும் அவன் சைக்கிளில்   அழைத்து வருவான். சில வேளைகளில் என்னைவிட்டுவிட்டு  யாராவது வேறோருவரை தனது சைக்கிளில்  அழைத்து வருவான். எளிதாக கோபம் கொள்ளும் குணம் அவனுடையது.

எல்லாவற்றிலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவான். சிலவேளைகளில் டாம்பீகமாக பேசுவான்,அது அவனுடைய அப்பாவின் மரபணுவிலிருந்து  பாரம்பரியமாக அவன் பெற்றது. 

 காத்துவின் அப்பா எப்போதும் ‘சினா’ ‘புனா’ என கேட்ட வார்த்தைகளால் மற்றவர்களை திட்டிக்கொண்டே இருப்பார்.

மரம் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்.வியாபாரம் செய்ததில் நல்ல லாபம் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவனுடைய அப்பா எப்போதும் யாரிடமாவது கடன் கேட்டுக்கொண்டே இருப்பார். காலையில் தூங்கி எழுந்தால் எந்த கடன் காரனாவது  அவரது தலை மாட்டில் உட்கார்ந்திருப்பான். சுப்பிரமணி தூங்கி எழுந்ததும் அவனை ஒருகணம் உறுப்பார்ப்பார். அந்த முதல் பார்வையே  கொடுத்த கடனை  வாங்க வந்தவரின்  மனதை அச்சம் கொள்ள செய்யும். அடுத்த பானத்தை தொடுப்பார்.

வேலை புண்ட இல்ல ! கோடி ருபா கொடுத்த மாதிரி  காலயிலயே வந்துட்டியா ? ஒரு கடுப்படிப்பார். அதிலேயே அவன் ஆடிப்போயிடுவான். இனி எந்த ஜென்மத்திலும் இவனுக்கு கடன் கொடுக்க கூடாது என்ற முடிவோதுதான்   அங்கிருந்து போவான். அந்த அளவுக்கு கடன் கொடுத்தவனை  நோகடிப்பார் .

‘நாளை மறுநாள் வா’ என்பார் ! நாளை மறுநாள் போனால் ,இன்னும் நான்கு நாள் கழித்து வா என்பார் ! இப்படியே கடன் கொடுத்தவருக்கும் இவருக்கும் இடையே சங்கிலித்தொடர்போல உறவு நீண்டு கொண்டே போகும். இதனால் நாளுக்கு நாள் கடன் அதிகரித்து கொண்டேயிருந்தது.அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஊருக்கு ஊர் புதிதாக கடன் வாங்கிக்கொண்டிருந்தார்.  

 பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவுடன் காத்து பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான். அவனுடைய அப்பா ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்ததால் மர வியாபாரம் நின்று போனது. மர வியாபாரம் படுத்துவிட்டதால் கடன்காரன்  துரத்த ஆரம்பித்தனர். வீட்டிலிருந்து பொழுதெல்லாம் தலைமறைவாகிவிட்டு ,பொழுது சாய்ந்ததும் வீடு திரும்பினார் சுப்பிரமணி.    காத்து  மனதில் கவலையடைந்தான். நிலைமை தலைக்குமீறி போவதை உணர்ந்த காத்து டயர் வண்டி ஒன்று வாங்கி  சத்தத்திற்கு ஓட்ட ஆரம்பித்தான். குடும்பபொறுப்பு முழுதும் காத்து தலையில் விழுந்தது. மிக சின்ன வயதிலேயே சுமைகள் அனைத்தும் தன மீது விழுந்ததில் மிகவும் துவண்டு போனான்.ஆனாலும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாத காத்து  எப்படியாவது  அப்பா  தன்  குடும்பத்தின்மீது சுமத்தியிருந்த  கடன் தொல்லையை ஒழிக்கும் வேலையை  ஆரம்பித்தான்.

 தனக்கிருந்த நிலத்தை கொஞ்சம் விற்று அவசரமான  கடன்கள் சிலவற்றை அடைத்தான். மீத கடன்களை இன்னும் கொஞ்ச காலம் கழித்து கொடுப்பதாக வாக்குறுதியளித்து எல்லோரையும் அனுப்பிவைத்தான். தினமும் இரவு பகல் எதுமின்றி உறங்காமல் டயர் வண்டிஓட்டி  உழைத்து ஓரளவு சொந்தமாக வாழ்க்கையில் காலூன்ற தொடங்கினான் காத்து.

எப்போதும் கலவென்று பேசி பழகிய காத்து,குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு சிரிப்பதையே மறந்து போனான். வாழ்க்கையில் மென்மையான உணர்வுகள் அனைத்தும் மறத்து போயின. யாரைப்பார்த்தாலும் முகம் கொடுத்து பேசும் அவனிடம் இல்லாமல் போயின. அவனை பார்க்கும்போதெல்லாம் ஒரு எந்திர மனிதனைப்போல காட்சியளித்தான்.

 முன்பெல்லாம் அவனும் சினிமாவுக்கு போவோம். இடைவேளையின்  போது  எனக்கு இட்டிலி தோசை வாங்கித்தருவான்.  சினிமாவைப்பற்றி சிலாகித்து பேசாவிட்டாலும்,அவன் ஓரளவு எம்.ஜி.ஆர் ரசிகன்தான். சிலவேளைகளில் எம்.ஜி.ஆரைப்ப்ற்றி பேசுவான். சில வேளைகளில் அவனுடைய அப்பா திமுக காரர் என்பதற்காக கலைஞரை புகழ்ந்து பேசுவான். அப்போதுதான் கலைஞரின் ஆடு பாம்பே. ,மாடிவீட்டு ஏழை,காலம் பதில் சொல்லும், ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த சமயம், நான் எம்.ஜி.ஆர்  ரசிகனாக இருந்தபோதிலும் காத்தோடு சேர்ந்து இந்த படங்கள் அனைத்தையும்   நானும் பார்த்திருக்கிறேன். இதில் ஏதாவது ஒன்றினைப்ப்ற்றி  சிலாகித்து பேசுவான்.

 சந்திரபாபுபுவின் மாடிவீட்டு  ஏழை படத்தில் நடிப்பதாக உறுதியளித்து , கொஞ்ச நாட்கள் நடித்துவிட்டு ,பின்னர் இடையில் எம் .ஜி.ஆர் நடிக்காமல் விட்டாதால் சந்திரபாபு கடனாளியாகி கடைசி காலத்தில் வறுமையில் சந்திரபாபு செத்து போனதையெல்லாம்  காத்து நினைவு கூர்வான். காலம் பதில் சொல்லும் படத்தில் ஜெய்சங்கர்  கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து  வருவதை வெகுவாக பாராட்டுவான். கலைஞரின் பேச்சை  அடிக்கடி   புகழ்ந்து பேசுவான். அப்படியெல்லாம் நல்ல ரசனையோடு  இருந்த காத்து இப்போது என்னைப்பர்க்கும் போதெல்லாம் எந்த எதிர்வினையும் ஆற்றாமல்  ஏதோ பட்டும் படாமலும்  வேண்டா வெறுப்பாக பேசுகிறான். ஆரம்பத்தில் இவன் இப்படி இருக்கிறானே என அம்மாவிடம் இதை சொன்னேன் .’அப்பன் கடன்காராக்கிவிட்டானே’ என்ற கவலையில் இருப்பான் .  இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாம்! என என்னிடம் சொன்னாள்.    காத்துக்கு கல்யாணம் ஆகிவிட்டது.உள்ளூரிலேயே,அதுவும் அவனது வீட்டுக்கு பக்கத்து வீட்டிலேயே ,அந்த பெண்ணின் மாட்டு கொட்டகை இருந்தது.அங்குதான் அந்த வீட்டு பெண்ணின் மாடுகள் அனைத்தையும்  அந்த கொட்டைகையில் கட்டுவார்கள். வீடு தெருவில் இருந்தது.   மாட்டுக்கு காலை மாலை என இருவேளையும் கழனி தண்ணீர் குடத்தை  அந்த பெண் தன்  தலையில் சுமந்து மாட்டுக்கு தண்ணீர் காட்டுவாள்.தொட்டியில்  மாட்டுக்கு புண்ணாக்கு தவிடு போட்டு காத்து வீட்டிலிருக்கும் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் மொண்டு கொண்டு வந்து தொட்டியில் அந்த பெண் ஊற்றுவாள்.

அப்படி தண்ணீர் மொள்ள வரும்போதுதான் அந்த பெண்ணிற்கும் காத்துக்கும் பேச்சு பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் அது மனதளவில் அது நெருக்கத்தை தந்தது. அந்த பெண் துளசியின்  தாயும்

தந்தையும் வயதானவர்கள். ஒரே அண்ணன் ,அவரும் இருதய நோயாளி. துளசிக்கு  மூத்த அக்கா மலர்கொடி ,அதற்கு திருமணம் நடை பெற்று பிள்ளைகளெல்லாம் பெரிதாக வளர்ந்து விட்டன. இருதய நோயாளி அண்ணனுக்கு மூன்று பெண் குழந்தைகள் , அவைகள் எல்லாம் சின்ன சின்ன குழந்தைகளாக உள்ளன. வயதான பெற்றோர்கள்,இதய நோயாளி  அண்ணன் ,இவர்களை சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருக்கும் துளசிக்கு  ஒரு ஆதரவு தேவையாய் இருந்தது.

 துளசியின்  அண்ணன் செல்வத்திற்கு  இதயநோய்   நீண்ட நாட்களாக இருந்துவந்தன. செல்வத்திற்கு  திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் பெற்றபின்னர்  செல்வத்தின் மனைவி மலர்கொடிக்கு  அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகவே   மருத்துவரிடம் காட்டியபோது அவருக்கும் இதநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வம் மனமுடைந்து போனான். தனக்குத்தான் இப்படி?  தனது மனைவிக்குமா ? விசனத்திற்கு ஆளான செல்வம் ,தானும் ,தனது மனைவியும்  இன்னும் நீண்ட நாட்களுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என முடிவு செய்தான். இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும்  தன் கடைசி  தங்கச்சி இன்னும் கல்யாணம் ஆகாமல் இருபது செல்வத்தின் மனதில் நாளுக்கு நாள் கவலையை ஏற்படுத்தின. பொருத்தமான மாப்பிள்ளைக் கிடைத்தால்  எப்படியாவது தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற  தீர்மானத்திலிருந்தான்.

 காத்து நாட்களைக்கடத்த விரும்பவில்லை . தனது அம்மாவை பெண் கேட்கச் சொன்னான். அவர்களும் தடையில்லாமல் ஒத்துக்கொள்ளவே., மிக எளிமையாக காத்து என்ற முத்துவுக்கும் ,துளசிக்கும் கல்யாணம் நடை பெற்றன. தொடர்ந்து  வண்டி மாட்டை வைத்து கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தான்.

ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளுக்கு தந்தையானான். ஆண் குழந்தைக்கான  பேரு அவனுக்கு இல்லாமல் போயிற்று.

சில காலங்களுக்கு பின்னர்.வெளிநாட்டு சென்று பத்தாண்டுகள் கடுமையாக உழைத்தான். நில புலன்கள் என பெருத்த செல்வந்தன் ஆனான். கூடவே ஏஜென்ட் வேலை செய்யத்தொடங்கினான்.ஏராளமான பணத்தை குவித்தான்.ஊர் திரும்பினான்.  அப்பா பட்ட கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, அப்பாவிற்கென்று ஒரு சூப்பர் எக்சல் ஒன்று வாங்கி கொடுத்து வெளிநாட்டு போக விரும்புகின்றவர்களிடம் பணத்தை வசூல் செய்யுபடி தனது  தந்தையிடம்  சொன்னான் காத்து. .

அவனது அப்பா தரையில் நடக்காமல் காற்றில் மிதந்தார். மகன் ஏஜென்ட் வேலை பார்த்து பணத்தை கொட்டுவதைக் கண்டு எதிரே கண்ணில் பட்டவரை எல்லாம் கண்டபடி  திட்டி அழைக்கலானார்.

 ஆடம்பர  வசதிகளுடன் மெத்தை வீடு ஒன்று  கட்டினான் காத்து. பொழுதெல்லாம் வசூல் செய்யும் பணத்தை வீட்டில் கொண்டு வந்து கொட்டுவான். கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி  தனது வீட்டுக்கு பின்புறம் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி பாம்பு செட்டு வைத்து தண்ணீர் இறைத்து விவசாயம் செய்யத்தொடங்கினான். ஊரும் உலகமும் “காத்து கெடந்த கெடப்பு என்ன? வந்த வாழ்வு என்ன ?  என எல்லோரும் வியந்து ஆங்காங்கே மூலைக்கு மூலை பேசிக்கொண்டனர்.

 சொந்த பந்தமெல்லாம் கூடி வந்தது. வந்தவர்களுக்கெல்லாம் ஐநூறு ஆயிரம் என அள்ளிக்கொடுத்தான். வாழ்க்கையின் நிலைமை உச்சத்துக்கு  போனது . எதிர்பாராமல் ஒரு நாள்  வெளிநாட்டு ஆட்களை அனுப்புதல் தொடர்பாக  புதுக்கோட்டை சென்று விட்டு தஞ்சையை நோக்கி  காரில்  வந்தபோது  கார் தஞ்சாவூருக்கு அருகில் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த அனைவரின் கால்களும் முறித்தன. காரை ஓட்டி வந்தவன் காத்து . அவன் கால்களும் முறிந்துபோயின.

 இந்த விபத்துக்குப்பின்னர் அவனால் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்ப முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் அனைவரும் காத்தை   நெருக்க ஆரம்பித்தனர். காத்து விழி பிதுங்க ஆரம்பித்தான். இன்று நாளை என நாட்களை கடத்தி கடன் கார்களை பார்ப்பதை  தவிர்த்து வந்தான்.  விபத்து ஏற்படுத்திய பாதிப்பால் அவனால் சரியாக  நடக்க முடியவில்லை. காலை நொண்டி நொண்டி நடந்து வந்தான் . ஆசுபத்திரியிலிருந்து . வீடு திரும்பியவுடன்  எங்கெல்லாம் பணம் வசூல் செய்தார்களோ அவர்கள எல்லாம் தினந்தோறும் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். காத்தின்  குடும்பம் கடுமையான  மன உளைச்சலுக்கு  உள்ளாயின ,வசதி வந்தவுடன் குதூகலித்த காத்தின் தந்தை கடன் காரன் துரத்த ஆரம்பித்தவுடன் புலம்ப தொடங்கினார். பொறுமையின் எல்லைக்கு சென்ற காத்து  இனி பொறுக்கமுடியாது என ஒரு நாள் இரவு இரவோடு இரவாக ஊரைவிட்டு தலைமறைவானான்.

 காத்து தலைமறைவானான்.செய்தி காட்டுத்தீயாய் பரவியது. ஊரிலுள்ள கடன் காரனெல்லாம் வீட்டுக்கு படையெடுக்க  தொடங்கினார்கள். காத்தின் அப்பாவின் நிலைமை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளானது. அங்கு இங்கு ஓடி ஒளிந்து பார்த்தார். தப்பமுடியாத சூழ்நிலையில் மகன் தலைகிளம்பி  வாங்கிய சொத்தை எல்லாம் விற்று கடனை அடைத்து விட்டு, பழையபடியே மீண்டும் பஞ்சமான சூழ்நிலையை நோக்கி சென்றுவிட்டார்.  எனினும்  கடன் முழுதாக அடைபடவில்லை, கொஞ்சம் பாக்கி இருந்தது. சிலர் அவனே ஓடி போயிட்டான்,கிழவன  போட்டு படுத்துறதுல ஒன்னும் புண்ணியமில்லை  போனா போவுது என  விட்டு விட்டனர். அதன் பின்னர் காத்தின் அப்பா சின்ன சின்னதாக கடனுக்கு மரம் வாங்கி வியாபாரம் செய்து எப்படியோ  காலந்தள்ளினார்   

 நான்கு  சின்ன சின்ன பெண் குழந்தைகளை வளர்த்து படிக்கவைத்து  ஆளாக்கினார்,அவையெல்லாம் வளர்த்து ,ஒவ்வொன்றையையும் கல்யாணம் கட்டிக்கொடுத்தார் காத்து அப்பா.  கடைசி பெண்ணுக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. மொத்தத்தில்  காத்தின் குடும்பம் மொத்தமும் காத்தை முற்றாக மறந்து போயின. அவன் இந்த ஊரைவிட்டு போயி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் எங்கு போனான் என்றும் தெரியவில்லை, வெளிநாட்டுக்கு போனானா ? இல்லை செத்துப்போனானா! இல்லை எங்காவது வெளிநாட்டில் இருக்கிறான என்பது புரியாத புதிராக இருந்தது.

 சிலர் அவனை பாசம் இல்லாதவன் என்றார்கள். சிலர் அவன் வெளிநாட்டில் இலங்கைக்காரி ஒருத்தியை கல்யாணம் கட்டிக்கொண்டு புள்ளைக்குட்டியோடு சிங்கப்பூரிலேயே நிரந்தரமாக தங்கி விட்டதா சிலர் யூகத்தில் சொன்னார்கள். சிலர் ஏதோ விபத்தில்  அடிபட்டு செத்துவிட்டதாக சொன்னார்கள். காணாமல் போன சமீபத்தில் பரபரப்பாக  பேசப்பட்டான்  பின்னர் எல்லோர் நெஞ்சங்களில் இருந்தும் காத்து  காணாமல் போய்விட்டான்.  இப்படி நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டானே என்ற கோபம்  காத்து மனைவிக்கு.  ஆரம்பத்தில் காத்து மீது லேசுபேசா  பாசம் இருந்தது. எப்படியும் ஒரு நாள் கணவன்  காத்து திரும்பி வருவான் என காத்திருந்து காத்திருந்து மணம் கல்லாகி போனாள். ஆனால் அவன் வராமல் போகவே ,காலப்போக்கில் அழுது அழுது அவனை முற்றாக மறந்து போனாள். இப்போது  அவள் முதுமையின் வாசலில் நின்றுக்கொண்டிருக்கிறாள். நடையில் தளர்வு  தெரிகிறது. அடிக்கடி மூட்டுவலியால் அவதிப்படுகிறாள். நடக்கமுடியவில்லை., மாமனாருக்கும்  நடக்க முடியவில்லை. கால்களெல்லாம்  வீங்கி விட்டன.  வைத்தியம் பார்க்க ஆளில்லாமல்  உறவினர்களின் வீடுகளுக்கு அவரிடமிருந்த பழைய  டிவிஎஸ்  50  யில் ஊருக்கு ஊர் அலைந்துக்கொண்டிருக்கிறார். யாரோ அவருக்கு உதவிக்கொண்டிருக்கின்றனர்.  ஒரு பால்மாட்டை வைத்து பால் பண்ணைக்கு பால் ஊற்றுகிறாள் துளசி . கடைசி மகள் எங்கோ ஒரு தனியார் மருத்துவ மனையில்  வேலைப்பார்க்கிறாள். அவளுக்கு அவளது பிள்ளைகளே நம்பிக்கையளிப்பவர்களாக இருக்கிறார்கள். அவளுக்கு சந்தோசம் என்று எதுவுமில்லை.  எது எதுவெல்லாம் நடக்கக்கூடாதோ அதுவெல்லாம்   நடந்து முடித்துவிட்டது. இனி நடப்பதற்கு எதுவுமில்லை என்றபிறகு எதை நினைத்து எதற்காக  மனம் கவலைப்படவேண்டும். அதனால் என்ன விளையபோகிறது ? வண்ணான் துறை கல்லுமாதிரி  பேசாமல் கிடக்க வேண்டியதுதான்  என அவள் பாட்டுக்கு எந்த வெளியூருக்கும் ,எந்த சாதி சனத்தை தேடியும் வெளியே செல்வதில்லை.காலை மாலை என ஆளை கசக்கி  பிழிகிறது  வேலை.பால் மாட்டோடு பொழுதுதெல்லாம் ஓடியாட வேண்டியிருக்கிறது. அவளுக்கென்று யாரும் இல்லை.

 ஊருக்கு  ஒதுக்கு புறத்தில் அமைந்துள்ள அந்த ஓடை வெளியை கடந்து அந்த கொட்டாகாட்டுக்கு  போறது இப்போது வேண்டுமானால் சற்று எளிதாக  இருக்கலாம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அது அவ்வளவு சாத்தியமில்லை. மழைக்காலம் வந்தால் அந்த பகுதி சேறும் சகதியுமாக மாறிவிடும். அந்த பகுதி  ஊற்றெடுக்க ஆரம்பித்துவிடும்.தரையெலாம் தட தடத்துவிடும், ஆடுமாடுகள் அவ்வழியாக போக முடியாது. அப்படி ஆடு மாடுகள் மாட்டிக்கொண்டால் இடுப்பளவு சேற்றிலிருந்து வெளியே மீண்டு வருதல் அவ்வளவு எளிதானதல்ல. கொட்டாக்காட்டிலிருந்து அந்த சேற்றைக்கடந்துதான் ஒடைவழியே வந்து தெருவுக்கு வர வேண்டும். அப்படி வருவதற்கு குறுகிய  ஒற்றையடி பாதை, அதில்தான் கடந்து போக வேண்டும். கொஞ்சம் கால்கள் வழுக்கினால் ஒளைக்குள் மாட்டிக்கொள்ளும். அவ்வளவுதான் ! கால்களை அவ்வளவு எளிதாக கால்களை வெளியே எடுக்க முடியாது. யாராவது வந்து வெளியே இழுத்து போட்டால்தான் , அப்படி ஒரு காலத்தில்  இந்த பகுதி மழை பிரதேசமாக இருந்தது.

 ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை .எல்லாம்  தலைகீழாக மாறி விட்டது.மழையே பெய்வதில்லை சிலவேளைகளில்  குடிப்பதற்கே தண்ணீரே கிடைப்பதில்லை..முப்பது வருடத்திகு முன்பு இங்கு காடையன் ஆசாரிவீடு ,மரக்கையார் வீடு, பழனியாண்டி வீடு, வீசைக்காரர் வீடுகள் மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் மெத்தை வீடுகளாக காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் மின் சாரத்தை பார்த்தறியா இந்த பகுதி இப்போது எங்கு பார்த்தாலும்  ஒளியில் சொலிக்கின்றன. ஆனால் எல்லாம் போனபின்பு துளசி  மட்டும் இன்னும் தனது மாமனார் கட்டிவைத்த அந்த பழைய வீட்டில்தான் வசித்து வருகிறாள். அவளால் அதற்கு மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது. காத்து ஊரை விட்டு போன பின்பு இந்த பழைய கூரைவீட்டில்தான் வாழ்ந்து வருகிறாள்.  அவளுக்கு வீடு பெரிதாக தெரியவில்லை .வீட்டைவிட்டு கடனுக்கு பயந்து  ஓடிப்போன  ஒரு கணவனின் கோழைத்தனமான  முடிவுக்கு அவளின்  குடும்பம்  முற்றாக சீரிழிந்து போனது.    .

 கடந்த  பொங்கலுக்கு முந்தைய பொங்கல் முதல் நாள் போகிப்பண்டிகை  ஊரே உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தது. காத்துவின் அம்மா வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்தாள். மெல்லிய இருள்,ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் அளவுக்கு இருந்தது. அப்போது  ஒரு மெல்லிய உருவம், ஒரு ஆண் கையில் சிறு பையுடன் நேராக  வீட்டின் வாசலில் வந்து நின்றது. யாரென துளசி   நெருங்கி பார்த்தாள். அவளால் அது யாரென கண்டுபிடிக்க முடியவில்லை.  “யாரது என்றாள் ‘ துளசியைப்  பார்த்து “நான்தான் உன் புருஷன்” என்றது அந்த உருவம். ஆமாம் அவன் காத்துதான். துளசியின்  புருஷன் காத்துதான், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு போனவன் இப்போது வீடு திரும்ப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கெல்லாம் ஊரே கும்பல் கூடி விட்டது.

 காத்து அடையாளம் தெரியாத அளவுக்கு உருவம் மாறி போயிருந்தான்.  முகத்தோற்றம் மாறியிருந்தது. வாயில் நிறைய பற்களை காணவில்லை. தலை முடி நரைத்து போயிருந்தது. பார்ப்பதற்கே  விகாரமாயிருந்தான். நிற்பதற்கே முடியாத அளவுக்கு மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த அவனது தாயார் பழனி காத்தைக்கட்டிப்பிடித்துக்கொண்டு  கோவென அழுதார். “சாகும்போது கொள்ளி வைக்க வந்தியா என் ராசாவே !”. என ஓலமிட்டு அழுதாள். அவனது தந்தையார் மணியன் “நீ எப்படியும் சாகறத்துக்குள்ள கண்டிப்பா வந்துருவன்னு  தெறியும்டா தம்பி!” என சத்தமிட்டு அழுதார். ஆனால் காத்து எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே பிள்ளையார் போல உட்கார்ந்திருந்தான்.  அவனை கட்டி பிடித்து அழும் அம்மாவையும் அப்பாவையும் ரெண்டு வார்த்தைகள் சொல்லி தேற்றாமல்     எந்திர மனிதனைப்போல  பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

துளசியிடத்தில்  எந்த மாற்றமும் இல்லை.அவளுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அவளைப்பொருத்தவரையில்  எல்லாம் முடிந்து விட்டது. இனி புதிதாய் ஆண்டு அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லை. கணவன் காத்துவின் மீது  எந்த  உடனடி எந்த எதிர்வினையும் கொஞ்சம் இடைவெளியை பின்பற்றி நின்றாள்.

 சிலர் இனி இவன் வந்து  இனி என்ன ஆகப்போகிறது? எல்லாத்தையும் மொத்தமா முடிச்சுட்டான்.  இவனால் யாருக்கு என்ன லாபம் ? என பேசத்தொடங்கினார்கள்.

 எங்கடா  இவ்வளவு நாளா எங்கடா இருந்த காத்து ?” என கேட்டார்கள். இரண்டு நாட்கள் எதற்கும் அசந்துக்கொடுக்காமல் இருந்தவன் இறுதியாக சோளிங்கநல்லூரில்  இவளவு நாளும் இருந்ததாக சொன்னான். மற்றபடு எதையும் மிக தாராளமாக  பேசும் சூழலில் அவன் இல்லை. பேயறைந்தது மாதிரி இருந்தான். ஆவலோடு அவனை பார்க்கவந்தவர்கள்,அவன் பழைய காத்து இல்ல, ஏது பித்து புடுச்சவன மாதிரி இருக்கான்” என சொல்லி சென்றார்கள்.

 ஏற்கனவே குடும்பத்தை நகர்த்த முடியாமல் சிரமப்படும் துளசிக்கு அவளின் கணவன் ஒரு சுமையாய் தெரிகிறான். இத்தனை ஆண்டுகள் கழிந்து ஊருக்கு வந்தவன் வெறும்கையோடு வருகிறான்..கையில் நயாப்பைசாக்கூட இல்லாமல் கைகளை வீசிக்கொண்டு வந்திருக்கிறான். இன்னும் ஒரு மகள் வீட்டில் கல்யாணத்திற்கு காத்திருக்கிறாள், அதை எப்படியோ கரை சேர்க்க வேண்டும். அதை நினைச்சாலே பயமாய் இருக்கிறது. இந்த லட்சணத்தில்  இவன் இன்னும் மாறாமல் அப்படியே பழைய குடிகாரனாக இருக்கிறான்.

 காத்து ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்கிறான். இது யாருக்கும் பிடிக்கவில்லை. குடும்பத்திலுள்ளவர்கள்  ஒருவருக்கொருவர் முனு முனு த்துக்கொண்டிருந்தனர்..

 மகன் வந்த பூரிப்பிளிருந்த பெரியவர்  மணியனுக்கு ஒரு சில நாட்களில் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் வீழ்ந்தார். பக்கத்தூர் ஆஸ்பிடலுக்கு மருமகள் துளசி  அழைத்து சென்று மருத்துவம் பார்த்தாள். என்னும் மணியனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே படுத்த படுக்கையாக கிடந்தார். உற்றார் உறவினர்களுக்கு சேதி போயி ஒவ்வொருவராக  வந்து போக  ஆரம்பித்தார்கள்.

 ஒருவரும் காத்தை  கண்டுகொள்ளாததால், மீண்டும் சென்னைக்கு கிளம்பிவிட்டான். அவன் சென்ற இரண்டொரு நாளில் அவனுடைய அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என அவனுடை கடைசி மகள் செல்போனில் சொன்னாள். இந்த செய்தி ஒன்றும் அவனுக்குள் பெரிய அதிர்வை ஏற்படுத்த வில்லை . எந்த சலனமும் இல்லாமல் அவன் வேலையை அவன் செய்துகொண்டிருந்தான். பின்னர்  நான்காம் நாள் கழிந்து  “அப்பா ! தாத்தா செத்துவிட்டார் !” என சின்ன மகள் செல்போனில் சொன்னாள்.

 காத்துவின் வருகைக்காக மணியனின் உடல் காத்திருந்தது . அவன் வீடு வந்து சேர்ந்தவுடன் மணியனின்  உடல் அடக்கம் செய்யப்பட்டபின்பு ,இரண்டு நாள் சடங்கு முடிந்தவுடன்  காத்து மீண்டும் சென்னை சென்றுவிட்டான்.  நாட்கள் கடந்தன ,இடையிடையே  ஒரு சில தடவைகள்  தனது மகளுடன் செல்போனில் பேசியிருப்பான் .மற்றபடி தானாக விரும்பி ஒருதடவைகூட தனது பிள்ளைகளிடமோ ,மனைவியிடமோ  விரும்பி பேசவில்லை . மீண்டும் ஒரு இரும்புத்திரையை தன்னைச்சுற்றிலும் இட்டுக்கொண்டு சம்பாதிப்பது குடிப்பது என்ற  ஒரு சுழற்ச்சித்தன்மையுடன் கூடய வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.

 மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்து தலை தெவிசம் முடிந்து போச்சு, .பெத்தபுள்ளை செய்யுற வேலையை மருமகள் செய்கிறாள். பிள்ளைங்க கூப்பிட்டும் காத்து வரவில்லை. அதன் பின்னர் காத்தை அந்த குடும்பம்  முற்றிலும் மறந்து போனது.. அவரவர்கள் தங்களின் அன்றாட வேலைகளில் மூழ்கி போயினர்.. ஒருநாள்  தலையில் கல்லைத்தூக்கி போட்டது போல ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி “காத்து சென்னையில் செத்துவிட்டான்” என்பது. எல்லோரும்   அடித்து பிடித்துக்கொண்டு அழுதனர். அவனுடைய  பிள்ளைகள் எல்லாம் சென்னை சென்றனர்.மருத்துவமனையின் சவ\கிடங்கில் காத்துவின் உடல் கிடந்தது.என்ன நடந்தது என அக்கம் பக்கத்தில் விசாரித்துப்பார்த்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவன் வேலை பார்த்த கடையில் சம்பளம் கொடுத்தார்களாம். சம்பளத்தை வாங்கிய காத்து கண்ணு மண்ணு தெரியாமல் சாராயம் குடித்து விட்டு,  அவன்   வேலை பார்த்த பகுதியிலுள்ள ஒரு ஏரிக்கரையில் அன்னம் தண்ணி இல்லாமல்  இரண்டு நாட்கள் நெகா இல்லாமல் கிடந்ததாகவும், யாரோ அவனை 108  வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்ததாக தகவல் வரவே  எல்லோரும் சென்று பார்த்தார்கள்.ஆனால் மருத்துவர்  சிகிச்சை அளித்தும் பிழைக்க வைக்க முடியவில்லை. எனவே  காத்து இறந்து விட்டான் என எல்லோரும்  சொன்னார்கள். காத்துவின் உடல் அவனது சொந்த ஊருக்கு நள்ளிரவு வாக்கில்  கொண்டுவரப்பெற்றது.  காத்துவின் உடல் நள்ளிரவிலேயே எரியூட்டப்பட்டன. விடிவதற்குள் காத்து  சாம்பலாகிபோனான்.

 இறுதி சடங்கு முடித்ததும்  உறவினர்கள் ஆளுக்கொரு திசையில் கலைந்துபோய் கொண்டிருந்தனர்.  வாழும்காலத்தில்  காத்தை சுற்றிலும் எப்போதும் காக்காய் கூட்டத்தைப்போல சுய நல விரும்பிகள் எப்போது குழுமியிருப்பார்கள். அவனும் எல்லோருக்கும் கையில் கிடைத்ததை கொடுத்துக்கொண்டிருப்பான். ஆனால் அவனது குடும்பம் இப்போது  வேரில்லாமல் அழிந்துபாய் விட்டது. ஒரு காலத்தில் மணியன் செந்துறை வட்டாரத்தில் ஓரளவு அறிமுகமான மனிதராக இருந்தார்.அவர்  ஆதிக்கம் செய்த  கொட்டாகாடு, அவருக்குப்பின்னர்  காத்து வாசம் செய்த ஊரும் கொட்டாக்காடும் காத்துபோனத்தின்  எந்த அதிர்வும் இல்லாமல் அப்படியே மவுனித்து கிடக்கிறது .  

 ஒரு காலத்தில் காத்தை 'ஆகா' 'ஓகோ' வென புகழ்ந்து ஆதாயம் அடைந்த அவனுடைய உறவினர்கள் எல்லாம் அவனுடைய உடலைப்பார்க்கவோ ,அல்லது அவனது இறுதி  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ வரவில்லை ஆனால் இரக்கமற்ற மனிதர்கள் மத்தியில்  காத்து மட்டும் எல்லா அடையாளங்களையும் மொத்தமாக சுருட்டிக்கொண்டு  பிடிக்காத மனிதர்களை விட்டு கண்காணாத தேசத்திற்கு  எங்கோ போய் சேர்ந்திருந்தான்