Wednesday, 4 December 2019

சைக்கிள் ( சிறுகதை)


அம்மா ஒரு சைக்கிள் வாங்கி தர முடியுமா ? என பரிதாமாக கேட்டான் சேகர் . இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே !’ என்றாள். எனினும் அவனது அம்மாவின் சமாதான பேச்சால் அவன் சமாதானம் அடையவில்லை.சைக்கிளைப்பற்றிய கனவுகள அவனை நாளுக்கு நாள் அரித்து தின்றுக்கொண்டிருந்தன. யாராகிலும் ரோட்டில் சைக்கிள் ஓட்டிச்செல்வதைப்பார்த்தால் ,அவனை மறந்து அவன் சைக்கிள் செல்வதை பார்ப்பான். வைத்தக்கண் வாங்காமல் அது தெருவின் கடைகோடி வரை சென்று மறைவதை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருப்பான். அவனுடைய வாழ்நாளின் லட்சியமெல்லாம் ஒரு சைக்கிள் வாங்கி அதில் அவனுடைய அம்மாவை உட்கார வைத்துக்கொண்டு பக்கத்திலுள்ள சினிமாக்கொட்டகைக்கு சினிமா பார்க்க அழைத்துச்செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தான் சேகர்.
அருகிலுள்ள செந்துறை அரசு மேனிலைப்பள்ளியில் அவனை ஆறாம் வகுப்பில் சேர்த்தபோது அவனுடைய அம்மாயி அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தாள். ஆனால் காலப்போக்கில் சைக்கிளைப்ப்றி அவளும் மறந்துபோனாள்.அவளால் தனது மகள் வயிற்று பேரனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை. அவளால் கூலி வேலைக்கு செல்வது வயிற்றை கழுவதற்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. தனது பாட்டியால் ஒரு பழைய சைக்கிளைக்கூட வாங்கி கொடுக்க முடியாத இயலாமயைக்கண்டு மனம் வெதும்பினான் சேகர்.
அவனுடை வகுப்பு நண்பர்களில் ஒரு சிலர் சைக்கிள் வைத்திருந்தனர். அதை எப்போதும் அவர்கள் பார்வையில் படும்படியாக தங்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைக்கு அருகிலேயே ரீப்பர் தட்டியில் சாத்தி வைத்திருந்தனர். எங்களின் வகுப்பு மெயின் ஹாலில் இருந்தது. அதை ஒட்டியே சைக்கிள் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்கள் சைக்கிளை கண்களின் பார்வையில் படும்படி நிறுத்தி வைத்திருந்தனர். பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போதெல்லாம் ,இவர்கள் அடிக்கடி தங்களின் சைக்கிளை பார்த்தத வண்ணம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சண்முகம் ஆசிரியர்கூட ஒரு தடவை இவனுங்களை குச்சியால் விளாசி “எண்டா படிக்க வந்தீங்களா ?இல்ல எப்ப பார்த்தாலும் சைக்கிளையே பார்த்துக்கிடேயிருக்கத்தான் வந்தீங்களான்னு!” அடித்திருக்கிறார்.அவனுங்க அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டத்தாய் தெரியவில்லை.வழக்கம் போல சைக்கிளுக்கு புது புது அழகு சாமான்களை வாங்கி மாட்டி அழகு பார்ப்பதும், எங்களை போன்ற பாத சாரிகளை ஏளனமாக பார்த்து வைத்தனர். எஅவனைப்போன்றவர்களின் வாழ்வின் கனவுகளெங்கும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வண்ண வண்ண நிறங்களில் ,வெவ்வேறு வடிவங்களில் வந்து போய் கொண்டிருந்தன. சைக்கிளின் வாசம் அவனை தூங்க விடாமல் இம்சித்துக்கொண்டிருந்தன.
பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவர்களின் சைக்கிள்களில் பின்னால் கேரியர் இருக்காது. காரணம் மற்ற மாணவர்கள் அதில் ஏறிக்கொள்வார்கள் என்ற பெருந்தன்மைதான் காரணம். கேரியர் இல்லாத வண்டிகளிலும் லிப்ட் கேட்பதுண்டு.ஆனால் அங்கு உட்கார இடமில்லையே தவிர,இரண்டு பாக்கமும் செண்டர் போல்டில் காலை வைத்துக்கொண்டு நின்று கொண்டு பயணிக்கலாம். சிலர் அனுமதிப்பதுண்டு .அந்த வேளைகளில் வசதியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பின்பக்கமாக நின்றுகொண்டு பயணிக்கின்றார்கள். ஒரு சிலர் அறவே பேச்சை முறித்துக்கொள்வார்கள். சிலர் பரிதாபப்பட்டு முன்பக்க முக்கோணத்தில் கூட உட்கார அனுமதிப்பதுண்டு.அது அவ்வையின் நெல்லிக்கனியைவிட மிகவும் மதிப்புமிக்கதாய் இருந்தது.
பள்ளிக்கூடம் விட்டு போகும்போது பாதசாரிகள் எல்லாம் ஒரே சாதியாக மண்பாட்டை வழியாக நடந்து செல்வோம்.எங்களை கடந்து பெரும்பாலான சைக்கிள்களில் எந்த சுமையுமின்றி சும்மாதான் எங்களை கடந்து போகும்.ஆனால் யாரும் எங்களை ஏற்றி செல்ல விரும்பமாட்டார்கள். அப்படி யாராவது ஒரு சிலர் சரி உட்காருங்கள் என சம்மதம் சொன்னாலும் ,எங்களில் ஒருவரை ஒருவர் விட்டுவிட்டு போக மனமில்லாமல் ஒன்றாக நடந்துசெல்வோம். அல்லது ஒரு சில சைக்கிள்களின் கேரியரை பிடித்துக்கொண்டே நாயைப்போல இறைக்க இறைக்க ஊரின் கடைசிவரை ஒடிவருவதுண்டு.ஒடிவந்த களைப்பில் கண்மண் தெரியாமல் சிலமணி நேரம் அப்படியே சவமாக திண்ணையில் கிடைப்பதுண்டு.
பள்ளி நாட்களின் போது மதிய உணவு இடைவேளையின்போது சைக்கிள்தாரிகள் அனைவரும் தங்கள் சைக்கிள்களை பக்கத்தில் உள்ள சைக்கிள் கம்பெனிகளுக்கு எடுத்து சென்று சில்லறை ரிப்பேர்களை சரி செய்வார்கள்.அலங்கார பொருள்களை மாட்டி அழகு படுத்துவார்கள். அந்த சைக்கிள் கம்பெனி எப்போதும் பரபரப்புடனே இருக்கும்.இவையெல்லாம் மொத்தமாக சேர்ந்து அவனுக்குள் தொடர்ந்து ஒரு வைராக்கியத்தையும், எப்படியாவது சைக்கிள் ஒன்று வாங்கிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அவன் இறுதியாக இந்த முடிவுக்குவர காரணம் இல்லாமல் இல்லை.
தனது பேரனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்கவேண்டும் என்ற ஆசை பாட்டியின் மனதில் இல்லாமல் இல்லை.ஆனாலும் நூறு ரூபாய் போட்டு ஒரு சைக்கிள் வாங்கி கொடுப்பது என்பது மிக பெரிய காரியமாக பட்டது.ஆனால் பேரனுக்கு அடிக்கடி நல்லநேரம் வரும் என்றும் ,அப்போது புதிய சைக்கிள் என்ன ? காரே வாங்கலாம் !” என தெம்பான வார்த்தைகளை சொல்லிவந்தாள்.பாட்டியின் வார்த்தைகள் என்பது வெறும் வார்த்தைகள் என்பதும்,அதனால் ஒரு ஐஸ் குச்சியைக்கூட வாங்கமுடியாது என்பது அவனுக்கும் தெரியும். சிலவேளைகளில் தனது கோபத்தை காட்டிவந்தான். ஆனாலும் எப்படி வாங்குவது? எப்படி பணம் சம்பாதிப்பது? என்ற கேள்விகள் அவனுக்குள் தொடர்ந்து கொண்டிருந்தன.
பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டு ஒருநாள் பாட்டியோடு களையெடுப்பு வேலைக்கு கிளம்பிவிட்டான். அதிர்ச்சியடைந்த அம்மாயி “ஏம்பா நீ பள்ளிக்கூடம் போகலையா ?”
இல்லை அம்மாயி ! நானும் களையெடுப்பு வேலைக்கு வரேன் !’ நான் சைக்கிள் ஒன்னு வாங்கணும், அதுக்கு பணம் வேணும் !” என்றான் சேகர்.
ஆனால் .... பாட்டி இதில் சமாதானமாகவில்லை. இல்ல... நீ வரவேண்டாம்.பேசாமல் பள்ளிக்கூடம் போ! நானும் அம்மாவும் பணம் சேர்த்து, வரும் பொங்கலுக்கு சைக்கிள் வாங்கி தருகிறோம் !” என்றாள்.
ஆனாலும் ...அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கையற்ற அவன் தனது கைகளில் களைவெட்டியை எடுத்துக்கொண்டு அம்மாயி,அம்மாவுடன் களைவெட்ட கிளம்பிவிட்டான் சேகர்.
மிகுந்த வைராக்கியத்தோடு களைவெட்ட கிளம்பியவன் ,அது அவனுக்கு புது அனுபவம் ஆகையால் அவனால் அவன் நினைத்துபோல் அவ்வளவு எளிதாக களைவெட்டுதல் இருக்கவில்லை.வெயில் ஏற ஏற மிகுத்த சிரமப்பட்டான். கோட்டு கழியால் அவனுக்கு அளவிடப்பட்ட பகுதியை வெட்ட முடியாமல் மிகுந்த சிரமப்பட்டான்.ஆனாலும் அடுத்தடுத்து அவனது பாட்டியும் ,அம்மாவும் அவனுக்கு உதவியாக அவனுடைய பங்கையும் சேர்த்து வெட்டினார்கள்.என்னதான் ஆர்வபட்டாலும் அது ஒன்றும் சுலபமான காரியமாக படவில்லை.எப்படியோ உழன்று அன்றைய பொழுதை கடத்திவிட்டான்.
மறுநாளும் இவ்வாறே பொழுதை நகர்த்தியவன்.இனி களைவெட்டி பணம் சேர்த்து சைக்கிள் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை மெல்ல மெல்ல இழக்கத்தொடங்கினான். முன் அனுபவமின்றி களை வெட்டியதால் கைகள் எல்லாம் சிவந்து கொப்பளங்கள் உருவாக தொடங்கி விட்டன.வலிகள் கடுமையாக இருந்தது.அம்மாயி வாதநாராயணன் இலையை விளக்கெண்ணையில் வதக்கி வைத்து கைகளில் வைத்து கட்டிவிட்டாள். அது கொஞ்சம் இதமாக இருந்தது.புண்களும் விரைவாக ஆறத்தொடங்கின. பள்ளிக்கு செல்ல இயலாமல் ஒருவாரம் வீட்டியேயே முடங்கி கிடந்தான்.
கைகளில் ஏற்பட்ட புண் குணமாகி ஒருவாரம் கடந்தபின்னர்.சுபயோக சுபதினத்தில் சேகர் ஒரு நாள் பள்ளிக்கூடம் சென்றான். இவனின் உள்ளார்ந்த சூழ்நிலை அறியாத ஆசிரியர் “எண்டா ஒருவாரமா பள்ளிக்கூடம் வரல?”. கையை நீட்டடா !” என சொல்லி பிரம்பை ஓங்கினார்,அப்போது அவனது கைகளில் புண் ஏற்பட்டு ஆறியும் ஆறாமலும் இருப்பதாய் கண்டு “ கையில் என்னடா சிரங்கு என்றார். அது புதுசா களைவெட்ட போனதால் ஏற்பட்ட சிரங்கு என்று மாணவர்கள் மத்தியில் சொன்னால்,அவமானமாகி போய்விடும் என்பதால், “ சார் இது நெருப்பு சுட்ட புண்” என்றான். கொஞ்சம் பரிதாபப்பட்டு . “போய் உட்கார் !” என சொன்னதும், கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டான்!
எனினும் முதல் முயற்சி இப்படி தோல்வியில் முடிந்தது அவனுக்கு பெரிய வருத்தமாக இருந்தது.இனி கூலி வேலைக்கு பொய் பணம் சேர்த்து சைக்கிள் வாங்கமுடியாது என தெரிந்து விட்டது. இனி மாற்று வழி தேர்ந்தெடுக்க வேண்டும்.அது முன்பு போல் கடினமாக இருக்ககூடாது.அதுவும் தோல்வியில் முடியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.அதற்காக இரவு பகல் எனப்பாராமல் நினைத்து பார்த்தான். எதுவும் பிடிபடாமல்,இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாய்’
இனி விறகு வெட்டி எடைக்கு போட்டு,அந்த பணத்தை சேர்த்துவைத்து இறுதியில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தான். அதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கினான்.தினமும் பள்ளிக்கூடம் விட்ட பின்பு, புறம்போக்கு காட்டு பகுதிகளில் உள்ள சிறு சிறு விறகு கட்டைகளை வெட்டி வந்து அம்மாயி கொல்லையில் அடுக்கி வைக்கவேண்டும். சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் முழுநேரமும் விறகு விட்டி சேர்க்க வேண்டும்.இறுதியில் அது பத்து பதினைந்து எடை வந்ததும் ஒரு நாள் சத்தத்துக்கு ஒரு மாட்டு வண்டியை பிடித்துவந்து அதில் எல்லாவற்றையும் ஏற்றி பக்கத்திலுள்ள பக்கத்தூரிலுள்ள விறகுகடையில் கொண்டு சென்று விற்கவேண்டும் “ என சரியாக திட்டமிட்டான் சேகர்.
அதுபோல ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் சைக்கிள் கனவுகளை சுமந்து கொண்டு சிறுக சிறுக விறகு வெட்டி சேகரிக்க ஆரம்பித்தான். கூடவே கிழவியும் துணைக்கு ஒத்தாசை செய்தாள். வெட்டிய விறகுகளை பச்சைநிறம் குறையாமல்,வெயில் படாமல் முந்தரி கிளையின் தோகையில் வைத்து கொன்றை மரத்தழைக்கொத்துகளை ஒடித்து அதன் மீது போட்டுவைத்தான். அப்படி செய்யாவிட்டால் விறகின் எடை குறைந்து விடும். பத்து எடை விறகு சேகரிக்க பத்து நாள் செலவாகும்.அதுவரை இந்த பச்சை மரக்கட்டைகள் அனைத்தும் காய்ந்து எடை குறைந்திருக்கும் என்பதற்காக, நிழற்பாங்கான இடத்தில் பச்சை விறகுகளை அடுக்கிவைத்தான் சேகர்.
அது போல பத்து நாட்கள் முடிந்த பிறகு விறகுகளை எதிர்பார்த்த வண்ணம் விறகுகள ஓரளவு சேர்ந்தன, அதன்பின்னர் எதிர்வீட்டு கோவிந்தவேல் பெரியப்பாவிடம் சென்று “பெரியப்பா கொஞ்சம் விறகுகட்டை இருக்கிறது அதை ஏற்றிக்கொண்டு மண்டிக்கு போகவேண்டும் ! என்றான். சரி தம்பி போகலாம் என்று சம்மதம் தெரிவித்தார். அவரை அழைத்துக்கொண்டு போய் அம்மாயி கொலையில் உள்ள விறகை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டி வருகையில் ஒரு பள்ளத்தில் வண்டி குடை சாய்ந்து விட்டன. ஆனால் ஆளுக்கு ஒன்றும் ஆபத்தில்லை.ஆனால் விறகுகள் அனைத்தும் தரையில் சரிந்து விழுந்தன.
அதன் பின்னர் சரிந்து விழுந்த மரக்கட்டைகளை மீண்டும் வண்டியில் ஏற்றி மண்டிக்கு பொய் சேர்வதற்குள் இருட்டி விட்டன. விறகு கட்டைகள் அனைத்தையும் எடைபோட்டு முடிந்தபின்னர்,வண்டிகார பெரியவருக்கு இட்லி ,டீ வாங்கி கொடுத்து வீடு வந்து சேர்வதற்குள் மணி பத்தை கடந்து விட்டன. தூங்கும் கிழவியை எழுப்பி மரம் வித்த பணத்தை காட்டினான்.அவன் நினைத்ததை போல சைக்கிள் வாங்கும் அளவுக்கு பணம் போதுமானதாக இருக்கவில்லை. என்ன செய்வதென்று பாட்டியிடம் ஆலோசனை கேட்டான்.பாட்டி நீண்ட யோசனைக்கு பின்பு இருக்கும் பணத்தை தனது மகன் பூராசாமியிடம் கொடுத்து வைப்பதென்றும்,இன்னும் போதுமான பணம் மொத்தமும் சேர்ந்தவுடன் அதையும் அவரிடமே கொடுத்து அவர் மூலமாகவே ஒரு சைக்கிள் வாங்கி தர சொல்லலாம் என்ற பாட்டியின் யோசனை அவனுக்கு பிடித்து போகவே அதற்கு அவன் ஒத்துகொண்டான். இரவு விடிந்தவுடன் காலை வேளையில் வழக்கம்போல அவ்வழியே வரும் மாமன் பூராசாமியை எதிர்பார்த்து பாட்டியும் ,சேகரும் காத்திருந்தார்கள். பூராசாமியும் வழக்கமாக காலை மாலை என இரு வேளை தனது தாயான எனது அம்மாயியை வந்து பார்த்து விட்டு போகும் பழக்கத்தை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அன்றும் காலை நேரத்தில் அம்மா!” என அழைத்தவாறு வீட்டின் முன்பு தன்னுடைய ஓட்டை சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் அமர்ந்து அவருடைய அம்மாவின் வருகைக்காக காத்திருந்தார். தனது மகன் வந்திருப்பதை உணர்ந்த பாட்டி வீட்டின் உள்ளேயிருந்து நீராகார சொம்புடன் வெளிவந்தாள்.வழக்கமாக அம்மாவின் கையால் நீராகாரம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்த பூராசாமி,அதை வாங்கி பருகிவிட்டு “என்னம்மா செய்யிற ?” என கேட்டார்.
அப்படி இப்படி பேசி சுற்றிவளைத்து இறுதியாக என் சைக்கிள் கதையை அவரிடம் சொன்னார் அம்மாயி . அதற்கு அவர் “அப்படியே செஞ்சுட்டா போச்சு!” இருக்குறத குடுக்க சொல்லு, மீதிய கையில் கிடைக்கும் போது கொடுக்க சொல்லு ,மொத்தா பணம் சேர்ந்தவுடன் நல்ல சைக்கிளா பார்த்து,நான் வாங்கி தரேன் !” கவலையே பட வேணாம்னு சொல்லு,என உறுதியுடன் பேசினர். அவரின் பேச்சும் எனக்கு நம்பிக்கை அளித்ததால் வீட்டின் உள்ளே சென்று நான் மரம் வெட்டி விற்று வைத்திருந்த நூறு ரூபாயை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான் சேகர் . வாயெல்லாம் பற்கள் தெரிய,இரையை கண்டவுடன் பாய்ந்து செல்லும் புலியைப்போல ஆவலோடு அதை பெற்றுக்கொண்டு, தம்பி கவலைப்படாதே சைக்கிளுக்கு நான் ஜவாப்தாரி ,எந்த பயமும் வேண்டாம். இன்னும் சொச்ச பணத்தையும் எப்படியாவது கொடுத்துவிடு! நான் நல்ல சைக்கிளா பார்த்து வாங்கி தரேன் “ என்று சொல்லிவிட்டு விறு விரென அங்கிருந்து வேகமாக சைக்கிளில் வேகமாக போய்விட்டார்.
அவனுக்கு அப்போதுதான் சற்று நிம்மதி.எப்படியோ மாமாவிடம் இருந்த பணத்தை கொடுத்துவிட்டோம்.இனி கவலை பட தேவையில்லை.மாமன் எப்படியாவது வாங்கிடுவார்.அப்படி பணம் கொஞ்சம் குறைஞ்ச்சாலும் அவரு காச போட்டாவது சைக்கிள் வங்கி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது. அடுத்த இன்னும் ஐம்பது ரூவாய் சம்பாதிக்க வேண்டும். அதற்கு இனி என்ன வழி ? மீண்டும் மரம் வெட்ட முடியாது,ஏற்கனவே ஒரு சிலரின் கொல்லையிலுள்ள மரக்கன்றுகளை வெட்டியாயிற்று.அது அவர்களுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதால் வேறு தொழிலை மாற்றினால்தான் சிக்கல் இல்லாமல் இருக்கும் என முடிவு செய்தான்.
அப்போது அவனுக்குள் புதிய வழி ஒன்று பிறந்தது. அது வேப்பங்கொட்டை பொறுக்குவது என்பது .அப்போதுதான் வைகாசி ,ஆணி ,ஆடி மாதங்களில் எங்கு பார்த்தாலும் வேப்ப மரங்கள் கொலை கொலையாக பழுத்து தொங்கும் .பார்க்கும் இடமெல்லாம் ,மஞ்சள் ஆடையை போர்த்து விட்டது போலிருக்கும்.பார்ப்பதற்கு கண்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். வேப்பம் பழத்தை யாரும் சாப்பிடுவதில்லை என்ற போதிலும்,வேப்பம் பழம் மரத்தினில் காய்த்து தொங்கும் அதை யார்தான் வெறுப்பர்? அங்கொன்று இங்கொன்றாக அப்போதுதான் வேப்பம் மரங்கள் பழுக்க தொடங்குகின்றன.
இப்போதே தொடங்கினால்தான் வேலை சரியாய் இருக்கும் என மாலை வேளைகளில் சிறு கித்தான் சாக்கோடு காட்டு வெளிக்கு புறப்பட்டு போவான் சேகர்.பெரிய காய்கள் கொத்து கொத்தாக உள்ள மரங்களில் ஏறுவான்.முதுகில் சாக்கை கட்டிக்கொண்டு வேப்பங்காய்களை உருவி தோளில் தொங்கும் கித்தான் சாக்கில் இட்டு நிரப்புவான்.சாக்கின் சுமையை தாங்கும் அளவுக்கு பறிப்பான் .பின்னர் மரத்திலிருந்து கீழிறங்கி வேப்பங்காய்களை ஓரிடத்தில் கொட்டிவைப்பான். மீண்டும் மரத்திலேறி போதுமான அளவுக்கு சாக்கில் வேப்பன்காய்களை உருவி நிரப்புவான்,பின்னர் கீழிறங்கி எல்லா காய்களையும் சாக்கில் இட்டு நிரப்பிகொண்டு வந்து கிழவி வீட்டின் ஒரு மூலையில் கொட்டிவைத்து ,பெரிய சாக்கால் முழுதாய் மூடி வைத்து மேலை பெரிய கல்லை பாரம் வைத்து விடுவான்.அது பத்து பதினைந்து நாட்களுக்கு பின்னர் காய்கள் சூட்டில் அவிந்து நொதித்த நிலையில் இருக்கும்போது அவற்றை காலால் மிதித்து கூழாய் ஆக்கி வெட்டி கூடையில் அள்ளிக்கொண்டுபோய் குளம் குட்டைகளில் அலசினால் விதைகள் அனைத்தும் கூடையில் தங்கி விடும் ,கைகளின் கழிவுகள் அனைத்தும் தண்ணீரோடு போய்விடும்..பின்னர் விதைகளை வெயிலில் போட்டு காய வைத்து சாக்கில் கொட்டி கட்டி வைத்து விடுவான்.
இவ்வாறுதான் வேப்பங்கொட்டை பொறுக்கும் படலத்தை தொடங்கினான்.
தினமும் மாலைவேளைகளில் தன நண்பர்களை அழைத்துகொண்டுபோய் மரத்தில் ஏறி குலை குலையாய் தொங்கும் வேப்பங்கிளைகளை வாங்கால் வெட்டி தள்ளி விட்டு ,கிளைகளை முட்டாக்கி ,சிறுவர்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்து கொண்டு கடலைக்கொடியை போல ஆய்வார்கள். பின்னர் அவற்றை மூட்டை கட்டி தலையில் சுமந்து கொண்டு மேற்கண்டவாறு மூடம் போட்டு நொதிக்கவைத்து ,வேப்பங் கொட்டைகளை பிரித்து எடுப்பார்கள்.
அந்த இரண்டு மாதத்துக்குள் அரை மூட்டை சேகரித்துவிட்டான் சேகர். எந்த யாவாரியாவது தெரு வழியாக கூவிக்கொண்டு போவார்களா என் எதிர்பார்த்து காத்திருந்து ஒருநாள் ஒரு யாவாரி ஓரளவு படிந்த விலையில் சேகரின் வேப்பங்கொட்டைகளை வாங்கி கொண்டு ஐம்பது ரூபாயை கொடுத்தான். இதற்கிடையில் மாமன் பூராசாமி காலை மாலை என இருவேளையும் பாட்டி வீட்டுக்கு வந்து சேகர் எப்போது வேப்பங்கொட்டை விற்பான் என கேட்டுகொண்டே இருந்தார்.ஒரு கட்டத்தில் நச்சரிப்பு அதிகமாக தொடங்கியது. இன்று வேப்பங்கொட்டையை விற்று சேகர் காசு வைத்திருப்பான் என்பதை கழுகுக்கு மூக்கில் வியர்த்ததைப்போல கண்டு பிடித்துவிட்டார் போலும், “என்ன மாப்பிள்ளே!” கொட்டையை வித்திட்ட்டீயாமே! கேள்விபட்டேன் அதான் பணத்த நீ வச்சிருகிறது உன் சேத்தாளிங்களுக்கு தெரிந்தால் ,பிடிங்கிகொண்டு போய்விடுவார்கள்,அதை என்னிடம் கொடுத்தீன்னா,நீ ஏற்கனவே கொடுத்த பணத்தோட பணமா கணக்கு வச்சிக்குவேன்!’ என சொன்னதுதான் தாமதம்,உடனே சேகர் இல்ல மாமா உன்னிடம் கொடுக்கத்தான் வச்சிருக்கிறேன் என சொல்லியவாறு வீட்டின் உள்ளே சென்று புத்தகத்தின் உள்ளே வைத்திருந்த ஐம்பது ரூவா நோட்டை எடுத்து வந்து பூராசாமியிடம் கொடுத்தான். கவலைப்படாதே மாப்பிள்ளே, இன்னும் ஒரு நூறு ரூவா இருந்தா போதும் சைக்கிள் வாங்கிடலாம், சீக்கிரம் சொச்சத்தையும் கொடுத்திடு சேகரு,சீக்கிரம் சைக்கிள் வாங்கி தந்துடறேன், இதோட சேர்த்து மொத்தம் நூற்று ஐம்பது ரூவா கணக்கு ஆவுது.அதை அப்படியே உன் நோட்டுல தேதிய போட்டு எழுதி வை.கணக்கில தப்பு வரக்கூடாத்தில்ல!” என்றவர் சைக்கிளில் அங்கிருந்து கிளம்பி நேராக சாராயக்கடைக்கு சென்றுவிட்டார். இது அவனுக்கு தெரியாது தான் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணம் அனைத்தையும் மாமன் சாராய செலவுக்கு பயன் படுத்துகிறார் என்பது..
இன்னும் ஒரு நூறு ரூவாய எப்படி சம்பாதிக்கிறது எம்பதை குறித்த சிந்தனை அவனை முற்றாக பற்றியிருந்தன..எப்போது சைக்கிள் வாங்குவது? அதை எடுத்துக்கொண்டு சினிமா பார்க்க போவது ? நம்மை கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்,சைக்கிளில் அழைத்து போகாமல், சைக்கிளில் காத்து இல்லை.டயர் வீக், என பொய்யான காரணங்களை சொல்லி நிராகரித்தவர்கள், அவமானப்படுத்தியவர்கள் மத்தியில் நாமும் ஒரு சைக்கிள் வாங்கி ஓட்டி,அவர்களை கதறவிட வேண்டும் என மனதிற்குள் நினைத்தான்.மாமன் இந்த பணம் போதாது,இன்னும் நூறு ரூவா வேணும்னு மாமன் பூராசாமி சொன்னது அவனுக்கு கொஞ்சம் மலைப்பாக இருந்தது.
அடுத்து இன்னும் நூறு ரூவாய்க்கு என்ன செய்வது என்று இரவு பகலாக யோசிக்க ஆரம்பித்தான்.அவனுக்கு தற்போது ஒன்றுமே புலப்படவில்லை. இரண்டு நாட்களாக பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே ரேடியோவை வைத்து கொண்டு திண்ணையில் படுத்திருந்தான். அம்மாயி ஏம்பா பள்ளிக்கூடம் போகலையா என கேட்டாள்.போக மனசில்லை என்றான்.
சரி இப்படியே படுத்திருந்தா அதுக்கு என்னதான் தீர்வு ? பேசாம பள்ளிக்கூடம் போ!’ முந்தரிக்கொட்டை காய்க்கட்டும்..அப்புறம் சைக்கிள் வாங்கிக்குவோம் என்றாள். இப்பத்தானே முந்தரிக்கொட்டை சீசன் முடிஞ்சுது.இனி அடுத்த வருஷம் எப்ப வர்றது. அது வரைக்கும் என்ன பண்றது ? என்றான்.
பேசாமல் தப்புக்கொட்டை பொறுக்கலாம். அதுதான் ஒரே வழி. .ஆடி மாதம் வரைக்கும் கொட்டை கிடைக்கும். அதுல கொஞ்சம் கிடைத்தால் அதை வைத்து கொஞ்சம் பண சுமையை குறைக்கலாம் என்றான்.
பாட்டி மறுவார்த்தை பேசவில்லை.பேரனின் பிடிவாதத்தைப்பற்றி அவளுக்கு நன்றாய் தெரியும்.அவன் பிடித்தால் குரங்கு பிடிதான்,கொஞ்சம் கூட தனது நிலையிலிருந்து இறங்கி வரமாட்டான்.தனது விருப்பம் நிறைவேறினால் மட்டுமே ,அடுத்தவர்களிடம் முகம் கொடுப்பான்.இல்லாவிட்டால் கடசிவரைக்கும் உர்ருனுதான் இருப்பான் அவன் விருப்படியே அவனுடன் அவளும் தப்பு கொட்டை பொருக்க ஆயத்தமானாள்.
பள்ளிக்கூடம் போவதை எல்லாம் ஓத்தி வைத்துவிட்டு,காலை கருக்கலிலேயே அம்மாயியும் பேரனும் கொல்லைக்காட்டுக்கு கிளம்பி போய் நாளொன்றுக்கு தலா அரைகிலோ வீதம் கொட்டை பொருக்கி வெயிலில் காயவைத்து சேகரித்து வந்தனர். இதுபோல தொடர்ந்து ஒன்றரை மாதம் ஆளாளுக்கு வேகாத வெயிலில் அலைந்து திரிந்து தப்புக்கொட்டை பொருக்கி காசு சேர்த்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கும் கூடுதலாகவே பணம் கிடைத்தன. சைக்கிள் வாங்க நூறு ரூவாயை எடுத்து வைத்து விட்டு,மீதத்தை வீடு செலவுக்கு வைத்து கொண்டனர்.
அதற்குள் எப்படியோ பாட்டி முந்தரிக்கொட்டை விற்ற செய்தி மாமன் பூராசாமியின் காதுகளுக்கு எட்டிவிட்டது .மறுநாள் விடிவதற்குள்ளாகவே பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். சேகர் தூக்கத்திலிருந்து எழுவதற்குள்ளாகவே “சேகரு ,சேகரு ,எழுந்திரு !” என அழைத்தார். குரல் யாருக்கு சொந்தம் என்பதையும்,எதற்காக அந்தக்குரல் நம்மை அழைக்கிறது என்பதையும் புரிந்து கொண்டவனாய் “ இதோ வருகிறேன் மாமா !” என்றவன் முதரிக்கொட்டை விற்ற பணத்தை கையில் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான். சரி மாப்பிள்ள சேகரு மொத்தம் இதுவரைக்கும் இருநூற்றைம்பது ரூவா கொடுத்திருக்கே,பரவாயில்லை ! சீக்கிரமா உனக்கு நல்ல சைக்கிள் வாங்கி தருகிறேன் !” அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நேராக சாராயக்கடைக்கு போய் கொண்டிருந்தார். எப்படியோ கஷ்டப்பட்டு சைக்கிள் வாங்குவதற்கு பணம் சபாதிச்சாச்சு. இனி மாமன் பூராசாமி சீக்கிரம் சைக்கிள் வாங்கி கொடுத்துவிடுவார் என்ற அலாதியான நம்பிக்கையில் சேகர் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
நாட்கள் கடந்து கொண்டிருந்தன . நாளுக்கு நாள் சைக்கிள் குறித்த கனவுகளும் ,கற்பனைகளும் சேகர் நெஞ்சில் கனலை மூட்டிக்கொண்டிருந்தன. எப்போதும் அதை பற்றிய நினைப்பிலேயே அன்றாட வேளைகளில் ஈடுபாடு ஏதுமின்றி காணப்பட்டான். மாமன் சேகர் சைக்கிள் வாங்கி கொடுக்கபோகும் அந்த வைபோகத்தை நினைத்து நெஞ்சுக்குள் மழையில் நனைந்தான். அம்மாயிடம்” மாமன் எப்போது சைக்கிள் வாங்கி தருவார்?” என கேட்டுக்கொண்டேயிருந்தான் அவளும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டேயிருந்தாள்.
சேகரிடமிருந்து சைக்கிளுக்கு பணம் வாங்குவதற்கு முன்பு தினமும் பாட்டி வீட்டுக்கு வந்து போகும் பூராசாமி, அதன் பின்பு அந்த தெரு வழியே வருவதை நிறுத்திக்கொண்டு, வேறு வழியே சென்று வந்துகொண்டிருந்தார். சேகர் கண்ணில் தென்படவே இல்லை. பாட்டியிடம் இது குறித்து சேகர் வினவியபோது “அவனுக்கு வேறு வேலை ஏதாச்சும் இருக்கும் ,அதால வராம இருப்பான் !” என ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொன்னாள். அந்த பதில் சேகருக்கு திருப்தி அளிக்கவில்லை. இது வரை கனவுகள் வளர்ந்து கொண்டிருந்த அவனது மனதுக்குள் மெல்ல மெல்ல கவலை மேகங்கள் படர ஆரம்பித்தன.ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் என்றும் போல் இயல்பாக இருக்க முயற்சித்தான்.
ரோட்டில் ஏதாவது “லொட லொட” சத்தத்தோடு சைக்கிள் சென்றால் அது மாமனின் சைக்கிள்வரும் சத்தம்தான் என தெருவில் ஓடி வந்து பார்ப்பதும்,அது இல்லையென தெரிந்ததும் விரக்தியில் திண்ணையில் உட்காருவதுமாய் இருந்தான் .அவனது மன நிலை இயல்பு நிலையில் இருந்து மாறி வருவதை பாட்டி உணர்ந்திருந்தாள். ஆனால் பாட்டிக்கு மட்டும் உண்மை தெரியும் தனது மகன் பூராசாமி சைக்கிள் வாங்கி தருவதாக சொல்லி எல்லா பணத்தையும் வாங்கி சாராயம் குடித்து விட்டான்.அவன் சேகருக்கு சைக்கிள் வாங்கி தரப்போவதில்லை.இது இறுதியில் சிக்கலில்தான் முடியும் என்பதை உணர்ந்திருந்தாள்.
ஆனாலும் பேரனின் மன கஷ்டப்படகூடாது என்பதற்காக அவனுடன் சேர்ந்து அவனுடைய போக்கிலேயே விட்டு பிடித்தாள். பூராசாமியைப்பற்றி நாம் ஏதாவது உளறி வைத்தால் ,நாமும் பூராசாமியுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தி தனது பணத்தை ஏமாற்றிவிட்டதாக சேகர் மனதளவில் நினைத்துக்கொள்வான்.அது பின்னாளில் பாட்டி பேரனுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும், தொடர்ந்து அது .பெரிய பிளவை படிபடியாக ஏற்படுத்து விடும் என நினைத்ததாள் ஏதும் சொல்லாமல் அமைதி காத்து வந்தாள்.
ஒவ்வொரு நாள் விடியலிலும் மாமனின் வருகைக்கு ஆவலோடு வழிமேல் விழிவைத்து காத்திருந்தான்.ஆனால் மாமன் வரவில்லை.அவர் எங்கிருக்கிறார் என்றத் தகவல் அவனுக்கு தெரிந்த போதிலும் ,அவர் வசிக்கும் இடத்திற்கு போயி அவரை தொந்தரவு செய்வது அவனுக்கு உடன்பாடாய் இருக்கவில்லை.
யாரை கேட்டாலும் “அதோ அங்கு பார்த்தேன்?” ,இதோ இங்கு பார்த்தேன் ?” சற்று நேரத்திற்கு முன்புதான் கீழ்த்தெருவழியா போனாரு?” என சொன்னார்கள். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதை தவிர்க்கிறார் என தெரியவில்லை என சேகர் தனக்குள் வருத்தப்பட்டான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக சேகருக்கு எதிரே பூராசாமி ஓட்டை சைக்கிளில் வருவதைக்கண்டு, தன்னை பார்த்தால் மனம் சங்கடப்படுவார் என்பதால் கீழே குனிந்து கொண்டான். இதை கவனித்த பூராசாமி தன்னை க்கண்டுதான் சேகர் குனிந்து கொள்கிறான் என்பதை உணர்ந்தவராய்’ “என்ன சேகரு நல்லா இருக்கியா ?” என கேட்டார்.
சற்று நிமிர்ந்தவனாய் “இம்” என்றான். மாப்பிள்ளே கொஞ்சம் பொறு! விசாரிச்சுகிட்டு இருக்கேன்.”எப்படியும்,இன்னும் ஒரு வாரத்தில் சைக்கிள் ம் லயிக்காத சேகர் ஒப்புக்கு தலையட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு நகரத்தொடங்கினான். சேகரின் மன நிலையை உணர்ந்த பூராசாமி மீண்டும் ஏதும் பேசாமல் அவரும் அங்கிருந்து வெளியேற தொடங்கினார்.
நாட்கள் வாரங்களாயின, வாரங்களாயின மாதங்களாயின ஆனால் பூராசாமி சைக்கிள் வாங்கி கொடுத்தபாடில்லை.சேகர் உள்ளுக்குள் துயர மழையில் நனைந்து கொண்டிருந்தான். பேரனை பார்க்கும் போதெல்லாம் பாட்டி நெஞ்சமெல்லாம் பதறினாள். தன் பேரன் இந்த காசு சேர்க்க கல்லிலும்,முள்ளிலும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்.பாவி ! இப்படி பண்ணிப்புட்டானே! இனி மகனாகவே இருந்தாலும் மானம் மரியாதை பார்க்க படாது !” என நேராக மகன் குடியிருக்கும் கொட்டா காட்டு பகுதிக்கு போனாள் பாட்டி. எதற்கு பாட்டி வந்திருப்பாள் என்பதை புரிந்து கொண்ட பூராசாமி “ என்னா அம்மா ?” என்றான்.
“நீ என்னடா நினைச்சுக்கிட்டுருக்க ?” அவனுக்கு எப்படா சைக்கிள் வாங்கி தரப்போறே? அது எவ்வளவு கஷ்டப்பட்டு குருவி சேக்கர மாதிரி சேர்த்து ,உன்ன நம்பி கொடுத்துச்சு! இப்படி நம்பிக்கை துரோகம் பன்றியேடா! உன் யோக்கியதை அவனுக்கு தெரியல! தெரிஞ்சிருந்தா உன்ன நம்பியிருப்பானா ! இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே குடிகாரப்பயலே ! என திட்டி விட்டு திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டாள். வழக்கம்போல மகளுடன் வீட்டு வேலைகளில் ஈடுபட தொடங்கினாள் . எனினும் இதனுடைய எதிர் வினைகளை அவளால் யூகிக்க முடிந்தது. எப்படியும் பூராசாமி சாராயம் குடித்துவிட்டு வந்து ஏதாவது வம்பிழுப்பான் என்பது அவளுக்கு தெரியும்.அதெல்லாம் தெரிந்துதான் இதை அவனிடம் கேட்டு விட்டு வந்திருக்கிறாள். அப்படி ஏது வந்தாலும் வரட்டும் நடக்கிறத பார்ப்போம் !” என மனதில் நினைத்தவாறு தண்ணீர் மொள்ளுவதற்கு தூரத்திலுள்ள கேணிக்கு சென்றுவிட்டாள்.
வீட்டின் திண்ணையில் தனியாக சேகர் மட்டும் படித்து கொண்டிருந்தான். வாசலில் லொட லொட சைக்கிள் சத்தம் கேட்டு அதிர்ச்சியுற்று திண்ணையில் தொங்கும் தட்டியின் கீற்று இடைவெளி வழியே லேசாக பார்த்தபோது பூராசாமி கடுமையான போதையில் நிற்ககூட முடியாமல் தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தார். அம்மாயியை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார். என்னை குறிப்பிட்டு ‘தன் பிள்ளைகளுக்கு ஓரவஞ்சனை செய்துவிட்டு மக வீட்டு புள்ளைய ஊட்டி ஊட்டி வளர்க்கிறா!
ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ,இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கிறா,நயவஞ்சககாரி !” தனது தாயை ஒருமையில் பேசினார் பூராசாமி.
சைக்கிளுக்கு நான் கொடுத்த பணம் அனைத்தும்,அவர்கள் நிலத்தில் விளைந்த மகசூலை நான் திருடி விற்று கொடுத்ததென்றும். அது உண்மையில் அது சேகர் உழைத்து வாங்காதது என்றும் நெஞ்சுக்குள் நெருப்பை கொளுத்திப்போட்டார். சேகர் முற்றாக உடைந்து போனான்.
இன்னும் என்னவெல்லாமோ பேசினார்.காது கொடுத்து கேட்க முடிய வில்லை. அந்த நேரம் பார்த்து அம்மாயி கிணற்றிலிருந்து மண் குடத்தில் தண்ணீர் குடம் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தாள். வீட்டு வாசாலை நெருங்கும் தருணத்தில் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து பாட்டியின் தலையில் சுமந்து கொண்டிருக்கும் மண் குடத்தின் மீது ஓங்கி அடித்தார். குடம் உடைந்து நொறுங்கியது.பாட்டி உடைந்து சரியும் தண்ணீரில் முற்றாக நனைந்தாள். ‘ஏண்டி என்கிட்டேயே சைக்கிள் கேட்கிறீயா? என்ன பேரன் சப்போட்டா ? என்றவாறு கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு தான் ஓட்டி வந்த ஓட்டை சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு போதையில் தட்டு தடுமாறிக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டார். பாட்டி வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். பயத்தில் சேகரின் உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது. பக்கத்து வீட்டு பழனி அத்தை பாட்டிக்கும்,சேகருக்கும் ஆறுதல் சொல்லி சென்றார்கள். இரண்டு நாட்கள் முழுதும் இழவு வீடு போல ஒரே துக்கமாகவும், மவுனமாகவும் இருந்தது . பூராசாமி போட்டுவிட்டு விட்டு போன ஓட்டை சைக்கிளை யாரோ எடுத்து திண்ணை சுவற்றில் சாற்றிவிட்டு போயிருந்தது அப்படியேதான் கிடக்கிறது. சைக்கிளை எடுத்து போக அந்த ஆளின் மகன் வெங்கடேசன் வரவுமில்லை. அந்த ஆளும் வரவில்லை. அதைப்பற்றி யாரும் அவ்வளவாக யாரும் கண்டு கொள்ளாமல் பத்து நாட்களுக்கு மேல் அப்படியே வெயிலில் கிடக்கின்றன.இருந்த காத்தெல்லாம் போய் விட்டன. ஏற்கனவே எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கும் அந்த லொட லொட சைக்கிள் வெயிலில் கிடந்து மீண்டும் கருகிக்கொண்டிருந்தது.
நாட்கள் கடந்து கொண்டிருந்ததே தவிர பூராசாமியின் அந்த பழைய சைக்கிளை எடுத்து போக யாரும் ஆள் வரவில்லை .பாட்டி ஒரு முடிவுக்கு வந்தாள். பேரன் சேகரை அழைத்தாள் . “தம்பி என்றாள்!”
‘என்ன ஆயா!” நான் சொல்றத கொஞ்சம் கேளப்பா ! அவன் ஏதோ தப்பு பண்ணிட்டான்! அதை பெரிசு பண்ணாமா விடுப்பா ! அவன் உன் தாய் மாமன்தானே! உன்னை சின்ன வயசில் தூக்கி வளர்த்தவந்தானே! ஏதோ துன்னுட்டு போறான்! விட்டுட்டு வேறு வேலையை பார்ப்போம்.காலம் நமக்கு துணை நிற்கும்.
அவன் போட்டுட்டு போன சைக்கிள எடுத்து நீ ஒட்டு! அதுக்கு ஏதாச்சும் செலவுக்கு பணம் வேணும்னா நான் தரேன்.அதை வைச்சு இந்த சைக்கிள பழுது பார்த்து பள்ளிக்கூடத்து எடுத்துட்டு போ. கொஞ்ச நாளைக்கப்புறம் வேற சைக்கிளு வாங்கிக்குவோம்!” என கனிவுடன் அம்மாயி பேசியது சேகரின் நெஞ்சை சற்று இளக செய்தது. தொடர் மவுனத்திற்கு பின்பு “சரி” பாட்டி!“ என ஒப்புதல் சொன்னான். பின்னர் இரண்டொரு நாட்களுக்கு பின்னர் தனது கூட்டாளி மணிவண்ணனை அழைத்து கொண்டு அந்த ஓட்டை சைக்கிளை தள்ளிக்கொண்டு செந்துறைக்கு கொண்டு சென்று சிறிய சிறிய பழுதுகளை சரி செய்து,அத ஓட்டும் அளவுக்கு சரி செய்தனர்.அது அறவே ஓட்டமுடியாத அளவுக்கு மிக மோசமாக பழுதடைந்திருந்தன. இதற்கே நூறு ரூவா செலவு ஆகிவிட்டன. இன்னும் எவ்வளவு ஆகுமோ ,சேகருக்கு பெரிய மலைப்பாக இருந்தது. நெசத்தில இதை ஓட்டுவதற்கு உண்மையிலேயே விருப்பமில்லை.
ஆனாலும் ....
பாட்டியின் அன்பு கட்டளையை மீறமுடியவில்லை. வழக்கம் போல பள்ளிக்கூடம் செல்ல துவங்கினான். அவன் மற்ற மாணவர்களிடத்தில் சொல்லி பெருமைப்படத்தக்க அளவில் இந்த சைக்கிள் இல்லாததால்,இதை பற்றியெல்லாம் மற்றவர்களிடத்தில் எதுவும் பேசுவது கிடையாது. ஏதோ சைக்கிள் என்ற போர்வையில் ஒன்றை நகர்த்திவந்தான். அவனுடைய கற்பனைக்கும் கனவுகளுக்கும் ஏற்ப அது இருக்கவில்லை என்பதால் ,அதை பற்றி மற்ற நண்பர்களிடத்தில் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது. சற்று தன்னை தனைமைப்படுத்துகொண்டு வந்தான். எனினும் அந்த சைக்கிளில்தான் அவன் பள்ளிக்கூடம் சென்று வந்தான். சைக்கிள் மீதான அதிகபட்ச எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கின. கிடைத்தவரை மகிழ்ச்சியடையலாம் என்ற மன நிலைக்கு அவன் மாரிக்கொண்டிருந்தான்.
சேகர் படிக்கிறானோ இல்லையோ வழக்கமாக பள்ளிக்கு போகும் பழக்கத்தை கடை பிடிக்க ஆரம்பித்தான். காலையில் எட்டு மணிக்கே பள்ளிக்கு கிளம்ப தொடங்கி, அங்கே கொஞ்ச நேரம் ,இங்கே கொஞ்ச நேரம் என நின்று நின்று பள்ளிக்கூடம் போய் சேர்வதற்குள் மணி பத்தாகி விடும். அது போல மாலை பள்ளிக்கூடம் விட்டால் வீடு போய் சேர்வதற்குள் இருட்டத்தொடங்கி விடும். இடையில் ஏகப்பட்ட நண்பர்கள்,அவர்களையெல்லாம் கடந்துதான் அவன் வந்து சேர வேண்டும் இவ்வாறு இவன் பள்ளிக்கூட வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் மழைக்காலம் நெருங்கிகொண்டிருந்தது.
அவன் வசித்த வீடு மாமன் வீட்டுக்கும், வடக்காலே இருந்த பஞ்சநாதன் வீட்டுக்கும் இடையில் உள்ள முட்டு சந்தை கடந்துதான் கிழக்காக உள்ளே போகவேண்டும். தெற்காலே இருந்த வீட்டு சுவர் கண்ட கண்ட இடங்களில் வாய் பிளந்து கிடந்தன. அதில் உள்ள மண் இடுக்குகளில் ஆங்காங்கே பாம்பு தோல்கள் காணப்பட்டன. பார்ப்பதற்கே பயமாக இருந்தன. எந்த நேரமும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தன. அந்த சந்தின் வழியாகத்தான் பல ஆண்டுகள் ,என் வினவு தெரிந்த நாள் முதலாக போய் வருகிறான் ,.எந்த விபரீதமும் நிகழவில்லை..இனியும் அப்படி ஏதும், நடக்காது என்ற தைரியத்தில் தொடர்ந்து பொய் வருகிறான் .
அன்றும் வழக்கம் போல வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. . லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது . பள்ளிக்கூடம் விட்ட பின்பு மாலை வீடு வந்த சேகர் சைக்கிளை சந்திலுள்ள சுவற்றில் சாத்தி வைத்துவிட்டு பாட்டியின் கொட்டகைக்குள் சென்றவன்.உள்ளே சென்றவன் சற்று நேரம் படித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டான்.ஆனால் அம்மாயி மட்டும் கணப்புக்கு அருகில் அமர்ந்து கொண்டு வெற்றிலைபாக்கை மென்று கொண்டிருந்தாள். நேரம் நள்ளிரவை கடந்து கொண்டிருந்தது.அப்போது வீட்டுக்கு அருகில் இடிவிழுவதுபோல பலத்த சத்தம் கேட்டது. கிழவியும் ஏதோ இடிவிழுகிறது என “அர்ஜுனா அர்ஜுனா “ என முனு முனுத்தாள்.
வழக்கம்போல காலையில் பாட்டி முதன் முதலாக கொட்டாயிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். தெற்காலே பெரியவர் வீட்டின் மொத்த சுவரும் கீழே விழுந்து நாங்களெல்லாம் வெளியே செல்ல முடியாதபடி வழியை அடைத்து விட்டன .அம்மாயி போட்ட சத்தத்தில் ஊரே விழித்துக்கொண்டன.நானும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன்.பார்க்க பயங்கரமாக இருந்தன. ஆனால் சைக்கிளைப்பற்றிய சிந்தனை யாருக்கும் எழவில்லை. அந்த புதிரை சேகர்தான் உடைத்தான். “அம்மாயி என் சைக்கிளை காணுமே!” ஆமாண்டா சேகர், ராத்திரி இங்கு சைக்கிள நிறுத்தினியா !” என்றாள். இங்குதான் பாட்டி நிறுத்தினேன் ! என அவன் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தை சுட்டி காட்டினான். பாட்டி அருகே சென்று கொஞ்சம் மண்ணை கிண்டி பார்த்தபோது சைக்கிளின் பாகம் தெரிவதை கண்டு “ தம்பி நம்ப சைக்கிள் போயிட்டுதடா !” என அழுதாள். வீட்டுக்காரர்களின் சுவர் இடித்து விழுந்த சோகத்தை விட,சைக்கிள் நொறுங்கி போனது பாட்டியின் மனதை பெருமளவில் பாதித்தது. பேரனின் முகத்தை பார்த்தாள். அவன் முகத்தில் எந்த பாவமும் தெரியவில்லை.எப்போதும் போல இயல்பாகவே இருந்தான். மண்ணுக்கு கீழே கிடந்த சைக்கிளை மண்ணை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வெளியே எடுத்து போட்டனர். எல்லாம் முற்றாக நொறுங்கி போயிருந்தன. இனி எதற்கும் உதவாது .ஏதாவது பழைய இரும்புகாரனிடம் போட்டு வெங்காயம் வாங்கலாம என்றாள்.
நல்ல வேளை இந்த சுவர் பகலில் வீழ்ந்திருந்தால் என்ன
ஆகியிருக்கும் !” நினைக்கவே பயமா இருக்கு ! நல்லவேளை யாரு செஞ்ச புண்ணியமோ ராத்திரியில விழுந்து தொலைஞ்சிருக்கு !” என்றவள் தனது பேரனின் சைக்கிளை நொறுங்கிப்போனது அவளை நிரம்பவே பாதித்தது .ஆனால்அவள் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை.நாளையில் இருந்து பேரன் மீண்டும் கால் நடையாக நடந்து போவதை எண்ணி நெஞ்சினில் கலக்கமுற்றாள். ஆனால் பேரன் சேகர் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ஒரு வகையில் அவன் மனதுக்குள் சந்தோச படவே செய்தான். ஆரம்பத்திலிருந்தே இந்த சைக்கிளை ஓட்டவே அவன் விரும்பவில்லை.கட்டாயத்தின் பேரில்தான் அவன் அதை கடமைக்காக ஓட்டி வந்தான். உண்மையில் அவன் மகிழ்ச்சியாக அந்த சைக்கிளை ஓட்டவில்லை. அவன் நினைத்தது போலவே அந்த சைக்கிளின் எதிர்காலம் இப்படி பாதியிலேயே முடிந்து போனது அவனுக்கு மகிழ்ச்சியே.
மறுநாள் வழக்கம்போல பள்ளிக்கு சேகர் கிளப்பிக்கொண்டிருந்தான் ,அவனுடைய முகத்தில் எந்த சோக களையும் இல்லாதது கண்டு பாட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “போய்ட்டு வரேன் பாட்டி!” என கால்நடையாக நடக்க தொடங்கி ஊரை கடக்க தொடங்கினான். இன்று யாருடனும் அவன் சேர வில்லை. இன்று யாருடனும் சேர்ந்து பயணிப்பதையும் அவன் விரும்பவில்லை. அவனுடைய முழு சிந்தனை எல்லாம் .அடுத்து புத்தம் புது சைக்கிள் ஒன்று வாங்கவேண்டும்.அதற்கு எந்த வகையில் பணம் சம்பாதிப்பது என்ற ஒற்றை சிந்தனை மட்டுமே அவனுடைய மன்டைச்சுரபியை முற்றாக பற்றி இருந்தது .

ஈரம்












மரங்கள்
மழையோடு ஆழ்ந்து பேசுகின்றன !
ஈரக்காற்றின் வெளியெங்கும் விரியும்
இலைகளின் காதலின் மொழி
நாட்களின் வழியே
நெடிதே பயணிக்கின்றன !
குளிரில் சிலிர்க்கும்
உயிரின் தொலைவில்
தவளைகளின்
தாள லயங்களில்
சில்லிட்டுக்கிடக்கிறது பகற்பொழுது !



பகலவனின் தொடுகை
தொலைந்த நண்பகலின்
பின்னிரவில்
மனித சஞ்சாரமற்ற
பாட்டைகளின் வெளியெங்கும்
கால நடைகளின் தடங்கள்
மவுனித்துக்கிடக்கின்றன !
விரைத்துக்கிடக்கும் குளிரில்
நடுங்கி தொலைக்கிறது
நாளின் உடலம் !
போர்வை வேண்டி
கைகளை நீட்டுகிறது
தாகம் !’