Tuesday, 22 January 2019

பாதரச புன்னகை


காற்றில் வைத்த கர்ப்பூரமாய்
கரைந்து போவேனோ ! ஓடும்
ஆற்று  நீரில் ஒருதுளியாய்
அடையாளம் ஏதுமின்றி ஆவேனோ !
வெறும் வாயில் அவலைப்போல
வீணாய் மென்று மடிவேனோ !
அறுவடைக்கு பின் தோன்றும்
அணியிழந்த வயலாய் ஆவேனோ !


இரைக்கும் கடலின் அலையில்
எந்தன் அழுகை தெரியுமா ?  
இசைக்கும்  குயிலின் குரலில்
எந்தன்  மவுனம் புரியுமா?
அசையும் பழுத்த இலையில்
ஆயுளின் ரேகை தெரியுமா ?
ஆசை வயல்கள்  மீது
அன்பு மழையாய்  பொழியுமா ?


கண்ணை மறந்து இமைகள்
கருணை யின்றி பயணிக்கிறது !
புன்னகை இழந்து இதழ்கள்
பாதரசம் பொங்கி வழிகிறது !
அன்னையை மறந்து கன்று
அந்நியமாகி போகிறது !
தென்னை மரங்கள் கண்ணீரை
குடம் குடமாய் சாய்க்கிறது !


காலுக்கு பழக்கமான ஒற்றையடி
கண்ணை பறிக்கும் சாலையானது !
தோளில் சுமந்த  உறவுமுறைகள்  
தொலைந்து வருடங்கள் ஆனது!
மண்ணும் மரமும் உருவத்தில்
நிறமாறி பொலிவிழந்து போனது !
எண்ணுந் தோறும் நினைவுகளில்
ஏக்கமே புகையாய் நெளிகிறது 
!Image result for identity in modern painting