காற்றில் வைத்த கர்ப்பூரமாய்
கரைந்து போவேனோ ! ஓடும்
ஆற்று நீரில் ஒருதுளியாய்
அடையாளம் ஏதுமின்றி ஆவேனோ !
வெறும் வாயில் அவலைப்போல
வீணாய் மென்று மடிவேனோ !
அறுவடைக்கு பின் தோன்றும்
அணியிழந்த வயலாய் ஆவேனோ !
இரைக்கும் கடலின் அலையில்
எந்தன் அழுகை தெரியுமா ?
இசைக்கும் குயிலின் குரலில்
எந்தன் மவுனம் புரியுமா?
அசையும் பழுத்த இலையில்
ஆயுளின் ரேகை தெரியுமா ?
ஆசை வயல்கள் மீது
அன்பு மழையாய் பொழியுமா ?
கண்ணை மறந்து இமைகள்
கருணை யின்றி பயணிக்கிறது !
புன்னகை இழந்து இதழ்கள்
பாதரசம் பொங்கி வழிகிறது !
அன்னையை மறந்து கன்று
அந்நியமாகி போகிறது !
தென்னை மரங்கள் கண்ணீரை
குடம் குடமாய் சாய்க்கிறது !
காலுக்கு பழக்கமான ஒற்றையடி
கண்ணை பறிக்கும் சாலையானது !
தோளில் சுமந்த உறவுமுறைகள்
தொலைந்து வருடங்கள் ஆனது!
மண்ணும் மரமும் உருவத்தில்
நிறமாறி பொலிவிழந்து போனது !
எண்ணுந் தோறும் நினைவுகளில்
ஏக்கமே புகையாய் நெளிகிறது
!
No comments:
Post a Comment