Saturday, 19 January 2019

ஆசை


பிறந்தாலும் பூக்களின் வயிற்றில் 
பிறக்க  வேண்டும் ! இனிதே
காற்றின் அணுவில்  புதைந்து
காற்றோடு கரைந்து போகவேண்டும்!
ஆறும் கடலும் நீள்வானமும்
ஆசையின் விரல்கள் தொடவேண்டும் !
மாறும் இவ்வுலகில் நானும்
மண்ணாய் கிடந்து வாழவேண்டும் !

இயலாமையின் மேனியில்
இறக்கை முளைக்க வேண்டும் !
முயலாமல் காணும் வழியெங்கும்
மலைபோல் உயர வேண்டும் !
வயலில் தோன்றும் நெல்லெல்லாம்
வெண்ணிற சோறாய் விளையவேண்டும்!
அயலானை உருவாக்கும் வேண்டா
அனைத்துலக எல்லை அழியவேண்டும் !

வண்டுகளின் ரகசிய  மொழியை
வார்த்தைகள் உணர வேண்டும் !
மொண்டு தீர்த்தபின்னும்  அன்பு
குறையா திருக்க  வேண்டும் !
மூன்றாவது கண் ஒன்று
முகத்தில் முளைக்க வேண்டும்!
தோன்றும் விண்மீன்களை எல்லாம்
தொட்டு பார்க்க வேண்டும் !     

வந்த சுவட்டின் வழியே மீண்டும்
நடந்து  பார்க்க வேண்டும் !
தொந்தி பருத்தாலும் குளத்தில்
துள்ளிக் !குதிக்க வேண்டும் !
சிந்தும்  மழைத்துளிகள் யாவும்
சுவைக்கும் தேனாக வேண்டும்!
அந்தி வெயிலின் மழைவெளியில்
ஆருயிர் குளிக்க வேண்டும் !  

காட்டு வெள்ள நுரைப்பூவில்
கால் நனைக்க வேண்டும் !
நீட்டும் விரல் நுனியில்
வீடு சமைக்க வேண்டும்! மோகம்
மூட்டும் கனலில் வெந்து
முற்றாய் சாம்பல் ஆகவேண்டும் !
தாகம் தீர்ந்த பின்பும் என்றும்
தவிப்புடனே இருக்க வேண்டும் !

அடர் வனத்தின் பறவையொலி
ஆழ்ந்து கிடக்க வேண்டும் !
படரும் கோடைப்புனல்  வழியே
பயணம் செய்ய வேண்டும் !
இடர் தருவார் நெஞ்சை
எள்ளி நகைக்க வேண்டும் !
சுடர்மிகு வான்  வழியே
சூரியனாய் வலம்வர வேண்டும் !

No comments:

Post a Comment