Thursday, 31 January 2019

சிமிட்டிஆலை

வரகு வெளைஞ்ச கொல்லை
வாய்பிளந்து கிடக்குதண்ணே !
கம்பு வெளஞ்ச கொல்லை
காய்ஞ்சு கிடக்குதண்ணே !
சோளம் வெளைஞ்ச கொல்லை
சுண்ணாம்பு சுரங்கம் ஆனதண்ணே !
மொச்சை விளைஞ்ச கொல்லை
மண்மேடாய் போனதண்ணே !



பருத்தி வெளைஞ்ச கொல்லை
பயத்தங்காய் காய்க்கும் கொல்லை
மல்லி வெளைஞ்ச கொல்லை
மஞ்ச கிழங்கு வெளைஞ்ச கொல்லை
துவரை காய்க்கும் கொல்லை
தினை மணி பூக்கும் கொல்லை
சுண்ணாம்பு சுரங்கம் ஆனதண்ணே
சோத்துக்கு வழியில்லாம போனதண்ணே!


கலப்பை உழுத கொல்லை
கல்லு பிரண்டு கிடக்குதண்ணே !
மாடு மேய்ஞ்ச கொல்லை
பாதாளமாய் போனதண்ணே !
காடைகவுதாரி திரிஞ்ச கொல்லை
கட்டடமாய் ஆனதண்ணே !
காதல் அரும்பும் கொல்லை
காட்சி பொருளாய் ஆனதண்ணே !


கடலாய் கிடந்த குளமெல்லாம்
காய்ஞ்சு வறண்டு போனதண்ணே !
நிலத்தடி தண்ணியெல்லாம்
நாலாயிரம் அடி ஆனதண்ணே !
புற்றீசலாய் சிமிட்டி ஆலைகள்
புதுசா புதுசா முளைக்குதண்ணே !
பூகம்பம் வந்து மண்ணை
புரட்டிபோட போகுதண்ணே !


மண்ணு லாரி சாலையெல்லாம்
வேகமாய் போகுதண்ணே !
பிள்ளைகுட்டிங்க சக்கரத்தில்
அடிபட்டு சாகுதண்ணே !
வெளிக்கிளம்பும் புழுதியெல்லாம்
வீட்டுக்குள்ளே வருகுதண்ணே !
மூச்சுமுட்டி சிரமபட்டு
இரவெல்லாம் இருமலண்ணே !


சிமிட்டி ஆலைபுகை
எங்கும் பறக்குதண்ணே !
இசிவு காசமுன்னு
எண்ணற்ற நோய்களண்ணே !
எங்கும் வெடிச்சத்தம்
காதை பிளக்குதண்ணே !
வீட்டுச் சுவரெல்லாம்
வீழ்ந்து சரியுதண்ணே


பத்து வருடம் முன்பெல்லாம்
பார்த்தீனியம் பார்த்ததில்லே!
வீட்டு வாசலிலே ! இப்போ
முளைச்சு கிடக்குதண்ணே !
விந்தையாய் இருக்குதண்ணே
வேதனையாய் இருக்குதண்ணே!
அரியலூரு மாவட்டமே இப்ப
ஆபத்துல தவிக்குதண்ணே !

Image result for ariyalur arasu cement factory images