Tuesday, 26 January 2021

அவளும்... நானும்... (சிறுகதை )

 

வளின் திருமணத்திற்கு இன்னும் இரண்டொரு நாள்தான் பாக்கி இருக்கிறது !அதன்பின்னர் அவள் அடுத்தவனின் மனைவியாக போகிறாள்,அதன் பின்னர் அவளோடு பொழுதெல்லாம் சிரிக்க சிரிக்க பேசுகின்ற வாய்ப்பு முற்றாக போய்விடும்,அவளோடு அதன்பின்னர் நாம் நினைத்தநேரத்தில் பேசுகின்ற அந்த கணங்கள் இல்லாமல் போகும்.அதன் பின்னர் அவளின் சுதந்திரம் அவளின் கணவனின் மொத்த  சொத்தாகிவிடும். அவளும் அதன் பின்னர் நம்மை சற்றும் திரும்பி பார்ப்பாளா என்பது சந்தேகம்தான். அவளும் நானும் இந்த மூங்கில்  படலுக்கு வெளியே  எதிரெதிரே நின்றுகொண்டு  மணிக்கணக்கில் பேசுவோம். ஊர் கதை .ஒலகத்து கதைகளெல்லாம் இருவரும் பேசிக்கொள்வோம். அவள் வீட்டில் திங்கறத்துக்கு ஏது செய்தாலும் அதில் எனக்கொரு பங்கை யாருக்கும் தெரியாமல் ஒளிய வைத்திருந்து இரவு மலர்ந்தபின்னர் அரவம் தெரியாமல் அவள் வீட்டின் எதிர்புற வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் என்னை எழுப்பி தின்னக்கொடுப்பாள்.அந்த பொன்னான வாய்ப்புகளெல்லாம் முற்றாக அடைக்கப்படும். சினிமா பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பினால்,பள்ளியை கட்டடித்து விட்டு,அவளுக்காக  நேரத்திற்கு வீட்டிற்கு வந்து ,அதன்பின்னர்   மூன்று கிலோமீட்டருக்கு ஆப்பாலுள்ள  டூரிங் சினிமா    .கொட்டகைக்கு அவளோடு  பல நாட்கள் நடந்து சென்று படம் பார்த்ததை பசுமையான நாட்களெல்லாம் மனதில் வந்து வந்து நெஞ்சை கொத்திக்கொண்டிருக்கும்.அது எப்போதும் மனதை வலித்துக்கொண்டே இருக்கும். அந்த வாய்ப்புகளெல்லாம் இனிமேல் இல்லாமல் போகும். அவள் சென்று விட்டால்  எதிர் வீட்டு  திண்ணைக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.அதன பின்னர் எனக்கெதிரில் தோன்றும் அனைத்தும் வெறுப்பாக தோன்றும்.

 என்னைத்தேடி தனிமையில் என்னை சந்தித்தவள் அந்த செய்தியை அவளால் அவ்வளவு எளிதாக சொல்லமுடியவில்லை.கண்களில் கண்ணீர் வழிந்தோடின. என்னை ஒரு கணம் வைத்த கண்  வாங்காமல் உற்றுப்பார்த்தாள்.ஆனால் அவளை நேருக்கு நேராக பார்க்க நெஞ்சில் பலமின்றி கீழே தரையையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். உடைந்த குரலில் மெல்ல பேசத்தொடங்கியவள் “கல்யாணந்தான் கட்டிக்க முடியல,என் கல்யாணத்துக்காவது கட்டாயம் வந்துடுங்க,நீ வருவீங்கன்னு நிச்சயம் எதிர் பார்த்துக்கிட்டுருப்பேன்,வரமா ஏமாத்திபுடாதிங்க “என சொல்லியவள் விடு விடென அங்கிருந்து கிளம்பி போய்விட்டாள்.

 அகிலாவை எனக்கு  வினவு தெரிந்த நாளிலிருந்து அவளை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அவளின் வீடு எனது வீட்டிற்கு சற்று எதிர்புறத்தில்தான்  இருந்தன. காலையில் தூங்கி எழுந்தாலே அவர்களின் வீட்டின் முகத்தில்தான்  விழிக்க வேண்டும். இருவரின் வீட்டிலும் எது நடந்தாலும் ஒன்றையொன்று மறைக்க முடியாத அளவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.

 அகிலா எனக்கு முறைப்பெண்தான். அவள் வயதும் என் வயதும் எறக்குறைய சம வயதுடையவர்களாகவே இருந்தோம்.அதனால் ஆள் அரவம் அதிகமிருந்தால் மரியாதைக்கு  மாமா என்றழைப்பாள். யாரும் இல்லாத நேரத்தில்  என்னை அவள்  என்  பெயரைச் சொல்லியே அழைத்து  வந்தாள்.

 அவளிடத்தில் அளவற்ற  வெகுளித்தனம்  நிரம்பி வழிந்தன. யார் எது சொன்னாலும் பட்டென்று சிரித்து விடுவாள். எதற்கு சிரிக்க வேண்டும்?ஏன் சிரிக்க வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் அவளுக்கு தெரியாது.ஆனால் அவளின் மனதுக்கு எது சந்தோசம் தருகிறதோ ,அதுவே அவளிடத்தில் புன்னகையாக வெடிக்கும். சிலவேளைகளில் அவளின் அம்மா “இப்படி சிரிக்காத நாயே!  போற இடத்திலே எல்லாமும் சிரிச்சு போகும்! போயி வேலையை பாரு “ என விளக்கு மாற்றை  எடுத்து கொண்டு அகிலாவை அடிப்பதற்கு ஓடி வருவாள்.அகிலா அவ்விடத்திலிருந்து புகையாய் சென்று மறைந்து விடுவாள் ! இதையெல்லாம் அவளின் தகப்பனார் ஆறுமுக வீட்டு திண்ணையில் அமர்ந்தவாறு மகளின் சேட்டையை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்.அகிலாவோடு பிறந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகள்.ஒரு அண்ணன் .அவருக்கு கல்யாணமாகி பிள்ளைகள் என குடும்பமாகிவிட்டார்.மூத்த அக்காளுக்கு பிள்ளைகள் இருக்கின்றன. நடிய அக்காளுக்கும் கல்யாணம் ஆகி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறாள்.

அகிலாதான் எல்லாத்துக்கும் கடைக்குட்டி.எல்லாத்தும்கொஞ்சம் செல்லக்குட்டி ,ஆளு கொஞ்சம் வெளுப்பு.அதனால் எல்லோரும் அவளை வெள்ளச்சி என செல்லமாகவும் அழைப்பதுண்டு. கையில் எது இருந்தாலும் அதை ஒளிக்காமல் எல்லோருக்கும் கொடுத்து விடுவாள் ,அந்த இரக்க குணம் உடையவள் .

ஆனால் ...  அகிலா  பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. அவளுக்கு அந்த காலக்கட்டத்தில் அது அவசியம் எனவும் பட்டதில்லை. அவ்வப்போது  நான் எழுதிக்கொண்டிருப்பதை வியப்போடு பார்ப்பாள். சிலவேளைகளில்  எனது பேனாவை எடுத்து வெற்றுத்தாளில் எதையாவது கிறுக்கி கொடுத்து இது என்ன ? இதுவும் எழுத்துதானே? என்பாள்.இதற்கு என்ன அர்த்தம் என்பாள். அது எந்த எழுத்தாக இல்லாவிட்டாலும்,அவள் மனசு வருந்துவாளே என்பதற்காக நானும் அவளை சந்தோஷப்படுத்தவேண்டி எதையாவது ஒன்றை சொல்லி வைப்பதுண்டு அதை கேட்டு அவள் சின்ன குழந்தையைப்போல சிரித்து சந்தோஷப்படுவாள். அவளிடத்தில் நிரம்பிக்கிடந்த குழந்தைத்தனமும்,அப்பாவித்தனமும்  அவளிடமிருந்து  பிரிக்க இயலாததாக வளரும் இயல்பான ஒன்றாகிவிட்டது. அவளிடத்தில் குவிந்து கிடந்த அரும்பெரும் குண நலன்களே அவளிடத்தில் என்னை ஈர்ப்பதற்கான காரணிகளாய் இருந்தன.

 அதுவே எனக்குள் அரும்பி என்னை முழுதாய் வசீகரம் செய்யும் காதலாய் எனக்குள் மலரவில்லை. அதுவே அவள் மீது  எனக்கு காதல்  அப்படி இப்படியென்று ஏதும் எனக்குள் தோன்றவில்லை.ஆனால் அவள் என்னோடு பழகும் விதமும் அதற்கு நான் எதிர் வியானையாற்றும் விதமும் ஒரு வகையில் எங்களுக்குள் ஒரு வித பிடிமானத்தை உருவாக்கியிருந்தன. அது அவளுக்குள் என்மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் ஒருநாளும் அவளும் தனது  மனது விரும்பியதை வாயால் சொல்லித்தீரவில்லை.எப்போதும் போலவே இயல்பாகவே என்னுடன் பழகிவந்தாள்.ஆனால் அவள் என்னைப் பார்க்கும் போதேல்லாம்  அவளின் கண்கள் மட்டும்   ஓராயிரம் கதைகள் பேசும், ஏனோ இதழ்கள் மட்டும் மவுனத்தில் லயித்திருக்கும்.அவளின் பார்வையின் மொழி மட்டும் யூகித்தலுக்கு அப்பால் பொருளின்றி விரிந்து செல்லும்.

 என் குடும்ப அமைப்பு என்னை முற்றாக கட்டிபோட்டுவிட்டது. முதுமையின் விளிம்பில் இருக்கும் எனது தந்தையாரின் தாயாரின் நிலை,அவர்களின் சுய தேவை ,அவர்களுக்கான எனது தினசரி பணி போன்றவையெல்லாம்  எனது சுய தேவை ,ஆசா பாசம்,எனது பள்ளிவாழ்க்கை ,எனது இளம்வயது போன்றவையெல்லாம் எனது காலத்தின் மீது தனது தாக்கத்தை   செலுத்தின. காலை எழுந்தவுடன் கொல்லைக்காட்டுக்கு செல்லவேண்டும். பெற்றோர்களின் அன்றாடத்தேவைகளை  நிறைவு செய்யவேண்டும் .அதன் பின்னர் பள்ளிக்கு கிளம்பி மூன்று மைல் நடந்து செல்லவேண்டும். பள்ளி விட்டவுடன் வீடு `திரும்பவேண்டும்.அதன் பின்னர் கொல்லைக்கு மாட்டுக்கு புல்லு பார்க்க செல்ல வேண்டும். அதன் பின்னர் வீட்டு பாடம் எழுத வேண்டும் .உணவு உண்டபின்னர்தான் மற்ற வேலைகள். இதற்கிடையில்தான் அகிலாவுடன் பேச வேண்டும். என் வாழ்க்கை என்பது முற்றாக  எந்திரம்போல ஓடத்தொடங்கியது.  

ஒரு வகையில் நானும்  ரசமற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.உடன் பிறந்த ஒரு அக்காளுக்கு  கல்யானம் ஆகிவிட, ஒரே ஆண் பிள்ளையான என் மீது அனைத்து பொறுப்புகளும் வந்து விழுந்தன. வயதான பெற்றோர்களையும்  குடும்பத்தையும்  பார்க்கவேண்டிய வேலை கொக்கு தலையில் பனங்காயை வைத்தது போலிருந்தது. அது எனது வயதுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு கடினமான பணியாகவே இருந்தன. அதனால் எனது பள்ளி வாழ்க்கை அவ்வளவு பிரகாசமாக அமையவில்லை.ஏனோதானோவென்று நான் பள்ளிக்கு  போய் வந்தேன். எனக்குள்ளும் எனது தாய் தந்தைக்கு பின்னர் எனக்குள் ஏற்படப்போகும்  நிராதரவை நினைந்தாலே மனதுக்குள் கனக்கத்தொடங்கியது.

அகிலா என்னை உள்ளார்ந்தமாக  புரிந்தவளாகவே இருந்தாள் என நினைக்கிறேன். ஆனால் ..என்னை சூழ்ந்திருக்கும் எனது இயலாமையை புரிந்தாளா என எனக்கு தெரிவில்லை. எனக்கும் அவளை  ஒரு காதலியாய்  நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஒரு வேளை அந்த எண்ணம் எனக்குள் தோன்றாமல் போனதற்கு அவள் எதிர்வீட்டில் இருக்கிறாள் என்பதற்காகவோ ,அல்லது எதிர்வீடாய் இருப்பதால்  என்றைக்கும் தேவையற்ற சண்டை சச்சரவாகவே இருக்கும் என்ற இனம் புரியாத  உள்ளுணர்வின் காரணமாகக்கூட எனக்குள் காதல் வராமல் போயிருக்கலாம்.சொல்லத்தெரியவில்லை, அவளுக்கும் எனக்குமிடையில்  ஒரு தூய்மையான நட்பாகவே இருந்து வந்திருக்கின்றன.

ஆனாலும்  அகிலா மீது அளவு கடந்த அன்பும், எந்த வரையறையும் இல்லாமல்  இருவரும் எதைப்பற்றியும் பேசி விவாதிக்கும் தனிமை எங்களுக்குள் இருந்தது. தனிப்பட்டது என்ற  எந்த அந்தரங்கமும்  எங்களுக்கிடையில்  இல்லை. ஒருவருக்கொருவர் எல்லை மீறாமல் தொட்டு பேசிக்கொள்ளும் பழக்கம் இருந்தது.ஆனால் அதற்காக அவள்மீது எனக்கு காதல் என்ற ஒன்று தோன்றவில்லை

 ஆனாலும் அகிலாமீது இனம் புரியாத ஈர்ப்பும் அன்பும் எனக்கிருந்தது .ஆனால் எனக்கென்னவோ அவள்மீது  காதல் என்ற  ஒரு  வேதியியலும் வினைபுரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

 அவளின் அப்பா  மர  வியாபாரம் செய்து வந்தார். பொழுதெல்லாம் கொல்லைக்காட்டில் மரம்வெட்டி லோடு ஏற்றிவிட்டு,, பொழூது சாய்ந்தால் வீட்டு வந்து ,சாராயம் குடித்துவிட்டு தெருக்கூத்தில் வரும்  ராமாயண கதைகளை  பாடிக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் தெருவின் புழுதியில் படுத்துக்கிடப்பார். அவர் கூலிவேலைக்கு,மரம் வெட்டு இல்லாத நாட்களில் தெரு கூத்தில் ராமர் வேஷம் கட்டி நடிப்பார்.

அவர் ஒன்றும் நிரந்தர நாடக  நடிகரல்ல, மாறாக தற்காலிகமாகத்தான் போய் வந்தார். அவர்கள் அனைவரும் விளிம்பு நிலை மக்களாகவே இருந்தார்கள். சம்பாதிப்பதற்கும்,சாப்பிடுவதற்கும்தான் சரியாகத்தான் இருந்தன. கிடைத்த சொற்பத்தில்   எதையும்  மிச்சம் பிடிப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருந்தார்கள்.

 அவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது.அகிலாவின் கல்யாணம் முடிந்து விட்டால் எல்லா சுமையும் முடிந்தது போலத்தான். அவளை,அவர்களைக்காட்டிலும் ஒரு நல்ல இடம் கிடைத்துவிட்டால் எப்படியாவது பேசி முடித்து விடலாமா என நீண்டநாள் காத்திருந்து  இந்த இடத்தை பார்த்து பேசி முடித்தார்கள்.

 இந்த இடம் ஒரே  பையன் கணிசமான அளவுக்கு நில புலன்கள் இருந்தன.இது அவர்களுக்கு பெரிதாக பட்டது. நாள் குறித்து கல்யாண வேலைகள் வெகு மும்மரமாக நடந்துகொண்டிருந்தன. ஊரைச்சுற்றி பத்திரிக்கை எல்லாம்  வைத்து முடிந்து விட்டார்கள். அகிலா வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்.

 ஆனால் .. வெளியுலகிற்கு மகிழ்ச்சியாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும்,உள்ளுக்குள்  அகிலா மனதளவில் மிகவும் உடைந்து போயிருக்கிறாள் என்பது ஒவ்வொரு தடவையும் அவள் என்னை உற்றுப்பார்க்கும் பார்வையிலிருந்து தெரிந்துகொண்டேன். ஆனாலும் அவளும் நானும்   முன்பைப்போல தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் இதுவரை வாய்க்கவில்லை. அதற்கான  ஒரு புதிய முயற்சியை செய்வதற்கு எனக்கும் உடனபாடில்லை.

 அவளும் நான் வெளிப்படையாக ஏதாவது பேசுவேனா என எதிர் பார்த்திருப்பாளா என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.நானும் சில வரம்புக்குள் என்னை நிறுத்திக்கொண்டவனாக இருந்தேன். ஆனாலும்... அகிலாவின்மீது  அளவற்ற நேசம் எனக்குள் மலர்ந்து கொண்டிருந்தது. அதை  எப்படி அழைத்தாலும் அந்த அழைப்பின் வரம்பிற்குள் சிக்காமல் விலாங்கு மீனைப்போல நழுவி நழுவி சென்றுக்கொண்டிருந்தது  நானும் எனது போக்கிலே போய் கொண்டிருந்தேன்.

 அகிலாவின் கல்யாண தேதி நெருங்க நெருங்க முன்பைக்காட்டிலும் அகிலாவின் நெஞ்சு பட படக்கிறது என்பது அவளின் நடவடிக்களில் நான் தெரிந்து கொண்டேன்.அந்த இக்கட்டான நேரத்திலும் அவள் ஒரு வார்த்தைகூட பேச வில்லை.

 மாறாக  மற்றவர்களுக்கு ஏதும் நடக்காததுபோல இயல்பாக இருந்து வந்தாள். இருவரும் இதுவரை ஒருவருக்கொருவர் தங்களின் காதலை சொல்லிக்கொள்ளவில்லை.

இருவரும் தங்களின் முத்தங்களை பரிமாறிக்கொள்ளவில்லை .இருவரும் தங்களின் உயிரின் ஆழமான தொடுகைகளை பரிமாறிக்கொள்ளவில்லை.தங்களின் வாழ்க்கைக் குறித்த எண்ணங்களையும்,விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாக சொல்லி விவாதிக்கவில்லை.

  ஒரு திரைக்கு அப்புறம் அகிலா !”

“இந்தப்புறம் நான்”  என இருவரும் தூரத்து ஒரு விருந்தினனை போல ஒருவருக்கொருவர் கண்களின் பார்வையின் ஸ்பரிசத்தில் மட்டும் அறிமுகமாகியிருக்கிறோம்.ஆனால் யதார்த்தத்திற்கு வெளியே இருவரும் வெறுமனே நின்றுகொண்டிருந்தோம்.

எதை காதலென அர்த்தப்படுத்திக்கொள்வது எனும் ஆயிரம் கேள்விகள் கண நேரத்தில் மனதுக்குள்  வந்து போகும். .விடையென்று ஒன்று கிடைத்தால் கரையேறிவிடலாம் என்ற சிறு துரும்பாய் ஒரு நம்பிக்கை மட்டும் மனதுக்குள் விஞ்சி நிற்கும்.

 நாளும் பொழுதெல்லாம் மனசின் மூலை முடுக்கெல்லாம்  முட்டி மோதி இறுதியில் மனம் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தது.அது  எனது மனதில் அகிலாவின் நினைவு என்பது  உயிரின் இறுதி வரை அவளுக்காக அன்பினை  கண்ணீறாய் வற்றாமல்  வாரி வழங்கி,அகிலாவின் மெல்லிய உணர்வுகளை நெஞ்சில்  தேக்கி  வாழும் ஒரு ஜீவன் என்றும்,அவளை காதலியாய் இதுவரை  நினைத்து பார்க்கவில்லை என்று முடிவு செய்து என் மனம் சகஜ நிலைக்கு  திரும்ப தயாராகி கொண்டிருந்தது.

 எனது வீட்டின் திண்ணையின் அமர்ந்தவாறு எதிர்வீட்டில்  அகிலாவை உற்று கவனித்தேன். இன்று இரவுதான்  மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் அழைக்க வருவார்கள் என்பதற்காக சமையல் வேலைகள் தீவிரமாக  நடந்து கொண்டிருந்ததன. சொந்தபந்தங்களால் கல்யாண வீடு களை கட்டியிருந்தது . அவள் என்னை  கவனிக்கவில்லை. அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தாள். நேரம் நெருங்க நெருங்க ஊர் சனங்கள் ஒன்று சேர துவங்கினார்கள். மாலை ஆறுமணியளவில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூட்டுவண்டியில் மாப்பிள்ளை வீட்டார்கள் மேள வாத்தியங்கள் முழங்க வந்திறங்கினார்கள். சாப்பாடு பரிமாறும் வேலைகள் முடிந்தன.  பெண் அனுப்பும்  நிகழ்வின் போது வீட்டிலிருந்து தெருவில் நிற்கும் கூட்டு வண்டி நோக்கி வந்தவள்,வண்டியில் ஏறுவதற்கு முன்னர், எதிர்வீட்டை  நோக்கியவள் , மெல்லிய விளக்கொளியில் ஒரு முகம் அசைவதை கண்டாள்.பின்னர் கூட்டு வண்டியில் ஏறிக்கொண்டாள். வண்டி வடக்கு திசையை நோக்கி செல்ல தொடங்கியது.

திருமணம் நடைபெறும் நாளன்று காலையிலேயே  சைக்கிளில் கல்யாண வீட்ட சென்றடைந்தேன்.திருமணம் நடைபெற இன்னும் ஓரிரு நிமிடங்களே இருந்தன. தூரத்தில் அவள் அவள் புதிதாக வாழப்போகும் வீட்டின் பின் வாசல் வழியாக இரண்டொரு சிறுமிகளுடன் வெளியே வந்து சற்று  அந்தவீட்டின் முகப்பின் படலுக்கருகில்  நின்றுகொண்டிருந்த என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்தாள். எனக்குள் முற்றாக கண்ணாடியாய் உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில்  தெரிந்த தவிப்பு  என்னை மேலும்  கலங்க செய்தன . அவள்  கண்களில் அரும்பிய  மெல்லிய சோகம் இழையோடின.  அது “ஏண்டா கையாலாகதவனே!” என்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டாயே ! என்னை சிறைஎடுத்து செல்வாய் என்றிருந்தேன்,இப்படி அடுத்தவன் கைகளில் என்னைக்கொடுத்துவிட்டாயே, என் பாவம் உன்னை சும்மா விடாது! என சொல்வது போலிருந்தது. இன்று முதல்  நமக்கிடையில் எந்த உறவும் இருக்க போவதில்லை. இதுதான் நம் பயணித்தின் இறுதி கட்டம் என் சொல்வது போல இருந்தது .அவளின் கண்களின் மொழியை மட்டும் நான்மட்டும் அறிந்தவனாக இருந்தேன்.

 சிறுது நேரம் என்னை வைத்த கண்வாங்காமல் பரித்தவிப்போடு பார்த்தவள்,  கடைசியாக போய்வருகிறேன் !” என கண்களால் சொல்லியவாறு திரும்பி திரும்பி பார்த்தவாறு பெண்கள் கூட்டத்தில் பொய் மறைத்தாள் அகிலா. திருமணம் நடப்பதற்கான கணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி  கொண்டிருந்தன. கல்யாண வீட்டார்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யும் வேலைகளை மும்மரமாக செய்ய தொடங்கினர். இருப்புகொள்ளாமல் அங்கும் இங்கும் அலையும் பூனைக்குட்டியைப்போல மனம்  எரிமலையாய்  குமுறத்தொடங்கியது. அவளின் திருமணத்தை என் கண்ணால் பார்ப்பதற்கு என் நெஞ்சில் வலுவில்லை. அந்த இடத்தைவிட்டு எப்படியாவது வெளியேறவேண்டும் என முடிவு செய்து, நான்  ஒதுக்குப்புறமாக நிறுத்தியிருந்த என சைக்கிளை எடுத்து கொண்டு யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல்  அங்கிருத்து மெதுவாக ஊரைத்தாண்டும்வரை சைக்கிளை  மெதுவாக தள்ளிக்கொண்டு வெளியேற தொடங்கினேன்.கல்யாண வீட்டாருக்கு தெரிந்தால் சாப்பிடாமல் விடமாட்டார்கள் அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அவ்விடத்தைவிட்டு கால் நடையாக சென்று, பின்னர் சைக்கிளில் ஏறி பெடலை மிதிக்கதொடங்கினேன். அவள்   முழு நிலவாய் முற்றாக .மனதை வியாபித்திருந்தாள். ஊரின் எல்லையை  கடந்து மனம் போன போக்கில்  மிதிவண்டி போகத்தொடங்கியது  .தூரத்தில் திருமண வீட்டில் ஒலிப்பெருக்கியில் ஒலித்த  கொட்டுமேள சத்தம் காற்று வாக்கில் அவன் காதில் வந்து ஒலிக்கத்தொடங்கின !