Sunday, 3 March 2019

கோடை

Image result for கோடை காலம் படிமத்தில்


















காய்ந்த வானத்தில்
கொஞ்சமும் கருக்கலில்லை !
கருகும்  சருகினில்
கொஞ்சமும் ஈரமில்லை !
காயும் வெளியெங்கும்
கொஞ்சமும் நிழலில்லை!
வற்றும் குரல் வலையில்
வார்த்தைகள் பிறக்கவில்லை!


மழையின் வேரைத்தேடி
தாகங்கள் பயணிக்கின்றன!
இலைகளின் நிழலைத்தேடி
உயிர்கள் பறக்கின்றன !
வளைகளில் வாழும் உயிர்கள்
வேர்த்து தொலைகின்றன !
வேர்க்கும் உடலெங்கும்
வெம்மை படர்கின்றன !


தூரத்தில் முனகும் ஊர்குரல்
துளைத்தெரியும் திசையை !
வானத்தில் அலையும்  ஓர்குருவி
வழி மறந்து   தவிக்கும்  !
ஆவினம் எழுப்பும் ஒலிகள் !
ஆடுகள் கழுத்தின் மணிகள்
தேடும் நீரின் வெளிகள்  
தொலைவில் கானல் ஒளிகள் !


இலைகள் சொரிந்த மரங்கள்
வெயிலை விழுங்கி தீர்க்கும்!
தெரியும் அணிலின் கூட்டை
காக்கைகள் திறந்து பார்க்கும்!
இலைகளின் அடியில் பதுங்கும்
எளிய உயிரின் வாழ்க்கை !
அனலில் பிதுங்கி வழியும்
அழியும் அழகின் யாக்கை !


ஈரம்  தழுவும்  நிலம்தேடி   
எங்கோ போயின  பறவைகள் !
சாரமிழந்து  கிடக்கின்றன
சந்தோஷத்தின்   வேர்கள் !
கோடை மழையை  எண்ணி
உயிரில் தோன்றும்  வேட்கை!
வானம்பாடியின் ஒற்றைக் குரலில்
வெந்து    தீரும்  கோடை !