அவ்வளவு எளிதாக மறந்துபோவதற்கு அது ஒன்றும் அவ்வளவு பலகீனமான முகமல்ல.இப்போதும்
அரை நூற்றாண்டை கடந்தபின்பும்,என் மனதின் அடிவானத்தில் அழியாதா ஓர் பிம்பமாய்
,கல்லில் செதுக்கிய ஓவியமாய் எனக்குள் உயிர்ப்புடன் இருந்து வருகிறது
.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவ்வப்போது எனக்குள் தோன்றி என்னையும் என் காலங்களையும் மீள் சலவை செய்யும் ஓர் எந்திரமாய் எனக்குள் புகுந்து என்னைத்தொடர்ந்து நச்சரித்து வந்திருக்கிறது
.ஆனால்... "அந்த முகம் சொல்ல விழையும் கதையும் கண்ணீரும்
,விரக்தியில் கொப்பளிக்கும் வேதனையும் என்னவென்பது புரிந்து கொள்ள இயலாத ஒன்றாய் என் வாழ்க்கையினூடே என் கைபிடித்து வந்து கொண்டிருக்கின்றன
! "
கடந்த முப்பது ஆண்டுகளில் வாழ்க்கை எப்படி எப்படியெல்லாமோ என்னை மாற்றியிருக்கிறது ,உடலாலும் உள்ளத்தாலும்
,கடுமையான காயங்களாலும்
,வலியினால் சேர்ந்து பிசையப்பட்ட ஒரு பல்சுவைமிக்க
கலவையாக உறைந்துபோனேன்.
தினசரி பரபரப்பின் நிகழ்வுகளில் ஒன்றையொன்று முந்திக்கொள்ளும் போட்டியில் பழையனவற்றின் பயணிப்பில் நடப்பு
மட்டும் மிச்சமாய் நிற்கிறது.
பழமைக்கும் புதுமைக்குமான இடைவெளி விரிவடைந்து கொண்டே செல்கிறது.
"நவீனத்தின் பால் உண்டானது. விரைவில் நெருக்கடியில் இது ஒரு தவிர்க்க இயலாத ஒரு நிகழ்வாய் நிலைத்துப்போன காலக்கட்டத்தில் எனக்குள் உயிராய் வளைந்து நெளிந்து
,ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாய் என் மண்டைச்சுரபியை வியாபித்து நிற்கும் காவேரியின் முகம் என்னை அவ்வப்போது அவளை நினைத்து கொண்டிருக்கும்படியாக
தூண்டிவருகின்றன."
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்
. என் வயதையொத்த எல்லா பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்தார்கள்
.ஆனால் நான் மட்டும் என்னவோ என் குடிகார தந்தைக்கு பயந்து கொண்டு தெருவுக்கு தெரு ஓடிக்கொண்டிருந்தேன். மிக சின்ன வயதிலேயே எனக்கு வாழ்க்கைக்குறித்த எல்லா பரிமாணங்களும் தெளிவாக தெரிய தொடங்கிவிட்டன!"
எனது தந்தையார்
ஒரு வைப்பாட்டியை வைத்துக்கொண்டு
பாரம்பரியமான சொத்துபத்துகளை
விற்று உல்லாசமாக செலவு செய்து தனது பிரியத்துக்குரிய பெண்மணியை சந்தோஷமாக வைத்திருந்தார். என்னை பெற்றவளுக்கு
எந்த சோறு தண்ணியும் கொடுக்காமல் ஒரு பிச்சைக்காரியைப்போல வீட்டில் காவல்நாயைப் போல நடத்தினார்.
"வைப்பாட்டியோடு தன்
புருஷன் வீட்டின் உள்ளே படுத்திருக்க, வீட்டின் வெளியே பெருந்தன்மையோடு காவல் காத்த
பெருந்தன்மைகொண்ட பெண்மணி
உலகத்தில் இவளாகத்தான் இருப்பாள்!"
பொறுத்துப்போக மனமில்லைதான் .என்ன செய்வது?...
எதிர்த்ததுக்கேட்டால் அடித்து சித்திரவதை
செய்வான் .பேசாமல் அடங்கி கிடப்பது நல்லது . பிறந்த வீட்டிற்கு சென்று வாழாவெட்டியாய் கிடந்து சாவதைவிட,புருஷன் வீட்டில் அடிமையாய் கிடந்து சாவது மேல் நினைத்தாளோ என்னவோ! பேசாமல் அடிமையாய் கிடக்க தொடங்கிவிட்டாள்!"...
"எதையும்
கேள்விக்கேட்காமல் பேசாமல் பிள்ளைப்பூச்சியாய் அடங்கி போவதும் ஒரு வகையில் வாழ்நாளை நினைத்து சுகமாகத்தான் இருக்க தொடங்கி
விடுகிறது .சிலவேளைகளில் அதற்கும் ஒரு எல்லை தேவைப்படுகிறது. அது மீறப்படும்போது
அடிமைகளிடத்தில் புதிய
உத்வேகம் பிறக்கிறது.
என்னைப்பெற்றவளும் ஒரு நாள் தன் புருஷனிடம் எதிர்த்து கேள்விகேட்டாள். என் அப்பனுக்கு வந்ததே கோபம், .பேசாமல் சாராய கடைக்கு
போனான். மூக்கைப்பிடித்து கொண்டு வயிறு முட்ட குடித்தான்.நேராக வீட்டுக்கு வந்தான் .என்னை பெற்றவளை நடு ரோ ட்டில் தலை மயிரை பிடித்து இழுத்து வந்து போட்டு ஒரு காலால் தலை முடியை மிதித்துக்கொண்டு மறு காலால் என்னைப்பெற்றவளின் ஊட்டியில் மிதித்துக்கொண்டிருந்தான். அக்கம் .பக்கத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தங்கள் வீட்டிற்குள்
சென்று ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.
கையறு நிலையில் நான் தெரு சனங்களிடம் உதவி கேட்டு கத்தினேன்.
ஆனால்... அந்த பாயந்தாங்கொள்ளி சனங்களிடத்தில் ஒரு கிழவியைத்தவிர ஒரு வரும் முன் வரவில்லை.அந்த கிழவி மட்டும்தான்.மிக துணிச்சலாக என் அப்பனிடம் நெருங்கி வந்து "ஏண்டா இப்படி பண்றே ? குடிகாரப்பயலே" என திட்டி குடிகாரனின்
பிடியிலிருந்து எனது
தாயை விடுவித்தாள்.குடிகாரனின் போதை அப்போது குறைந்திருக்க வேண்டும்.சற்று நேரத்துக்கெல்லாம் அங்கிருந்து எங்கோ போய் விட்டான்.இதை தெரிந்து கொண்ட என் தாய்
"ஏலே தம்பி
,நாம் இங்கிருந்தா நம்மள
இந்த தேவடியா பய அடிச்சே கொன்னுடுவான்,நாம
பேசாம ராவோட ராவா அம்மாயி
வீட்டுக்கு ஓடிப்போயிடுவோம்.அக்கா போயி உன்ன களைவெட்டியாவது படிக்க வைக்கிறேன்'! என சொல்லி
,எப்போது பொழுது மறையும் என காத்திருந்து,
நானும் என்னை பெற்றவளும் கால்நடையாக,ஊட்டமும் நடையாக ஒரு வேளை குடிகாரன் எங்கே நம்மை துரத்தி
வந்து விடுவானோ? என்ற அச்சத்தில்
திரும்பி திரும்பி பார்த்தவாறு இரவோடு இரவாக அம்மாயி வீட்டுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு போய் சேர்ந்தோம். அம்மாயி
வீட்டுக்கு வந்த பின்புதான்
.
இப்போதுதான் முதன் முதலாக ஒரு விவரமறிந்த சிறுவனாக இந்த ஊரினை பார்க்கிறேன்
. மிக சின்ன ஊர் .இரண்டே தெருக்கள்தான்
.அது வெள்ளை சுண்ணாம்பு கற்களால் குண்டும் குழியுமாக கிடக்கிறது
, நடந்து போனாலே தடுக்கி விழும் அளவுக்கு மிக மோசமாக இருந்தது
.மாட்டு வண்டிகூட செல்ல
முடியாத அளவுக்கு பட்டு மோச மாக காட்சியளித்தன .
ஆனால்... அதை பற்றியெல்லாம் அங்கு வாழும் சனங்கள் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. .அந்த சூழலோடு மிகவும் ஐக்கியபட்டுப்போன அந்த சனங்கள் எனக்கு வியப்பாக தெரிந்தனர்.எங்கு பார்த்தாலும் நெடிதாக பனை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
அதையொட்டி அடர்ந்த மரங்களும் ,அதனிடையே கடந்து செல்லும் புகைவண்டி பாதையும், ,அதில் புகையை
கக்கியபடி செல்லும் தொடர் வண்டிகளும் என்னை மிகவும் ஈர்த்தன .அம்மாயி வீட்டிலிருந்து மேற்கு திசையை நோக்கினால் மிகவும் உயரமான மேட்டுப்பாதையில்
புகைவண்டி பாதை செல்வதையும், புகைவண்டி அதில் வேகமாக கடந்து செல்வத்தையும் பார்க்கக்கூடிய அளவில் இருந்தது.
அம்மாவின்
வீடு மேற்கு தெருவில் நடுப்பகுதியில் கிழக்கு வரிசையில்மேற்கு நோக்கி இருந்தது
.ஆயி வீடு மண்சுவராலான
சிறிய நாட்டு ஓடுகளால்
வேயப்பட்ட வீடுதான்.அதிலும் ஆங்காங்கே சிறிய ,பெரிய வெடிப்புகள் காணப்பட்டன
.அதில் சிறிய அளவில் வெள்ளையாக காய்ந்த பாம்பு தோல்கள் தொங்கிக்கொண்டு பயமுறுத்தின.சிலவற்றில் காய்ந்த கம்பு சக்கையை கொண்டு எலிகள் அவ்விடத்தில் கூட்டு கட்டி
வாழ்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அம்மாயி
வீட்டிற்கு ஐந்து அடி இடைவெளியில் தெற்காலே பெரிய மாமன் வீடு இருந்தன. அது மண் சுவராலான கூரைக்கட்டு வீடாக இருந்தது. அந்த வீடு அம்மாயி வீட்டைக்காட்டிலும் சற்று பெரியதாக இருந்தன.மாமன் மனைவிக்கு அப்போதுதான் நான்கு பிள்ளைகள் இருப்பதையும் ,அவர்களில் ஒருவர்கூட பள்ளிக்கூடம் போகாமல் சிலர் ஆடு மேய்க்கப்போவதும் , சிலர் கூலிவேலைக்கு போவதுமாய் இருந்தனர்
.
விண்ணுலகவாசியைப்பார்ப்பது போல அத்தை மகனான என்னை அவர்கள் எல்லோரும்
பார்த்ததோடு அல்லாமல் என்னிடம் நெருங்கி வந்து
பேச்சு கொடுத்தனர். அப்போதுதான் முதன் முதலாக மாமனின்
பிள்ளைகளை பார்க்கிறேன்.கடந்துபோன பத்து ஆண்டுகளில் இதுகூட தெரியாத அளவுக்கு என்
தகப்பனார் என்னை வளர்த்திருக்கிறார் என்று சொல்வதைவிட என்னை .என் சொந்தபந்ததுடன் சேரக்கூடாது. பேசக்கூடாது
என்பதற்கான உளவியல் காரணங்கள் ஒரு புரியாத உளவியலாகும்.
ஒரு வசந்தம் சூழாத
காலை வேலையில்
என்னை அருகிலுள்ள
அரசு மேனிலைப் நிலைப்பள்ளியில்
ஆறாம் வகுப்பில் சேர்த்திருந்தனர்.நான் அம்மாயி வீட்டிலிருந்து
நான்கு ஐந்து மைல்
புகைவண்டி பாதை வழியே கால் நடந்து செல்வேன். பைகள்
நிறைய புத்தகம்.கைகளில் சிதோசி(அலுமினிய)
தூக்குவாட்டா .அதில் கம்பஞ்சோறு ,புளிச்ச கீரை சோறு இருக்கும் .சிலவேளைகளில் ஒரு சில இட்டிலிகள் வைத்து கொடுப்பார்கள்
.சில நாட்களில் அரிசி
கஞ்சியை தாளித்து
சொறுகட்டி கொடுப்பார்கள்.சில நாளில் அது
கூட இல்லாமல் நடப்பதுண்டு. .நிறைய அறிமுகமற்ற சில மாணவர்களும்
என்னுடன் வருவார்கள் .
சிலர் பேசுவதற்கு முரண்டு பிடித்தார்கள். சிலர் அவர்களாகவே பேசினார்கள் .சிலர் கண்டும் காணாதது போல சென்றனர். ஆனால்
அதைப்பற்றியெல்லாம் கணக்கில்
எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை . நான் பாட்டுக்கு நானும் அவர்களில் ஒருவனாக வழக்கம் போல நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.
சில நாட்கள் காலையிலேயே கிளம்பி விடுவோம். புகைவண்டி பாதையை ஒட்டி
வரிசையாக இருந்த நாவல் மரங்களில் ஏறிக்கொண்டு பழம் பறித்து தின்றுகொண்டு,குலை குலையாக பழங்கள் தொங்கும் அழகைக்கண்டு ,இனி எதற்கு
பள்ளிக்கூடம் போகவேண்டும் ,இப்படியே மரத்தில் உட்கார்ந்து விட்டு
பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டுக்கு போய் சேர்ந்துவிடலாம் என நாவல் மரத்திலேயே பொழுதெல்லாம்
உட்கார்ந்து ,அங்கேயே சாப்பிட்டு ,அங்கேயே
தண்ணீர் அருந்தி ,அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டு சரியாக மாலை
நேரம் பள்ளி விடும் நேரத்திற்கு மரத்திலிருந்து கீழிறங்கி நல்லபிள்ளையைப்போல வீட்டிற்கு திரும்புவதுண்டு.
எந்த குற்ற உணர்ச்சியுமில்லாமல் கைகளை வீசிக்கொண்டு ரயில் ரோட்டின் வழியே நானும் ,என்னுடன் இன்னும்
சிலரும் என்னுடன் உடன் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். சொன்னால் ஆச்சரியமாக
இருக்கும் !அவ்வளவு சரியான நேரத்திற்கு
நாங்கள் செல்வதைப்[பார்த்து ஊரில் உள்ளவர்கள் “இந்த பசங்களை பாருங்கள் !பசி
தாங்காம எவ்வளவு சீக்கிரம் வந்துட்டானுக !பாவம் ! என பரிதாப படுவதுண்டு! ஒரு சிலர்
“அவ்வளு சரியான நேரத்துக்கு இவனுவ வர்த
பார்த்தா.இவனுவோ பள்ளிக்கூடம் போகாமல் எங்கேயோ மதகங்கட்டை அடியியே
உட்கார்ந்துட்டு வரானுவ” என் சொன்னார்கள் !
எனினும் எந்த சந்தேகம் வராமல் மிகவும் சாதுர்யமாக ஏற்கனவே நடித்து பழகிகொண்டிருந்ததால்,இவர்களிடம்
நடிப்பதில் சிரமமில்லாமல் இருந்தன.ஆனால் அம்மாவின் நினைப்பு வேறுவிதமாக
இருந்தது.அவளுக்கு கூலி வேலைக்கு போவதுதான் தெரியும். தன்
"பிள்ளை
என்னப்படிக்கிறான்.எத்தனாவது படிக்கிறான்.அவன் பாசானானா,இல்ல பெயில் ஆனானா !’
என்பது குறித்தெல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியாது. மகன் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும்
!படிக்கவேண்டும் !கலெக்டர் ஆகவேண்டும் !வாத்தியார் ஆகவேண்டும்! கை நிறைய
சம்பாதிக்கவேண்டும் ! என்பது குறித்தெல்லாம் கவலையில்லை!அவளுக்கு அவள் பிழைப்புதான்
பெரிதாக இருந்தது! தலை விதியை நினைத்து இரண்டு ரூபாய்க்கும் ,மூன்று ரூபாய்க்கும்
பொழுதெல்லாம் களை வெட்டிக்கொண்டிருந்தாள்.வயலுக்கு தழைக்கட்டு சுமந்து
கொண்டிருந்தாள்.
ஆனால்... அவளுக்கு பெரிதான கவலைகள் நிறைய இருந்தன.தனக்கு முன்பு
பிறந்த தன மூத்த குழந்தை இறந்துபோக,இரண்டாவதாக
ஒரு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததில் ஒரு நம்பிக்கை.அது பள்ளிக்கூடம் போகிறது
என்ற ஒரு சந்தோசம். .மற்றபடி கல்வியைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதவளாக இருந்தாள். அவளுடைய உலகம் அவளுக்கானது.
அவளுடைய
உலகத்தில் அவளுடைய மகன்.அவளைப்பெற்றவளின்
உறவு.அத்தோடு எல்லை முடிந்துவிடுகிறது .அவளுடைய உலகத்தில நாட்டைப்பற்றியோ,. தலைவர்களைப்பற்றியோ
,
உலகம் எதனால் இயங்குகிறது என்பது
பற்றி எல்லாம் அவசியம் இல்லாத
ஒன்றாய் இருந்தது.
பொழுதெல்லாம் அவளும் ,அவளுடைய வயதான அம்மாவும் கூலிவேலை
செய்வார்கள்.பொழுது இறங்கினால் கொஞ்சம்
விறகு குச்சி,கொஞ்சம் இரண்டு ,ஆட்டுக்கு தழை கட்டு,மடியில் புளிச்சைக்கீரை,கொஞ்சம் பைத்தங்காய் இவற்றோடு வீடு திரும்புவார்கள். கொல்லையில்
இருந்து வீடு திரும்புவதற்குள் சுத்தமாக இருட்டிவிடும் .அதன்பின்னர்தான்,கம்பு
இடித்து போட்டு,சோறாக்கி ,கீரைகடைஞ்சு ,பயத்தங்காய் கொழம்பு வைத்து சாப்பிட்டு
விட்டு தூங்குவதற்கு மணி பத்தாகும்.
எவ்வளவு நாளைக்கு வெறும் கம்ப கம்பஞ்சோறையே
சாப்பிடுவது ? என சலித்துகொள்ளும் எனக்காக
அண்டை வீட்டில் கால்படி அரிசி வாங்கி வந்து சோறு ஆக்கி எனக்குமட்டும் அவள்
கொடுப்பாள்.ஆனால் அவளும் ,கிழவியும்
கம்பஞ்சோறு சாப்பிடுவார்கள். ஏலே தம்பி ! என அழைப்பாள்.என்ன ஏது என்று
கிழவியிடம் கேட்டால், இன்னிக்கு பள்ளிக்கூடம் போயிட்டுவா! பொழுதோடு சினிமாக்கு
போகாலாம் !’ என்பாள். அவ்வளவுதான்!
இன்னைக்கு ஏற்கனவே ஒரு முடிவு பண்ணியாச்சு
! அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு கட்டுதான் ! சொன்னபடி
கடைசி
ஆறாவது பீரியடோடு டோக்கர் விட்டுட்டு,சிட்டாக நானும் மொந்தச்சி ஆயி மகன்
கொளஞ்சியும் படு வேகமாக காலில் செருப்பில்லாமல்,ரயில் ரோட்டின் கருங்கல் சல்லியில் வேகமாக நடையை கட்டுவோம்! என்னா வேகம்
!அப்படி ஒரு வேகம் ! நேரத்திற்கு வீட்டுக்கு சொத்த தட்டுல அள்ளிபோட்டு,டபக்கு
டபக்குன்னு அள்ளி முழுங்க தொண்டைக்குழியில் சோறு விக்கிக்கும் ! பாவம் எண்டா தம்பி
! இன்னும் நேரம் இருக்குல்ல !அப்படி என்னப்பா அவசரம் ! எல்லாம் சேர்ந்து போவோம்ல
!’ என சொல்லியவாறு எல்லோரும் அந்த தேர்திருவிழாவிற்கு போவது போல எல்லோரும் நேரத்திற்கு கூலிவேலைக்கு
போன சனங்களெல்லாம்,சொல்லிவச்ச மாதிரி குண்டும் குழியுமான அந்த சாலையில் நாங்கள் வருவதை எல்லோரும் எதிர்பார்த்தவாறு
ஒன்றன்பின் ஒன்றாக அனைவரும் இணைந்துகொள்வார்கள்.
எல்லோரும் அந்த சினிமாவை ஏற்கனவே
பார்த்தவர்கள் சொன்ன கதையைக்கொண்டு எத்தனை
,சண்டை? ,எத்தனை பாட்டு ? எத்தனை ரீல்கள் ? என்பதையெல்லாம் விலாவாரியாக
பேசிக்கொண்டே சினிமாக்கொட்டகையை நெருங்குவதற்குள்
,வாரீல் போட ஆரம்பிச்சுடுவானுங்க.ரொம்ப காலம் வரைக்கும்
நியுஸ் ரீல் என சொல்லத்தேரியாமல் மொத்தமாக வாரீல் என்றுதான் எல்லோரும்
சொல்றாங்க! படத்தை பார்க்காமல் விட்டாலும் விடுவாங்க !ஆனால் வாரீல் பாக்குறதை தவற
விடமாட்டாங்க! ஏன்னா காசு கொடுக்குரோம்ல! ஏன் சும்மா விடுவானேன் ? என
ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சினிமா பார்க்கும் பழக்கம் எங்களுக்கிருந்தது.
படம்
பார்த்து முடிந்தபின்பு முக்கால்
தூக்கத்தில் தட்டு ,தடுமாறி மூன்று மைல்
நடந்து சென்று வீடு சென்று சேர்வதற்குள் போதும் போதும் ! என்றாகிவிடும். விடிந்த மறுநாள்
பொழுதெல்லாம் சினிமாபற்றிய பேச்சாகவே
இருக்கும்.வாய்வலிக்க பேசி முடிப்பதற்குள் ,அடுத்த சினமா போஸ்டர் மணியார் வீட்டு
தட்டியில் ஒட்டப்பட்ட செய்தி காட்டுதீயைப்போல ஊரெல்லாம் பரவியப்பின்பு ,பழைய
சினிமாப்பற்றிய செய்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும்.கல்வி
அறிவற்ற கூலி வேலைச்செய்யும் அடித்தட்டு
உழைக்கும்
மக்களிடத்தில் சினிமா என்பது பொழுதுபோக்கு
மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் நன்கு வேரோடியிருந்தது.அதன் நன்மை
தீமைகளைப்பற்றி எதையும் அறியாதவர்களாக,அப்பாவித்தனமாக இருந்தார்கள்.துயரமிகு
அவர்களின் வாழ்க்கையில் அவர்களை மகிழ்விக்க சினிமாவைத்தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தது.
அதை உண்மையுமாய் நம்பியவர்கள் தங்களை
சினிமாவோடு அனைத்து தளங்களிலும் ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு எதார்த்த போக்கோடு தங்களின் வாழ்க்கையை கட்டமைத்து கொண்டார்கள்.
தொடரும் ......