அவளைபார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக
இருந்தது .ஒரு முறை உற்றுப்பார்த்தாலே சோறு தண்ணி சாப்பிடமுடியாத அளவுக்கு கடுமையா
துர்நாற்றம் வீசியது. ஆயி கூட “இவளைப்பார்த்தாலே சாப்பிடமுடியலையே” என
சலித்துக்கொண்டாள்.அனாத இவள என்ன கொன்னாபோடமுடியும்? நாம பாட்டுக்கு மூஞ்சிய
திருப்பிக்க வேண்டியதுதான் ! என அவளே தமக்குள் பரிதாப பட்டுக்கொண்டாள்.
காவேரியின் உதட்டைக்கடந்து முன் பற்களில் இரண்டு வெளியே நீண்டுக்கொண்டிருந்தது.பற்களின் மீது மஞ்சள் பாசி படர்ந்திருந்தன. இடுப்பில் ஒரு பழைய சேலை சுற்றப்படிருந்தது இடுப்புக்குமேலே அவளின் வற்றிய மார்பகத்தை சுற்றிலும் எந்த ஆடையும் அணியப்படவில்லை. தோலெல்லாம் சுருங்கி பாம்பு தோல் உரிவது போல அவளின் உடம்பெல்லாம் எண்ணெய் பசையின்றி வறண்டு காணப்பட்டன.மழையானாலும் வெயிலானாலும் உடம்பில் போர்த்திக்கொள்ள ஒரு பழைய துணி மூட்டையை தலைமாட்டில் வைத்திருந்தாள். யாராவது பரிதாப்பட்டு அவளின் வெற்றுடம்பில் துணியால் போர்த்திவிட்டாலும்,அதை அப்படியே தூர எரிந்து விடுவாள்.
மேலே
துணியால் போர்த்திக்கொள்வதும் அவளுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக
இருந்திருக்கவேண்டும்!அதனால்தானோ என்னவோ எப்போதும் போர்த்தாமல் அப்படியே
கிடப்பதையே பெரிதும் விரும்பினாள். தலையெல்லாம் முடி அடர்த்தியாக இருந்தன.ஆனால்
அவை அனைத்தும் முற்றாக நரைத்து
போயிருந்தன.நீண்டு வளர்ந்திருந்த வெள்ளைமுடி தலைக்கு கீழே முகத்தை மூடி
தொங்கிக்கொண்டிருந்தன. அவளைப்பார்ப்பதற்கு சினமா படங்களில் வரும் பேக்காட்சியை
பார்ப்பதுபோல மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருந்தன. பக்கத்து வீட்டு
பிள்ளைகளெல்லாம் காவேரியை “பேயி மாதிரி இருக்கு” என எல்லோரும்
சொல்லிக்கொண்டார்கள்.யாரும் கேட்பாரற்று ஒரு கிழிந்த துணியாய் அந்த முட்டு சந்தில் காவேரி படுத்துக்கிடந்தாள்!
ஒரு நெருக்கமற்ற வேண்டா வெறுப்பாய் தங்கிப்போன
விருந்தினனைப்போல கெங்காயிக்கு பக்கத்தில் ஒரு சுதேசி குண்டு கிண்ணி ஒன்று இருக்கும் .அல்லது அது
தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும்.அவ்வப்போது அவளே தள்ளிக்கொள்வதுண்டு.மாமன்
வீட்டிலிருந்தோ ,ஆயி வீட்டிலிருந்தோ அவரவர்களின் வசதிக்கேற்ப சோறு தண்ணியை கண்டு
வந்து கெங்காயியின் ஏனத்தில் ஊற்றுவார்கள்.அவளுள் பன்றிக்குட்டி சத்தத்துடன்
உறிஞ்சி குடிப்பதைப்போல, அதிக சத்தத்தோடு சப்புக்கட்டிக்கொண்டு சாப்பிடுவாள்.தனக்கு
சோறுபோட்டவர்கள் யாரென்று அவளுக்கு
தெரிவதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் அவளுக்கு கண் பார்வை முற்றாக போயிருந்தது. ஏனத்தில் சோற்றை ஊற்றும்போது அவர்கள் பேசும்
பேச்சை வைத்து ஒருசிலரின் பெயரைச்சொல்லி கூப்பிடுவாள்.சிலரின் வாடிக்கையான ஒலிகளை
வைத்தும்,அடையாளத்தை கண்டுபிடிப்பாள்.உதாரணமாக மெலாரால் தரையை கூட்டும் சத்தத்தை
கேட்டால் “அஞ்சலையா” என்பாள்.உரலில் யாராவது இடிக்கும்ஓசையை கேட்டால்
“சின்னப்பிள்ளை” என்பாள்.இவ்விதமான ஒரு அபாரமான ஆற்றல் அவளுக்குள் குடி
கொண்டிருந்தது. அவளை சுற்றி எழும் துர்வாடையும்
,அருவருப்பும்,துர்நாற்றமும் அங்கிருந்தவர்களுக்கு
ஒரு தவிர்க்க இயலாத வாசனையாக போய்விட்டது. நானும் அந்த வாடையை சகித்துகொண்டு வாழும்
சூழலுக்குள் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருந்தேன்.
நான் ஆரம்பத்தில் இந்த ஊருக்கு வந்த புதிதில்
ஆயியிடம் நிறையத்தடவை கேட்டிருக்கிறேன். “ஆயி,காவேரி ? என்ன ஊரு ? அவ ஏன் இங்கு முட்டு சந்தில் படுத்துக்கிடக்கிறா ? அவளுக்கு
ஒருத்தரும் இல்லையா ? என சராமாரியாக கேள்விக்கேட்டிருக்கிறேன்!
“அவ
கல்யாணம் ஆனவதான்.அவ புருஷன் அவள வயசிலே உட்டுட்டு ஓடி போயிட்டான் . இவளுக்கு
புள்ளைகுட்டி ஒண்ணுமில்ல.சாதிசனம் யாருமில்ல.இவ நமக்கு ஒன்னும் நெருங்கிய சொந்தம்
ஒன்னும் கிடையாது.ஆனால் இவ பொறந்தது சிலம்பூர்தான் “ என ஆயி என்னிடம் சொன்னாள்.
நாங்களும் இவள அனாதையின்னுட்டு இங்க கெடடின்னு சொல்லிட்டோம். அவளும் வயசு அழிஞ்சு,உடம்பு அழிஞ்சு என்னமோ தெரியல,சின்ன வயசிலே கண்ணு போயி சின்ன வயசிலேயே இப்ப பீயையும்,மூத்திரத்தையும் பிசைஞ்சிக்கிட்டுருக்கா,என்ன பண்றது எது பண்றது ,நாங்க எடுத்து போட்டாதான்,நமக்கு இருக்கோ இல்லையோ !”
அவளுக்கு நாம எதாவது
போட்டே தீரனும்ங்கிறது நமக்கு கட்டாயமா போச்சு “என சலித்துக்கொண்டாள் ஆயி. எனினும்
அவள்மீதுள்ள இனம்புரியாத பாசம் என்பது அவள் தன் ஊரை சார்ந்தவள் என்பதாலா அல்லது
அவளும் தன்னைப்போல ஒருபெண்தானே என்ற பச்சாதாபத்தின் மீதுகூட கெங்கையின்மீது
அவளுக்கு தனிப்பட்டபாசத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
தொடரும் ...
No comments:
Post a Comment