Friday, 18 January 2019

தீயின் வேர்கள்

தனிமையில் காற்றோடு பேச
தவிப்புகள் அலையாய் தோன்றும் !
கனியாத கனவுகளின் பாதி 
கண்ணோரம் வாசம் செய்யும் !
இனிமையில் கிளர்ச்சியுறும் எண்ணம்
இயற்கையின் இதயம் சென்று
பனியின் இதமாய் வருடும்
பாட்டில் தோன்றும் இன்பம் !

அலையின் காற்றில் ஊடே
அணிவகுத்து செல்லும்! கண்ணீர்
உலையில் வெந்து கரையும்
உணர்வின் வெம்மை குறையும் !
நிலையின்றி குலையும் நினைவில்
நெடுநேரம் பயணித்து இறுதியற்ற
தொலைவின் வெளியில் நின்று
தொடர்ந்து கண் இமைக்கும் !

மூங்கில் காட்டின் வெளியே
மோனப்பாடல் இசைக்கும் ! ஞானப்
பாங்கின் வழியே கடந்து
பாதை சென்று சமைக்கும்
ஓங்கி வளர்ந்து நிற்கும்
உற்று பாரத்தால் நகைக்கும்!
தாங்கி நிற்கும் உயிரின்வெளியே
தகிப்பு புகையாய் கடந்துசெல்லும் !

அனலின் தனிமைக் காட்டில்
ஆயிரம் கதைகள் சொல்லும்! மெய்
புனலின் வழியே நீந்தி கடக்கும்
பொட்டலின் வாசம்பிடிக்கும்! கொடுங்
கணத்தின் வேரைத்தேடி வெளியில்
காலம் நடக்கும் ! காமுறும்
மனத்தின் உடலெங்கும் ஆசை
மணத்தின் நெடி வீசும் !

ஒன்றல்ல இரண்டென்று ஒருகணம்
ஓங்கி உரைக்கும் காட்சி
ஒன்றல்ல நீளும் படர்வெளியில்
ஒருமையின் விரல்ஒன்று தனித்து நிற்கும் !
அன்றிலின் சிறகொன்றில் முகம்புதைக்க
ஆவலுறும் ஆசைவெளி எங்கும்
தென்றல் வந்து சேதிசொல்ல
தீயாய் மேனி சிவக்கும் !


Image result for roots of fire



கண்ணீர் நூல்

ஒரு
நூலின் ஒரு  முனையில் நீ....
மறு முனையில் நான் ......



இருவரும்
இருவேறு திசைகளில் ...


தினசரி
காலை மாலை
நீ வரும் திசை தேடி
என் கண்கள் தவிக்கின்றன !
ஆனால்
திசைகளின் முகத்தில்
நீ -
திரையிட்டிருக்கிறாய் !



அன்றாடம்
நடை பழகிய
வாடிக்கையான பாதைகளில்
உன் கால் தடங்கள்
ஏதாவது மிச்சமிருக்கிறதா?
என -
என் தேடுதல்கள் !



காற்றின் வழியே
உன் உதடுகளின் அசைவுகளில்
என் பெயரின்  உச்சரிப்பு
எங்காவது வருகிறதா என
கூர்மையடைகிறது
என் செவிகள்.



தினசரி பொழுதுகளில்
உன் பெயரை
எழுதி எழுதி
என் நெஞ்சம் நிறைவு கொள்கிறது !



தினந்தோறும்
வழி பார்த்து
வழி பார்த்து
விழிகளுக்கும் வயோதிகம்.



பல்லவி பாதியில்.....
நீ
அனுபல்லவி எழுதினால்தான்
பாடல் அரங்கேறும் !



உன்னால் ஆக்கிரமிப்பு செய்யப்பட
என் தினசரி  நடவடிக்கைகள்
அனைத்திலும்
உன்  நினைவுகளின் வாடை!



உன் கனவுகளின்
எண்ணற்ற நுரைப்பூவில்
ஒவ்வொன்றிலும்
உன் முகங்கள்..!



இந்த கண்ணீர் தேசத்திலிருந்து
இந்த கைதியை
எப்போது விடுவிக்க போகிறாய் ?
உன் காதலுக்காக
என் காதலோடு நான்.


Image result for a hand catching flowers in modern painting