Thursday, 28 January 2021

ஒரே மகன் (சிறுகதை )


ன்னால் நம்பவே முடியவில்லை. இது ஒரு வேளை பொய் செய்தியாக இருக்குமோ” என்ற சந்தேகத்தில் மீண்டும் மீண்டும் நன்கு விசாரிக்குமாறு எனது மகனிடம் சொன்னேன். அவனும்  அங்கு இருந்த கூட்டத்தை நெருங்கி இது உன்மைதான என நன்கு விசாரித்தபின்பு இது உண்மைதான் என என மகன் என்னிடம் சொன்னான். என்னால் இதை தாங்கிக்கொள்ளமுடியாத  பேரதிர்ச்சியாக இருந்தது. வெளிநாட்டில் “வேலை பார்த்த  சுந்தரம்  செத்துட்டானாம்.”

 மதியம் ஒரு மணியளவில்  அப்போதுதான் கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு,கொஞ்சம் அசதியாக இருந்ததால் வீட்டு கொட்டகையில்  சிமிட்டி தரையில் அப்படியே படுத்துவிட்டேன். நான் படுத்து சிறுது நேரம்தான் கடந்திருக்கும், அரைமணி நேரம்கூட ஆகிருக்காது , திடீரென பக்கத்து வீராசாமி  வீட்டிலிருந்து பயங்கரமான  கூக்குரல் சத்தம் கிளம்பியது. பகல் தூக்கத்திலிருந்த என்னை  என் துணைவியார் திடுதிப்பென தட்டி எழுப்பினார்..எல்லோரும் அலறியடித்துகொண்டு வீராசாமி வீட்டுக்கு ஓடினோம். வீராசாமியின்  மனைவி  வசந்தா  தரையில்  கிடந்து புரண்டு கொண்டிருந்தாள்.

 என்னால் சரியாக ஊகிக்கமுடியவில்லை. வீராசாமியின் அப்பா  கண்ணுசாமி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். நாளுக்கு நாள் சுகவீனமாகி வரும் அவர் ஒரு வேளை செத்துவிட்டாரோ ! என்ற சந்தேகம் வேறு ஒரு பக்கம் எனக்குள் இருந்தது. ஆனால் நாங்கள் அனைவரும்  நினைத்தது பொய்யாக போய்விட்டது.

“அப்பா  சுந்தரம்  செத்துட்டானாம்!” என்றான் என் மகன். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என்னால் இந்த செய்தியை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

 வீராசாமிக்கு  சுந்தரம்  ஒரு மகன் தான்.  வயது இருபத்தி ஒன்று. பத்தாவது வரை படித்திருக்கிறான். ஒரு பெண் பிள்ளை அதற்கு பக்கத்தூரில்  கல்யாணம்  கட்டிக்கொடுத்து  இரண்டு  பெண் குழந்தைகள் உள்ளன. வீராசாமிக்கு அதிக நிலபுலன்கள் எதுமில்லை. ஆரம்பத்தில் இரண்டு ஏக்கருக்குள்தான்  இருந்திருக்கவேண்டும். ஏதும் வேலை வெட்டிக்கு போகாமல் உட்கார்ந்தே கடன் வாங்கி சாப்பிட்டே அதை முக்கால்வாசி விற்றுவிட்டான். இருப்பது கால் காணிதான் இருக்குமென்று நினைக்கிறேன். ஊரைச்சுற்றி நிறைய கடன் வாங்கியிருக்கிறான்.சிறிய  இடத்தில்  அரசாங்கம் கட்டிக்கொடுத்த இலவச வீடு ,அதை ஒட்டிய சிறு கூரை வீடு, வீட்டை ஒட்டி தாழ்வாரம் அமைத்து ஆடு வளர்க்கிறான். நான்கைந்து ஆடுகள் உள்ளன.

 வீ ராசாமிக்கு அடிக்கடி  உடல் நிலை சரியில்லாமல் போகிறது. கால்கள் இரண்டும் முட்டிக்கு கீழே  வீங்கி விடுகின்றன.  .விரலால் தொட்டால் அப்படியே அழுந்துகிறது. சிறு நீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டான். “என்னடா வீராசாமி இப்படி ஆயிட்டே!” என்றேன் .

“ஆமாண்ணே  என்ன பண்றதுண்ணு தெரியலே,ஏதாவது செய் அண்ணே !” என அழுதான்.

பின்பொருநாள்  அவனை  அரியலூருக்கு அழைத்துசென்று மருத்துவரிடம் காண்பித்தேன். எல்லா டெஸ்டுகளும் எடுக்கச்சொல்லி பரிசோதித்து பார்த்துவிட்டு, தைராய்டு பிரச்சினை இருபதாலும்,சிறு நீரகம் பழுதடைந்திருப்பதாலும்  தொடர்ந்து மாத்திரை சாப்பிடச்சொல்லிவிட்டார்.

அங்கேயே வீராசாமி என்னை பரிதாபமாக உற்றுப்பார்த்தான்.அவன் கண்களில் கண்ணீர் தளும்பின.எனக்கே பாவமாக இருந்தது. அவனை தேற்றி “ஒன்றுமில்லே வீராசாமி,இதெல்லாம் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும்.பயப்படாதே!’ என தேறுதல் சொல்லி அழைத்து வந்தேன்.

‘அண்ணே  எனக்கு பேருக்கு உறவென்று இருக்கிறதே தவிர,யாராலையும் எனக்கு எந்த புண்ணியமும் இல்ல,உன்னைத்தான் மலைபோல நம்பியிருக்கேன் அண்ணாச்சி ‘ என்றான் வீராசாமி.

அவன் என் வீட்டிற்கு எதிர்வீடுதான். நானும் அவனும் சின்னப்பிள்ளையில் இருந்தே  ஒன்றாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வளர்ந்து வந்திருக்கிறோம். அவன் அவனுடைய பெற்றோர்களுக்கு கடைசி பிள்ளை. மிக ஏழைக்குடும்பம்,அவனுடைய அப்பா  இருக்கிற சிறிய நிலத்தில் மிளகாய் ,கடலை என விவசாயம் செய்வார். கொல்லை விவசாயம் இல்லாத  காலங்களில் அரியலூர் மிளகாய் மண்டிக்கு சென்று மிளகாய் வாங்கி வந்து ,பெண்ணாடம்,திட்டக்குடி,தொழுதூர் ,போன்ற ஊர்களில் மிளகாய் சில்லறை வணிகம் செய்வார்.

 கோடை காலங்களில் பலாப்பழம் வாங்கி வந்து,அதை பூரி சுளையை எடுத்து கூடைகளில் வைத்து சைக்கிளில் கட்டிக் கொண்டு சென்று சில்லறை வியாபாரம் செய்வார்.அப்படி வியாபாரம் செய்துதான் தன்னுடைய பிள்ளைகளை காப்பாற்றினார்.அப்படி வியாபாரம் செய்தும் அவரால் பெருத்த வசதி வாய்ப்பை எட்ட முடியவில்லை. குடும்பம் வறுமையில்தான் நகர்ந்தது.

வீராசாமியின் அண்ணன் சற்று விபரமானவன். அவன் ஏதோ தனிப்பட்டமுறையில் கூலி வேலை ,அப்படி ,இப்படியென கொஞ்சம் காசு பார்க்க தொடங்கினான். அவனைபற்றி கவலைப்பட வேண்டிதில்லை.

அவனுடைய அக்கா செல்வி உள்ளூரிலேயே ஒருவரை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைக்குட்டிகள் என வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் வீராசாமி பாடுதான்,பெரும்பாடு ! வீராசாமியை நாங்கள் சின்ன வயதில் பானையன் என்றுதான் அழைப்போம். அவனைவிட அவன் வயிறுதான் பெரிதாக இருக்கும். வீட்டில் அவனுக்குபோடும் சோறு அவனுக்கு பத்தாமல் எப்போதும் பசியுடனே இருப்பான். பக்கத்து வீட்டில் எல்லோரும் சாப்பிடும் நேரத்திற்கு வீராசாமி சென்று அமர்ந்து கொள்வான். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே கையை நீட்டி ‘சோறு’ என கேட்பான்.வயிறு பசித்தால்  அவன் கூச்ச நாச்சமெல்லாம் பார்ப்பதில்லை .அவனுக்கு அவன் வயிறு நிறைய வேண்டும் அவ்வளவுதான்.அவன் எங்கள் தெருவிற்கு  செல்லப்பிள்ளையவன்.

 பள்ளிக்கூடம் செல்லும் வழக்கமெல்லாம் அவனுக்கு கிடையாது.எப்போதாவது ஆடி அமாவாசைக்கு பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்ப்பான். மற்ற நேரங்களில் சாலை புழுதியில்தான் உருண்டு ,புரண்டு விளையாடிக்கொண்டிருப்பான்.  போதாக்குறைக்கு அவனுடைய நடியப்பா சரையர்  மகன் கட்டாரு. அவனும் இவனும் எப்போதும் தெருவிலுள்ள புழுதியில்தான் விளையாடிக்கொடிருப்பார்கள்.

வீராசாமியின் அப்பா  கண்ணு சாமி  எல்லாவற்றுக்கும் கடைசியானவர். சாரையர்  நடியவர் .பெரியவர்  குப்புசாமி எல்லாவற்றுக்கும் மூத்தவர். பெரியவருக்கு  நான்கு   பெண் குழைந்தைகள்.ஆண் குழந்தையில்லை. சாவட்டையருக்கு ஆண் ஒன்று அவன்தான் கட்டாரு  ,பெண் பவுனாம்பு  அதை எல்லோரும்  முட்டைக்கண்ணி என்றுதான் அழைப்பார்கள்.  பவுனாம்பு  கட்டாருக்கு  தங்கச்சி.

 கட்டாருக்கு   பன்னிரண்டு வயது வரைக்கும் அவன் கால் சட்டை போட்டதில்லை.சிறிய கோவணம் கட்டியிருந்தான். தலையில் கிராப்பு வெட்டிக்கொள்ளாமல்,சிண்டு வைத்திருந்தான்.அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்திருந்தார்கள்.ஆனால்  அவன் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. தத்தனூர் வாத்தியார் மானவர்களைத்தேடி வீடு வீடாக  வரும்போது, கட்டாரும் , வீராசாமியும் மச்சுவீட்டு கொல்லைவழியே   வயக்காட்டுக்கு சிட்டாக பறந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள் . சில வேளைகளில் அப்பாதுரை வாத்தியாரிடம் வசமாக  மாட்டிக்கொண்டால்,வாத்தியாரோடு  பின்னால் வரும்  பசங்கள் அனைவரும் மாட்டிக்கொள்ளும் மாணவர்களை   காலையும் ,தலையையும் பிடித்து தூக்கிக்கொண்டு   பள்ளிக்கு போவார்கள். பள்ளிக்கு கொண்டு சென்றதும்,அங்கு அவர்களுக்கு ராச மரியாதை செய்யப்படும்.கால் சட்டையெல்லாம் மூத்திரத்தில்  ஈரமாகும்.

அப்பாதுரை வாத்தியார் அதன் பின்னர்  மறு அவதாரம் எடுப்பார்.ருத்திர தாண்டவம்  ஆடுவார். அடிபட்ட  மாணவர்களை வரிசையாக அழைத்து நிற்கவைத்து, ஒரு பையனை செட்டியார் கடைக்கு சென்று மிட்டாய் வாங்கிவரச்சொல்லி எல்லோருக்கும்  ஒவ்வொன்றாக கொடுத்து அறிவுரைச்சொல்வார்.

“ஏலே தம்பிகளா இன்னைக்கு பள்ளிக்கூடத்தில மத்தியானம் நெல்லி சோறு,எல்லோரும் மறக்காம வாங்கி சாப்பிடுங்க!”

நாளைக்கு மத்தியானம் கோதுமை உப்புமா ,தொட்டுக்க சியாசம்! கண்டிப்பா எல்லோரும் பள்ளிக்கூடம் வந்துடுங்க!” என மாணவர்களை  நாளைக்கு பள்ளிக்குவர ஞாபகபடுத்துவார். ஆனால் அதுக்கெல்லாம் மாணவர்கள் எல்லோரும் அதங்குவதில்லை.

 வீராசாமியும் ,கட்டாரும்   அதன் பின்னர் பள்ளிகூடம் பக்கமெல்லாம் போனது கிடையாது. அவங்க   ரெண்டுபேரும்  ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு மேய்பதற்கு காட்டுக்கு  சென்றுவிடுவார்கள.

 கட்டாரு   ஏரியில் கப்புபோட்டு  மீன் பிடிப்பதில் கெட்டிக்காரன..ஏரியின் உள்பகுதியில் ஓரத்தில்  காலை விரித்து உட்கார்ந்துக்கொண்டு  மெல்ல மெல்ல வெளியே நகர்ந்து வரும்போது கவுட்டியில் ஒன்றிரண்டு மீன் குஞ்சுகள் கிடைக்கும். அப்படி ஒரு நாள் நானும் ,கட்டாரும்  ,வீராசாமியும் ஒன்றாக கப்பு போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது,, எனது தந்தையர் வந்தபோது வசமாக மாட்டிக்கொண்டோம். அருகில் இருந்த  எருக்கஞ் செடியை பிடுங்கிக்கொண்டு  எங்கள் மூவரையும் சக்கையாக பின்னிவிட்டார். “ஏரியில் போய் மீன் பிடிப்பீர்களா ?என்ன கேட்டு கேட்டு அடித்தார்..நாங்கள் அதன்பின்னர் ஏரியில் மீன் பிடிப்பதையும் நிறுத்தவில்லை.ஆனால் யாருக்கு தெரியாமல் மீன் பிடித்து வந்தோம்.

 எங்கள் வீட்டை ஒட்டி சுவர் ஓரமாக ஒரு நாவல்  மரம் இருந்தது.அந்த காலத்தில் சுற்று வட்டாரத்தில் எங்கள் நாவல்  மரத்தை .விட்டால் வேறு வழியில்லை ! மிகவும் கிட்டத்தில்  வேறு எந்த  நாவல் மரமும் கிடையாது என்பதால், நாவல் பழம் பழுக்கும் காலங்களில்  எங்க வீட்டை சுற்றிலும் பிள்ளைகளின் கூட்டம் அதிகமாக  இருக்கும்.

 வீராசாமியும் ,கட்டாரும்  எனக்கு நெருக்கமான நண்பர்கள், ஆகையால் மரத்திலேறி நாவல் பறிப்பதில் எந்த தடையும் இல்லை.பள்ளிக்கூடத்தை பற்றிய நினைப்பே இல்லாமல் ,கட்டாரோடும் ,வீராசாமியோடும் பொழுதெல்லாம் சுற்றிவிட்டு,பொழுது சாய்ந்தவுடன் பள்ளிக்கூடம் போகாமல் இருந்ததற்காக அப்பனிடம் அடிவாங்கிய  காலங்கள் இப்போதும் நெஞ்சுக்குள் பசுமையாய் இருக்கிறது.

 இடையில் பத்து ஆண்டுகள் அம்மாயி வீட்டில் கடந்து போயின. ஒருநாள்   ஊருக்கு திரும்பியபோது, இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஊரும் ,சனங்களும்  எவ்வளவோ மாறி போயிருந்தார்கள்.  எனது ஊரின் வடக்குப்பட்டி முற்றிலும் மாறிப்போயிருந்தது.

 நான் இந்த ஊரை விட்டு போகும் பொது தொந்தியும் தொப்பையுமாக  இருந்த வீராசாமி இப்போது வெகுவாக மாறியிருந்தான். அவனின் வயிறு முக்கால்வாசி குறைந்திருந்தது. முன்பு குள்ளமாக இருந்தவன் இப்போது சற்று வளர்ந்திருந்தான். முகத்தில் பூனை மயிரைப்போல கொஞ்சம் மீசை அரும்பியிருந்தது. வழக்கபோல அதண்டு சிரிக்கும் பழக்கம் அவனைவிட்டு போகவில்லை. பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா இல்லையா என அவன் பார்ப்பதில்லை. எதை வேண்டுமானும்  பேசிவிடுவான். அன்று பார்த்த அச்சு அசலான  வீராசாமி தான் இவன். இப்போதும் வழியே செல்வோரிடம் சின்னாயி  ,பெரியாயி  “கொஞ்சம் பொயலை கொடு !” என கெஞ்சுகிறான்.  

அவர்கள் வாழ்வில் பெருத்த  மாற்றமில்லை . அவனது அப்பா சின்ன சின்ன வியாபாரம் செய்கிறார். அவனுடைய அண்ணன் எங்காவது கூலி வேலைக்கு போகிறான். அவனுடைய அம்மாவும் கூலி வேலைக்குப்போகிறார்கள். அதே கூரைவீட்டில்தான் வாழ்கிறார்கள். எந்த வளர்ச்சியும் ,முன்னேற்றமும் இல்லை.

 வீராசாமி ஒரு அசடு பேர்வழி.  யாரும் இவனிடம் பேச்சு கொடுக்காமலேயே  இவனே பொய் பேசி வம்பில் மாட்டிக்கொள்வான்.அவர்கள் இவனை கண்டபடி திட்டினாலோ, அப்புறம் இவனே தன் தலையில் கொட்டிக்கொள்வான் . அவனது குடும்பத்தில் அவன் ஒரு முக்கியத்துவம் இல்லாத ஒருவனாக இருந்து வந்தான்  வழக்கம்போல தினந்தோறும்  பெட்டுக்காட்டுக்கு  ஆடுகளை .ஓட்டிச்சென்று மேய்த்து வந்தான்.

 அவனது அண்ணனுக்கு அவனுடைய மாமன் மகளை கல்யாணம்  செய்து வைத்துவிட்டார்கள், அவன் அண்ணன்  வீட்டின் மேற்கு தாழ்வாரத்தில் சின்னதாய் தென்னங்கீற்றால் அரை தடுத்துக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டான். இப்போது வீராசாமி ,அவனுடையஅப்பா ,அவனுடைய அம்மா மூவரும் ஒன்றாக சமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

 அவன் அண்ணனுக்கு  கல்யாணம் நடைபெற்று ஏழெட்டு ஆண்டுகள் கடந்தபின்னர் பக்கத்தூரிலே வீராசாமிக்கென்று ஒரு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். எனது வீட்டிற்கு நேரெதிரே கொஞ்சம் இடம்வாங்கி அவனுக்கென்று ஒரு கூரை வீடொன்றை கட்டி தனிக்குடித்தனம்  வைத்தனர். எப்போதும் போல வசதி வாய்ப்பில் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே  இருந்தான். ஆனால் அவனுடை மனைவி பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்தாள். அதற்கு ராசக்கிளி என்று பெயர் வைத்தனர் அடுத்த இரண்டு ஆண்டு இடை வேளையில் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்தாள்,அதற்கு சுந்தரம்  என்று பெயர் வைத்தனர். 

 வீராசாமி  எப்படியோ பெரிய குடும்பஸ்தன் ஆகிவிட்டான். ஆனால்  வறுமையான சூழலில்தான் வாழ்ந்து வந்தான். எப்படியோ கொடியாய் ,நிலவாய் அவனுடைய பிள்ளைகள் நாளுக்கு நாள்  வளர்ந்து  ஆளானார்கள். தனது  மகளை பக்கத்தூரில் தூரத்தில் எந்த உறவுமில்லாத  சனங்களில் கல்யாணம்  கட்டிக்கொடுத்தான் . அந்த பெண்ணுக்கு இப்போது  சின்ன சின்னதாய் இரண்டு பெண் குழந்தைகள். மருமகனுக்கு  சமீபத்தில்தான் உடம்பு சரியில்லாமல் போக,மருத்துவரிடம் அழைத்து சென்று பரி சோதனை செய்து பார்த்ததில் ,அவருடைய கழுத்தில் புற்று நோய் கட்டி இருந்ததை கண்டு பிடித்து சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று ஊர் திரும்பினார்கள்.அவர் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க மாட்டார் என மருத்துவர் சொல்லிவிட்டார் என சனங்களிடம் சொன்னான்  வீராசாமி .

 என்னை  நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டாங்க அண்ணாச்சி’ என்றான் வீராசாமி. என்  மருமவனுக்கு கல்யாணத்து  முன்பே ஏற்கனவே புற்று நோய் இருந்திருக்கு, அதை மறைச்சு  என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்து நாசம் பண்ணிட்டாங்க,இனிமேல் நான் என்ன செய்ய போறேன் அண்ணாச்சி?” என தலையில் கைகளை வைத்துக்கொண்டு புலம்பினான்.இவன் போயிட்டான்னா, அதை வச்சுகிட்டு யாரு மாரடிக்கிறது என கண்ணீர் மல்க சொல்லிக்கொண்டிருப்பான். இதையெல்லாம் அங்கு இங்கு என கடன் வாங்கி வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் வீராசாமி. வாங்கிய கடனுக்கான வட்டியும் அசலும் உயரவே கடன்காரன் வீராசாமியை நெருக்க ஆரம்பிக்கவே  கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான் வீராசாமி.

 இந்த சூழலில்தான் பத்தாவது  வரை பள்ளிக்கூடம் சென்று ஒழுங்காக படிக்காமல் பெயிலாகி வீட்டோடு இருந்த  சுந்தரத்தை  யாரோ ஆசை வார்த்தை காட்டினான் என்பதற்காக வெளி நாடு அனுப்ப முடிவு செய்து தனது சொந்தபந்தத்திடம் கடன் கேட்க ஆரம்பித்தான். ஆனால் வீராசாமி தன்னை வெளிநாட்டு ஆணுப்பும் முயற்சியை  சுந்தரம் விரும்ப வில்லை.ஏனெனில்  சுந்தரம்  அனேகமாக சுதந்திர மனிதனாக  மாறியிருந்தான். வடக்குத்தெரு பசங்களோடு சேர்ந்து கொண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிருந்தான். கண்ட  இடங்களில் சுற்றுதல்,நேரா நேரத்திற்கு வீட்டுக்கு வராமல்,ஊருக்கு ஊர் சினிமா பார்க்க செல்லுதல் , கண்ட கண்ட இடங்களில் தூங்குதல்  என தறிக்கெட்டு போக ஆரம்பித்திருந்தான். இதையெல்லாம்  புரிந்துகொள்ள இயலாத வீராசாமி வெளிநாட்டு கலர்  கனவுகளில்  மிதக்க ஆரம்பித்தான்.

 ஒரு நாள்  சுந்தரத்தை  அழைத்தேன் ஏண்டா சுந்தரம்  உனக்கு வெளிநாட்டு செல்ல விருப்பமா ?” என கேட்டேன்.இல்ல பெரியப்பா’ என் அப்பன் என்னை டார்ச்சர் பண்றான்,எனக்கு வெளிநாட்டு போக அறவே விருப்பமில்லை பெரியப்பா என்றான். அப்போதுதான் இவனுக்கு வெளிநாட்டு போக விருப்பமில்லை என்பதும் ,இவனுடைய தகப்பன்தான் இவனை கட்டாயப்ப்படுத்துகிறான் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனாலும்  என்ன செய்வது? இதை வீராசாமியிடம் சொல்லி புரிய வைக்கும் அளவுக்கு யாருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது . வெளிநாட்டுக்கு போய் நிறைய  சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தீயாய் அவனுக்குள் கனன்று கொண்டிருந்ததன . எவன் எதை சொன்னாலும் அதை கேட்டுக்கொள்ளும் சகஜமான மன நிலையில் அவன் இல்லை.அப்படி எதையாவது யாராவது சொன்னால் வீராசாமிக்கு அவன் எதிரியாகத்தெரிந்தான்.

 ஒரு நாள் சுந்தரம்  “பெரியப்பா நான் போயிட்டு வரட்டுமா?” என்றான் .

எதற்கடா  சுந்தரம்  என்றேன். வெளிநாட்டுக்குத்தான் என்றான்.”

என்னடா அதற்குள்ளாகவா ?”

“ஆமாம் பெரியப்பா !”

“எந்தநாட்டு ?

”மலேசியா !”

அது திருட்டு பயலுவோ நாடப்பா !” எப்படி அங்க போக சம்மதிச்ச ?” நான் என்னப்பா பண்றது.என் அப்பன்காரன் சொல்றதுதான் என்றான் சுந்தரம் !”  அவன் வயதுக்கேற்ப  அடிக்கடி தலைமுடியை சீர்  செய்துக்கொண்டிருப்பான். வித விதமாக ஹேர் ஸ்டைல் மாறிக்கொண்டேயிருக்கும்.” அடிக்கடி காணாமல் போயி விடுவான்.கொஞ்ச நேரத்திற்குப்பின்னால்  நண்பர்களுடன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருப்பான் .

ஏதாவது வேலை இருக்கும். கடைக்கு போயிட்டு வா சுந்தரம்  என அழைப்பதுண்டு.

போயிட்டு வரேன் என பெரும்பாலான நேரங்களில் பதில் சொல்வான். சிலவேளைகளில் போறேன் ! என சொல்லிவிட்டு தலைமறைவாகி விடுவான். அப்புறம் என்னை  பார்க்க கூச்சப்பட்டுக்கொண்டு  இரண்டொரு நாட்களுக்கு அவன் தலைமறைவாகி  விடுவான். இரண்டு நாட்களுக்குள் அந்த சம்பவத்தை முற்றாக மறந்து போயிருக்கும்.

 இயல்பாக தோட்டத்தில் எனது தீவிரமாக உரையாடிக்கொண்டிருப்பான். என்னடா பேசிக்கிடிருக்கீங்க என்றால் ஒன்றுமில்லை பெயரியப்பா என்பான்.

தனது ஆட்டுப்பட்டியில் ஆடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொன்டாலே கெட்ட வார்த்தைகளால் பேசும் வீராசாமியின் மகன்  சுந்தரம்  ஒருவார்த்தைக்கூட  கெட்ட வார்த்தைகளால் பேசியதை ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை. ரசுந்தரத்தின்  இந்த அரிய குணத்தைப்பற்றி பலரும்  பாராட்ட நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவனை சரியாக நெறிப்படுத்தி படிக்க வைத்திருந்தால் நன்கு படித்திருப்பான். கல்வி அறிவற்ற அவனது பெற்றோரால் அவனுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியவில்லை .என்னைப்போன்றவர்கள்  அருகிலிருந்தும் சுந்தரத்தின்   கல்வியின் மீது கரிசனம் கட்டாமல் போனது மிகவும் வருந்தத்தக்கதுதான்.

 நல்லபடியா வெளிநாட்டுக்கு  போயிட்டு வா !” நிறைய சம்பாதிச்சுக்கிட்டு வா ! எதாவது வம்பு தும்புக்கு போகாதே! எச்சர்க்கையாய் இரு ! உன் அப்பன் கடன்காரனாய் இருக்கிறான். நீ சம்பாதிச்சாத்தான் கடன் அடையும் !என சொன்னேன் .

‘சரிப்பா !’ அப்படியே  செய்கிறேன் என விடைபெற்றான்.

அதன் பின்னர் அவனை குறித்த ஞாபகம் என்னிடம் இல்லாமல் போனது.

ஒரு ஆண்டுக்குப்பின்னர் ஒருநாள் தொலைபேசியில் தொடர்புகொண்டான்! என்ன பெரியப்பா நல்லாயிருக்கியா ?”  நான்  சுந்தரம்  பேசுறேன்!!”

நல்ல இருக்கிறேன்

நீ நல்லா இருக்கியா ?”

நல்லா இருக்கேன்!”

அண்ணன்கள் நல்லா இருக்கா ?”

நல்ல இருக்காங்க !’

நீ நல்ல படியா இரு சுந்தரம்  !”

சரி பெரியப்பா !”

அதன் பின்னர் ஒரு வருடம் கடந்துவிட்டது! அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 சில நாட்களுக்கு முன்பு என்னடா வீராசாமி !’ மகன் கத்தை கத்தையா வெளி நாட்டிலிருந்து சம்பாதிச்சு அனுப்புறான் .நீ எண்ணி எண்ணி போட்டியில அடுக்கி வைக்கிற ,எனக்கு கொஞ்சம் கொடுத்து உதவக்கூடாதா ?’ என்றேன்.

 இம்கும்’ என முக்கினான்

என்னடா முக்குற ?

என் கதைய ஏண்ண கேட்கிற .வாங்குன கடன இன்னும் அடைக்கில, அவன் பணமே அனுப்புறதே இல்லண்ணே!” என்றான்.

வீராசாமி தன் மகனைப்பற்றி என்னிடம் சொல்லி நான்கைந்து  நாட்கள் ஆகவில்லை. இந்த சூழ்நிலையில்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில்

“சுந்தரம்  மலேசியாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்!” என்ற  அந்த செய்தி பேரிடியாக எங்களை வந்து தாக்கியது.

சிறிது நேரத்தில் வடக்குத் தெருவே  எங்கு பார்த்தாலும்  பயங்கரமான கூட்டமாக இருந்தது.

எங்கும் அழுகையின்  குரல்கள். நெஞ்சை நிலையக்குலைய வைத்தன. என் உடலெல்லாம் வேர்த்துக்கொட்டின. மனதை அடக்க முயன்றும் என்னையறியாமல் கண்களில்  கண்ணீர்  வழிந்தோடின.  விளிம்பு நிலை மனிதர்களின் அழுகையின் ஒலி விண்ணை பிளந்தன.

 ஆங்காங்கே கும்பல் கும்பலாக  சில இளைஞர்கள் வெளிநாட்டில் தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்து  சொல்லிக்கொண்டிருந்தனர்.

 உடனே சுந்தரத்தின் பாடியை  எடுத்து வர முடியாதாம். போஸ்டு மார்ட்டம் பண்ணித்தான் அனுப்புவாங்களாம். அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்! என ஒரு சிலர் நிலைமையை சனங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

 வீராசாமியின் அழுகை என்னை கறைந்து போக செய்தது.

“நான் அநாதை ஆயிட்டேன் ! என அவன் சொன்னபோது ,அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என தெரியாமல் நானும் அவனுடன் சேர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்.

 நான்கு நாட்களுக்குப்பின்னர்  சுந்தரத்தின்  உடல் விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் சென்று நானும் அவனது உறவினர்களும் பெற்று வந்து , இளைஞர்களின் ,பெற்றோர்களின் ஊரே விட்ட கண்ணீர் கடலைக்கடந்து இறுதி சடங்கு நடைபெற்றன.அதை தொடர்ந்து  எதிர்வீட்டில் எப்போதும் கன்றினை பிரிந்த  தாய்பசு  கதறுவதைப்போல  வீராசாமியும் ,வசந்தாவும்  கதறுவது  என்னை வாட்டி எடுக்கின்றன.புத்திர சோகம் எவ்வளவு கொடுமையானது என்பதை  வீராசாமியின் மூலமாக  உணர்கிறேன்.     

 இன்று பதினாறாம் நாள், கறிக்குழம்போடு எல்லாருக்கும் சோறுபோட்டு நிகழ்ச்சி  கரும காரியமும் நல்லபடியாக   நடந்து முடிந்து விட்டன. வந்த உறவினர்கள் ஒவ்வொருவராக  தங்கள் ஊருக்கு திரும்பி விட்டனர்.வந்தவரை லாபம்தானே வந்தமொய்யை வேண்டாம் என்று சொல்லாதே வாங்கிக்கோ என  எல்லோரும்  வற்புறுத்தியும் வீராசாமி மொய் பணம் வாங்க மறுத்து விட்டான். “என் மகனே போய்ட்டான் ,நான் மொய் பணம் வாங்கி என்னப்பண்ண போறேன்?" என கவலையோடு கூறினான் வீராசாமி .

 எல்லோரும் ஒவ்வொருவராக ஊருக்கு சென்றபின்னர். வீடு முழுதும் வெறிச்சோடிக்கிடந்தது வீட்டின் வாசலில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தான் வீராசாமி. அவனுடைய மனதில் இப்போதைய பிரச்சின எல்லாம் சுந்தரம்   வெளிநாட்டு செல்ல வாங்கிய கடனை எப்படி அடைப்பது  என்பதாகவே இருந்தது !

                          

No comments:

Post a Comment