Wednesday, 27 January 2021

புளி மொளகா டைலரு (சிறு கதை )

 

ள்ளியின் காம்பவுண்டு சுவருக்குள் அந்த பெரிய  நாவல் மரத்தின் அடி பாகம் மண்ணில் புதைந்திருந்தாலும்,அதன் கிளைகளும் தோகைகளும் காம்பவுண்டு சுவருக்கு வெளியே  பரந்து விரிந்து  வளைந்து நெளிந்து சாலையின்  வழியே வருவோருக்கும் போவருக்கும் நிழல் பரப்பி  ஆதரவாய் இருந்தது. அதன் அடியில் எப்போதும் பக்கத்து ஊரை சார்ந்த பெண்மணிகள்  ஐந்தாரு பேர்கள் நிரந்தரமாக  காய்கறி .கடை வைத்திருந்தார்கள்.அவர்களை கடந்து வேறு யாரும் அவர்களின் இடத்தை கைப்பற்ற முடியாத அளவுக்கு உள்ளூர் செல்வாக்குமிக்க பெண்மணிகளாக  இருந்தார்கள். நிழல் பாங்கான இடங்கள் அனைத்தும் அவர்கள் வசம் இருந்தன. ஓர சாரத்தில் வருவோர் போவோர்கள் நின்றுகொண்டிருப்பார்கள் .

 சனிக்கிழமை சந்தை அன்று சற்று அதிகமாக கூட்டம்  இருக்கும்  வேளைகளில்  எங்காவது ஓர சாரத்தில் தற்காலிகமாக செருப்பு தைக்கும் தொழிலாளி,, அல்லது  யாராவது கருவாடு  யாவாரம் என  மாறி மாறி அமர்ந்து வியாம்பாரம் செய்து வந்தார்கள். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வருகிறேன்.தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன்.இன்னும் இங்கு எத்தனை வகுப்புகள் உள்ளனவோ அனைத்தையும் கடந்துதான் நான் வெளியே செல்லவேண்டும் என்பது என்  தலைவிதி,  அதனால் இந்த பள்ளிக்கூடத்தோடும்,அதனை ஒட்டிய மரங்களோடும் ரொம்ப சிநேகிதம். பள்ளியின் மீதும்,படிப்பின்மீதும்  ஏனோ சின்ன வயதிலிருந்தே நாட்டம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எல்லா அப்பா அம்மாவை போலவே நானும் பள்ளிக்கூடம்   சென்றே தீர வேண்டிய நெருக்கடி இருந்தது.

 ஆனாலும் என்னவோ படிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும், பள்ளியில் ஏராளமான நண்பர்கள் கிடைத்து விடுகிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நம்மை கவர்ந்து விடுகிறார்கள். அதில் லட்சுமணன்  மிகவும் வித்தியாசமானவன். எப்போதும் என்னைச்சுற்றியே இயங்கிக்கொண்டிருப்பான். “நீ சினிமா நடிக்க போனால் ரொம்ப நல்லா இருக்கும் மச்சான் !” அசல் பாக்கியராஜ் மாதிரியே இருக்கேடா !” என்பான்.

ஆனால் அவன் சொன்னது போலெல்லாம்  நான் பாக்கியராஜ் மாதிரி அழகாக  இருப்பதாக  எப்போதும் நான்  நினைத்தது  இல்லை. அப்படி அவன் என்னைப்பற்றி புகழ்ந்து பேசுகிறான் என்பதற்காக  எனக்குள் நான் கனவு காணவில்லை.ஆனால் என்மீதுள்ள  அளவற்ற அன்பினால்தான் அவன் அவ்வாறு பேசுகிறான் என்பது எனக்குத்தெரியும்.

 லட்சுமணன்   வஞ்சப்புகழ்ச்சி  செய்வதாக நினைக்கவில்லை.அவன் மீது நான் அளவுக்கடந்து  அன்பு வைத்திருந்தேன். பள்ளிக்கூட வகுப்பறையில் கூட எப்போதும் என் மீது சாய்ந்தபடியும், என்னுடைய உடம்பின் எங்கோ ஒரு பாகத்தில் உரசியபடிதான் இருப்பான். அது எப்போதும் எனக்குள் எந்த நெருடலையும்  ஏற்படுத்தியதில்லை.மாறாக அதை  ஒரு வகையில் என் மனம் மெல்ல மெல்ல  ஏற்றுக்கொள்ள பழகிவிட்டன என்றே சொல்லலாம்.

 அவன்  என்னுடன்  மூன்றாண்டுகள் வரை  பள்ளி வாழ்க்கையில் பயணித்தான்.சில மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்த போதெல்லாம் என்னுடன் இருந்தான். எங்கு போனாலும் என்கூடவே பயணிப்பான் லட்சுமணன். சிறுநீர் இடைவேளை ,மதிய உணவு வேளை என எப்போது பள்ளியை விட்டு கடைவீதிக்கு  சென்றாலும் அவனும் நானும்தான் செல்வோம். அப்படியே கேட்டை தாண்டி அப்படியே வெளியே போனால் , முதலில் பன்னீர் பெட்டிக்கடையில் கல்கோணா வாங்கிக்கொண்டு கொஞ்சம்நேரம் ராமையா டைலர்,அப்படியே கொஞ்ச நேரம்   சித்தேரி க்கரையில் மாட்டு ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து விட்டு, அப்படியே நகர்ந்து  சாலையோரம் உள்ள நாவல் மரத்தின் நிழலில் கொஞ்ச நேரம் நிற்பது தினசரி வழக்கமாகி போனது. அங்கு நிற்பதில் எங்களுக்கு ஒரு சவுகர்யம் இருந்தது. எங்களைப்போல மதிய உணவு எடுத்துவர வசதியில்லாத மானவர்களுக்கென்று ஏதாவது தின்பண்டங்கள் என்று ஏதாவது விற்கும்,அதிலும் ஒரு நாளைக்கு தேங்காய் புண்ணாக்கு விற்கும்,ஒரு நாளைக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வற்றல், நாவல் பழம் என யாராவது ஒருவர் எதையாவது விற்றுக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று தினசரி மதியம் உணவாகக்கிடைத்துவிடும். அப்படியே அதை வாங்கி மதிய உணவாக சாப்பிட்டுவிட்டு நக்கம்பாடியார் ஓட்டலில் தண்ணீர் குடித்துவிட்டு  நேராக மதியம் மெயின்காலில் போய் உட்கார்ந்துவிடுவோம்.    

 அன்றும் அவ்வாறுதான்  வழக்கம்போல நாவல் மரத்தடிக்கு நானும் லட்சுமணனும் சென்றோம். அங்கு ஏற்கானவே வரிசைகட்டி உள்ள காய்கறி கடையைத்தவிர,வழக்கம் போல எங்கள் கண்ணுக்கு புலப்படும் அந்த  தேங்காய் புண்ணாக்கு விற்பவன்,நாவல் பழம்,இலந்தை பழம் விற்பவன் என்று  எவனையும் காணவில்லை. எங்களுக்கு சற்று ஏமாற்றமாகி போனது. ஏனெனில்  ஐம்பது காசை வைத்து  அனைவரின் மதிய உணவும் முடிந்துவிடும். ஆனால்  இன்று பட்டினி கிடக்க வேண்டியதுதான் போலிருக்கிறது என நினைத்துக்கொடிண்ருக்கையில், ரகு ஒரு யோசனை சொன்னான் “ ரகு ஒரு அருமையான யோசனை, தக்காளிப்பழம் ஒரு கிலோ பத்து பைசாதான், ஒரு கிலோ தக்காளி பழம் வாங்கி எல்லோரும் சாப்பிடுவோமே!” என்றான். அந்த யோசனை எல்லோருக்கும் சரியென்று படவே, உடனடியாக ஒரு கிலோ தக்காளிப்பழம்  வாங்கி எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு எல்லோரும் சாப்பிடத்தொடங்கினர்.

 அப்போதுதான் எல்லோரும்  அந்த காட்சியை  கவனித்தார்கள். உச்சி வெயில் வேளையில் ஐம்பது மதிக்கத்தக்க வயதில் ஒரு நடுத்தர வயதுக்காரர் ஒரு சைக்கிளில் வந்து இறங்கினார்.அவரின் சைக்கிள் கேரியரின் பின்னால் ஒரு தையல் மிஷினை வைத்து கட்டியிருந்தான். அது மகவும் பழையதாக இருந்தது. அந்த மனிதர் அந்த தையல் மிஷினை சைக்கிளிலிருந்து கீழே இறக்கி வைத்தான். அதன் பின்னர் அந்த சைக்கிளின் ஹன்ட்பரில் மாட்டியிருந்த  பழைய பை ஒன்றை  கீழே எடுத்து வைத்துவிட்டு அந்த சைக்கிளை மேற்காலே காம்பவுண்ட் சுவர் ஓரமாக சாத்தி வைத்துவிட்டு,சிறிது நேரம் பேசாமல் நின்றான். வெயிலில் நீண்ட நேரம் அவன் பயணித்து இங்கு வந்திருக்க வேண்டும்.அவன் வியர்வையில் தொப்பையாக நனைந்திருந்தான். சற்று நீரம் அப்படியே நின்றவன்,நேராக  எதிர் புரத்திலிருந்த நக்கம்படியார் கடைக்குச்சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து,சற்று ஓய்வெடுக்கவேண்டி கீழே அமர்ந்தான்.

 எங்களுக்கு மாலைநேர வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் நாங்கள் பள்ளிக்குள் சென்றுவிட்டோம். மாலை முதல்  பீரியடு தமிழய்யா வையாபுரி, அவர் கோபக்காரர், கண்டிப்பு பேர்வழி,முகத்தில் கனிவை பார்க்கவே முடியாது. முகத்தில் எப்போதும் ஒரு விறைப்பு தன்மை இருந்துகொண்டே இருக்கும். இருப்பது போல் இருப்பார் ,திடீரென கோபம் கொள்வார். அது என்னவோ குறிப்பாக என்னைக்கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. அடிக்கடி எதையாவது கேட்டு அடித்துக்கொண்டேயிருப்பார். அவர் எதிர்பார்த்தபடி நானும் ஒழுங்காக படிப்பது இல்லை. எழுதுவதுமில்லை. இது  தமிழய்யாவிற்கு பெரிய பலவீனமாக போய்விடுகிறது. அதோடு மட்டுமின்றி  இன்று ‘குசேலபாக்கியானம்’ செய்யுள்வேறு  நடத்தப்போவதாக  புத்தகத்தை கொண்டுவரச்சொல்கிறார்.

 இனி விடமாட்டார் .செய்யுளை ராகமாக பாடுவார் ,எங்களையும் பாடச்சொல்வார். பின்னர் கேள்வி பதில் எழுதச்சொல்வார் .அதில் மார்க் குறைவென்றால் பின் புட்டத்தில் தன்னுடைய நகங்கள் கொண்ட விரலால் நன்கு கிள்ளுவார்,  குச்சியால் உள்ளங்கைகளில்  பலமாக அடிப்பார்.என்ன கத்து கத்தினாலும் விடமாட்டார். இவர் ஒரு வித்தாசமான பிறவி.  தமிழ் அய்யா என்றாலே மென்மையானவர்கள் என்று சொல்வார்கள் .ஆனால் வையாபுரி அய்யா என்பவர்  மிகவும் கரடு முரடானவர் என சீனியர் மாணவர்கள்கூட  சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர் யாரிடமும் கருணைக்காட்டமாட்டார். இங்கிலீசு வாத்தியாரா போக வேண்டியவர் இப்படி தமிழ் வாத்தியாரா வந்து தொலைஞ்சுட்டார் என எல்லோரும் சபித்துக்கொண்டார்கள். எனினும் அவர் பாடத்தில்  அவர் சரியாக இருந்தார். அவர் எனக்கு தமிழாசிரியராக  இருந்தபோதுதான் நான் தமிழ் பாடத்தில் ,முதல் மதிப்பெண் ,இரண்டாம் மதிப்பெண் பெற்று   தமிழால்  தரம் உயர்ந்திருக்கிறேன். எனினும் அவரைப்பார்த்தாலே எல்லோரு பயந்தே உட்கார்ந்திருப்பார்கள்.

 புத்தகத்தை  கையில் வாங்கியவர்,இன்று நடத்தவேண்டிய குசேலபாக்கியானம் எல்லோரும் திறந்து வச்சிக்கோங்கோ என்றவர்.,அந்த செய்யுளைப்பற்றியும், கண்ணனின் அருமை பெருமை,குசேலனின் அவல் இதைப்பற்றி எல்லாம் சிறு சொற்பொழிவு ஆற்றி ,பாட்டை ராகத்துடன் பாடத் துவங்கியபோது,அந்த பீரியடு முடிந்த விட்டதற்கான மணி ஒலித்ததும் ,கையில் கட்டிஇருந்த  கடிகாரத்தை பார்த்து உதட்டை பிதுக்கிய அய்யா வையாபுரி அந்த வகுப்பறையிலிருந்து மெல்ல வெளியேறத்தொடங்கினார். இவர் சீக்கிரம் கிளம்பாததால்  மாணவர்களுக்கு  பெரிய கடுப்பாக தெரிந்தது . அவர் மெல்ல அசைந்து வகுப்பறையை விட்டு போனதுதான் தாமதம் ,அங்கிருந்து நானும் ,லட்சுமணனும் ,மெயின்காலுக்கு தெற்காலே உள்ள கிழக்கு செல்லும் மூத்திர சந்து வழியே வெளியேறினால் கிழக்காலே  வழியே சென்று மெயின் ரோட்டுக்கு வந்து சேர்ந்தோம். கேட் முகப்பிலிருந்த  நடராசன் சலூன் கடையில் அப்படியே சீவிக்கொண்டு அருகே திரும்பி பார்த்தால் எங்கள் இருவருக்கும் பெரிய வியப்பாக இருந்தது.

 காலையில்  பார்த்து விட்டு போன அந்த  டைலரு இப்ப அந்த நாவல் மரத்தடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் வசப்படுத்தியிருந்தான்.தையல் மிஷனை கிழக்கு பார்த்தாப்லே வைத்து திறந்த வெளியில் வைத்திருந்தான்.‘என்ன மாப்பிள்ள ! இந்த ஆளு இங்கு இருக்கிற ஏதாவது சவுளிக்கடையில் உட்கார்ந்தாலும் ஏதாச்சும் துணி வரும்,ஆனால்  அங்கெல்லாம் கடை போடாம  இவன் இங்கு வந்து  கடை போடுறான்,இங்கு ஒன்னும் துணி  வராதே” என்றான். ஆமாண்டா மாப்பிள்ள எனக்கும் சரியா  விளங்குல, என்ன தான்  நடக்குதுன்னு பார்ப்போமே ‘ என்றவாறு அங்கிருந்து ஒவ்வொருவராக தங்கள் ஊருக்கு கிளம்பினார்கள். லட்சுமணனுக்கு இங்கிருந்து நம்மங்குணத்திற்கு கிளம்பினால் நக்கம்பாடி சொக்கநாதபுரத்தை கடந்தால் நமம்மங்குனத்தை சென்றடைய குறைந்தது ஐந்து கிலோமீட்டர் ஆகும்.அவனிடம் சைக்கிள் இருந்தது. மிகவும் சுறுசுறுப்புகாரன், சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தால் சிட்டாக பறந்து விடுவான்.அவனை பின்னால் துரத்தி பிடிக்க முடியாது.

 நானும் ஒரு சைக்கிள் வைத்திருந்த்தேன்.அது பார்க்கத்தான் அழகாய் இருந்தது. நானும்  இந்த சைக்கிளை  அடிக்கடி சிங்காரித்து சிக்கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன செய்வது ? எவ்வளவு மிதித்தாலும் எருமை மாடு போலத்தான் நகர்கிறது.காலெல்லாலாம் வலி கண்டு விடுகிறது.  கோனு மாத்து, காப்பு மாத்து,ஆளாளுக்ளு ஒரு ஐடியா  சொன்னதையெல்லாம் செய்து பார்த்தாயிற்று.. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால்  பாதாசாரிகள் எவராவது ‘நானும் உன் கூட சைக்கிளில் வருகிறேன்!” தம்பி என்று உதவி கேட்டாலும், சைக்கிள் மிதிக்க பயந்து கொண்டு வண்டி சரியில்லை “ என வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது. இதை உருட்டிக்கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கும், ஊருக்கும், வேல்முருகன் சினிமா  கொட்டாயிக்கும் போய் வருகிறேன். ஆனால்  எனக்கு புது சைக்கிள் வாங்குவதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம்.நிசத்தில் சாத்தியமே இல்லாத விஷயமாகும். அதுவரைக்கும் அம்மாயி கொடுக்குற ஒரு ரூவா இரண்டு ரூவா வை  வைத்து சைக்கிளுக்கு தீனிப்போட்டுவிட்டு மத்தியானம் நொண்டி கடையில பச்சைத்தண்ணியை  மொண்டு குடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். இது என் தலைவிதி என எனக்குள் நான்  நொந்தவாறு அங்கிருந்து கிளம்ப தொடங்கினேன். தூரத்தில் புதிதாக அங்கு வந்து குடியேறிய  அந்த டைலறு ஏதோ தைத்துக்கொண்டிருந்தான். அவன் எதை தைக்கிறான் ஏதாவது பழசு பட்டாய் இருக்கலாம்  அத்துடன் அந்த டைலறு என் ஞாபகத்திற்கு வெளியே போய் கொண்டிருந்தான். ஆனால் தையல்மிஷினின்  ‘லொட லொட’ சத்தம்  ஓடை பாய்கடை வரை கேட்டு கொண்டிருந்தது.

 சைக்கிளில் வேகமாக நெருங்கும்போதே ஏற்கனவே  பள்ளித்துவங்கி பிரேயர் நடந்து கொண்டிருந்தன. எப்போதாவது ஒரு சிலத்தடவை மட்டுமே பிரேயரின் கலந்து கொண்டதுண்டு! பெரும்பாலான நாட்களில் அதில் கலந்து கொள்வதில்லை.  புதிதாக வரும் ஒவ்வொரு தலைமையாசிரியரும்  விதவிதமான சட்ட திட்டங்கள் போட்டாலும்,அதெல்லாம் நடைமுறைபபடுத்தமுடியவில்லை. அப்போது இருந்த இந்த ஒரே பள்ளிதான்,மிகவும் தொலைதூரத்திலிருந்து மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.சிலர் நடந்து வந்தார்கள்.சிலர் சைக்கிள் வைத்திருந்தார்கள்.ஆனாலும் காலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முடியவில்லை. ஆனாலும் முதல் பீரியட் ஆங்கிலமாகத்தான் இருக்கும். அங்கு நமக்கு ஜென்ம பலன் காத்திருக்கிறது. சண்முக வாத்தியார் வெளுத்து வாங்கிவிடுவார், அவர் பீரியட் முடிந்தால் எங்களுக்கெல்லாம் சுதந்திரம்தான்.  பிரேயர் முடிந்ததும் மெல்ல சைக்கிளை நகர்த்திக்கொண்ட்டு மெயின் ஹாலை நோக்கி நகர்த்தினோம். மெயின்  ஹாலை அடைந்தவுடன்  கிளாஸ் ரூமில பசங்க லேசான சலப்புடன் காணப்பட்டனர். இன்னும் வகுப்பாசிரியர் சண்முகம் வரவில்லை. அப்பாடா என்ற ஏக்க பேரு மூச்சுடன் சைக்கிளை  நிறுத்தி விட்டு விக விரைவாக பையைத்தூக்கிக்கொண்டு உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன்.

 ஏற்கனவே  வந்துவிட்ட லட்சுமணன் முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். நான் அமரும் கடைசி பெஞ்சில் சுப்பிரமணியன் ஆசைத்தம்பியும் உட்கார்ந்திருந்தனர். வழக்கமான கர்ஜ்ஜனையுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார் சண்முகம். அவர் நுழைந்தால்,எந்த சத்தமும் வராது. பூனைக்கு பயந்து எலி வலைக்குள் பதுங்கிக்கொள்வதைப்போல, எல்லோரும் சப்த நாடியும் நடுங்கிபோவார்கள். துறையூரை சார்ந்த அவர் இங்குதான் முதன் முதலில் பணிக்கு சேர்ந்ததாக நினைக்கிறேன். இவர்தான் ஆங்கில ஆசிரியர், ஒரு நாளைக்கு ஏகப்பட்ட குச்சிகளை பசங்களை அடித்து சுக்கு நூறாக்கி போட்டு விட்டு ,போய் இன்னும் பத்து குச்சி கொண்டுவாங்கடா! என துரத்துவார். ஓடின பசங்க ஒடினவங்கதான்  சண்முகம் ஆசிரியர் கிளாஸ் முடியறவரைக்கும்  திரும்ப மாட்டானுங்க, ரொம்ப விபரமானவங்க அடுத்தடுத்த நல்ல பீரியடு இருந்தா திரும்பி வருவானுங்க,இல்லேன்னா, மத்தியானம்தான் சாப்பாட்டுக்கு திரும்புவானுங்க.

 எப்படியோ சின்ன சின்ன வேலைகள் கொடுத்துவிட்டு பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். பசங்க அப்படியே பொறுப்பா எழுதறவங்க போல கவிழ்ந்து கிடந்து நடித்துக்கொண்டிருந்தார்கள். மணி ஒலித்தது. அப்படியே அந்த பீரியட் முடிந்து போனது. சண்முகம் ஆசிரியர் எழுந்து கடு கடுப்புடன்  வகுப்பறையைவிட்டு வெளியேறினார். லட்சுமணன் என்னை உற்று பார்த்தான்.அவர் பார்வையின் அர்த்தம் எனக்கு புரிந்தது “ கிளம்பலாமா ? என்பதுதான் அந்த பார்வைக்கான அர்த்தமாகும் நானும் அவனும் பையை ட்ராவினுள்ளே திணித்துவிட்டு நைசாக அங்கிருந்து வெளியேறி வழக்கம் போல, மெயின் ஹாலின் மூத்திர சந்து வழியே நடந்து கிழக்கு காம்பவுண்ட் சுவரை சென்றடைந்தோம் .அப்போதுதான் “வாங்க சின்னாயி ,வாங்க பெரியாயி,” என்ற குரல்  தொடர்ச்சியாக கேட்டது. நானும் லட்சுமணனும் நேராக நடராஜனின் சலூன் கடைக்கு சென்று தெற்கே திரும்பி பார்த்தோம்.  நேற்று கடை விரித்த அந்த கிழ டைலரை சுற்றிலும் நாலைந்து பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள்

 லட்சுமணன் “வாடா மச்சான் போயி பார்ப்போம் என்று  அந்த கிழ டைலரிடம் என்னை  அழுத்து சென்றான். நாங்கள் சற்று தூரத்திலேயே நின்று கொண்டோம்.  ஒரு வேளை  கிட்டே நெருங்கினால்,நம்மை வாடிக்கையார் என நினைத்து ஏமாந்து விடுவான் “ என்பதால் தூரத்தில் நின்று பொழுது போக்காக அவன் என்ன செய்கிறான் என்பதை கவனித்தோம்.

 பெரும்பாலானவர்களை அவன் ‘சின்னாயி பெரியாயி ‘ என்று எல்லோரும் முறை வைத்து அழைப்பதால் அவன் இந்த பகுதியில் ஏற்கனவே நன்கு அறிமுகமானவனாகத்தான் இருக்கவேண்டும். அவனிடம் எல்லோரும் அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள்.எல்லோர் கைகளிலும் பழைய சீலை துணிமணிகள், சாக்கு படுதாக்கள் ,காது அருந்த கை பைகள்’ என எல்லாம் பழைய சரக்காகவே இருந்தன .’ மச்சான் இவன் பழைய அயிட்டம் தைக்கிரவண்டா” லட்சுமணன் சொன்னான். ‘எவன் தைச்சா நமக்கு என்னடா!” என்றவாறே அங்கிருந்து சித்தேரிக்கு கிளம்ப ஆயத்தமானோம்.

 நாங்கள் அவனை தூரத்திலிருந்து கண்காணிப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும் ‘ வாங்க தம்பிகளா ! வாங்க ! என மிக வணக்கமாய் கூப்பிட்டான். எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. லட்சுமணனை திரும்பி பார்த்தேன்.  சரி போகலாம் என்பது போல  தலையை ஆட்டினான். நான் அவனிடம் கிட்டபோனேன். அவன் தையல் மிஷினுக்கு பக்கத்தில் ஒரு அட்டை பெட்டி கிடந்தன.அதில் என்னை உட்காரச்சொன்னான்.  அதனருகில் கிடந்த பழைய இருப்பு சேரில் லட்சுமணனை உட்காரச்சொன்னான் .அவன் தையல் மிஷின் தைக்கும் ஸ்டூலில்  உட்கார்ந்துகொண்டான்.  

 வழக்கத்திற்கு மாறாக அவனே எங்களிடம் பேச ஆரம்பித்தான். “தம்பி நான் ஏற்கனவே இங்குதான் ஒரு  சில  கடையில கடை போட்டிருந்தேன்.எனக்கு குடி பழக்கம் இருந்ததாலே, அவனுங்களெல்லாம்  ஒரு மாசம் ,ரெண்டு மாசம் போச்சுனா  “ காரணமேயில்லாம வெளியே  போன்னு  சொல்லிடுவாங்க “ அதற்கப்புறம் வெளியே போக வேண்டிதுதான். வேற வேல தெரியாது ! எங்க போறதுன்னு ஒன்னும் தெரியல. எனக்கு புள்ள பொண்டாட்டி’ ன்னு யாரும் கிடையாது.நான் ஒரு அநாதை தம்பி! என் லெவலுக்கு ஜவுளி கடையில் எல்லாம் கடை போட முடியாது .இந்த மாதிரி ரோட்டின் ஓரத்தில கடை போட்டுக்கிட்டு ,பழைய கிழிஞ்ச  துணியத்தான் தைக்க முடியும்!” என சுய சரிதத்தை சொல்லி முடித்தான்..

 எங்களுக்கு என்ன  சொல்வதேன்றே தெரியவில்லை கேட்பதற்கே பாவமாக இருந்தது. இந்த தையல்காரருக்கு பின்னால் இவ்வளவு சோகமா“ லட்சுமணன் என்னையே உற்றுப்பார்த்தான்.அவன் பார்வையில் தையல் காடனின் மீது இரக்கம் பிறந்தது.

‘சோறு தண்ணில்லாம் எப்படி?”

 வீடே இல்ல ! எங்கே சோறு ஆக்குறது ?...

கையால் கிடைச்சத வச்சு, கடை காட்டுல வயித்த கழுவ வேண்டியதுதான்.

எங்க டைலரே படுத்துப்ப ?

ராத்திரிக்கு எல்லா கடையும்  சாத்தின அப்புறமா,ஏதோ ஒரு கடையில் படுத்துக்க வேண்டியதுதான்.  காலாங்காத்தாலே  எழுந்திருக்க வேண்டியதுதான் ,இல்லண்ணா ,கடைகாரங்க  திட்டுவாங்க !” மழை  பேஞ்சாலும் இதே நிலைதான் தம்பி !’ என்றார் அந்த டைலரு.

 “சரி டைலர !” குடிக்காதீங்க ! உடம்ப பாத்துக்குங்க நேரம் ஆயிடுச்சு ,மத்தியானம் வரோம்” என்றான் லட்சுமணன்.இப்படித்தான் அந்த டைலரோடு முதல் நட்பு தொடங்கிது. அதன் பின்பு   பலநேரங்களில் கட் அடித்துவிட்டு நடராசன் சலூனிலும் .டைலர் கடையில் பொழுது கழிய தொடங்கியது.

பழகாத வரை ஒருவரை தூர இருந்து  விமரிசனம் செய்வது மிகப்பெரிய மடத்தனமாகும். சிலவேளைகளில் நாம் வழங்கும் தீர்ப்பு மிகவும் தவறாக முடிந்து விடுவதுண்டு.டைலர் விஷயத்திலும்  அப்படித்தான் நடந்தது, ஒவ்வொரு தடவையும் கடைவீதிக்கு வரும்போதெல்லாம் இந்த டைலரை எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள் என்பதற்காக  நாங்களும் அவரை சில வேலைகளில் கிண்டலடித்திருக்கிறோம், ஆனால் அவரிடம் சற்று நெருங்கி பார்த்த பின்பு அவரிடமுள்ள சில தனிப்பட்ட சோகம் எங்களை வெகுவாக பாதித்த பின்பு அவரை நாங்கள் விமரிசனம் செயவதை தவிக்க தொடங்கினோம் .   

 டைலர் நன்கு பேச தெரிந்தவர்.அவர் பேசும் விதம் மற்றவர்கள் தன் மீது அனுதாபம் கொள்ளும் அளவுக்கு அவரின் பேச்சு இயல்பாய்  வழியே  போவோரை  தனது பேச்சால் கவர்ந்திழுக்கும் வல்லமை அவரிடமிருந்தது

“வாங்க சின்னாயி  வாங்க, என அன்பொழுக கூப்பிடுவார். கண்டுக்காமல் வழியே போவோர் கூட இவரின் பேச்சில் வசீகரிக்கப்பட்டு அவரிடம் வருபவர்கள் அநேகம் பேர்கள்.

 அவர் கடை போட்ட ஒரு சில மாதங்கள் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் .ஒரு சில மாதங்கள் போன பின்பு அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். எப்போ பார்த்தாலும் மிகவும் பிசியாக காணப்பட்டார். அறுந்து போன பைகளுக்கு புது காத்து வைத்து தைத்தல், கிழிந்த பழைய சட்டைகளை தைத்தல்,பொத்தான் கட்டுதல் ,கிணற்றில் கமலை ஏற்றத்திற்கான பரித்துணி  தைத்தல்.உர சாக்கினைகொண்டு திண்ணைகளுக்கு படுதாக்கள் தைப்பதற்கு என ஒரு கால கட்டத்தில் நிறை வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். டைலருக்கு வருமானம் நிறைய ஆரம்பித்தன. டைலர் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்.

 ஆனால் அவரிடம்  ஒரு எத்தனையோ தனிப்பட்ட முறையில் பழக்க வழக்கங்கள் நிறைய இருந்தாலும், அவையெல்லாம் வெளியுலகிற்கு வராதவரைக்கும் பெரிய பாதகமில்லை .காலப்போக்கில் அவை ஒவ்வொன்றாக வெளி வரும்போது அது மற்றவர்களால் பேசப்படுகிறது.

ஆனால் ,ஒவ்வொரு வாடிக்கையாளரும் வந்த வேலையை முடித்துகொண்டு போகும் போது, “அடுத்த தடவை வரும்போது “கொஞ்சம் புளி எடுத்துட்டு வா  சின்னாயி! ‘கொஞ்சம் மொளகா எடுத்துட்டு வா !” பெரியாயி என சொல்வதை சமீப காலமாக பார்த்திருக்கிறேன். காலப்போக்கில் அது கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது ,எனது அம்மாயி கூட சந்தைக்கு வரும்போதெல்லாம் எங்க அம்மாயி ஏதாவது முடிஞ்சவரைக்கும்  குழம்பு சாமான்களை கொண்டு வந்து கொடுப்பார்.

அதனால் எனது குடும்பத்தை பற்றி டைலருக்கு அறிமுகமாகி இருந்தது.

எங்க அம்மாயியை தூரத்தில் வருவதை  பார்த்தாலே “ வா பெரியாயி என அன்பாக வரவேற்பார். அந்த முதல் வணக்கம் எங்க பாட்டிக்கு பெரிய உற்சாகமாக இருக்கும்.  இதனால் காலப்போக்கில் அவரை எல்லோரும் புளி மொளகா டைலரு என அழைக்க ஆரம்பித்துவிட்டனர்

 இப்போதுகூட எனக்கு ஞாபகம் இருக்கிறது .அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு தீபாவளி காலமாகத்தான் இருக்கவேண்டும்,  பூபோட்ட .மஞ்சள் மேல்சட்டை ஒன்றை இந்த டைலருதான் தைத்ததாக ஞாபகம். அதை எல்லோரிடமும் காட்டியபோது  எல்லா பசங்களும் சட்டைய  நல்லா தச்சிருக்கிறதா சொன்னாங்க. அப்போதெல்லாம் அவரின் உடம்பு  நன்றாயிருந்தது. ஆனால் இப்போதுதான் காய்ந்து இளைத்து கருவாடாகி விட்டார். பொழுதெல்லாம் ஏதோ சம்பாதிக்கிறார்.பொழுது சாய்ந்தால் போதும் எல்லாவற்றையும் மில்லி சாராயத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறார். நாளைய பற்றி அதிகம் கவலைபடாதவராக இருக்கிறார். “ஏய்யா இப்படி பண்றியே” யாரவது  என்று கேட்டால், எனக்கென்று குடும்பம் ,புள்ளக்குட்டின்னு ஒன்னும் கிடையாது நான் யாருக்கு சம்பாதிக்கபோறேன் !” என்று டைலர் சொல்வார். அவர் சொல்லும் பாங்கில் கேட்பவர் அப்படியே கண்ணீர் வடிக்கும் அளவுக்கு சோகமயமாக இருக்கும்.

 முதல் மனைவி எந்த குழந்தையும் பிறப்பதற்கு முன்பே ஜன்னி வந்து செத்துபோச்சு. அவள் செத்து போன பின்பு இருந்த குடிசைவீட்டையும் ஊரில் வித்து புட்டு நாடோடியாய் ஊருக்கு ஊர் பஞ்சம் பிழைக்க அலைஞ்சு  கடைசியில் இந்த ஊருக்கு வந்தேன். ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினேன்.ஒருத்தனும் என் குணத்துக்கு ,ஒரு மாசத்துக்கு வச்சுக்கமாட்டான் .பொரடிய புடிச்சு தள்ளிபுடுவான். எங்கும் நிரந்தரமல்ல, திரும்பவும் தெருவடிதான். கடைசியா இந்த சந்தை கடையில் கடைபோட்டேன்,நீங்களெல்லாம் எனக்கு ஒத்தொழைக்கணும் தம்பி என்றார் டைலர்.  

 சரி டைலரே என்றவாறு அவ்வப்போது தற்காலிகமாய் விடைபெறுவோம். திரும்பவும் சந்திப்போம்.! ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடைவையாவது ,பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு அவரோடு நாட்களை கழிப்பபோம். அவரால் எங்களுக்கு கொஞ்சம் சுய லாபம்,எங்கள் புத்தக பை ,மேல் சட்டைப்பை   கிழிச்சல் , பொத்தான் பிய்ந்து போதல் போன்றவற்றை அடக்கடி சரி செய்து கொள்ளலாம் .

 அதுக்கு தனியே காசு கொடுத்து விடுவோம்.  ஏழாம் வகுப்பு தொடங்கி ஒன்பதாம் வகுப்பு வரை ,அதாவது மூன்றாண்டு வரை அவரோடு பழகி இருக்கிறோம். அவரை நன்கு அறிந்திருக்கிறோம் . அவரிடம் குடிப்பதை தவிர வேறு எந்த பழக்கமுமில்லை.ஊருகதை ஒலகத்து கதையெல்லாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொன்று சொல்வார்.  சிரிச்சு மாளாது. இவனுங்கக் சிரிக்கிற சிரிப்பு பக்கத்துல காய்கறி விக்கிற பொம்பளைகளலெல்லாம் எங்கள உத்து உத்து பாக்கற அளவுக்கு மோசமா கெக்கலிப்பாங்க, ஏலே தம்பி ஓவரா சிரிக்காதிங்கடா தம்பி ,பல்லு சுளுக்கிக்கும்’ என்பார் டைலர்.

 வருடத்தில் காலாண்டு ,அரையாண்டு, முழாண்டு விடு முறை தினங்களில் ஊரு காட்டில் குளம் குட்டைகளில் மீன் பிடித்தல், பனை மரங்களில் நுங்கு வெட்டுதல்,சிமா பார்க்க ஊருக்கு ஊர் போகுதல் இதுதான் எங்களின் முழு வேலையாய் இருக்கும்.பள்ளிக்கூடத்தைப் பற்றியும், டைலரை பத்தி எல்லாம் எங்கள் நினைவுக்கு எட்டாது.ஆனால் விடுமுறை நாட்களில் பஸ் ஸ்டாண்டு பக்கம் போனா அவர் உட்கார்ந்திருப்பாரு,ஆனால் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். என்ன எப்ப பள்ளிக்கூடம் தொறக்கும்.தொரைங்க எப்ப வருவீங்க என்பார். இன்னும் நாளு நாளுதான் பாக்கி,அப்புறம் வந்துடுவோம் டைலரே ! இல்லப்பா ! என்னமோ மனசு ரொம்ப விகாரமா இருக்கு,உங்கள பார்க்காம பித்து புடிச்ச மாதிரி இருக்கு,சீக்கிரம் வாங்கப்பா என்பார்.

 காலாண்டு  விடுமுறைகள் முடிந்து  ஒரு நாள் காலை மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கூடம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் எனது சைக்கிளில் காலையிலேயே கிளம்பிவிட்டேன். லெட்சுமணனும் மட்கார்டு இல்லாத சைக்கிளில் இந்நேரம் வந்து கொண்டிருப்பான். எப்படியும் இன்றைக்கு காலாண்டு தேர்வின் விடைத்தாளை எல்லா ஆசிரியர்களும் கொடுப்பார்கள்.  அப்படியெனில் நிச்சயம் சயன்ஸ் ,கணக்கு இரண்டுக்கும் அடி உறுதி என நினைத்துக்கொண்டே பள்ளிக்கூடம் வந்து சேர்ந்து விட்டேன் . மெயின் ஹாலில் வண்டியை கொண்டு போய் நிறுத்திவிட்டு லெட்சுமணனை தேடி கண்கள் அலைந்தன.. அருகிலிருந்த சுப்பிரமணியனை விசாரித்தேன். இன்னும் அவன் வரவில்லை மாப்பிள்ளை என்றான். எனக்கு மனதுக்குள் பயம் வரத்தொடங்கியது. எப்படியும் இன்னைக்கு தனியாகத்தான் அடி வாங்க வேண்டும் போலிருக்கிறது.துணைக்கு யாராச்சும் கூட இருந்தா நல்லாயிருக்கும் என மனதில் நினைத்தவாறு. மனம் குட்டிபோட்ட பூனையைப்போல அங்குமிங்கும் இருப்புக்கொள்ளாமல் ஊசலாடிக்கொண்டிருந்தது.

 நான் வேண்டிய தெய்வங்கள் கைவிடவில்லை.நான் நினைத்து போலவே  லட்சுமணன் பிரேயர் ஆரம்பிக்கபோகும் கடைசி தருணத்தில் வந்து சேர்ந்தேன். அவன் தூரத்தில் வருவதை பார்த்துவிட்டேன். கைகளை  மேலே  உயரத்தி  வாடா மாப்பிள்ளே என்றேன்.  அவனும் கையசைத்து வருகிறேன் என்றேன்.ஆனால் அவன் சைக்கிளை மிதித்து வரவில்லை. சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்தான். நான் அவனுக்கு நேரெதிரே சென்று என்னடா மாப்பிள்ளே ஆச்சு என்றேன்.

 அத ஏண்டா கேக்கிற சைக்கிளு நக்கம்பாடிகிட்ட வரும்போது  பங்சர் ஆயிடுச்சு ,தள்ளிக்கிட்டே வரேன் மாப்பிள்ளே. என்றான். சரி இத கொண்டுபோய் மெயின் ஹால் தட்டியில சாத்திபோடு நேரம் ஆயிடுச்சு என்றேன்.அவன் அதை வேகமாக தள்ளிக்கொண்டு ஓடி தட்டியில வண்டியை சாத்திபோட்டுவிட்டு.பிரேயரின் பின்வரிசையில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டோம்.

 அன்று முதல்,இரண்டு பீரியடும் சோகத்தில் முடிந்தது. இண்டர்வல்  மணி ஒலித்தது. சற்று ஆறுதலாக அந்த மூத்திர சந்து வழியே வெளியே சென்று நாவல் மரத்திற்கு சென்று அந்த டைலர பார்ப்போம் என்றான் லட்சுமணன். சரி என்று அவனை பின் தொடர்ந்து நாவல் மரத்திற்கு சென்றோம் . டைலரு எங்களை பார்க்கவில்லை  இன்று  நிறைய  கஸ்டமர்கள்  போலும் ,சுத்தி திரும்பி பார்க்க முடியாத அளவுக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தார் .எங்கள்  கைகளெல்லாம் வீங்கியிருந்தன. யாருக்கு யார்  ஆறுதல்  சொல்வது.லட்சுமணனின் கைகளும் நன்கு வீங்கியிருந்தன.அனாலும் வழக்கமாக வாங்கும் பரிசுதானே என மனதை தேற்றிக்கொண்டோம். “விடு மச்சான் பார்த்துப்போம் !” என்றான் லட்சுமணன். அப்படியே காலாற  கடை தெருவுக்கு சென்று மெயின் கேட் வழியே உள்ளை வந்து சேர்ந்தோம் .அன்று மாலை அவ்வளவாக ஆசிரியர் தொல்லை இல்லை. ஓரளவு எல்லா பேப்பரும் நல்லாவே இருந்தன. எங்களுக்கு அதெல்லாம் பெரிய கவலையாக தெரியவில்லை.அது அது அன்றைய காலத்தில் நிகழும்  ஒரு சம்பவமாகவே  இருந்தது .ஆனாலும் பள்ளிகூட வாழ்க்கையும், எந்திரத்தனமான தேர்வு முறையும்,அப்போது பணி புரிந்த பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில்  கர்ண கொடூரமாக  நடந்து கொண்ட முறையும் மாணவர்களை பள்ளிக்கூடத்தின் பக்கத்திலிருந்து துரத்தியடித்தது.. பெரும்பாலான மாணவர்கள்  எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு கூலிவேலைக்கு செல்ல துவங்கியிருந்தனர்.

 தினமும் கணிசமாக கொஞ்சம்  காசு சேர்ந்தவுடன்  குடிப்பதற்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது.யாரிடமும் காசுக்கு கெஞ்சிக்கிடக்க வேண்டியதில்லை. பொழுதெல்லாம் எப்படி கஷ்டபட்டாலும் ,பொழுது சாய்ந்தவுடன் நேரே சாராயக்கடைக்கு பொய் நாம் பாட்டுக்கு குடித்துவிட்டு ,போதை மிஞ்சிபோனால் துணிமணி இல்லாமல்,அம்மணமாக கிடப்பது .சட்டைப்பையில் வைத்திருக்கும் அஞ்சு பத்தை  யாராவது பிடிங்கிகொண்டு போய்விட்டால்,காலையில் எழுந்து டீ குடிக்கக்கூட ஒரு  ருபாய் இல்லாம ,பேந்த பேந்த முழிக்கிற வாழ்க்கை இருக்கிறதே,அந்த வாழ்க்கைதான் டைலருடையது.அதைத்தான் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டார். இந்த லட்சணத்தில் தன்னிடம் வரும் கஸ்டமர்களிடம் “உங்கள் ஊர்ல் ஏதாவது கட்ட முட்ட இருந்தா பாருங்க சின்னாயி “ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க மொழியில் கட்ட முட்ட என்றால் விதவை  அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்  என்று பொருளாகும். வருவோர் போவோரிடமெல்லாம் இவர் இந்த மாதிரி சொல்கிறாரே  இதனால் என்ன நேர்ந்து விட போகிறது என நாங்கள் நினைத்திருந்தோம்.

 ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக ஒரு நினைப்பே நிஜமாகி போனது. ஒருநாள்  சிறுநீர் இடைவேலையின் போது ரோட்டுக்கு போனோம். என்னே ஆச்சர்யம் ! ஐம்பது வயது மதிக்கத்தக்க அளவில் ஒரு பெண் டைலருக்கு அருகில் நின்றுகொண்டு இருந்தார். அந்த பெண்  ஓரளவு  சிவப்பாக இருந்தார். கொஞ்சம் வனப்பாகவும் இருந்தார். கன்னம் இரண்டும் குழி விழுந்து கொஞ்சம் வயோதிகத்தை வெளிப்படுத்தியது.ஆனாலும் டைலரைக்காட்டிலும்,அந்த பெண் எவ்வளவோ வயது குறைந்தவராக இருந்தார். எந்த சங்கோஜமுமின்றி டைலருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்தார். நாங்கள் தூரத்தில் வருவதை அவர் கவனிக்கவில்லை. மிகத்தீவிரமாக தையல் மிஷினோடு மல்லுக்கட்டிகொண்டிருந்தார் . நாங்கள் அருகில் சென்று வணக்கம்  டைலரே ! யாரு என்றவாறு  கீழே குனிந்து கொண்டிருந்த டைலரு நிமிர்ந்து பார்த்தவர்   ஓகோ நீங்களா தம்பிகளா  வாங்க “ என்றார். பள்ளிக்கூடம விடுமுறை விட்டதையே மறந்தவராக “என்ன ரொம்பநாளா ஆளையே காணோம்! 

இப்பதான் லீவு முடிஞ்சுது, இன்னைக்குத்தான் டைலரே வந்தோம்” எனக்கும் சேர்த்து பதில்  சொன்னான்   லட்சுமணன். எப்போதும் கலப்பாக பேசுபவர் இன்று எங்களிடம் பேசுவதற்கு ஆர்வமின்றி காணப்பட்டார். அருகில் அவருடைய புது வரவு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த பெண்மணியை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் எங்களையும் ,அந்த பெண் மணியையும் மாறி மாறி  பார்த்தவர்,அதற்கு மேலும் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தார். அவரின் பார்வையின் மொழி என்பது இது என்னுடைய புதிய  உறவு, அது ரகசியமானது ,அதை எதையும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லை என்பது போலிருந்தது. ஆனால் அதற்குமேல் எந்த வார்த்தைகளும் அவரிடமிருந்து வரவில்லை.

 எப்போதும் போலில்லை அவர். அவரின் புது வரவுக்கு பின்னர் எங்களிடம் பேசுவதை அந்த டைலர்  தவிர்த்தார். ரோட்டில் போகும் போதும் வரும் போதும் எங்களை வெறும் பார்வைகளால் மட்டுமே நலம் விசாரித்து கொள்வதோடு, மற்றபடி நாங்கள் ஒருவருக்கொருவர் நீண்ட தூரம் விலகி சென்று கொண்டிருந்தோம். எப்போது பார்த்தாலும் அந்த புது பெண்ணிடம் கொஞ்சிக்கொண்டும்,குலாவிக்கொண்திருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை.ஆனாலும் பார்த்தால்  வெறும் புன்னகையைமட்டும் பரிமாறிக்கொள்வோம்.

 அந்த ஆண்டோடு .எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முடிந்து போனது அதன்பின்னர் ஒரு மாதம் கோடை விடுமுறை,அதன் பின்பு இப்போது படித்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர்கள் மீண்டும்  இங்கு படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எத்தனையோ பேர்கள் வெளியூர் போகலாம்,யாராவது புதிய நண்பர்கள் இங்கு வந்து சேரலாம். அதை இப்போது நினைத்தாலே நெஞ்சில் சோகமாயிருக்கிறது .அப்போது இதை எப்படித்தான் தாங்குவோமோ என தெரியவில்லை என்ற நினைப்போடு ஒவ்வொருவரும் பிரிந்து சென்றார்கள்.

 லட்சுமணைக்கும் எனக்கும் இடையில் மிகப்பெரிய மனப்போராட்டமாய் இருந்தது அவனும் நானும்  பள்ளி கிரவுண்டில் கிழக்கு  மூலையிலுள்ள ஆலமரத்தட்டியில்  அமர்ந்தவாறு  ஒருவரை ஒருவர் நீண்ட நேரம் பார்த்தவாறு அமர்ந்து  கொண்டிருந்தோம். நீண்ட நேரம் மவுனம் நீடித்தது.ஏதும் பேசிக்கொள்ளவில்லை. லட்சுமணனின் கண்கள் ஈரமாகி கொண்டிருந்தன  “எண்டா மாப்பிள்ள அழறே !”. மூன்று மைல்தாண்டா வித்தியாசம்,பக்கத்தில பக்கத்திலதாண்டா இருக்கிறோம் ,நெனைச்சா எப்போது  வேண்டுமானாலும்  சந்திக்கலாம்! கவலையை விடடா ! என இதமாகப்பேசி அவன் தோளை மெல்ல வருடினேன்.   என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தேன். பின்னர் இருவரும்  நேராக மெயின் கேட்டுக்கு வெளியே வந்தோம். பின்னர் இருவரும் ஐந்து ஆண்டுகள் உலவிய  அந்த மெயின் ஹாலை  பெருத்த ஏமாற்றத்தோடு வெறித்து பார்த்தோம். அது எங்களை பார்த்து “என்னை மட்டும் தனியே விட்டு போகின்றீர்களே” என சொல்வது போலிருந்தது.

 பின்னர் தெற்கே  பார்த்தோம். அங்கே புளி மொளகா டைலரு. ஏதோ தைத்துக்கொண்டிர்ந்தார். அவரின் புது வரவு அவருக்கு உதவியாக கைகளில் ஏதோ துணியை வைத்துக்கொண்டு நின்றிருந்தது. அவருக்கு ஒரு ஆதாரம் கிடைத்துவிட்ட ஒரு தெம்பில் நாளையைப்பற்றி கவலைப்படாமல் தனக்குள் ஆழ்ந்து கிடந்தார்.. நான்கு ஆண்டுகளைக்கடந்து  அவரைக்கடந்து விலகிப்போகபோகிறோம் என்ற ஆதங்கம் எம்மை பற்றி நின்றது. அவருடன் நாங்கள்  பழகிய நாட்கள்  அவர் எங்களுடன் வேண்டா வெறுப்பாய் நடந்து கொண்ட நிகழ்வுகளை மறந்து போகசெய்தது..

 லட்சுமணனும் நானும் பரஸ்பர வணக்கத்துடன் அங்கிருந்து இருவரும் சைக்கிளில் தத்தம் ஊருக்குப்புறப்பட்டு சென்றோம். திரும்பும் வழியெங்கும்  கடந்து போனநாட்கள் ஒவ்வொன்றாய்  நினைவு திரையில்  வந்துபோயின. பள்ளி வாழ்க்கை  என்பது ஒரு தனி உலகமாகும்.அங்கே இன்பம்.வலி,மகிழ்ச்சி வாழ்க்கை, கண்ணீர் என்ற பலவேறு மூலங்களின் கலவைகளால் பூசப்பட்ட ஒரு பொன்னுலகம். அந்த பொன்னுலகம் என்பதை என் மனம் ஒரு மனதாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதிலும்,பள்ளிக்கூடம் என்பது ஒருவனுக்கு தன் வாழ்நாளில் பேரின்ப பெரு வாழ்வாகும். அந்த வாழ்க்கையிலிருந்து இப்போது

வெளியேறிக் கொண்டிருக்கிறேன்.அதில் எந்த அளவுக்கு  நான் வெற்றி பெற்றேன்? அல்லது  எந்த அளவுக்கு தோல்வியுற்றேன் என்பது இனி வரும் காலம்தான்  அவற்றை முடிவு செய்யும்.

 சைக்கிளில் வீடு வந்து சேர்ந்து விட்டேன்.சைக்கிளை சுவற்றோரம் சாத்திவைத்து விட்டு, வழக்கம்போல என் வேளைகளில் இயல்பாய் .ஈடுபடத்தொடங்கினேன்.  அந்த ஆண்டின்  சித்திரைமாதம் முழுதும் வாழ்க்கையின் பக்கங்கள் வெவ்வேறு நிறம் மாற்றம் தொடங்கியது. இதுவரை நான் வாழ்ந்த இருப்பிடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்கு போகவேண்டிய நிர்பந்தமும்\,. மாறி வரும்  புது வாழ்வின்   சூழலை எதிர்கொள்ளும் ஒரு  நிலையில்  இருந்தேன். இனிமேல் பள்ளிக்கூட  வாழ்வை மேற்கொள்ளமுடியாத ஒரு நிலை அத்தோடு  என் தனிப்பட்ட வாழ்க்கைன் முன்பாதி ஒரு முடிவுக்கு வந்தது.

 ஆண்டின் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிக்கூடம்  தொடங்கியது , எல்லா மாணவர்களும் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.  நானும் பள்ளிக்கு சென்றேன். ஆனால் படிப்பதற்கு அல்ல,மாறாக   மாற்று சான்றிதழ் வாங்குவதற்கு,தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்று முற்றும் பார்த்தேன் .ஒரு வேளை  லட்சுமணன்  வந்திருப்பானோ என்ற ஆர்வத்தில், அவனை எங்கும் காணவில்லை.அவன் ஊரைச்சார்ந்த  இரு சில மாணவர்களை விசாரித்ததில்,அவன் மெட்ராசுக்கு போயிட்டான் “ என சொன்னார்கள். எனக்கு எமாற்றமாய் இருந்தது.

 மாற்று சான்றிதழை வாங்கிகொண்டு கடை தெருவிற்கு வந்தேன். நாவல் மரத்தினடியில்  புளி மொளகா டைலரை காணவில்லை.லேசான அதிர்ச்சியாய்  இருந்தது. பக்கத்திலுள்ள காய்கறி விற்கும் இலங்கைச்சேரி ஆயாவை அந்த ஆளு(டைலரு ) எங்கம்மா ‘ என கேட்டேன். “அத ஏம்பா கேக்கிற!” இவன் குடிச்சுட்டு அதங்கட்டி வச்சான் !” அந்த தொல்லை தாங்க முடியாம, அவ இவன உட்டுட்டு ஓடி போயிட்டா!”  இவனும் தையல் மிஷின எங்கோ வித்துபுட்டு ரெண்டு நாளு குடிச்சுட்டு கெடந்தான்.காசு எல்லாம் தீந்தப்புறம் எந்த சாராயக்கடையிலாவது,எவன்கிட்டயாவது, ஒரு ரூவாயுக்கும், ரெண்டு ரூவாய்க்கும் பிச்சை எடுத்துக்கிட்டு கிடப்பான் என்றார். எனக்கு வருத்தமாயிருந்தது. அவர் அமர்ந்து  வேலை பார்த்த இடத்தை பார்த்தேன். அங்கு யாரும் இன்னும் குடியேறவில்லை.அது அப்படியே  வெறுமையாய் இருந்தது. கொஞ்ச நேரம் அவ்விடத்திலேயே நின்றுவிட்டு  சிறுது நேரத்திற்கு பின்பு அவ்விடத்திலிருந்து கிளம்பினேன். முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் கடந்தபின்பும்,  டைலரும் ,லட்சுமணனும் இன்னும்   நெஞ்சுக்குள் கனத்துக்கொண்டிருந்தார்கள்.

 

       

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment