Tuesday, 3 December 2019

அதிர்ச்சி (குறுங்கதை )


அந்த சேதியை திடீரென கேள்விப் பட்டவுடன் மோகன் அதிர்ந்துபோனான். நமக்கு ஏற்கனவே சொல்லாமல் ,கொள்ளலாமல் அப்படியொரு நிகழ்வா!... அவனுடைய கண்கள் மெல்லிய நீர் படலத்துக்குள் சிக்குண்டு தடுமாறிக்கொண்டிருந்தன. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருகணம் திக்குமுக்காடித்தான்போனான்!
பின்னே என்ன.!..
மோகனின் தந்தை சிவராமன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையில் இருந்தார். ஒரு ஆண் குழந்தை ,ஒரு பெண் குழந்தையென அளவான குடும்பம். வாழ்க்கை நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. பிள்ளைகள் இருவரும் எல்கேஜி, யுகேஜி யில் படித்துக்கொண்டிருந்தனர்.
எந்த கவலையுமில்லாமல் மோகனின் தயார் சந்திரா பிள்ளைகளும்,
கணவனுமே உலகம் என வாழ்ந்து வந்தாள்.
திடீரென ஒருநாள் எதிர்பாராத விதமாக மோகனின் அப்பா சாலை விபத்தொன்றில் இறந்துபோனார். சந்திரா நொறுங்கிபோனாள். இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் யாருடைய உதவியுமின்றி நிர்கதியாக நின்றபோது, அவர்களை காப்பாற்றி படிக்க வைத்து ஆளாக்கியது மாமன் ராஜேந்திரன்தான்.
அவருக்கு ஒன்றென்றால் மோகன் துடிக்காமல் என்னசெய்வான்?
செத்தே போவான் ! அந்த அளவுக்கு மாமன் மீது உயிரையே வைத்திருந்தான்.
அம்மா சீக்கிரம் கிளம்புங்க ! கார் ஒன்னு ஏற்பாடு பண்றேன் எல்லோரும் காரிலேயே போய்விடலாம்!” என சொல்லியவாறு மோகன் வீட்டிலிருந்து வெளியே போனான்.
சரியாக காலை ஆறுமணியளவில் மோகனின் வீட்டு முன்பு மகேந்திரா சைலோ வேகமாக வந்து நின்றன.
மோகன் மற்றும் ,தாயார் சந்திரா ,தங்கை, ஆஷா அனைவரும் காரில் ஏறிக்கொள்ள கார் மெதுவாக வேகமெடுத்து சாலையில் ஓடத்தொடங்கியதும், மோகனின் மனதில் அந்த சம்பவம் வேகமாக ஓடத்தொடங்கியது.
எங்களுக்கு அந்த சம்பவத்தை சொல்லாமல் மூடி மறைத்து இப்படி ரகசியமாக செய்வதால் நம்மை அன்னியராக நினைக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் சந்திராவுக்கும், மோகனுக்கும் ஒருங்கே கண்கள் கலங்கியது .
அதற்குள் கார் மாமன் வீடுள்ள தெருவின் முகப்பினை அடைந்ததும் மேளச்சத்தம் ஒலிக்கத்தொடங்கியது. வீட்டின் முகப்பில் ஒரு சிலர் நின்றுகொண்டிருந்தனர். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.நாம் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்ற பரப்பில் பந்தலின் உள்ளே சென்று பார்த்த போதுதான் இன்னும் நிகழ்ச்சி ஏதும் முடியவில்லை என தெரிந்தது.
மாமனும்,அத்தையும் ஜோடியாக அருகருகே நாற்காலியில் அமர்ந்திருந்தனர்,
ஆம் ! அவர்களுக்கு இன்று அறுபதாம் கல்யாணம்!”

No comments:

Post a Comment