Wednesday, 10 April 2019

காவேரி வந்தாள் (10)



Image result for a tamil  widow women in TEARS IN  modern paintingsஎந்த சுகத்தையும் காணாமல் இளம் வயதிலேயே எல்லாவற்றையும் இழந்தவள். பூவை இழந்தாள். பொட்டினை இழந்தாள். சந்தோசம் மொத்தத்தையும் இழந்தாள். உலகம் இன்னதென்று தெரியாத வயதிலேயே எல்லாமும் முடிந்து போனது. அவளுக்கு  முன்னால் உலகம் சூனியமாகி போனது. கெங்கை  கண்ணீர் கங்கையில்  மூழ்கடிக்கப்பட்டாள். அவளின் வானம் மேகமின்றி வறண்டு போனது. வாழ்க்கை வயல்கள் காய்ந்து அனல் காடாகிப்போனது. எங்கும் கானல் நீர் கூட்டம்   எங்கும் அலை அலையாய் நகர்ந்து கொண்டிருந்தன.

அன்றும் வழக்கம்போல்தான் சுப்பிரமணியன் சக ஆட்களோடு கூலிக்கு  கிணறு வெட்ட போனான். மேலே நான்கு ஆட்கள் நின்றுகொண்டு கீழிருந்து வரும் மண்கூடையை மேலே வாங்கி கொட்டுவதற்கு  இரண்டு ஆட்களும் ,கமலையின்  நுகத்தடியை இழுப்பதற்கு ஆறு ஆட்கள் எனவும். கிணற்றில் பாறை போடுவதற்கு நான்கு நபர்களும்,மண் அள்ளி விடுவதற்கு என ஆட்களை பிரித்துக்கொண்டு  கிணறு வெட்டும் வேலை நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் மாலையில்  வேலைகள் எல்லாம்   முடிந்தபின்பு ,கிணற்றுக்குள்ளிருந்து ஆட்களை எல்லாம் வடக்கயிற்றின் வழியாக எந்த சிக்கலுமின்றி ஒவ்வொருவராக மேலே இழுத்து கொண்டுவரவேண்டும் அதில் எந்த சிக்கலுமில்லை. இந்த வேலையோடு பழக்கப்பட்டுப்போன மக்களுக்கு இது ஆபத்தான ஒன்றல்ல,எனினும் ஏதாவது  எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தாலொழிய  பெரிதாக  ஒன்றும் நடந்துவிட போவதுமில்லை. அப்படித்தான் அன்றும் நடந்தது.

எல்லோரும் ஒவ்வொருவராக மேலே வந்து விட்டனர். கடைசியாக சுப்பிரமணியன் காத்திருந்தான். மேலிருந்து வடம் கீழே வந்தவுடன் கவை கழியில் காலைவைத்துகொண்டு விசில் கொடுத்தான். ஆழமான கிணற்றிலிருந்து மேலே இழுத்துக்கொண்டிருந்தனர். பாதி வழியிலேயே கயிற்றை  பிடித்திருந்த  கை பிடி  நழுவிடவே சுப்பிரமணியன். பாதிகிணற்றிலிருந்து பொத்தென்று கீழே விழுந்தான். அதன்பின்பு கிணற்றிலிருந்து  சுப்பிரமணியனின் உடல்  மேலே கொண்டு வரப்பட்டு வீட்டுக்கு எடுத்து  சென்றனர்.

பட்டித்தெருவே கண்ணீரில் மூழ்கியது .அலமேலு அடித்து புரண்டு அழுதாள். காவேரி  சாலையின் புழுதியில் கிடந்து புரண்டாள். பெருமாள்  “என் தெய்வம் மாண்டுபோனதே ,அந்த தெய்வத்துக்கு கண்ணில்லையா ? என தலையில் அடித்துக்கொண்டு அழுதார். வரம் வாங்கி பெற்றபிள்ளை,தவம் கிடந்து பெற்ற பிள்ளை, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே ! பாதியிலேயே புடுங்கிட்டியே ! என எல்லா கடவுளையும் அலமேலு சபித்துக்கொண்டாள். காவேரி  தலைவிரி கோலமாக அந்த காளி அவதாரத்தை போல மிகவும்  உக்கிரமாக காணப்பட்டாள். பிரம்மை பிடித்தது போல யாரிடமும் பேசாமல் வெறுமனே வானத்தை வெறித்துப்பார்த்து கொண்டிருந்தாள். சொந்தபந்தம் சுற்றி நின்று ஆளாளுக்கு கோவென அழுது அரற்றிக்கொண்டிருந்தது. மிக உரிமையோடு ஒரு சிலர்  காவேரியை  அரவணைப்போடு கட்டிப்பிடித்து அழுதபோதும் ,எந்த  எதிர்வினையும் ஆற்றாமல்,அப்படியே சிலையாய் சமைந்து நின்றாள். சுப்பிரமணியனின்  இறுதி புறப்பாடுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே முட்டு முட்டாய் உட்கார்ந்திருந்த கும்பல் பரபரப்படைய துவங்கின. சடங்குகள் முற்றாக நிறைவேற்றப்பட்டு இடுகாட்டுக்கு சுப்பிரமணியனின் உடல் எடுத்துச்செல்லப்பட்டன.  

சுப்பிரமணியனின் வாழ்க்கை வானவில்லாய் தோன்றி ,கோடை மேகமாய்  கடந்து போனது. எந்த அதிர்வுமில்லாமல்,எந்த தடமும் இல்லாமல் காற்றில் கரைந்து போனான். அவனுக்கான ஒருத்தி .மட்டும் காலமெல்லாம் கண்ணீரிலும்,துன்பத்திலும் காலத்தை கழிக்க வேண்டும் என்பது  எழுதாத விதியாகிப்போனது. அவனின் குடும்பம் முற்றாக நொறுங்கிபோனது. ஒவ்வொருவரும் விருப்பமில்லாத வாழ்வோடு பிணைக்கப்பட்டு நாட்களை நகர்த்த தொடங்கினர்.

காரியங்கள் அனைத்தும் நடந்து முடிந்தன. ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சுப்பிரமணியன் வீட்டில் கெங்கை இப்போது  வேண்டாத ஒரு பொருள் ஆனாள். பதினாறாம் நாள் கருமாதி காரியம் முடிந்த பின்னர்  கங்கையின் பெற்றோர்  கெங்கையை தன்னுடன் பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்லலாமா என  கனத்த மனதோடு அலமேலுவிடம்  கேட்டனர். ஒரு கணம் காவேரியை  உறுப்பார்த்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தன. எல்லாம் கடவுள் செயல்,யாரு தலைஎழுத்தை யாரு மாற்ற முடியும் ? எல்லாம்  ஒண்ணுமில்லாம போச்சு!” என பெரு மூச்சுவிட்டவள், எப்படியோ அவ வாழ்க்கை வீணா போச்சு. உங்க கையோடு அவள கொண்ட்டு போய் ஏதோ பண்ணுங்க,அவளுக்கு எப்ப இங்கு வரணும்னு தோணுதோ அப்ப அப்ப வந்துட்டு போகட்டும்”  என அலமேலு வருத்தமுடன் வேண்டா விருப்பாய்  மருமகளை அனுப்பி வைத்தாள்.

கனத்த மனதோடு கண்ணீரும் கம்பலையுமாய் பெற்றோர்களுடன்,தனது புகுந்தகத்தை  திரும்பி திரும்பி பார்த்தவாறு  நடந்து சென்றாள்.சொந்த மகளாக எண்ணி வளர்த்த மருமகள் இப்படி அமங்கலமாக போகிறாளே என  அவள் நெஞ்சு குமுறிக்கொண்டிருந்தது. இனி இவளை எப்போது காண்பேன். பெத்த புள்ளையாய் கடசி வரைக்கும் கூட இருக்கும் என நினைச்சேனே இப்படி என்னை விட்டுட்டு போறாளே !’ என் அடிவயிறு பத்திக்கிட்டு எரியுதே!” கடவுளே உனக்கு கண்ணில்லையா !” என் மகன் வாழ்க்கையை இப்படி ஏன் பாதியிலேயே புடிங்கிட்டே!” நீ நல்லா இருப்பியா ?” என சாபமிட்டாள்.

காவேரி   அங்கிருந்து பெற்றோருடன் கடந்துபோனபின்னரும் நீண்ட நேரம் அவளை நினைந்து அலமேலு அழுது புலம்பிக்கொண்டிருந்தாள் .காவேரி  அங்கிருந்து போனதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.அன்னம் தண்ணி எதுவுமில்லாமல் தரையை தடவிக்கொண்டே வைத்த ஒப்பாரியை விடாமல் தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் அமைதியின்றி அழுதுக்கொண்டேயிருந்தாள்.
பெருமாள் ஒரு பக்கம்  நாய் குட்டி சுருண்டு கிடப்பதைப்போல கொட்டாயின்   ஒரு மூலையில் முடங்கி  கிடந்தார்.அவ்வப்போது மாட்டுக்கு கொஞ்சம் தீனி அள்ளிப்போட்டு,தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் சோறு தண்ணீர் குடிக்காமல் அப்படியே முடங்கி கிடந்தார். இனி யாருக்காக வாழவேண்டும் ?இனி யாருக்காக இருக்கவேண்டும் ? என்ற கேள்விகள்  அவர்களுடைய உள்ளத்தில் குடைந்து கொண்டிருந்தன. அவளுடைய  குடும்பம் எனும் கட்டிடத்தில் ஒரு செங்கல் சிதைந்தது.மொத்த கட்டிடமும் சரிந்து நொறுங்கிப்போனது. எல்லாம் வெறும் கதையாய் ,கனவாய் மெல்ல போனது. எந்த பின்னணியுமில்லாமல் அத்தோடு அலமேலு ,பெருமாளின் வாழ்க்கை வரலாற்றின் பக்கங்கள் ஒரு காலக்கட்டத்தை கடந்து. நிகழ்காலத்தின் நிதர்சனத்திற்கு அப்பால் விலகி சென்றுகொண்டிருந்தது. காவேரியின்  வாழ்க்கை புதிய பரிணாமத்துடன்  மாறுபட்ட புதிய வாழ்க்கை சூழலுக்குள்  அவதாரம் எடுத்துக்கொண்டிருந்தது.
                                                      தொடர்வோம் .....



 










No comments:

Post a Comment