எப்போதாவது அவளின் அம்மாவின் அழைப்பின் குரல்
கேட்டு ஏதாவது பதில் அளிப்பாள். அல்லாவிட்டால் மவுனமாக இருப்பாள்.ஏதேனும் பேச்சுகொடுத்தாலும் அதுவும் அந்த பேச்சில் வன்மம் தெரிந்தால் எதற்கும் மறுதலிக்க
மாட்டாள். சாப்பிடுவதை அவள் வழக்கமாக கொண்டிருக்கவில்லை.விரும்பும்போது
அவளின் விருப்பமறிந்து அவளது அம்மா சாப்பிட வைப்பாள். இல்லாவிட்டால் அதைபற்றியும்
அவள் கவலைப்பட்டு தன்னுடைய உணர்வுகளை அவள் வெளிப்படுத்துவதில்லை. பேசும் மடந்தை
அவள் ,ஒருநாள் பேசா மடந்தையாய் ஆனதை
நினைத்து அவளது அம்மா பார்வதி பெருத்த கவலைக்கொண்டாள்.தன்னுடைய கணவன்
ஆறுமுகத்துடன் சொல்லி அழத்தொடங்கினாள். “ஏன்யா பேசாம இருக்க” என் புள்ள இப்படி
கெடந்து உருகி சாகணுமா ? உனக்கு மன சாட்சி இல்லையா? பேசாம இப்படி கல்லாட்டம்
இருந்தியின்னா எம்புள்ளையும்யு நானும் எங்காவது ஆத்துலேயோ.கினத்துலேயே விழுந்து
செத்துடுவோம்! என அரற்றினாள்.
மனைவி பார்வதியின் அரற்றலைக்கண்டு
பதறிப்போனான் ஆறுமுகம். ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவன் “ எனக்கும் மட்டும் வலி
வருத்தம் இல்லாமலா இருக்கு ! என்ன செய்றது? நானும் வேண்டாத தெய்வமில்ல,போகாத
கோயிலல்ல!” எந்த சாமியும் இன்னும் கண்ணு தொறக்கல, ‘ராவா பகலா தூக்கமா வருது ?”
எப்ப பார்த்தாலும் எம் புள்ள நெலமைத்தானே என் கண்ணு முன்னே வருது !” ஏதோ
நான் மட்டும் சந்தோஷமா இருக்கற மாதிரில்ல நினைக்கீறிங்க !” அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல
! எனக்கும் ஆசா பாசமெல்லாம் இருக்கு,ஆனால் நீங்க அதை வெளி காட்டுறீங்க!” நான்
உங்களை மாதிரி வெளிக்காட்டுல அவ்வளவுதான் வித்தியாசம்!’ என்றான் ஆறுமுகம்.
கணவனின் உணர்வுகளை சற்று புரிந்து கொண்டவளாய்
அமைதியான பார்வதி ஏதாவது பண்ணுங்க என
சொல்லியவாறு கண்களை கசக்கியவாறு அங்கிருந்து தூர சென்றாள். எதாவது செய்தே தீர
வேண்டும் என மனதில் நினைத்தவாறே தெருவிற்கு நடக்க தொடங்கினான். எதாவது குறி
கேட்க வேண்டும் அதற்கு மாரியம்மன் கோயில் பூசாரியை பார்ப்பதுதான் நல்லது என நேரே
மாரியம்மன் கோயிலுக்கு சென்றான். அன்று வெள்ளிக்கிழமையாதலால் கோயிலில் கூட்டம்
அதிகமாக இருந்தது.கூட்டம் சற்று குறையும் வரை காத்திருப்போம் என எதிரே அடுக்கி
கிடந்த செமபுறாங் கல்லின்மீது உட்கார்ந்து கொண்டு மகளைப்பற்றி நினைக்கத்தொடங்கினார்.
எப்படி எப்படியெல்லாமோ வாழ வேண்டிய
தனது மகளின் வாழ்க்கை இப்படி பாழாய்போனதே,இதற்கு வேற வழிதான் என்ன என
ஒன்றன் பின் ஒன்றாக எண்ண அலைகள் பயணித்தன.
“ டேய் ஆறுமுகம்!” என்ற குரல் ஆறுமுகத்தின் சலனத்தை கலைத்தன. சுய நினைவுக்கு
திரும்பியவனாய் என்ன பூசாரியாரே ! நீங்க ரொம்ப வேலையாய் இருக்கியேன்னு அங்க கொஞ்ச
நேரம் ஒக்காந்திருந்தேன் என தான் உட்கார்ந்திருந்தர்கான காரணத்தை
விளக்கியவாறு,தான் அவரை தேடி வந்ததற்கான காரணத்தை கண்ணீர் பொங்க விளக்கி விபரமாக
கூறினார். ஆறுமுகம் சொல்லிய அனைத்தையும் மனதளவில் உள்வாங்கி கண்டு நீண்ட பெருமூச்சுக்கு பின்னர் பூசாரி பேச
ஆரம்பித்தார். எல்லாம் எனக்கும் தெரியும் ! என்ன பண்றது ஆறுமுகம்,இது ஆண்டவன் விட்ட வழி.ஆண்டவனுக்கு
எல்லாம் தெரியும். நிச்சயம் காலம் கனியும்,அதற்கு ஒரு காலம் வரும்.,அது வரைக்கும்
கொஞ்சம் பொறுமை வேணும். “ஒண்ணு செய் ஆறுமுகம்! உன் பொண்ண எங்காவது சொந்த
பந்தத்துல கொஞ்ச நாளைக்கு இடம் மாத்தியா
இருக்கட்டும்! கொஞ்சம் இடம் மாத்தியா இருந்தா ,அவ மனசுல நம்ப நினைக்கிற
மாதிரி ஏதாவது மாற்றம் உண்டாகும், அதுக்கெல்லாம் பொறுமையும் சமயோசித்தமும்
இருந்தால்தான் நம்ப புள்ளைய நம்மளால காப்பாத்த முடியும் அதை விட்டுட்டு,நம்ம
அவசரத்துக்கு அவசரம் காட்டுனா ஏதாச்சும் விபரீதம் நடந்துடும்,அதுக்கு நாமே
பொறுப்பாயிடுவோம் !” என பூசாரி விலாவாரியாக சொல்லி முடித்தான்.பூசாரியின் பேச்சில்
சற்று நம்பிக்கை பிறந்ததால் தீபாராதனை
தட்டில் ஐந்து ரூபாயை போட்டு விட்டு அங்கிருந்து வீட்டுக்கு போனான் ஆறுமுகம் !”
நேரே
வீட்டுக்கு போனான் ஆறுமுகம்.தூரத்தில் கணவன் வருவதைக்கண்டு பூசாரி ”என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ!”என தெரிந்து
கொள்ளும் ஆவலில் கணவனிடம் சென்றாள்.
ஆறுமுகம் கட்டிலில் அமர்ந்தது அருகில் சென்று தரையில் அமர்ந்து கொண்டு
ஆறுமுகத்தின் முகத்தையே உற்று பார்த்த வண்ணம்,ஏதாச்சும் சொல்ல மாட்டாரா!” என
காத்திருந்தாள்.இறுக்கமான மன நிலையில் இருந்தாலும் மனைவியின் எதிர்பார்ப்புகளை
புரிந்து கொண்டவராக பூசாரி கோயிலில் சொன்ன அனைத்தையும் அப்படியே கிளிபிள்ளை
சொல்வதைப்போல சொல்லி முடித்தார் ஆறுமுகம்.
நான் கூட அதைத்தான் நெனைச்சேன்.அவரும்
அப்படியே அதை சொல்லியிருக்கிறார்!” என ஒப்புதல் அழைத்தாள் பார்வதி. அதுபாட்டுக்கு,
அது விரும்புற வரைக்கும் இருக்கட்டும்,நாம ஏதும் இடைஞ்சல் பண்ண வேணாம்!
நடக்கிறது எதுவோ அது அப்படியே நடக்கட்டும்
!” என்றான் ஆறுமுகம். இருவரும் காவேரி விடயத்தில் ஒன்றுபட்ட கருத்து ஒற்றுமைக்கு
வந்திருப்பது பெரிய விஷயம்தான். இவ்வளவு நாட்களாக மனதை அழுத்திக்கொண்டிருந்த பெரிய சுமை ஒன்று சற்று தளர்ந்திருப்பது போன்று
உணர்வு ஏற்பட்டது.ஆனாலும் அது முற்றாக ஒரு நிறைவை தரவில்லை. தனது மகளுக்கு ஒரு
மாற்று வாழ்க்கை ஒன்று அமைய வேண்டும் என்பதில் இருவரின் உள்ளத்திலும் நடு நாயகமாக பொது எண்ணம் ஒன்று அவர்களை மெல்ல மெல்ல
குலைத்துக்கொண்டிருன்தது. பொழுதெல்லாம் ஆடு ,மாட்டு ,கொல்லைக்காடு என்ற பிராக்கில்
சற்று பொழுது போனாலும் ,இரவானால் போதும் மீண்டும் கவலையும் துயரமும்
தொற்றிக்கொள்கிறது. பேசாமல் வெற்றிலையை மென்று கொண்டு புரண்டு புரண்டு இரவெல்லாம்
நெளிகிறார். இதற்கு முன்பெல்லாம் ,நேரா நேரத்திற்கு கொல்லை தலைப்பிலிருந்து வந்து விடுவார்.அங்கும்,இங்கும்
வெளியே போகமாட்டார். சாப்பிட்டால் அப்படியே திண்ணையில் முடங்கி விடுவார்.ஆனால்
மகளுக்கு இப்படியொரு அமங்கலமான வாழ்க்கை அமைந்த பிறகு வெளியிலே எங்கும் போவது கிடையாது.
காவேரி எப்போதாவது வெளியே எட்டி பார்க்கிறாள்.
“அம்மா” என்கிறது அந்த மென்மையான ஒரு குரல்.அந்த குரலில்தான் எத்தனை வலிகள். அந்த
குரலில்தான் எத்தனை சோகம்,ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் இயல்பாய்
இருப்பதுபோல ,எந்த பாசாங்கும் இல்லாத தன்மையுடன் தனது பெற்றோர்களுடன் பேசுகிறது.அதனிடத்தில்
பொதிந்திருக்கும் ஆழ்மனத்தின் அழுகுரல் எதனிடத்திலும்
கேட்கவில்லை. ஒரு குழந்தையாய் தனது பெற்றோர்களிடத்தில் எப்போதும் இருப்பது போலவே
இருக்க விழைகிறது.
தூரத்தில் நின்று கொண்டிருந்த பார்வதி மகளின் அழைப்பு குரல் கேட்டு “திடு திடு “ வென ஓடி வந்தாள். என்னம்மா கூப்பிட்ட?”
“ஒண்ணுமில்லம்மா!” இல்ல! “எதுவா இருந்தாலும் சொல்லும்மா!”
“இல்லம்மா !” ஒரே
இடத்தில இருக்கிறது புழுக்கமா இருக்குது! அதான் கூப்பிட்டேன். மாங்காட்டு அத்தை வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு
போய்ட்டு வரலாமா? என்றாள் கெங்கை. சரிம்மா போவோம்!” அப்பாவ ஒரு வார்த்தை
கேட்டுட்டு நாளைக்கு போகலாமே!”சரிம்மா ! ஆண்டிமடம் போயிருக்கிற அப்பா
வரட்டும்! அவர கேட்டுட்டே போலாமே!” என்றாள் காவேரி .
மாலையில் ஆறுமுகம் வீடு திரும்பியவுடன், மகள்
அத்தைவீடு சென்றுவர விரும்பும் செய்தியை ஆறுமுகத்திடம்
பார்வதி சொன்னாள். சிறிது நேரம் அமைதி காத்த ஆறுமுகம் “ சரி பார்வதி !” நீயும் கூடபோயிட்டுவா ! என சம்மதம் தெரிவித்தான். மரு நாள் காலை விடிகாலையிலேயே
மகளை அழைத்துக்கொண்டு நடக்கத்துவங்கினார்கள். பகல் பன்னிரெண்டு மணிக்குள்ளாகவே மாத்தூர்
வழியாக மாங்காட்டை சென்றடைந்தார்கள். நாத்தார்
வீட்டினில் வீட்டு படல் சாத்தியிருந்த்தது.அனேகமாக துண்டுக்காட்டு கொல்லைக்குத்தான்
போயிருக்கவேண்டும் என நினைத்து தனது மகளை அழைத்துக்கொண்டு அத்தை வீட்டு கொல்லைக்கு
போனாள்.அங்கு சின்னப்பிள்ளை அத்தையும்,அத்தைமகளும் களைவேட்டிக்கொண்டிருந்தார்கள். அண்ணன்
மனைவி பார்வதியும்,காவேரியும் கொல்லைக்கே தங்களை தேடி வந்திருப்பதை கண்டு ஆச்சரியமும் ,வியப்பும் அடைந்து வாங்க அண்ணியா
! வா கெங்க ! என வரவேற்றாள் சின்னப்பிள்ளை. வெகு சீக்கிரத்தில் கொல்லையை விட்டு கிளம்பி
நேரா நேரத்திற்கு பார்வதியையும்,காவேரியையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள் சின்னப்பிள்ளை.
தொடரும் ...
No comments:
Post a Comment