அந்த
வடக்கு வேலியோரத்தில்
ஒரு மூங்கில் தோப்பு
கோடைகாலத்தை தவிர
மற்றைய காலங்களில்
யாருடைய கவனத்தையும்
அவ்வளவாக
ஈர்த்ததில்லை..!
புரட்டாசி
ஐப்பசி மாதங்களில்
விரகு ஒடிக்க
அவ்வபோது
ஒரு சிலர்
இங்கு வரும் போது
அழுத்தமாக
இதை கவனிக்க
யாரும் கவனிப்பதில்லை.
எப்போதும் போலவே
எந்த சலனத்தையும் ஏற்ப்படுத்தாமல்
அது
அப்படியே கிடக்கிறது..!
கோடைகாலமானாலும்
குளிர்காலமானாலும்
குரங்குகளின்
கூட்டம் ஒன்று
இந்த தோப்பில்
வாழ்ந்து வருகிறது..!
என்னதான்
கவண் என்றும்
கல் என்றும்
துரத்தினாலும்
போக மறுக்கிறது !
அழையாமல் வந்த விருந்தாளி
போகாமல்
அடம் பிடிப்பதைபோல,
காலப்போக்கில்
அதை யாரும்
அவ்வளவாக கண்டு கொள்வதில்லை !
எந்த தொந்தரவும் இல்லாமல்
வந்து போகிறது..!
கூடவே
செம்போத்து பறவைகள்
ஒரு சோடி
அதே மூங்கில் தோப்பில்
மூங்கில் சருகுகளை கொண்டு
கூடுகட்டியிருக்கின்றன..!
அடிக்கடி
கூவி ...கூவி
தனது இருத்தலை
காட்டி கொள்கின்றன.
நாங்கள்
அவ்வபோது
அலக்கு கழியால்
அந்த கூட்டினில் குத்தி
அது இருக்கா...
இல்லையா
அல்லது
வேறு எங்காவது ஓடிவிட்டதா
என -
ஆராய்ச்சி செய்துவந்தோம்..!
யாரும்
இந்த தோப்பினில்
நெருங்க முடியாத அளவிற்கு
முட்களால் சூழப்பட்டிருக்கிறது
ஆனால்...
இதன் கீழ் இருந்த முட்களை
சுத்தம் செய்து
மூங்கில் மேலே
ஏறுவதற்கு
கணுக்களால் படி அமைத்து
முள் வெட்டியிருந்தேன்..!
அடிக்கடி
அந்த மூங்கில்கள் மீதேறி
சுற்றிலும் பார்ப்பதில்
ஒரு வித தூண்டுதல்
என்னை
உள்ளுக்குள்
இருந்து வந்தன !
வடக்கு திசையை நோக்கி
உற்று வெறித்து பார்ப்பதுண்டு
எங்கு பார்த்தாலும்
மரங்களை மூடி நிற்கும்
நீல நிற புகை மூட்டம் !
ஆட்கள் நடமாட்டமில்லாமல்
இயற்கை
நிசப்த்தத்தில்
ஆழ்ந்து கிடக்கும்.
புகையை கக்கிகொண்டு
சென்னையை நோக்கி செல்லும்
அந்த கால புகை வண்டி
விட்டு செல்லும்
கறிய புகை
வண்டி சென்றபின்பும்
பல கிலோ மீட்டர் தூரம்
வாலாக தெரியும்!
இலைகள் உதிர்ந்தும் ... உதிராமல்...
நிற்கும்
வம்பரை மரங்கள் !
அவற்றில் உட்கார்ந்து கொண்டு
உர்... உர்...
என குரலெழுப்பும் மணிப்புறா.
எங்கு நோக்கினும்
மரங்களை ஒட்டி
பரந்த பொட்டல் வெளிகள்...
கோடை வெயிலின் வெம்மை தாளாமல்
அனலாய் கொதிக்கிறது !
ஆங்காங்கே
கானல் நீர் தெரிகின்றன!
காக்கை குருவிகள்
நடமாட்டம் கூட கிடையாது
ஒளிவதற்கு நிழலே கிடைக்காததால்
நீண்ட தூரம்
எங்கோ சென்று விட்டன!
ஆனாலும்
எங்கோ தூரத்தில்
அக்கக்கா குருவிகள் ..!
தன் அக்காளில்
ஒருத்தி
நீண்டகாலத்திறுக் முன்பு
ஆற்றில்
தண்ணீர் குடிக்கும் போது
தண்ணீரோடு
ஆற்றினில்
அடித்து செல்லப்பட்டதை
நினைத்து
இன்றுவரை
அழுது கொண்டிருக்கும் !
வேலிகளில் பர்ந்திருந்த
முசுட்டை கொடி கூட
வெயில் தாங்காமல்
இலைகள் கூட உதிர்ந்து விட்டன!
அதனிடையே முந்தரிப்பழத்தைகவ்வி கொண்டு
அணில்கள்கூட்டுக்கு போகின்றன!
மண் குடத்திலே
வைத்திருக்கும் தண்ணீர்
போதவில்லை!
அருகிலிருக்கும்
மூக்காயி
தாத்தா கிணற்றுக்கு
தண்ணீர் மொள்ள
ஆயி போக சொன்னாள்!
இடிந்த பாழடைந்த மண் கேணி
சுற்றிலும்
சிதைந்த மண் படிகட்டுகளை கடந்து
ஐம்பதடி
கிணற்றின் அடிக்கு சென்றால்,
காய்ந்த சறுகு குவியல்களுக்கிடையில்
சிவப்பு நிறத்தில்கொஞ்சூண்டு தெரியும்
குழம்பலான தண்ணீரை
மண் குடத்தில் நிரப்பி
ஒரு சாகசமான
சர்க்கஸ்காரரைப்போல
மேலேறி வந்து
கொளுத்தும் பொடியில்
அரை பர்லாங்க் நடந்து வந்து
ஆயியிடம் கொடுத்தால்...
அந்த தண்ணீரால்
சொத்தை துவரையை
அவிப்பாள்!
ஆளுக்கு கொஞ்சம்
கைகளில் கொடுப்பாள்!
பத்தும் பத்தாமல்
வாங்கி தின்று
குப்பை கலந்த
தண்ணீரை குடிப்போம்!
வயது வேறு பாடின்றி
அணில்
முயல் வேட்டையாடி
மிள்காய் கிள்ளி போட்டு
அவித்து சாப்பிட்டு ...
தரையோடு
தாழ்வாக கிடக்கும்
மாமரத்தில்
ஊஞ்சல் கட்டி,
ஒய்யாரமாய்
ஊசலாடி,
பசித்தால்
அதே மாமரத்தில்
மாம்பழம் பறித்து சாப்பிட்டு
பசியாரி...
மாமரத்தின் கீழே
பல்லாங்குழி வெட்டி,
ஆட்டாம்புழுக்கை
புளியங்கொட்டைகளால்
பல்லாங்குழி விளையாடி...
தோற்றவர் கைகளை இழுத்து
தரையில் வைத்து
மற்றவர்கள் பிடித்து கொள்ள...
வெற்றிபெற்றவர்கள்
தனது கைகளால்
தோற்றவர் கைகள் மீது
மங்கு மங்குன்னு குத்துவார்கள்!
தோற்றவர்கள்
செல்லமாக வலியில் துடிப்பார்கள்!
வாழ்க்கை
எந்த ஆதாயத்தையும்
எதிர்பாராமல்
எங்கள் முன்னே
ஏகாந்தமாய் கிடந்தது !
உயர்திணை ஈர்க்காத
என்னை
அக்றினையோடு
சிநேகம் கொள்ள தூண்டிய
என் சூழல்
என்னை எப்போதும்
அடையாளப்படுத்தி கொண்டிருந்தன.
உயிர்த்தலுக்கான
வாழ்க்கை போராட்டம்
தன்
காலச்சூழலில்
என்னை
இடம் பெயர்த்தன!
என்னதான்
வாழ்க்கை
கடந்து போன சம்பவங்களில்
மூழ்கடிக்கப்பட்டாலும்,
அந்த மூங்கில் தோப்பும்
அதனை ஒட்டிய
மாமரத்தயும்
மறக்கமுடியாமல்
நேரம் கிடைக்கும் போது
நினைத்து வந்திருக்கிறேன் !
சில காலம்
எனக்கும்
மூங்கிலுக்கும்
இடைவெளிகள்
அதிகமாகி கொண்டே சென்றன!
ஊரிலிருந்து
ஆயி வரும்போதெல்லாம்
மூங்கில் தோப்பு பற்றி
அடிக்கடி கேட்டு வைத்தேன்!
தனக்கு வயதானதை போல,
மூங்கிலுக்கும்
வயதாகி போனதால்
பட்டுப்போயிகொண்டு வருவதாகவும்
சொல்லிக்கொண்டுவந்தாள்!
ஒரு நாள்
ஆயியும்
செத்து போய்விட்டாள்!
எனினும்-
கூடவே
ஆயியையும்
மூங்கில் தோப்பையும்
என்
பதிவுகளிலிருந்து
அடிக்கடி
புதுப்பித்துக்கொண்டே
வந்திருக்கிறேன் !
ஒரு நாள்
ஊரிலிருந்து வந்த
அத்தையிடம்
மூங்கில் மரம் என்னாச்சு என்றேன்!
அந்த இடத்தில்
தற்போது சுண்ணாம்புக்கல் சுரங்கம்
இருப்பதாக
அத்தை சொன்னாள்..!
ஆனாலும்
அந்த
ஒற்றை மூங்கில் தோப்பு...
ஒற்றை பனைமரம்...
சூரியனார் கோவில்...
இன்னும்
எனக்குள்..
இருந்துகொண்டுதானிருக்கின்றன.
No comments:
Post a Comment