Monday, 24 December 2018

முத்தம்மன் குளம்





நிண்ணியூர்
எல்லைக்குள்
முத்தம்மன் குளம் இருந்தாலும்
இலைக்கடம்பூருக்கு
இதுதான்
வரவேற்பாளன் போல
இன்றும்...


அதே முத்தம்மன் குளம்
அதே இடத்தில் இருக்கிறது.
ஆனால்...
முன்பு  ஒருநாள்
அன்று இருந்த அரசமரத்தின் பொந்தில்
யாரோ மர்ம   ஆசாமிகள்
பீடி நெருப்பை
போட்டு விட்டு போக
அரச மரம் முழுதும்  எரிந்து
கீழே முறிந்து விழுந்தது.
இலுப்பை மரம் மட்டும்
மிச்சம்  இருக்கிறது..!


ஆனால்
பழைய  முகங்கள்
அதில் இல்லை.


பொழுது சாய்ந்தால்
போதும்
வாடிக்கையான  மனிதர்கள்
பலர்
வாடிக்கையாக
செந்துறைக்கு நடக்க தொடங்கிவிடுவார்கள்.


சிறு  பையை கையில்
பிடித்து கொண்டு  முருகேசர்
நான்கு மணிக்கே
சைக்கிள்
இருந்தாலும்...
இல்லையென்றாலும்...
முத்தம்மன் குளத்தின் வழியாக
நடக்க தொடங்கிவிடுவார்.


இப்போதும்
மனதுக்குள்
பசுமையாய் இருக்கிறது!
அவர் பொடி போடும் அழகு...
ரசிக்கத்தக்கது..!


டிரைவர்
துரைராஜ் மாமன்
எனது வயது கடந்த நண்பர்.
என்
இளமை காலத்திலேயே
எனக்கு
நண்பராகவும்
மாமனாகவும்
இருந்தவர்.
மாமனிதர்..!
நடபின் இலக்கணம்
துரைராஜ்..!


நாங்களெல்லாம்
கால் நடையாக
வேல் முருகன் கொட்டகைக்கு
நடந்தே போவோம்!
சினிமாவை தவிர
எங்களுக்கு
வேறு உலகம்
தெரியாமலிருந்தது.


போகும்போதும்
வரும்போதும்
முத்தமன் குளத்தில்
முகம் புதைத்து
தூக்கத்தை  கலைப்போம்.


பள்ளிக்கூடம் போகாமல்
பல நாட்கள்
முத்தம்மன் குளத்தில்
ஒளிந்து கொண்டு
குயில் பிடித்து ...
பொழுதுகளின்
திசைகளில்
எனது நாட்களை
கரி துண்டுகளால் எழுதியதுண்டு.



பள்ளிக்கு
ஒரு நாள் விட்டு
ஒரு நாள்
போகும் போதெல்லாம்
ஒரு -
ஆசிரியனை பார்ப்பது  போல
தினந்தோறும்
முத்தம்மன் குளத்தை
பார்த்து சென்றிருக்கிறேன்.


ஆனால்...
இன்றைய முத்தம்மன் குளத்தை  சுற்றிலும்
புதிய வீடுகள் முளைத்திருக்கின்றன.
எப்போதும்
பரப்பும்
ஆரவாரமும்   சூழ்ந்து
பழைய
அமைதியும்
மவுனமும் செத்து கிடக்கின்றது ..!
என்
பழைய முத்தம்மன் குளத்தை காணவில்லை..!

No comments:

Post a Comment