Monday, 24 December 2018

ஆயா

சிலம்பூர்  ஆயாவே
உனக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கம் !



எனது
ஜீவித்தலின்
ஆதிமூலம்   நீ !

 
உனது
வயிற்றில்  பிறக்காத
காரணத்தால்
என்னை
உன் பிள்ளையில்லை
என -
ஏற்றுக்கொள்ள
நீ
மறுத்ததில்லை ..!


பெற்றவளுக்கு
இருந்த
பெரிய பொறுப்பை காட்டிலும்
நீதான் தான்
என் எதிர்காலம்   குறித்து
அதிகம்
கவலைப்பட்டாய் !
பாவம்
நீதான்
எனக்காக  எவ்வளவு
துன்பப்பட்டாய் !


வாழ்க்கை  நிராகரித்த
சமூகத்தின்
கடைகோடியில்
மதிப்பிழந்த  நாணயமாய்
கிடந்த என்னை
சமூக சந்தையில்
நான்
நல்ல  விலை போக
நீ
தினம் தினம்
செத்து பிழைத்தாய் !


உயிர்  கொடுத்தவள்
ஒருத்தி,
அதை
உயிர்ப்பித்தவள்  நீ ..!


கால் படி
அரிசி வாங்கி
கஞ்சிவைத்து
என்னை மட்டும்  சாப்பிட சொல்லி  விட்டு
நீயும் -
உனது   மகளும்
சோள தவிட்டை
முருங்கை கீரையில்  போட்டு
சுண்டி  தின்னது
எனக்கு
இன்னும்
நினைவிருக்கிறது !



பேரன்
எனக்காக
நீ  எத்தனை தடவை
உன் மகனிடம்
அவமானப்பட்டாய் !



ஒருநாள்
தலையில்
மண் குடத்தில்
தண்ணீர் சுமந்து கொண்டு வரும்போது,
உன்  தள்ளாத
வயதைக்கூட
நினைத்துப்பார்க்காமல்
நீ -
எனக்கு  முன்னுரிமை  கொடுத்து
வளர்ப்பதை
பொறுக்கமாட்டாத
 உன் மகன் 
நீ -
தலையில்  சுமந்து நின்ற
 மண்  குடத்தை உடைத்தார் !
குடம்  உடைந்து
தண்ணீரில்
முற்றாக நனைந்தாய் !
நான்
கண்ணீரில்  நனைந்தேன் !


உனது  ஒளியில்
உயிர்வாழும்
உயிர் நான்


நீ
ஒரு பலகீனமான  பெண்மணி !
நீ
வைத்திருக்கும்
காசை பிடுங்க
உன்னிடம்
நைசாக பேசினால் போதும்
வைத்திருக்கும்
எல்லா காசையும்
என்னிடம்  கொடுப்பாய் !
வெடுக்குன்னு
பிடுங்கி கொண்டு 
சினிமா பார்க்க   ஓடிவிடுவேன்..!



படிப்பை பற்றி
உனக்கு ஒன்றும்  தெரியாது !
ஆறாம்  வகுப்பு படிக்கும்
உன் பேரனாகிய   நான்
பெரிய
கலெக்டருக்கு
படிப்பதாக
நினைத்து கொண்டிருந்தாய் !


தள்ளாத வயதிலும்
களையெடுக்க போனாய் !
தழைக்கட்டு சுமந்தாய் !
வஞ்சினபுரம்  வரை
வரகு அறுக்க போனாய் !
மாம்பழம்
விற்க போனாய் !
நானும்
கூட  வந்திருக்கிறேன் !


ஒரு
குடிகாரனுக்கு
வாழ்க்கை ப்பட்டு
நாசமாய் போன
தன்   மகளின்  வாழ்க்கைக்காக
காலங்காலமாக
ரத்தம் சிந்தி 
ஓடாய்  உழைத்து
உருகுலைந்து  போனாய் !



மகன்கள்  குடிகாரர்கள் !
மகன்கள்  பெற்றெடுத்த
பேரப்பிள்ளைகள்  குடிகாரர்கள் !
மருமகன்  குடிகாரன் !
மகள்  வாழாவெட்டி !
நரகத்தின் மத்தியில்
வாழ்நாளெல்லாம்
செத்து பிழைத்தாய் !
குடிகாரர்களின்  கொடுமை
நீ -
சாகும் வரை  தொடர்ந்தது !




கடுமையான
உழைப்போடு பிணைக்கப்பட்ட  நீ ...
என்பது ஆண்டுகள்
இடை விடாமல்  உழைத்திருக்கிறாய் !
அதில்
நாற்பது ஆண்டுகள்
உனது   பிள்ளைகளுக்கும் .
மீதம்
 நாற்பது   ஆண்டுகள்
எனக்காகவும்
எனது 
பிள்ளைக்களுக்காகவும் 
உழைத்திருக்கிறாய் !



ஓய்வை  பற்றி
நீ பேசியதாக
எனக்கு  நினைவில்லை!
சும்மா
உட்கார்ந்து  கிடந்தால்
எப்படி பிழைக்க முடியும்
என -
நீ  சொல்லுவாய் !
குந்தி  தின்றால்
குன்றும்  கறையும்
என்பாய் !


தனக்காக
எதுவும் வைத்துகொள்ளாதவள் !
எனக்காக
அனைத்தையும்  இழந்தவள்!
இறுதிவரை
இழப்பதற்கு  ஒன்றுமில்லை
என -
அவள்  எண்ணவில்லை !
ஏனெனில்
உலகில்
எல்லையற்ற
அவளின்  அன்புக்கு
 ஈடு  எதுவுமில்லை !

நிற்கதியாய்  நின்ற
என்னையும் ...
என்னை பெற்ற வளையும் ...
ஆதரித்து
அடைக்கலம் கொடுத்த
ஆலமரம்  அவள்.



அவள்
எந்த யுகத்தில்  பிறந்திருக்கிறாள் ?
எங்கே      இருக்கிறாள் ...?
நிகழ் காலத்தின்
வாழ்க்கை  நெருக்கடியிலும்
அவளைக்குறித்த
எனது -
பிரக்ஞ்சையிலிருந்து
என்றும்
பிரிக்க இயலாத
இரத்த உறவில்
தினம் தினம்
என் ஆயாவுக்கான
என்  தேடல்கள்  தொடர்கிறது..!

No comments:

Post a Comment