அப்பா என்னை மன்னித்துவிடு !
எனக்கு அப்பாவான
உன்னை
ஒரு நாளும்
நான் அப்பா என அழைத்ததில்லை!
அப்படி
அழைக்கவில்லையே
என ஒரு நாளும்
நான்
உள்ளுக்குள் வருந்தியதில்லை !
அந்த ஆசையும்
எனக்கு வந்ததில்லை !
மிக சின்ன வயதில்
என்னை வாழ்க்கை நெருக்கடிக்குள்
தள்ளி
வாழ்க்கையில்
ஏக்கத்தையும்
நிரைவேராத ஆசையையும்
உண்டாக்கி-
என்னை கனவு தேசத்தில்
தள்ளி சிறை வைத்த
உன்னை
எப்படி
அப்பா என்று
அழைப்பது?
எனக்கு
நிறைய நினைவிருக்கிறது.
என்னிடம்
என்றாவது
ஒரு நாள் கூட
என்பெயரை
நீ அன்பாக அழைத்ததுண்டா?
என்னை
ஒரு எதிரியை
பார்ப்பது போலத்தான்
நீ
பார்த்தாய்!
ஒரு நாளாவது
என் தோளை தீண்டி
நீ-
பார்த்ததுண்டா?
உன் தோளில்
என்னை
சுமந்தது சென்று
கடை தெருக்களில்
மிட்டாய் வாங்கி தந்ததுண்டா?
ஒரு நாள் கூட
நான் படித்தேனா... இல்லையா
என
நீ
என்னை கேட்டதுண்டா?
உன் பஞ்சணை
வாழ்க்கைக்காக
எங்களை
ஊருக்கு ஊர்
பஞ்சம் பிழைக்க போக வைத்தாய் !
நீ
என்னை அடித்து துரத்தியதால்
நான்
ஊர் ஊராய்
சுற்றி திரிந்தேன் !
என் மீது அன்பே இல்லாத உன்மீது
எனக்கு
அன்பே இல்லாமல் போனது !
நீ
எப்போது சாவாய்
என
அடிக்கடி
நினைத்து வைத்தேன் !
எப்போதும்
உருட்டலுக்கும்
மிரட்டலுக்கும்
இடையேதான்
என்னை போட்டு
வறுத்தெடுத்தெடுத்தாய்!
நான்கு வயதில்
பெற்றவளிடமிருந்து
என்னை பிரித்தெடுத்தாய்!
உன்னை பெற்றவளிடம்
என்னைதாரை வார்த்தாய்!
உன்னை பெற்றவளும்
உன் தொல்லை தாங்காமல்
காடு போய் சேர்ந்த பின்பு,
என்னை
பெற்றவளையும் -
என்னையும் -
வீட்டை விட்டு
துரத்தியடித்தாய்!
நங்கள்
குடியிருக்காத வீட்டில்
ஊரிலுள்ள புறம்போக்குகளை
வைத்துகொண்டு
சீட்டு கிளப் நடத்தினாய் !
ஒன்பது வயது வரை
அம்மா முகம்
அறவே மறந்து போனது
அம்மாவுக்கும்
மகனுக்கும்
ஈடுசெய்யமுடியாத
இடைவெளியை உருவாக்கினாய்!
அது -
எவ்வளவு பெரிய ஆபத்து
என்பதை அறியாத
மடையனாய் இருந்தாய் !
உன்னை
அழைக்காததை போலவே...
இன்றுவரை
என்னை பெற்றவளையும்
நான்
அம்மா
என
ஒரு நாளும் அழைத்ததில்லை !
அது எவ்வளவு
துரோகம் தெரியுமா ?
அந்த குற்ற உணர்ச்சியே
என்னை
கூட இருந்த கொல்லும்
வியாதியாய்
இருந்து வருகிறது !
அதற்கு
பொறுபேற்க வேண்டிய
முழு முதல் குற்றவாளி
நீதான்!
ஒரு
மகனை
மகனாக நடத்தாமல்
ஒரு -
தெரு நாயாக நடத்தினாய்!
சொந்த பந்ததை தேடி
சோற்றுக்கு
அலையவிட்டாய் !
ஒரு
ஜிகினா பூச்சுக்காக
சொத்து பத்துகளை விற்றாய் !
ஊர் ஊராய்
சுற்றுலா சென்றாய்!
ஊதாரியாய்
செலவு செய்தாய் !
பிள்ளை பெண்டாட்டி
உனக்கு மறந்தது போனது !
மானம் வெட்கம்
என்பதைபற்றியெல்லாம்
உனக்கு கொஞ்சம் தெரியாமல்
போயிருந்தது !
உன் சந்தோஷத்திற்காக
என் எதிர்காலத்தை கொன்று
குழிதோண்டி புதைத்தாய்!
தினமும்
குடித்துவிட்டு வந்தது
உன் மனைவியை
தலை முடியை இழுத்துபோட்டு
அடித்து
தொண்டை குழியில் காலால் மிதிப்பாய் !
நான் பயந்து கொண்டு
கள்ளி வேலிக்கடியில்
ஒளிந்து கொண்டு
துரத்திலிருந்துகொண்டு பார்ப்பேன் !
அம்மாயி... அம்மாயி ...
என கத்திக்கொண்டு
உதவிக்கு
பாசாளத்தார் வீட்டு
ஆபரணத்து
அம்மாயியை
அழைக்க ஓடுவேன் !
அண்டை வீட்டு
அம்மாயி காப்பாற்ற வரும்
இடைவெளியை
பயன்படுத்தி
நானும்
என்னை பெற்றவளும்
அங்கிருந்து
தப்பித்து ஓடுவோம் !
துன்பம் தொலைந்தது
என-
நீ சந்தோஷப்படுவாய் !
சினிமாவில் வருவதை
போல
என்றாவது
ஒரு நாள்
உன்னை பழிக்கு பழி வாங்க வேண்டும்
என
நினைத்திருந்தேன் !
ஆனால்
நீயோ
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி
ஒரு நாள்
தானாகவே
நடு தெருவுக்கு வந்தாய் !
எனினும்
கடைசிவரை
நீ குடிப்பதை நிறுத்தவேயில்லை !
ஆரம்பத்தில்
நீ
மதுவை குடித்தாய் !
மது
கடைசி வரை
உன்னை குடித்தது !
எப்படியோ
நாங்கள் வளர்ந்தபின்பும்
எங்களை
ஊரில் கடைசிவரை
தலை நிமிர்ந்து நடக்கவிடாமல்
அவமானப்படுத்திவந்தாய் !
சின்ன வயதில்
உன்னைகண்டு
பயந்து
ஒடி ஒளிந்தேன் !
வளர்ந்த பின்பு
கடைசி காலத்திலும்
நீ-
என்னை அருவருப்பாக
பேசுவதை தவிர்க்க
ஒடி ஒளிந்து வந்தேன் !
என்
அவல நிலையை கண்டு
என் பிள்ளைகள்
சங்கடப்படுவதை
எண்ணி
ஒவ்வொரு நாளும்
உள்ளுக்குள் வருந்தியிருக்கிறேன் !
இடையிடையே
அவ்வபோது
காணாமல் போவாய் !
திடீரென
ஒரு நாள்
தரிசனம் தருவாய் !
அது போலத்தான்
பல நாட்கள் காணாமல் போய்
ஒருநாள்
திடீரென
உன்னை பார்த்து
அதிர்ந்து போனேன்!
உன் பழைய தோற்றமெல்லாம்
கரைந்து போய்,
எலும்பும் தோலுமாய்
என்னிடம்
வந்து நின்று
எனக்கு யாரும்
சோறு போட மாட்டேன்
என்கிறார்கள் என்றாய் !
கடைசிகாலத்தில்
உன்னை வீட்டில் வைத்து
உனக்கு
சோறு போட சொன்னேன் !
கறிக்குழம்பு
வேண்டுமென்றாய்.
வாங்கிகொடுத்தேன் !
அதை -
ஏக்கத்துடன் மட்டும்தான்
உன்னால் பார்க்கமுடிந்தது.
ஆனால்
சாப்பிடமுடியவில்லை!
ஆனால்
அடுத்தவர் சுமையை
சுமந்து பழகாத உன்னை
உன் மனைவியே
கடைசி காலத்தில்
வேண்டாத சுமையாக நினைத்தார்!
எனது
நிர்பந்தத்தில்
என் மனைவி
உன்னை பராமரித்து
புண்ணியத்தை தேடிகொண்டாள் !
ஆனாலும்
அப்போதும் கூட
உன்னால் குடிக்காமல்
இருக்கமுடியவில்லை !
எனக்கு தெரியாமல்
குடித்து வந்தாய்!
ஒரு நாள்
மரணத்தின் விளிம்பில்
சுய நினைவை இழந்து போனாய் !
ஒரு காலத்தில்
மிகவும் சீரும் சிறப்பாக
வாழ்ந்த நீ,
ஒவ்வொரு நாளும்
நீ
படுக்கையில்
கோழிக்குஞ்சு சுருண்டு கிடப்பதை போல
கிடப்பதைகண்டு
எனக்குள்
என்னவோ போலிருந்தது !
எந்த கூரை வீட்டில் பிறந்து
எந்த கூரை வீட்டை
எனக்கு
கடைசி வரை பரிசாக,
பொக்கிஷமாக தந்துவிட்டு போனாயோ...
அந்த கூரை வீட்டிலேயே
ஒரு நாள்
விடிகாலை கண்மூடினாய்!
எதற்காகவும் ஒருநாளும்
அழுது பழகாத
நான்-
உன்னை முழுதாக மன்னித்து
உனக்காகவும் சற்று அழவில்லை.
அழுகை என்பது
பலகீனத்தின் வெளிப்பாடாகும் !
நான்
உன்னை
மன்னித்தாலும்,
ஆனால்
உன்மனைவி
கடைசிவரை
உன்னை மன்னிக்கவில்லை !
உன் இறுதி பயணம்
நீ நினைத்து பார்க்காத அளவுக்கு
மிகவும்
சிறப்பாகவே இருந்தது !
ஆண்டு
ஒன்று முடிந்துவிட்டது.
உன் நினைவு நாளில்
உன்னை நினைவு கூற்கின்ற
அளவுக்கு
நீ-
என்ன சாதித்தாய்
என்பது
எனக்கு இன்னும்
தெரியவில்லை !
ஆனாலும்
என் பிள்ளைகள்
என் கடைசி காலத்தில்
நீ
என்னை
தவறாக நடத்தியதை போல...
அவர்கள்
என்னை
தவறாக நடத்த கூடாது
என்பதற்காவது
உன்னை
நான்-
நினைவு கூர்ந்தே ஆகவேண்டும்
என்ற நிர்பந்தத்தில்
சொல்கிறேன்...
அன்பில்லா
தந்தையே
என்னை
மன்னித்துவிடு !
இனி-
கண் மூடித்தனமாக குடித்துவிட்டு
வேட்டி ஒரு பக்கம்
இடுப்பில் இருக்க..
மறுப்பக்கம்
தரையில் இழுபட ...
தெருவில்
செல்ல மாட்டாய் !
ஊரிலுள்ள
தெரு நாய்களெல்லாம்
இனி
உன் பின்னால்
குறைத்துக்கொண்டே வராது !
பல பேருக்கு
இனி
இரவு தூக்கத்திற்கு
இடைஞ்சலில்லை !
அமைதி செத்துப்போன
தெருக்களுக்கு
உன்னால்
இனி விடுதலைதான் !
அதை செய்கிறேன்!
இதை செய்கிறேன்!
என -
கண்ட கண்ட நபர்களிடம்
இனி
பணம் வாங்கமாட்டாய் !
அதனால்
உன்னை
யாரும்
திட்ட மாட்டார்கள் !
உன்
மனைவியை
இனிமேல்
நீ -
தேவடியா
குச்சிகாரி
என திட்ட மாட்டாய் !
எப்போது பார்த்தாலும்
இது உருப்பட்டாது!
தேறாது
என -
என்னை சபித்து ... சபித்து
இனி
என்
தன்னம்பிக்கையை குலைக்கமாட்டாய் !
உன்னைக்கண்டு
பயந்து ஓடி ஒளிந்துகொள்ளும்
உன் சொந்த பந்தமெல்லாம்
இனி -
நிம்மதி பெருமூச்சுவிடும் !
இனி
உன்
ஒவ்வொரு
தெவிசத்திலும்
எந்த ஆபத்துக்களுமில்லாமல்
உன்னை நினைத்து பார்ப்போம் !
நீயும்
தேவையில்லாமல்
எங்கள்
நினைவுகளில்
வந்து அடிக்கடி
தொந்தரவு செய்ய மாட்டாய்!
அப்பப்பா !
எனினும்
இந்த
ஒரு பிறவி மட்டும்
போதாது தந்தையே !
உனது இடம்
வெற்றிடமாகவே உள்ளது !
இனி
அடுத்த
பிறவியிலும்
ஒரு
வாய்ப்பிருந்தால் ...
மீண்டும் நானே உனக்கு
மகனாக பிறந்து
மேற்கண்ட
இம்சைகளை
நானும்
என்னை பெற்றவளும்
சேர்ந்து அனுபவிக்க வேண்டும் தந்தையே !
No comments:
Post a Comment