Monday, 24 December 2018

அன்னை



அன்னையே! 
இப்படி  சொல்வதற்கு
உனக்கு
எப்படி மனது வந்தது !


நன்றி கெட்ட  பயலே
என
என்னை இரக்கமே இல்லாமல்
பேசுகிறாய் !




எந்தவிதத்தில்
நான் நன்றிகெட்டு போனேன்
என-
உன்னால் கூற முடியுமா?



உனக்கு
பிள்ளையாய் பிறந்ததை
இல்லையென சொல்ல சொல்கிறாயா?
அல்லது
ஒரு  பிள்ளையாய்
உனக்கு செய்ய வேண்டிய
தார்மீக கடமையை
செய்யவில்லை
என சொல்கிறாயா?


ஒருவகையில்
உண்மைதான்!
உனக்கு  நான்
என்ன செய்துவிட்டேன்?
ஒன்றும் செய்யவில்லை !
ஒரு  மகனாய்  பிறந்து
ஒரு  தாய்க்கு
செய்ய வேண்டிய
நன்றிகடனை
இன்னும்
செய்யவில்லைதான் !


மாறாக
உன்னைவிட்டு
ஆகாயத்துக்கா 
உயர்ந்துவிட்டேன் !
அப்படி
நீயில்லாமல்
உயர்ந்தால்
அதில்
என்ன உயர்விருக்கிறது ?



உனது
வாழ்க்கையின் துவக்கம்
ஒன்றும்
அவ்வளவு  சிறப்பாக அமையவில்லை!



வெறும் சமூக தகுதியை
வைத்து
உன்னை ஒருவனுக்கு
கலயாணம் கட்டி கொடுத்தார்கள்!

அவன்
நன்றாயிருந்து
ஒரு நாள்
குடிகாரனாகிபோனான்.
உன் வாழ்க்கை
புயலில் சிக்கிய படகாகி போனது!


எல்லாப்பெண்களையும் போல
விதவிதமான
வண்ண  கனவுகளுடன்
அவன் கரம் பிடித்த
நீ -
நாளடைவில்
கண்ணாடியாய் நொறுங்கிபோயிருப்பாய் !


வாழ்க்கை
உனக்கு புதிதாய் இருந்தது.
அவனுக்கு
இது
இரண்டாம்  வாழ்க்கை
பயணமாய் இருந்தது !



உனக்கு
ஒரு கணவன்
என்ற  பங்களிப்பு 
ஒன்றை  தவிர
வேறு-
அவரால்
வேறு உனக்கு என்னப்பயன் ?
ஆனால்
தாய்மையின்
தனித்துவத்தின் சுகத்தையும்
துக்கத்தையும்
நீதான்
அனுபவத்திருப்பாய்!



அவர்
ஒருத்தியை வைப்பாட்டியாக
வைத்து கொண்டு
அவளை
மனைவியைகாட்டிலும்
கூடுதலாக மரியாதையாக நடத்தினார்!



மனைவி
உன்னை-
வைப்பாட்டியை காட்டிலும்
கேவலமாக நடத்தினார்!



வைப்பாட்டியின்
கண்ணில்
நீர் வரக்கூடாது என்பதற்காக
உன் கண்ணில்  இரத்தம்  வடிய விட்டார்
உன் கணவர் !

வைப்பாட்டியின்
ஜிகினா பூசிய முகத்திற்காக
அனைத்து சொத்தையும்
விற்றுதீர்த்தார்!



நம்மை
நடுத்தெருவுக்கு கொண்டு வந்து
ஊரெல்லாம்
பிச்சை எடுக்க வைத்தார் !



வாழும் காலத்திலேயே
தினம் தினம்
சாவின் கொடுமையை
உன்னையும் என்னையும்
அனுபவிக்க வைத்தார் !



ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம்
பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்தபோது,
உன் கணவர்
உனக்கு செய்த கொடுமைக்கு பயந்து
தெருவுக்கு தெரு பயந்து
ஓடிக்கொண்டிருந்தேன்!


உன் கணவருக்கு
படிப்பைப்பற்றி
ஒன்றும் தெரியாது!
அதனால்தான்
உன் கணவருக்கு
என் படிப்பு வீணாய் போனதைப்பற்றி
கடைசிவரை
எந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் போனது !



அவருடைய
சந்தோஷமே
அவருக்கு பெரிதாய் போனது!
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தும்
மனது
அவருக்கு இல்லாமல்  போனது !



ஒரு குடிகாரன்
தன்னை மட்டும் அழித்துக்கொள்வதில்லை !
மாறாக
மூன்று
தலைமுறைகளையும்
சேர்த்தே அழிக்கிறான் !

உனது கணவர்
முதலில்
என்னையும்,
அடுத்து
என் மகன்களையும்,
அதற்கடுத்து
என் பேரப்பிள்ளைகளையும்,
மொத்தத்தில்
மூன்று தலைமுறைகளை சேர்த்து
அழித்த குற்றவாளி  அவர்!



ஒரு இடத்தில் கூட
நிலையாக தங்காமல்
ஊர் ஊராய்
ஒரு யாசக கூட்டமாய்...
நீயும்..
நானும்...
சுற்றியலைய
பள்ளிக்கூட லட்சியமெல்லாம்
பின்னுக்கு தள்ளப்பட்டு,
வயிற்றுப்பிழைப்பே
பிரதானமாகி போனதால்...


நீயும் நானும்
ஒரு ரூபாய்...
இரண்டு ரூபாய்க்கு...
களையெடுப்பு
பணிக்கு சென்று
வயிறு வளர்த்தோம் !



எனினும்
அவ்வப்போது
பள்ளிக்கூடம் இருக்கிறதா ?
அல்லது
அதை
காக்கை குருவி ஏதாவது
கவ்விக்கொண்டு ஓடிவிட்டதா?
என
எப்போதாவது போய் பார்ப்பதுண்டு!



இவன் படித்து
பெரிய ஆளாகி
தன்னை உட்காரவைத்து
சோறு போடுவான்
என
நீ-
நினைத்ததாக தெரியவில்லை!



குண்டி துடிக்க வைத்து
கொலைப்பட்டினியில் சாகடித்த,
உன் புருஷனை
என்றாவது ஒரு நாள்
உன் கண்ணெதிரிலேயே
நான் அடிக்க வேண்டும்
என
நீ-
எனக்குள்
சொல்லி சொல்லி
சூடு குறையாமல் வைத்திருந்தாய்!


ஒரு நாள்
உன் கணவனை
உன் கண்முன்னாலேயே
அடித்தேன்!
நீ
வருத்தப்படவில்லை!
மாறாக
மகிழ்ந்தாய்!
எனது மூலமாக
உன் கணவனை
நீ
பழித்தீர்த்துகொண்டதில்
உனக்கு உள்ளுர
நிரம்ப சந்தோஷம்!



நீயும்
படிக்காத  பெண்மணியாததால்
எனக்கும்
வசதியாக போய்விட்டது!



புத்தகம்  வாங்க பணம் கொடுத்தாய்!
மீன் பிடிக்க
தூண்டில் முள் வாங்கினேன்!
என் எதிர்காலம்
புகையாய்
கரைந்துகொண்டிருக்கும்
பெரிய
ஆபத்தினை
நீ
தெரிந்திருக்க
வாய்ப்பில்லாமல் போனது !


பள்ளிக்கு போவது போல போய்
உடையான் குடிக்காடு
தோப்பேரி கோவிலுக்குள்
ஒளிந்து கொண்டு,
அருகிலுள்ள கிணற்றில் குதித்து விளையாடி,
பசிக்கு கொண்டுவந்த
புளி  சோற்றை  சாப்பிட்டு




பள்ளிக் கூடம்  விடும் நேரத்திற்கு
நல்லபிள்ளையை  போல
வீடு வந்து சேர்வேன் !

இந்த விஷயம் ஓர் நாள்
வெளிச்சத்திற்கு  வந்தபோது,
நீ
திடுக்கிடவில்லை!


மாறாக
அதற்காக
சோறு தண்ணீர் குடிக்காமல்
நீ
பட்டினிக்கிடக்கவில்லை!
உனக்கு
ஒரு நம்பிக்கை,
நம்மிடமிருந்த
ஒரு சில ஆடுகளை
வைத்து எப்படியும்
பிழைத்துகொளளலாம்
என்று
நீயும்
அம்மாயியும்
நினைத்திருக்கலாம்!



நிச்சயமற்ற
இந்த உலகத்தைப்பற்றி
உனக்கும்
எதுவும் தெரியாமல் போனது!


நீ
அப்பாவியாய் இருந்தாய்.
எம்.ஜி.ஆரைப்பற்றியும்
கே.ஆர்.விஜயாவைப்பற்றியும்
பேசிக்கொண்டிருந்தாய்!



இந்த உலகம்
இருப்பவர்களுக்குத்தான்.
இல்லாதவர்களுக்கு
இது
சொந்தமில்லை!
என்பது
உனக்கும்
எனக்கும்
கடைசிவரை  தெரியாமல்
போயிருந்தது !



போதனைகளும்
அறநெறிகளும்
மட்டும்தான்
ஏழைகளுக்கு, 
வாழ்க்கை இல்லை
என்ற
நியாயம்
தெருவில் கிடந்து நாறிக்கொண்டிருந்தது !



 
வாழ்க்கை
நம்மை நிராகரித்தது !
சமூக எதார்த்தம்
நம்மை
சிலுவையில்  அறைந்தது !



நீயும் நானும்
முகவரியில்லா
கடிதங்களாக
திசைகள் மறுக்கப்பட்டோம்!
காலம்
உன்னையும்
என்னையும்
வாழ்க்கையில் போராட வேண்டி
மீண்டும்
பணித்திருக்கிறது !



உன்னிலிருந்து
என்னையும்,
என்னிலிருந்து
உன்னையும்
எப்படி பிரித்து பார்க்க இயலும் ?



வாழ்க்கையில்
மிக அருகருகேதான்
நின்று  கொண்டிருக்கிறேம்!




நன்றி கெட்டவனே என்று
மீண்டும்
தயவு  செய்து 
நெஞ்சிலே கைவைத்து சொல்லாதே!



நான் வாழ்க்கைக்கு
வெளியே நிற்கவில்லை !
வாழ்க்கைக்கு
உள்ளேதான்
உன்னோடு நின்று கொண்டிருக்கிறேன் !

No comments:

Post a Comment