Monday, 24 December 2018

மரங்கள்





காடுகள்
மரங்களின்
வெறும்
வசிப்பிடம் மட்டுமல்ல,


அது
உயிரின சமூகத்தின்
உயர் திணையின்
தொகுப்பாகும் !


காடுகள்
மண்ணின்
உயிர்க்கவசம் !


காடுகள்
மண்ணின் நுரையீரல்கள்!
அது
இயற்கையில்
வெளியாகும் கரிமில  வாயுவை
உட்கொண்டு
உயிர் வாயுவை
உயிரினத்திற்கு
கொடையாக  வழங்குகின்றன !


காடுகள்
காற்றை கழுவுகின்றன!
காற்று
மனிதனை  தழுவுகின்றன !


காடுகள்
மழை தருகின்றன!

மழை
உலக உயிரினங்களுக்கு
உயிர் தருகின்றன!


காடு -
ஆடு
மாடுகளுக்கு
இலை
புல் தருகின்றன !
ஆடு மாடுகள்
வெளியேற்றும்
கழிவுகளால்
காடு
வளம் பெறுகின்றன!


காடுகள்
சுதந்திரத்தை  விரும்பும்
உயிரினங்களுக்கு
அடைக்கலம்  தருகின்றன !


காட்டு
விலங்குககள்
நாட்டை விரும்புவதில்லை!
நாட்டு  விலங்குகள்
அதற்கு  ஆபத்தை  விளைவிக்கின்றன !
அதனால் -
காடு
அதற்கு
பாதுகாப்பாக  இருப்பதால்
காட்டையே  விரும்புகின்றன !


காடைக்கு
கலத்தை போட்டாலும்
அது
காட்டையே  பார்க்கும்
என
பெரியோர்கள்
சொல்லி
வைத்திருகின்றார்கள்!


காடுகள்
ஞானத்தை வளர்க்கின்றன!
உலகம் புகழும்
ஞானிகள்
காட்டில்தான்
தங்கள்  ஞானத்தை 
பெற்றிருக்கின்றார்கள் !


கோயில்கள்
இல்லாத  ஊரில்
குடியிருக்கவேண்டாம்
என்பதற்கு பதிலாக
காடுகள்
இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்
என
கூறலாம்!


மனிதன் முதலில்
காட்டில்தான்
பிறந்தான் !
காடு
மனிதனுக்கு
நாகரிகத்தை  கற்றுக்கொடுத்தது !



காடுகள்
நாகரிகத்தின்
தொட்டில்
எனலாம் !



காடுகளை
மனிதன்
தண்ணீர் ஊற்றி
வளர்க்கவில்லை!
அது -
தானாக வளர்ந்தது !
தனக்கான
தேவையை
தானே  நிறைவு 
செய்து கொள்கிறது !


காடு இல்லாத
நாடு
சுட்டு காட்டிற்கு
ஒப்பாகும் !


காடுகள்
வெயிலை தடுக்கின்றன !
வெயிலின் ஒளிகற்றையை
உள்வாங்கி
உயிரை காக்கின்றன !


மக்கள் தொகையின்
வளர்ச்சிக்கேற்ப
மரங்களின்
எண்ணிக்கையை
அதிகப்படுத்தவேண்டும் !



மனிதன்
இரக்கமேயில்லாமல்
மரத்தை வெட்டினான்!
மரம்
அழுதது !


ஒவ்வொரு
மரமும்   மண்ணில்
வீழ்ந்து   மடிந்தபோது
மனிதனின்
ஆயுள் வேர்களின்
காலங்கள்
கணக்கிடப்படுகின்றன !


மரங்களை
வெட்டியதால்
உலகவெப்பம் உயர்ந்தது!


பனிமலைகள்
உருகுகின்றன!


கடல் மட்டம்
உயர்கின்றன !


ஒரு நாள்
நிலம்
கடலாகப்போகின்றன !
கடல்
ஒரு நாள்
நிலமாகபோகின்றன  !


காடுகளை
துவக்கத்தில்
மனிதன் விறகுக்காக அழித்தான்!


பின்னர்
பணம்
சம்பாதிப்பதற்காக
அழித்தான் !


காடுகளை
அழிப்பவனை  தடுக்க
கடுமையான சட்டமில்லை !


ஒவ்வொரு
மரமும்  வெட்டப்படும் போதும்
ஒரு
மரக்கன்று
நடப்படவேண்டும்
என்ற
மன சாட்சி
யாருக்கும் இல்லை !


எனது
தேசத்திலும்
காடுகள்  உண்டு !
ஆனால்
அதில்  மரங்கள்தான் இல்லை !



எம்
முன்னோர்கள்
ஒரு இடத்தில்
வசிப்பதற்கு  முன்னால்
அவ்விடத்தைச்சுற்றிலும்
மரம் நட்டார்கள்!


சாலை இரு மருங்கிலும்
மரம் நட்டார்கள்!
அவ்வழியே 
வருவோர்  போவோர்கள்
அதில்
இளைப்பாறினார்கள்!


அக்காலத்தில்
பிள்ளை பேறு
இல்லாதவர்கள்
பிள்ளையாய் நினைத்து 
மரம் வைத்தார்கள்!

வைத்த மரமெல்லாம்
ஊருக்கு ஊர்
குளக்கரையிலும், 
கண்ட கண்ட
இடங்களிலும்,
இன்றளவும்
அவர்களின்  முகவரிகளை
சொல்லிவருகின்றன !
 
அவர்கள்
நட்ட மரத்தில்தான்
நாம்
இளைப்பாறுகிறோம்!
நாம்
இது வரை
சொந்தமாக
மரம் நடவில்லை !


விறகு வேண்டுமா
மரத்தை வெட்டுகிறோம்!


மனிதனை எரிக்கவா
மரத்தை வெட்டுகிறோம்!


அரசியல் தலைவர் கைதா
மரத்தை வெட்டுகிறோம்!


ஆடுமாடுகளுக்கு
தழை  வேண்டுமா
மரத்தை வெட்டுகிறோம்!


வீடு கட்டவா
மரம்  வெட்டுகிறோம்!

வீடு
பேறா
மரம் வெட்டுகிறோம் !


மரம்
இறந்துபோனால்
விறகாக
மாறுகிறது.

மனிதன்
இறந்துபோனால்
சடலமாக
மாறுகிறான்.

சடலத்தை வைத்துக்கொண்டு
ஒன்றும்
செய்யமுடியாது !


மனிதர்களை
மரம்
என்று சொல்வது
மரத்தை
அவமானப்படுத்துவதற்கு
ஒப்பாகும் !



மூடர்களை
மரமண்டை
என்று திட்டுவது
திட்டுபவர்களின்
அறியாமையை காட்டுவதாகும் !



மனிதனை காட்டிலும்
மரங்கள்தான் 
மாபெரும் செல்வங்கள்
என்பது
மூடர்களுக்கு தெரிவதில்லை!   


மரத்தை நட்டால்
மழை வருகிறது !


மனிதனை
பெற்றால்
கண்ணீர்  தருகிறான் !


மரங்கள்
மண்ணின்
குழந்தைகள் !


மரம்
மண்ணில் விழுந்து
எருவானால்
மீண்டும்
பல தாவரங்கள்
உயிர்க்கிறது !
மனிதன்
இறந்தபின்பு 
அவனின் 
சாம்பலின் மீது
புல்கூட
முளைப்பதில்லை !


மரம் மண்ணுக்கு புதல்வன்.
மரம் மண்ணுக்கு  உயிர்.
மரத்திற்கும்
மண்ணுக்குமே
தொப்புள்கொடி  உறவு.


மனிதனுக்கும்
மண்ணுக்கும்
உள்ள உறவு
வழிப்போக்கர்கள்
உறவாகும் !


மரம்
காய் தருகிறது !


மரம்
கனிதருகிறது !


மரம்
தொட்டில் தருகிறது!


மரம்
கட்டில் தருகிறது !


மரம்
வீடு தருகிறது!


மரம்
கூடு தருகிறது!


மரம்
ஏடு தருகிறது !


மரங்கள்
தங்கள் கிளைகளில்
பறவைகளை கூடு கட்டிக்கொள்ள
அனுமதிக்கின்றன!
அது
ஒரு போதும்
இடைஞ்சல் செய்து 
அவைகளை விரட்டுவதில்லை !


மனிதன்
தன்னிடம்
உள்ளவற்றில்
இல்லாதவர்க்கு வழங்க
இசைய மறுக்கின்றான்!


மனிதன்
ஒருதடவை வெட்டுபட்டாலே
யாருக்கும்
பயனற்று போகிறான்!
ஆனால் 
மரங்களை
எத்தனை முறை
வெட்டினாலும்
கிளைகள் பரப்புகின்றன !

பூக்களை தூவி
பூமியை பரவசப்படுத்துகின்றன!
ஆனால்
மனிதன்
பூமியை
குப்பை  கூளங்களால்
நிரப்புகின்றான் !



வேதியியல் உலகம்
மானுடவாழ்வை
அனைத்து தளங்களிலும்
எரித்து தீய்க்கின்றன!

மரங்கள்
அவற்றை
சலவை செய்து
சுத்தமாக்குகின்றன!




மரங்களை கொண்ட தேசங்கள்
மழைவளம் பெறுகின்றன.
மரங்களற்ற தேசம்
மனிதர்கள்
வாழ்வதற்கு
தகுதியற்ற தேசமாகும் !




மனிதன்
சுவாசிக்க 
நாசிதேவைப்படுகிறது !
மரங்கள் சுவாசிக்க
இலைகள்
தேவைப்படுகிறது !
இருக்கின்ற
ஒரு  சில மரங்களும்
மொட்டையடிக்கப்படுகின்றன.
சுவாசிக்கமுடியாமல்
மரங்கள்
ஆஸ்துமா நோயாளியாய்
அவஸ்தைப்படுகின்றன!




ஒவ்வொரு மரமும்
இரக்கமற்றமுறையில்
கொல்லப்பட்டு
மண்ணில் சாயும் போது
ஒசோன்
அடுக்குகளின்  ஓட்டைகள்
கூடுதலாக
விரிவடைகின்றன !



அரசே
மரங்களை
திட்டமிட்டு  அழிக்கின்றன!
பொதுமக்களுக்கு
பிழைப்பிற்கென
அரசு
இலவச  ஆடுகள் வழங்குகின்றன!



பொதுமக்கள்
ஆடுகளின் உணவுக்காக
மரத்தை
சிர சேதம்
செய்கிறார்கள் !



ஆடு
வளர்கின்ற தேசத்தில்
மரங்கள் மீதானா
கொலை முயற்சியை
தடுக்கமுடியாது !

பூனைகளும்
கோழிக்குஞ்சுகளும்
நண்பர்களாக
இருக்கமுடியாது !

ஆடுகளும்
மரக்கன்றுகளும்
அருகருகே
வசிக்கமுடியாது !



ஆடுகள்
மரங்களின்
எதிரிகள் !


ஆடுகளால்
கிராமங்களின்
மரங்கள்
பசுமை இழந்து
விதவைகளாக
காட்சியளிக்கின்றன!


எதிர்கால
தலைமுறைக்கு 
சேர்த்துவைக்கும்  சொத்து
பணம் காசல்ல,
மாறாக
மரங்கள்தான்
நாம் விட்டு செல்லும்
நிரந்தர சொத்தாகும் !



அடுத்த
தலைமுறைக்கு வரும்
ஆபத்தினை மரங்களால்
மட்டுமே
தடுக்க முடியும் !


மனிதன்
வந்து போன
அடையாளத்தின்  தடங்கள்
பூமியில்
நீண்டநாட்கள்
பேசப்படுவதில்லை !

ஆனால் -
அவன்
நட்டுவைத்துவிட்டு போகும்
மரங்கள்
அவன் மரணத்திற்கு
பின்பும்
அவன் பெயரை
சொல்லி சொல்லி மகிழ்கின்றன !


No comments:

Post a Comment