Monday, 24 December 2018

ஒரு நடோடி

உனக்கு
நான்
எந்த வாக்குறுதியும்
தரவில்லை !


என்னோடு
சேர்ந்து வருவதால்
நீ
எந்த மகிழ்சியும்
அடைய போவதில்லை !


எனினும்
என்னுடன் 
சேர்ந்து வருவதில்
மிகவும்
பிடிவாதமாய் இருக்கிறாய்!



நானே
ஒரு
நடோடி !


எனக்கே
பிழைப்பதற்கு
வழியில்லை
ஒரு
பிச்சைக்காரனாய் 
ஊர் ஊராய் சுற்றிவருகிறேன்!


உன்னை
நிலையாக
உட்கார வைக்க
என்னிடத்தில்
ஒரு இடம்
நிரந்தரமாக கிடையாது!


என் நிலையை
தெரிந்தும்
என்னை நேசிப்பதாக
சொல்கிறாய்!


என்னை
நீ
பின் தொடர்வதால்
நீ
என்ன சுகத்தை
அடையப்போகிறாய்!
மாறாக 
உன்
உறவுகளை
நீ
இழக்க வேண்டியிருக்கும் !

நாங்கள்
வறுமைக்கு
வாழ்க்கைப்பட்டு
மரணத்தோடு 
போராடும்
ஏழ்மையின் குழந்தைகள் ! 


ஒன்றை இழந்துதான்
ஒன்றை
பெறவேண்டுமென்றால்...
எனக்காக 
உன்
வசதியான வாழ்க்கை
சூழலை இழந்து
நீ
துன்பப்படுவாய்!


சுவையாக
சாப்பிட்டு பழக்கப்பட்ட
நீ
என் கரம் பிடித்தால்
ரேஷன் கடையில்
அரிசிக்கும்,
மண்ணெணைக்கும்
கியூவில்
காத்துக்கிடக்கவேண்டியிருக்கும்!


அமைதியாக
உட்கார்ந்து சாப்பிட கூட
உனக்கு
நேரம் கிடைக்காது!
வேலை தேடி
நாயாய்
அலைய வேண்டியிருக்கும்!


குளு குளு
அறையில்
இருந்து பழக்கப்பட்ட
உனக்கு
என்
குடிசை  வீட்டில்
குடியிருக்கும்
கொசுக்களின்
கடியை
நீ
தாங்க மாட்டாய் !


மழைவந்தால்
வீடெல்லாம் குளமாகும்
உட்காரவே
இடம் கிடைக்காமல்
நிம்மதி இழந்து போவாய்!


என் நேசம்
களங்கமற்றது
என்கிறாய்!
உண்மைதான்.
உன் நேசத்திற்கு
வறுமை
என்றால்
என்னவென்று
தெரியாது!


உன் நேசத்திற்கு
விலைவாசி உயர்வைப்பற்றி
ஒன்றும்
தெரியாது !


உன் நேசத்திற்கு
மின் கட்டண
உயர்வைப்பற்றி
ஒன்றும் தெரியாது!


உன் நேசத்திற்கு
பஸ் கட்டண  உயர்வைப்பற்றி
புரியவே புரியாது  !


உன் நேசத்திற்கு
குடிதண்ணீருக்காக
மைல் கணக்கில்
அலையும்
எங்கள் ஜனங்களின்
கவலை தெரியாது !

சொல்கிறாய்...
உன் நேசிப்பு
களங்கமற்றதுதான்!
அது
மழை நீரைப்போல
மிகவும்
தூய்மையானது!


ஆனாலும்
எங்களின் வாழ்க்கை
எங்களுக்கப்பால்
அலங்கோலமாக
யாரும்
கவனிப்பாரற்று
கிடக்கிறது!


உனது
வாழ்க்கையின்
உயரத்திற்கும்
எனது
வாழ்க்கையின்
உயரத்திற்கும்
இடைவெளி
விரிந்து செல்கின்றன !


எதார்த்தமான
காதல் நினைவுகளுக்கப்பால்
என்னை
காதலித்து
ஜீரணிக்கும்
மன நிலையில்
நீ
இருக்கலாம்!


ஆனால்
வாழ்க்கை என்பது
கல்லும்
முள்ளும்
கொடும் காயம் விளைவிக்கும்
பாறைகள்  நிறைந்தது!
அது உன்னை
காயப்படுத்தி
அழவைக்கும் !



நீ
ஓ வென
கத்தி அழுது விடுவாய்!
நான்
பொறுக்கமாட்டாமல்
உன்னை தேற்றுவேன்
அந்த தேறுதல்
எதற்கும் உதவாது!


உன்னை சார்ந்த
உன் வாழ்க்கை சூழல்
உன்னை தொடர்ந்து
இம்சிக்கும்!


உன்னை குறித்த
பலகீனங்களை நினைத்து
உள்ளுக்குள்
உன்னை
திட்டிகொள்வாய்!


முன்னர்
எனக்காகவும்
உனக்காகவும்
சேர்த்து அழுதுவைத்த நீ,
பின்னர்
உனக்காக மட்டும்
தனிமையில்
அழுது
உன்  சுயநலத்தை
காட்டிக்கொண்டிருப்பாய்!


எது
உண்மையென
நினைத்து
இதுவரை
உறுதியுடன் இருந்தாயோ
அது
அனைத்தும்
மெள்ள மெள்ள
உனக்கு
தவறுகளாய் தோன்றும்!

உன்
சொகுசு வாழ்க்கை
உன்னை
தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும் !

காதல்
என்பது
இதுவரை 
தென்றல்
என
நினைத்துக்கொண்டிருந்த நீ ,
அது தேளாய்
கொட்டியதும்
உன்
துயரத்தை  எண்ணி
துன்பப்படுவாய் !

 
இந்த
உடமை சமூகத்தில்
நான் வழ்க்கைக்கு
தகுதியற்றவன்
என
ஒரு
விபத்தை போல
நீ
எண்ணுவாய்!

எனவே
அதற்கு முன்னால்
உனது காதலை
மீண்டும்
பல முறை
பரிசீலனை செய்!


உனக்காக
என்னிடத்தில் இழப்பதற்கு
என்னை தவிர
ஒன்றுமில்லை
ஆனால்
எனக்காக
நீ
அனைத்தையும்
இழக்க வேண்டியிருக்கும் !


எனது தூரம்
எனது பார்வைக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது!
எனது
வழிப்பயணத்தில்
நீ
என்னுடன் பங்கேற்பதில்
எனக்கொன்றும் தடையில்லை!
ஆனால்
நிகழ்கால
சமூகத்தின் மீதான
எனது பார்வையில்
நீ
ஒரு போராளியாய்
என்னுடன் வா


காதல்
என்பது
இரு தனி நபர்கள்
சார்ந்த பிரச்சினையல்ல
அது
ஒரு சமூக விடுதலை
சம்பந்தப்பட்டதாகும்!
 

தோழி !
எதார்த்தமான
காதலுக்கு  வெளியே
ஏற்படும்
இழப்புகள்
அனைத்தும்
ஈடு செய்யகூடியது!
ஆனால்
காதலில் ஏற்படும்
இழப்புகளை
உயிரை கொடுத்தாலும்
அதை
ஈடு செய்ய இயலாதது
என்பதை
ஒருபோதும்
மறக்கவேண்டாம்..



No comments:

Post a Comment