Monday, 24 December 2018

முந்தரிக்காட்டு புரட்சி

1977-தொடங்கி  இன்றுவரை  நான் பிறந்த இடத்தையும், அதை  சுற்றிலும்  நடைபெற்றுவரும் சில அரசியல், சமூக  நிகழ்வுகளை எதார்த்தமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். சமூக  நிலைக்குறித்து   நான்   வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் நிகழும்   சமூக வாழ் நிலையின்  வெளிப்பாடாகும். எந்த நிற்பந்தத்தத்தின்  அடிப்படையிலும்   அதில் மாற்றத்திற்கு  இடமில்லை.  சமூக பொருலியலின் அடிப்படை நிலைகளில்  ஏற்படும்  மாற்றத்திற்கு ஏற்ப  என் கருத்துக்களில் மாற்றம்  உருவாகலாம் .




இதோ
பொன்னிறவிடியல்
உதயமாகபோகிறது!
கொடிய
இருளினை
எரித்து சாம்பலாக்க
ஆயிரம் சூரியன்கள்!
கிழக்கு வானத்தில்.


வறுமையை
தூக்கிலடப்போகிறோம்
என
சூளுரைத்தார்கள்!
வறுமை
தெருவுக்கு தெரு
அலைந்துகொண்டிருந்தது!


இந்த ஊருக்கு
அவர்களின் வருகை
புதுமையாக இருந்தது!
அவர்கள் ஒன்றும்
தேவ தூதர்கள் அல்ல,
மாறாக
அவர்கள்
நிலவும்
சமூக அமைப்பின்
ஒரு அங்கமாக
அவதரித்தார்கள் !


பசித்தவனின்
வயிரைப்பற்றி
பேசினார்கள்!


கடைகோடியில்
கிடந்தவனைப்பற்றி
கவலைப்பட
தங்கள் இருப்பதாக
பறைசாற்றினார்கள்!


மானுடத்தின்
உயிர் வலியை பற்றி
கவலைப்பட்டு
கண்ணீர் விட்டதோடு
நில்லாமல்
அதை
நீக்குவதற்கான மருந்து
தங்களிடமிருப்பதாக
உறுதியளித்தார்கள்!


ஊர் ஜனங்கள்
எல்லோரும்
அவர்களை
மலைபோல
நம்ப ஆரம்பித்தார்கள் !


நாளுக்கு நாள்
அவர்களுக்கும்
மக்களுக்கும்
இடையில் இருந்த
இடைவெளி
மெள்ள மெள்ள
சுருங்கி கொண்டுவந்தது!


அச்சத்தோடு
தூரத்தில்
நின்றவர்கள்
மெள்ள மெள்ள
நெருங்கி வந்தார்கள்.
இது வரை
அவர்களை  பிடித்திருந்த
சந்தேகப்பேய்
கொஞ்சம் கொஞ்சமாக
விலகியபின்னர்,


எல்லோர் வீட்டிலும்
உரிமையுடைய
உறுப்பினர்களாய
ஏற்று கொள்ளப்பட்டார்கள்!


அவர்களில்
ஒரு
சிலர்
தங்களை
பெயர் சொல்லி
அழைத்துக்கொண்டனர்.
சிலர் தங்களை
தோழர்கள்
என அழைக்கலாம்
என்றனர் !


நாளுக்கு நாள்
மக்கள் நெஞ்சில்
அருகம்புல்லாய்
வேரூன்றி
கொண்டிருந்தார்கள் !


எங்களின்
துயரங்களை சரமாக தொடுத்து
பாட்டாக பாடினார்கள்.
அந்த  பாட்டு சத்தம்
திசைகளை
அதிரசெய்தது !


ஈ .வெ . ராமசாமிக்குப்பின்பு
இவர்களின்
பிரவேசம்
இன்னொரு
சமூக விடுதலையை நோக்கி
இட்டு செல்லும்
என
பேசப்பட்டது !


தீணடாமையை
துடைத்தெறிய
கடுமையாக
பேசப்பட்டு
செயல் திட்டம்
வகுக்கப்பட்டன !


மாட்டுக்கறி
சமைக்கப்பட்டு
பல்வேறு
கிராமங்களை ஒருங்கிணைத்து
சமபந்தி போஜனம்
நடத்தப்பட்டன !


தீண்டாமை
என்ற
குறியீடு
புரட்சியின்
எதிரி
எனப்பேசப்பட்டது!


செருப்பு போட
மறுக்கப்பட்ட
மக்களுக்கு
செருப்பு அணிவிக்கப்பட்டு
உயர் ஜாதிக்காரர்களின்
தெருக்களில்
நடக்கவிடப்பட்டனர்!


நம்பிக்கை
ஒளிக்கீற்றுகள்
நான்கு திசைகளிலும்
நாளுக்கு நாள்
தீவிரமாக
ஒளி வீசின!


நிச்சயமான
உலகு
உதயமாகும்
என
உத்திரவாதமளிக்கப்பட்டன!



சாதி ஏதடா
மதங்கள் ஏதடா
உழைக்கும் ஜனங்கள்
ஒன்றுதானடா
என
உரக்க
குரலெடுத்து
திசைகளை
அதிரசெய்தார்கள் !


காட்டு தீயாய்
இந்த
பாட்டுத் தீ
பல
முந்தரிகாடுகளை கடந்து
சமவெளியைநோக்கி
சென்றுகொண்டிருந்தது !


உழுபவனுக்கே
நிலம்
சொந்தம்
என்று சொன்னவர்கள்,
விரைவில்
அரசு முந்தரி காடுகளை
பிரித்து நிலமற்ற
அனைவருக்கும்
நிலம் கொடுப்போம்
என
சொன்னார்கள்!


அதுவரை
அரசு முந்தரி காடுகளை
பொதுமக்கள்
ஏலம் எடுத்து
பங்கு போட்டுகொள்ளலாம்
என்றனர்!


ஆளாளுக்கு
கை வீங்கும் அளவுக்கு
ஓங்கி
கைகளை தட்டினோம்!


புதிய
சமூக
ஒழுங்கமைவுக்கான
நவீன 
கலாச்சாரத்திற்கான
விதைகள்
தூவப்பட்டன!


ஆளும்
அரசுக்கெதிரான
போராட்டம்
பல கட்டங்களாக
நடத்தப்பட்டன!


ஆளுங்கட்சிக்காரர்கள்
சாதாரண ஜனங்களை
கண்ட கண்ட இடங்களில்
நடு ரோட்டில்
இழுத்து போட்டு
போலிசு ஒத்துழைப்போடு
அடித்து
உதைத்தார்கள்!


காறித்துப்பி
ஜனங்களை அவமானப்படுத்தினார்கள் !
எனினும்
புரட்சிப்பயணம்
தொடர்ந்தது !


இளைஞர்கள்
சிவப்பு சட்டை
போட்டுக்கொண்டு
மனுஷங்கடா
நாங்க
மனுஷங்கடா
அவனை போல
இவனை போல
எண்சாண் உடம்புள்ள
மனுஷங்கடா !
என்ற  பாடலை
மிகவும்
உச்சகட்டகுரலில்
பாடிக்கொண்டிருந்தார்கள்.


இலங்கை
தமிழர்களுக்காக
ஈழப்போராளிகளை
கொண்டு வந்து
கூட்டம் போட்டு .
நிதி திரட்டினார்கள் !


இலங்கை
விவகாரத்தில்
இந்தியாவின்
தலையீட்டை
கண்டித்தார்கள்!


எல்லோரும்
புரட்சி செய்யும்
நேரம்
மிக அருகே
வந்து கொண்டிருப்பாதாகவே
நினைத்து  கொண்டிருந்தார்கள்!


முந்தரி
மரங்கள் காய்க்கும்
இளவேனிர்காலமான
மாசி
பங்குனி
மாதங்கள் தொடங்கின!


எல்லோரும்
சிகப்பு துண்டு
அணிந்துகொண்டு
யுத்தகளத்திற்கு
செல்வதை போல
முந்தரி காட்டுக்கு
கிளம்ப தயாரானார்கள்!


முந்தரி காட்டில்
காட்டுகாரன்களை
அடித்து வீழ்த்திவிட்டு
கொட்டை  பொறுக்குவதில்தான்
புரட்சி
அடங்கியிருக்கிறது
என்று
பரப்பப்பட்டதால்
ஆளாளுக்கு
சிகப்பு
துண்டு போட்டார்கள் !


அங்குதான்
புரட்சிக்கான
உருவாக்கம்
இருப்பதாக
கற்பிக்கப்பட்டது!


வெட்டு வாளை
கொண்டு செல்லுவோம்!
விறகு ஒடிக்கும்
வேலண்ணா
வீரண்ணா"
என-
பாடிகொண்டு
முந்தரி காட்டுக்கு சென்று
கொட்டை பொறுக்கினார்கள் !


அரசு காடுகள்
மக்களுக்கே
என முழக்கமிட்டு
கையில் கிடைத்த
பிஞ்சு
காய்
என
கோணி சாக்கில்
உருவி கொண்டு
காயவைத்து
காசாக்கினார்கள் !


தடுக்க வந்த
காட்டுக்காரர்களை
கடுமையாக
தாக்கி
பல்லை  உடைதார்கள்!


அடிபட்ட
காட்டுக்காரன் வாயிலிருந்து
புரட்சி
ரத்தமாய் ஒழுகியது!



அரசாங்க
எந்திரத்துக்கு
வந்ததே கோபம்.
ஊருக்குள்
பொலீசு குவிக்கப்பட்டன!









போலிசு
சனியன்களின்
பலம் தெரியாமல்
புரட்சி
செய்யப்புறப்பட்டவர்கள்
பின்பு
போலிசின்
அட்டகாசத்திற்கு
பயந்து 
ஊரை விட்டு
தலைமறைவானர்கள் !


ஆளே இல்லாத
வீட்டுக்குள்
போலீசு புகுந்து
வீட்டிலிருந்த
பண்டப்பாத்திரங்களை
அடித்து நொறுக்கியது


அடுக்குப்பானைகள்
வீதியில்
வீசப்பட்டன.
கம்பு சோளம்
என
சோற்றுக்கு
வைத்திருந்த தானியங்கள்
அனைத்தும்
சூரையாடப்பட்டன  !


வீடுகள்
கபளீகரம் செய்யப்பட்டன.
வீட்டிலிருந்த
பிள்ளைக்குட்டிகள்
போலீசுக்கு
பயந்து
முந்தரிக்காட்டுக்கும்
தூரத்து ஊர்களுக்கும்
ஓடிப்போனார்கள்!



இதை
கொஞ்சமும் எதிர்பார்க்காத
சாதாரண
ஜனங்கள்
பலரும்
உறைந்துபோனார்கள்!


மாட்டிகொண்டவர்கள்
மீது வழக்குகள்
பதியப்பட்டன.
ஓடிப்போனவர்களை
பொலீசுடன் சேர்ந்து
ஆளுங்கட்சியை
சேர்ந்தவர்களும்
துரத்தி துரத்தி தாக்கினார்கள்!


நீதிமன்றம் போனார்கள்
வழக்கு நடந்தது.
வழக்கு நடத்த முடியாமல்
பலரும்
வீட்டிலிருந்த
பண்டபாத்திரங்களை
விற்று
கேசு பார்த்தார்கள்!


வழக்கின் முடிவு
சாதாரண ஜனங்களுக்கு
சாதகமாக இருந்தாலும்,
ஒரு -
கருவாய் ...
கனவாய் ...
எங்கள் நெஞ்சிலும்
இமைகளிலும்
நாங்கள்
கண் வளர்த்த
எமது
ஜனங்களின்
புரட்சிகர கனவுகள்
என்னவோ
கண்ணீரிலும்
துயரத்திலும்
மூழ்கடிக்கப்பட்டன !


முன்பு
சிகப்பு சாயம் பூசிக்கொண்டு
தலைவர்களாக
வலம் வந்தவர்கள்
பலரும்
புரட்சியை தூக்கி
பரணில் போட்டுவிட்டு
சாதி சங்கத்திலும்
சுரண்டல் கட்சியிலும்
சேர்ந்து கொண்டு
தங்களை
படு கச்சிதமாக
பாதுகாத்துகொண்டார்கள்!


தங்களை
நம்பி
கோஷம் போட்டு வந்தவர்களை
நட்டாற்றில் விட்டு விட்டு
நம்பிக்கை துரோகம்
செய்தார்கள்!


அத்தோடு
இந்த ஊரிலிருந்து
அந்த சிந்தனைகள்
அனைத்தும்
விளக்குமாறு போட்டு
ஒட்ட
துடைத்தெறியப்பட்டு
தூர வீசப்பட்டன!


அதன் பின்பு
அதை பேசவே
பலரும்
மறந்து போனார்கள்!
நிறைய பேர்
அந்த
கொள்கைகளை
பேசுபவர்களுக்கு
அதிராக  செயல்பட்டார்கள்!


தங்களுக்கு
பின்னால்
யாரும் வளரக்கூடாது
என
கங்கணம்  கட்டிகொண்டு
கருங்காலி
வேலைபார்த்தார்கள் !


முற்போக்கு கொள்கைகளுக்கு
முக்காடு
போடப்பட்டது!


அத்தோடு
அந்த யுகத்திற்கான
குழிதோண்டி புதைக்கும் படலம்
முடிந்து
முப்பது ஆண்டுகள்
போய்விட்டன!


இந்த
ஊரில்
இப்போது
இந்த கருத்தியலின் நாற்றம்
கிஞ்சித்தும்
இல்லாமல் போயிற்று !




உலகம்
வர்க்கங்களாக
பிளவுண்டு கிடக்கிறது!
ஆனால்


இந்த ஊர்
வகையறாக்களாக
பிளவுண்டு கிடக்கிறது!
வர்க்கப்பகமையைக்காட்டிலும்
இந்த
ஊரின் வகையறா பகைமை
கொடுமையாக இருக்கிறது!


எவ்வளவு படித்தவனாக
இருந்தபோதிலும்
வகையறா
என்ற
கிணற்றுக்குள்
வீழ்ந்து
தன்னை மூழ்கடித்துகொள்கிறான்!


ஒரு மனிதனுக்குறிய
அடிப்படை
அடையாளங்களை
முன்னிறுத்துவதைக்காட்டிலும்
தனது
வகையறாவை
முன்னிறுத்தி
கேவலப்படுத்துகிறார்கள்!


வெறும்
ஊர் பெயர்மட்டும்
பழைய பெருங்காய
டப்பா வாசமடிப்பதை போல
இருக்கிறது!


உலக மயத்தின் விளைவாக
எப்படி
பணம் சம்பாதிப்பது?
எதை விற்றாவது
சொகுசு வாழ்க்கை வாழ்வது?
என்ற
சிந்தனை தளத்தில்
ஊர் வீழ்ந்து கிடக்கிறது !


ராமன் ஆண்டால்
நமக்கென்ன!
ராவணன் ஆண்டால்
நமக்கென்ன
என
அவரவர்கள்
அவர்களின் வேலையை
செய்து கொண்டிருக்கிறார்கள்!


நடுத்தெருவில்
யார் வெட்டிக்கொண்டு செத்தாலும்
கவலைப்படுவதற்கென்று
யாரும் இல்லை!


முற்போக்கு
கொள்கைகளுக்கும்
இந்த ஊருக்கும்
ஒரு
தலைமுறை இடைவெளி
ஏற்பட்டிருக்கின்றன!




பகுத்தறிவு
சிந்தனை தந்த  பூரிப்பில்
தந்தைபெரியாருக்கு
எடைக்கு எடை
முந்தரிப்பருப்பு
கொடுத்த 
அவரின் 
கருத்தியல்  வாரிசுகள்,
அவரின்
மறைவுக்கு  பின்பு
அவரின்
சிந்தனைகளை
மேன் மேலும்
மெருகேற்ற
கோயில் கட்டி
கும்பாபிஷேகம்
நடத்திகொண்டிருக்கிறார்கள் ! 



அவ்வபோது
அம்மனுக்கு 
பிடித்தமான
கூழ் காய்ச்சி ஊற்றப்படுகிறது !
கூடவே
பெரியாரின்
நாமமும்  ஓதப்படுகிறது !


கம்யூனிஸ்டு
தலைவர்களின்
நாமம் 
பிழைப்புவாதத்தில்
சிக்கித்திணறி 
நாறிக்கொண்டிருக்கிறது !


வாழ்க்கை
சினிமா தனங்களாலும்
நுகர்வு கலாச்சாரத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது!


ஒவ்வொருவரும்
சிங்கப்பூர்  போய்
நிறைய சம்பாதிக்கலாமா
துபாய் போனால்
நிறைய சம்பாதிக்கலாமா
என்ற
கணக்குகளுக்குள்
வாழ்க்கையின்
எல்லைகளை
சுருங்கி கொண்டனர்!


நகரமயமாக்கலின்
விளைவாக
ஊரிலிருந்த
சந்து பொந்துகளில் கூட
வீடுகள்
முளைத்துவிட்டன!


மூத்திரம்
விட கூட
இடம் கிடையாது !


மனிதர்களுக்கிடயே
உள்ள உறவுகள்
அனைத்தும்
வணிக உறவுகளாகிவிட்டன!


தனி நபர் மதிப்பீடுகள்
முன்பைக்காட்டிலும்
தனது
பொருளாதார அளவு கோலை
மிக
உயரத்தில்
தூக்கிப்பிடிக்கின்றன !


நேருக்கு நேர்
சந்திக்கும் போது
வெறும்
சம்பிரதாயத்துக்கு
வணக்கம்
சொல்வதைக்கூட
பலர்
தேவையற்றதாக நினைக்கின்றனர்!


வாழ்க்கை என்பது
வெறும்
வரவு
செலவு
கணக்காக போய்விட்டன!


கடைசிகாலத்தில்
கிராமத்திற்கு போனால்
சாதி சனத்தோடு
தனது
இறுதி நாட்களை
கழிக்கலாம்
என்று
நகரத்திற்கு
பிழைக்கபோன
பலரின்
ஆசைகள்
மெள்ள மெள்ள
பொய்த்து வருகின்றன!


அதற்கு
இந்த
ஊரும் விதிவிலக்கல்ல...


சமூக அவலத்தைப்பற்றி
வாய்கிழிய பேசுவார்கள்!
அதை
அகற்றுவதற்கு
யாரும்
முன்
வரமாட்டார்கள் !


பலர் நடக்கும்
பாதைமீது
முள்ளை கொண்டு வந்து
கொட்டுவார்கள்!
யாராவது
அதை
அகற்ற முன்வந்தால்
இரக்கமேயில்லாமல்
கொச்சைப்படுத்துவார்கள்!


இப்போது
தோன்றியுள்ள
புதிய தலைமுறைக்கும்
முற்போக்கு கொள்கைகளுக்கும்
மிகப்பெரிய
இடைவெளி
தெரிகின்றன !


தற்சார்பு
அறிவு என்பது
சாராம்சத்தில்
சுயநல அறிவாகும்!
அது
இவ்வூரில்
பெரிய
சாதனையாகப்பேசப்படுகிறது !


ஒருவன்
அடுத்தவனைப்பற்றி
கொஞ்சம்கூட
நினைப்பதைக்காட்டிலும்
தன்னைப்பற்றித்தான்
அதிகம்
சிந்திக்கிறான்!



ஒரு
ஆமையைபோல
ஒவ்வொருவரும்
குறுகிய
வட்டத்துக்குள்
தங்களை முடக்கி
கொண்டுவருகின்றனர் !


நகரமயமாக்கலின்
விளைவாக
அண்டைவீட்டுகாரர்களெல்லாம் 
அந்நியர்களாகிவிட்டனர் !


தாமரை இலையில்
ஒட்ட மறுக்கும்
தண்ணீரைப்போல...
மனித உறவுகள்
ஒன்றோடொன்று
ஒட்ட மறுத்து
திசைக்கொன்றாக
சுற்றித் திரிகின்றன!


தகவல் தொழில் நுட்பங்களால்
கிராமத்தின்
உயிர் நாளங்கள்
கடுமையாக
சீழ் பிடித்திருக்கின்றன !


பல
கோட்பாடுகளின்
ஆய்வுகளமாக
இருந்த
இவ்வூர்
தற்போது
எந்த தனித்துவமும்
இல்லாமல்
வெறும்
முகவரியை சுமந்து
வாழ்ந்து வருகிறது!


ஒரு
ஊரின்
அடையாளம் என்பது
நான்கு
பணக்காரர்கள்
அந்த ஊரில்
வாழ்வதல்ல..


நான்கு
நபர்கள் மட்டும்
கார்கள்  வைத்திருப்பதல்ல,


ஊரெல்லாம்
கான்கிரீட்
வீடுகளாக
காட்சியளிப்பது மட்டுமல்ல,


ஊரிலுள்ள
கோயில் -
குளங்கள் -
பள்ளிக்கூடங்களை
சுட்டிக்காட்டி
இது தான்
ஒரு
ஊரின் அடையாளம்
எனக்கூறிகொண்டு
தங்களை
தாங்களே
ஏமாற்றிக்கொள்ள முடியாது !


ஏனெனில்
இது
எல்லா ஊர்களிலும்
காணப்படுகின்ற
பொதுவான
காட்சியாகும்!


ஆனால் -
அடையாளம்
என்பது
வெறும்
புறத்தோற்றத்தை
கொண்ட
மதிப்பீடுகளல்ல...
அது
ஒரு சமூகத்தின்
பண்பாட்டு தளங்களின்
அகமதிப்பீடுகளை
கொண்டதாகும் !


அடையாளம்
என்பது
ஒன்றோடொன்று
ஒன்றி போவதல்ல...
மாறாக -
ஒன்றிலிருந்து
ஒன்றை
வேறுபடுத்தி காட்டுவதாகும்.


அடையாளம்
என்பது
பிரிதொன்றின்
ஆளுமைக்குள்
அடங்கிபொவதில்லை !
மாறாக
தனது
பலம் பொருந்திய
ஆளுமைதனத்தால்
காணுகின்ற
அனைத்தையும்
வெற்றிக்கொள்வதாகும் !


எங்கும் போலவே
யார் யாருக்கு
என்ன நிறம்...
யார் யாருக்கு
என்ன அடையாளம்
என்பதை பற்றியெல்லாம்
நினைத்துபார்க்க
நேரமில்லை !


இங்கு
குடிப்பதற்கு
தண்ணீர் கிடைக்காமலும்,
பிழப்பதற்கு
வழியில்லாமலும்
பாலைவனத்தில்
பயணிப்பது போலிருக்கிறது !


கிராமத்திற்குறிய
அமைதி
செத்துபோய்
ஆண்டுகள்
பல ஆகிவிட்டன!


கிராமம்  மறைந்து
சிறு
நகரமாக
உருவாகிகொண்டிருக்கின்றன!


அந்த காலத்தில்
ஊருக்குள்
ஒரு
கார் வந்தால்
ஊரே திரண்டு வந்து
வேடிக்கை பார்த்தது !


கிராம சாலை
நெடுஞ்சாலையாக
மாறிவிட்டன !
இன்று
கண்  இமைப்பதற்குள்
எண்ணற்ற
வாகனங்கள்
செல்கின்றன !


வாகனங்கள்
விட்டுசெல்லும்
புகை
புழுதி மண்டலம்
குழந்தை
குட்டிகளின்
நாசியை  நிரப்பி
மூச்சு திணறலை
உண்டாக்குகின்றன !



தனித்தனியாக
இருந்த
இரண்டு
ஊர்களுக்கு
இடையில்
வீடுகள் முளைத்து
ஒரே ஊராகி விட்டன!


ஊரே பயந்து கொண்டிருந்த
சுடுகாட்டை சுற்றிலும்
வீடுகள்
தோன்றி விட்டன !


அறிவியல் வளர
அறியாமை அகன்றது !
அதனால்
இளைஞர்கள்
நிறைய பேர்
சுடுகாட்டை
சீட்டு கிளப்பாக
மாற்றிவிட்டனர்!


சின்ன
ஏரியை சுற்றிலும்
ஏராளமான
காலியான
மது பாட்டில்கள்
காணப்படுக்கின்றன !
ஏரிக்கரையை
மது
அருந்தும்
பார்களாக
இளைஞர்கள்
மாற்றியிருக்கினறனர்!


அமைதிக்கு
ஓய்வெடுத்துகொண்டிருந்த
ஏரிக்கரைகள்
பொதுக்கழிப்பிடமாகிவிட்டன!


உலகப்புரட்சியைப்பற்றி
உரக்க குரலெடுத்த
ஊரின் நடுவே
மதுக்கடை
திறக்கப்பட்டு
ஊர் ஜனங்களுக்கு
தங்குதடையின்றி
மது பாட்டில்கள்
கிடைக்கின்றன!


கூடவே
மதுவை  சிறப்பிக்க
சுவையூறும்
வறுத்த
பன்றிக்கறி பொட்டலங்கள்  !

பணத்திற்கு
கவலையில்லை
கந்து வட்டிக்கு
தாராளமாக
பணம்
கிடைக்கிறது !


குடிமன்னர்களின்
அவசரதேவைக்கு
அடகு கடைகள்
நிறைய உள்ளன!
வீட்டில்
பெண்டாட்டி
பிள்ளைகளின்
காதில்
கழுத்தில் கிடப்பதை
துங்கும் போது
பிடுங்கி கொண்டு வந்து
ஈடு வைத்து
குடிப்பதற்கு
பணம் தேற்றலாம் ! 


வருடத்திற்கு
இரண்டு இளைஞர்கள்
மதுவால்
குடல் வெந்து
இளம் வயதில்
இறந்து கொண்டிருக்கின்றனர் !


எப்படியும் -
எதை விற்றாவது
தினந்தோறும்
குடித்தே  ஆகவேண்டும்
என்ற
நிலையில்
ஒரு பிரிவினர்
உள்ளனர் !

இருக்கின்ற
இரண்டாம்  தலைமுறையினர்
இந்த ஊரை விட்டு
செந்துறைக்கோ -
செயங்கொண்டத்திற்கோ -
இடம்
பெயர்ந்து கொண்டிருக்கின்றனர் !


ஆபத்துகளற்ற
ஒரு
சமூக  அமைப்பாக
உருவாக்கம்  பெற்றுள்ள
இவ்வூர்
தற்போது
எந்த
கோட்பாட்டு
வளையத்துக்குள்ளும்
மாட்டிகொள்ளாமல்,
எந்த
சலனமும்
இல்லாமல்
தனது
இயல்பான போக்கில்
சென்றுகொண்டிருக்கிறது !


ஆனாலும் 
ஒரு
யுகம் மடிந்துபோனது குறித்து
எந்த
பிரங்சையுமில்லாமல்
நிகழ்காலம்
தனது 
புதிய
அடையாளங்களை தேடி
வாயிலில் 
மாவிலைத்தோரணங்களுடன்
கைகளில்
மாலைகளோடு 
காத்திருக்கிறது !
   

No comments:

Post a Comment