Monday, 24 December 2018

கெங்காயி





கெங்காயியின்
ஆதி அந்தம்
எனக்கு தெரியவில்லை.
ஆனால் -
அம்மாயி
மண்வீட்டு சந்தில்
அவள்   மட்டும் படுத்து  கிடந்தாள்!


நான்
முதன் முதலில்
அவளை பார்த்தபோது
மிகவும்
பாவமாய் இருந்தது !
நடுத்தரவயதைவிட கொஞ்சம் அதிகம்,
இந்த வயதிலேயே
இவளுக்கு
கண் தெரியாமல் போனது
மிகவும் வியப்பாயிருந்தது.
காரணத்தை அறியும் வயது
அப்போது
எனக்கில்லை..!


தலைமுடி முற்றிலும்
நரைத்து போயிருந்தது.
புளிச்ச கழி நாரை போல...
வெள்ளையாக
அலங்கோலமாக
முகத்தை மூடி மறைத்திருந்தது..!


முகத்தில்
உதடுகளை தாண்டி
பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது !
பல்லை  விளக்காததால்
அது -
காரை படிந்து  போய்க்கிடந்தது!


யாராவது புதியவர்களின்
காலடி ஓசை கேட்டால்
மிக ஆவலாக
யாரது என்பாள்..!
ஏதாவது சாப்பிடுவதற்கு
போடமாட்டார்களா
என்ற
நம்பிக்கையில்...


அலுமினியத்தாலான
ஒடுக்கு விழுந்த
அவளது
பிச்சைப்பாத்திரம்
எப்போதும்
வெறுமையாகவே கிடந்தது ..!


கெங்காயிக்கு
வெற்றிலை போடும்
பழக்கம் இருந்தது!
ஆனால்...
வாங்கிகொடுப்பதற்குதான்
ஒருவரும் கிடையாது!


அவளுக்கு
கண் தெரியாததை பயன் படுத்தி
காய்ந்து போன
முந்தரிப்பூக்களை
புகையிலை எனவும்-
பூவரசம் இலையை
வெற்றிலை
எனவும்-
கொடுத்தால்...
அதை வாங்கி வாயில் போட்டு...
நன்சதின்னி மக்களா
என-
திட்டுவாள்!


கெங்காயியால்
யாருக்கும்
எந்த லாபமும் இல்லை
என்ற
ஒருமித்த கருத்து இருந்தது ..!
அந்த கெங்காயி யாரு?
அவ யாரு பெற்றபிள்ளை
என்பதை  அறிய
யாரும்
அதிக ஆர்வம் காட்டியதில்லை..!


அவரவர்களுக்கே
ஒன்றும் கிடைக்காமல்
ஆலாய் பறக்கும்போது
கெங்காயியை
யார் கவனிப்பார்கள்?
கெங்காயி
ஒரு நாள்
சுகவீனம் அடைந்தாள்..!


அவள் உடலிலிருந்து
வெளிவரும் துர்நாற்றம்
எல்லோரையும்
அருவருப்படைய செய்தது.
யாரும்
கிட்ட நெருங்கவே
தயங்கினார்கள்...
நாதியற்று போய்
நடு சந்தில்  கிடந்தாள்..!


அதோ...
அம்மணமாய்
உடலில்
எந்த துணியும் இல்லாமல்...
இறந்து போன
நாயினும்
மோசமாக...
உணர்வற்று கிடந்தாள்.


தெம்பும் திடகாத்திரமும்
இருந்தபோது
ஓடி ஓடி உழைத்தவள்.
நாடி தளர்ந்தபோது
நாறி  நிறங்குலைந்து கிடந்தாள்!
எந்த நாதி பராதியும் இல்லாமல்...




வாழ்க்கை பயனத்தில்
எந்த முகவரியும்
தெரியாமல்
வழி  தவறி வந்தவள்.
வாழ்க்கையின்
எந்த தடமும் இல்லாமல்
வெறுமனே
ஏழையின் வாழ்க்கை சூன்யமாய்
பெண்ணாய் பிறந்து
சிதைந்து கிடக்கிறாள்!
பேதை -
எவனுக்கு
முந்தானை விரித்தாளோ!...
அவனுக்கு முன்பு
இவள் போயிருக்கலாம்.
எப்போதும்
புருஷனுக்கு முன்பு
போய் சேர்ந்துடரதுதான் நல்லது
என -
எல்லோரும் சொல்கிறார்கள்!


வீட்டு விலங்குகள்
செத்துபோனால்  காட்டும்
பரிதாபம்கூட
கெங்காயி
சாகும் போது
யாரும் காட்டவில்லை..!
அப்போதே
வாழ்க்கையின் மீது
எனக்கு
வெறுப்புதான் தோன்றியது !


ஒரு நாள்
நான்  பள்ளியிலிருந்து
வீட்டுக்கு வந்தபோது
ஆயி வீட்டுக்கு முன்பு
சிறு கூட்டம்
நிற்பதை கண்டு துணுக்குற்று...
தூரத்தில்
நின்று
எனக்குள்  முடிவுக்கு வந்தேன்!


நிச்சயமாக
கெங்காயி செத்து போயிட்டா.


கைபாடை தயாரானது
நாதியற்றவர்களுக்கு  கைபாடை..!
நாலும் உள்ளவர்களுக்கு
பல்லக்கு பாடை ..!
பாடையில் கூட
வர்க்க பேதம்தான்..!


வசதி உள்ளவர்கள்  செத்துபோனால்
நிறையபேர் செல்கிறார்கள்.
ஏழை செத்து போனால்
செத்துபோனவரின்
உறவினர்கள்  மட்டுமே செல்கின்றனர்.


கெங்காயியை
சுடுகாட்டுக்கு கொண்டுபோகும்போது
மாமன் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே
கூட சென்றனர்.


அப்போதே
வாழ்க்கையை குறித்து
மதிப்பீடுகள்
எனக்குள்  மாறத்தொடங்கியது.
கெங்காயியும்
நானும்...
ஒரு தாயின்
கனிவான அரவணப்பில்
கண் துயிலும் மழலையாய்
மீண்டும்
எனது வாழ்க்கையில்
ஒருமுறை
கெங்காயியை
கண்திறந்து பார்க்க
கெங்காயி
விண்  மீனாய்...
பூவாய்..
கொடியாய்...
பறவைகளாய்..
இந்த
பிரபஞ்சத்தில்
எங்காவது பிறந்திருப்பாளா
என
இன்னும் ---
தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.




Image result for tamil old lady's drawing







No comments:

Post a Comment