Thursday, 14 March 2019

காவேரி வந்தாள் ( 9)


Image result for an tamil  old aged  lady  in modern paintingகாவேரியின் மனசில் சினிமா படம் போல கடந்தகாலங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தாள். நினைக்குந்தோறும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பிறந்து வளர்ந்து , யாருக்கு  வாக்கப்பட்டு, தாலி இழந்து ,இங்கு வந்து மூத்திர சந்தில் கிடக்கிறோமே !” என  மனதுக்குள் கலங்கினாள்!
  
அப்போது  ‘பொத்தென்று சத்தம் கேட்டு ,பரபரப்பானாள் கெங்கை. நிச்சயமாக அது சின்னப்பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும்.அந்த சத்தம்  விறகு கட்டாக இருக்க வேண்டும்,இல்லாட்டி ,ஆட்டுக்கு தழைக்கட்டாக  இருக்கவேண்டும் என மனசுக்குள் யூகித்தவளாக “சின்னப்பிள்ள,சின்னப்பிள்ள !” என அழைத்தாள்.
ஆனால் .. சத்தம் ஏதும் வரவில்லை. தலையில் சுமை சுமந்து வந்த களைப்பில் ஏதும் பேசாதவளாக களைப்பின் மிகுதியில் இருந்த சின்னப்பிள்ளை நேராக வீட்டினுள்ளே சென்று படுத்துக்கொண்டாள். காலை நேரத்தில் களையெடுக்கும் வேலைக்கு  சென்றவள், அவளும் அம்மா  பழனியும் மதியம்  நெருங்கியவுடன் களைவெட்டு வேலை முடிந்தவுடன் ,நேராக ஆட்டுக்குட்டிக்கு  தழை வெட்டிக்கொண்டு , அடுப்பெரிக்க கொஞ்சம் விறகு பொறுக்கிக்கொண்டு இருவரும் சரியான வெயில் நேரத்தில் வீடு திரும்பியிருந்தனர்.
   ஆயி கூடத்தில் படுத்து கிடந்தாள். விறகு கட்டை கீழே போட்ட அம்மா சோறாக்குவதற்காக  வெள்ளை சோளத்தை திருவையில் இட்டு உடைப்பதற்கு ஆயத்தமானாள். சோளத்தை உடைத்து,அதன் பின்பு  உலை வைத்துதான் சொறாக்கவேண்டும்,குழம்பு வைக்கவேண்டும். திருவை சுற்ற தொடங்கியது. மட மடவென திருவை உருளும் சத்தம் கங்கையின் கணிப்புகளை ஊர்ஜிதம் செய்திருக்க வேண்டும்,ஏனோ மவுனமாக இருந்தாள். அவளது மவுனம் அவளுக்கு ஒன்றை கண்டிப்பாக சொல்லியிருக்கும்,
  
    ஆம் ! நிச்சயமாக இப்போதைக்கு சோறு கிடையாது,சோளம் வெந்துதான் சோறாக வேண்டும் அதுவரை பேசாமல் கிடைக்க வேண்டியதுதான் என்ற முடிவோடு துணி மூட்டையை இழுத்து அடிவயிற்றின் அழுத்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
   
    ஓட்டை உடைசலான ஒரு டெல்லி ரேடியோ  செட்டை வைத்துக்கொண்டு வடக்கால திண்ணையில் படுத்துக்கொண்டு இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். காவேரியின்  பசித்தீயின் வேகம் தெரியாமல்  அம்மாவின் திருவை நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் ஏதாவது பழைய நீராகரமாவது குடிச்சாளா? இல்ல அமோகமா பட்டினித்தானா என தெரியவில்லை.ஆனால் கண்  தெரியா விட்டாலும் தலையை  தெற்காலே மேற்காலே என திரும்பி திரும்பி  யாராவது அழைப்பின் குரல் வரும் திசை நோக்கி ஆவலைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தாள்.

களைப்பாறிய  சிறுது நேரம் கழிந்து  கொட்டாயை விட்டு வெளியே வந்த  ஆயி நேரே  காவேரி  படுத்திருக்கும் மூத்திர சந்துக்கு சென்று
“ஏய் கெங்க !” என்றாள்..  ஈனஸ்வரக்குரலில்  “இம் “ என்றாள் கெங்கை. இவள் கடுமையான பசியில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நேரே கொட்டா உள்ளுக்கு சென்றவள்.ஒரு கிண்ணியில் பழைய  கம்பஞ்சோற்று உருண்டை  ஒன்றை போட்டு நீராகாரத்தை ஊற்றி  கெங்கையின் முன்பு வைத்து  " இந்தாடி காவேரி ,இந்த கம்பஞ் சோத்து  உருண்டையை முறுக்கி குடி” என வைத்தாள்.

   சோற்றுக்கிண்ணியை தன்பக்கம் கைகளால் இழுத்துக்கொண்ட காவேரி  அதை கையைக்கூட கழுவாமல் கம்பஞ்சோற்றை கரைச்சு குடிக்க ஆரம்பித்தாள், இதை அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த ஆயி “போதுமாடி,... இன்னும் வேணுமா...? என்றாள்.
“இம்’  என மெல்லிய குரலில் சம்மதம் தெரிவித்தாள். வேகமாக சம்மதம் சொன்னால்... ஒரு வேளை சின்னப்பிள்ளை சத்தம் போட்டாலும் போடுவாள் ‘என  பயந்து கொண்டு  ஒரு வார்த்தையோடு முடித்து கொண்டாள். இல்லையென்றால் ,கொஞ்சம் வெத்தல கொடு! கொஞ்சம் பொயல குடு ! என கேட்பாள்! ஆயியும் ஏதோ கொடுப்பாள் .கூடவே கொஞ்சம் வசவையும் சேர்த்து வெத்தலையில் தடவி கொடுப்பாள் . கண் தெரியாத அவளும்  அதை ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கும் பற்களுக்கிடையில் அதை போட்டு அதப்பிக்கொண்டிருப்பாள். என்ன சுவையோ அவளுடனே அவளின் வெத்தலை போடு பழக்கமும் உடன் பயணிக்கிறது.

    கொஞ்ச நேரம் கடந்தபின்னர் கொட்டாயிலிருந்து கிழவி வெளியில் வந்தாள். கைகளில் வெற்றிலை சீவலை வைத்து  கட்டை விரலால் நிமிட்டியபடி,இந்தாடி காவேரி ! என அவள் கையில் வெற்றிலை தூளைக்கொடுத்தாள். அதை வாங்கிய அவள் அதை போட்டு மெல்ல தொடங்கினாள் .அதை உற்று பார்த்துக்கொண்டிருந்த ஆயி லேசான புன்னகையோடு அவ்விடத்தைவிட்டு கடந்து போனாள். என்னதான் பேசினாலும் காவெரியின்  மீது ஆயிக்கு வெளிக்காட்ட  இயலாத ஆழ்ந்த அன்பு இருந்தது.ஏனெனில்  இருவரும் பிறந்தது ஒரே ஊரில்தானே!
  




No comments:

Post a Comment