Monday, 4 February 2019

காவேரி வந்தாள் (4)


Related imageஅவளுடைய நினைவுகள் பின்னோக்கி பயணித்தன.அப்போதுதான்  காவேரிக்கு கல்யாணம் ஆகியிருந்தது.அவளுடைய புருஷனைவிட அவளுக்கு இரு வயசுதான் வித்தியாசம். அவனுக்கு பதினாலு வயசுதான்.

இவளுக்கு பன்னிரண்டு  வயசு. அது அப்போதைய வழக்காக இருந்தது நிறைய கல்யாணத்தில ,கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷம் கழிந்த பின்புதான் நிறைய பொண்ணுங்க வெளியே ஒதுங்குவாங்க.ஆனாலும் அவங்க பிறந்த வீட்டுக்கு செல்வது கிடையாது .கட்டியவனோடுதான்  தொடர்ந்து  குடும்பம் நடத்தும் பொறுப்பு வரும் வரைக்கும் இருப்பாங்க. தாம்பத்யம் பத்தியெல்லாம் அந்த கால பெண்களுக்கு  அவ்வளாவாக ஒன்றும் தெரியாது என கிழவி சொல்லக்கேட்டிருக்கிறேன். 

தாம்பத்யம் நடத்துவதற்கான தகுதி வந்தபோதும் ,கடுமையான கூச்சத்தின் காரணமாக பிறந்தவீட்டிற்கு கோபித்துக்கொண்டுபோன பெண்களும் உண்டு.சில பெண்கள் மாதக்கணக்கில் பிறந்த வீட்டிலேயே தங்கி விடுவது உண்டு. ரெண்டு தரப்பும் பஞ்சாயம் பேசி  அப்புறம்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு பெரிய கூட்டமே வருவதுண்டு.அப்புறம் கடாவெட்டி கொழம்பு வச்சு எல்லோரும் தடபுடலா சாப்பிட்டுவிட்டு போவதுண்டு.

ஆனால் அதெல்லாம் அந்தகாலம்,ஊரு ஒலகத்துக்கு பயந்துகிட்டு ,மானம் வேட்கத்துக்கு கட்டுப்பட்டு ஒருத்தனோடு குடும்பம் நடத்தி  கடைசி வரைக்கும் காடு பொய் சேரவேண்டும். ஆனால் இப்பெல்லாம் அப்படியா நடக்குறது.எல்லாமே தலைகீழா நடக்குது “ என தனக்குள் நொந்து கொண்டாள் .  

    காவேரியின்  கணவன் இளையவனாக இருந்தாலும்  மிகவும் நல்ல குணம் உள்ளவானாக இருந்தான். அவளை கல்யாணம் ஆனப்பின்பு நீண்ட நாட்கள் பிறந்தகத்திற்கு அனுப்பாமல் தங்கள் வீட்டிலேயே கண்ணும் கருத்துமாக  பாதுகாத்து வந்தான்.அவளும் தன பிறந்த வீட்டிற்க்கு போகவேண்டிய எண்ணம் தோன்றாத அளவுக்கு அவனுடைய அன்பில் கட்டுண்டு கிடந்தாள். உலக விபரம் அறியாதவர்களாக இருந்தபோதிலும் தம்பதிகள் ஒருவருக்கொருவர்  நன்கு புரிந்தவர்களாக  இருந்தார்கள்.

வாக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே  யாரும் செய்ய சொல்லாமலேயே  தானாகவே மாட்டுப்பட்டியை,ஆட்டுப்பட்டியை பெருக்குதல்,சாணம் குப்பைகளை அள்ளி குப்பைக்குழியில் கொட்டுதல்,மாட்டுத்தொட்டிக்கு ஏரியிலிருந்து தலையில் தண்ணீர் குடத்தை சுமந்து வந்து தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் போன்றவற்றை வழக்கமாக செய்யத்தொடங்கிவிட்டாள்.

இதை உற்றுக்கவனித்த மாமியார் அலமேலுவை பீடித்த சந்தேகம் மெல்ல விலகியது.தனக்குக்கட்டுபடாத மருமகள் வந்து விடுவாளோ ,தனது பேச்சுக்கு கட்டுப்படாமல் தனி ராஜ்ஜியம் நடத்த தொடங்கி விடுவாளோ ? தனது மகனை தன்னிடமிருந்து பிடுங்கிக்கொள்வாளோ என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியது.

தனக்கு பிடித்த தனது சொல்பேச்சை எடுத்ததற்கெல்லாம் கேட்கின்ற காவேரியை  அலமேலுவுக்கு சுத்தமாக  பிடித்து போயிற்று. தனது பக்கத்துவீட்டு சனங்களிடமெல்லாம் பெருமைபொங்க சொல்லத்தொடங்கிவிட்டாள்.பெருமை பிடிபடவில்லை.காவேரியை  தனக்கு மருமகளாக ஆண்டவன் கொடுத்திருக்கான், எல்லாம் அந்த நொண்டிக்கருப்பின் மகிமை என கன்னத்தில் இரண்டு கைகளாலும் போட்டுக்கொண்டாள் அலமேலு.
  
    மாமனார்  பெருமாள் உலகம் ஒன்றும் தெரியாதவர். மனைவியின் சொல்பேச்சை மீறாதவர்.மனைவி சொல்லே மந்திரம் என எதைப்பற்றியும் எதுவும் தெரியாதவர்.ஆடுமாடுகளை காட்டுக்கு ஒட்டிக்கொண்டுபோய் மேய்த்து வந்து கிடையில் கட்டுவது .கொல்லைக்கு பொய் மாட்டுக்கு புல் பார்த்து வருதல் ,ஆட்டுக்கு தழைவெட்டி வருதல் போன்றவற்றை தவிர,தங்கள் விளை நிலத்தையும் பார்த்துக்கொள்தல், மேலும் கூலிவேலைக்கும் செல்வார். அலமேல் ,பெருமாள் தம்பதிக்கு ஒரு ஆண் ,ஒரு பெண் ,என இரு பிள்ளைகள்.இதில் பெண் மூத்தவருக்கு கல்யாண ஆகி பிறந்தகம் போயி இரண்டு ஆண்டுகள் ஆகிறது, 

    ஒரே பையன் என்பதற்காக அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்கள்! கோயில் குளம் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதற்காக  தனது மகனுக்கு சுப்ரமணியம் என பெயரிட்டிருந்தனர் . மகன் எதுக்கேட்டாலும் வாங்கிக்கொடுக்க தவறமாட்டாள்.புஷனுக்கு  சோறுபோட மறந்தாலும் மறப்பாள்.மகன் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதைப்  பொறுக்க மாட்டாள்.அப்படிப்பட்ட மகனை மருமகளிடம்  அலமேலு அவ்வளவு எளிதில் விட்டுகொடுத்து விடுவாளா என்ன ? அதற்காகத்தான் ஆரம்பத்தில் அவளுக்கு லேசான சந்தேகம் இருந்தது.ஊரு ஒலகத்தில நடக்கிறதுதானே! 

எத்தனை குடும்பத்திலே   மருமவ  ஊட்டுல புகுந்த உடனே மாமியாளுக்கு தனி சட்டி கொடுத்து தாழ்வாரத்தில உட்கார  வக்கிராளுவங்க.புருஷனுக்கு மந்திரபோடி போட்டு மசக்கிபுடுராளுங்க “ என பரிபூரணத்திடம் அலமேலு தனது ஆற்றாகுறையை சொல்லி மனசு ஆறுவாள். “காவேரி  ஒன்னும் அப்படிப்பட்ட ஆளு இல்லடி ,அவ பச்ச மன்னுடி,எனபனம் ஏது தெரியாத சின்னப்புள்ளடி /அவள போயி சந்தேகப்பட்டியே ! பேசாம வேலைய பாருடி அலமேலு ! எல்லாம் நல்லபடியே நடக்கும்.நீ யோகக்காரி,உன் மருமக சும்மா பாப்பாத்தி மாதிரி என்ன அழவா இருக்கா “ என பரிபூரணம்  சொல்லி முடித்தாள் . இதைக்கேட்டதும் அலமேளுவிற்கு முழு மன அமைதி ஏற்பட்டது.ஒருவாறு இத்தனை நாட்களாக  தனது மனதில் நீங்காமல் நீடித்திருந்த குழப்பம் விலகியதை எண்ணி  அலமேலு சந்தோஷப்பட்டாள்.

     அதன் பின்னர் கல்யாணம் ஆனா உடனே தனது குடும்ப பாரத்தை சுமப்பதில்,அவள் சின்ன பிள்ளையாக இருந்தபோதிலும் எவ்வளவு கரிசனம் காட்டுகிறாள்! என்பதை எண்ணி வியந்தவாறே பூரணத்தின் வீட்டிலிருந்து  படலுக்கு அடுத்ததாக இருக்கின்ற தனது வீட்டிற்கு சென்றாள் அலமேலு .அப்போது  சோறு ஆக்குவதற்காக உரலில் கம்பு இடித்துக்கொண்டிருந்தாள். 

இதை பார்த்ததும்தான் காட்டுக்கு ஆடு மாடு ஓட்டிச்சென்ற தனது கணவன் பசியுடன் திரும்பி வருவான் என்பது உணர்ந்தவாறு மருமகளுடன் மாற்று உலக்கையால் இவளும் கம்பு இடிக்க “டும் டும்’ என் உரலின் சத்தம் பத்துவீடு தள்ளிக் கேட்கும்,அந்த ளவுக்கு மாமியாளும் மருமகளும் கம்பு இடித்தார்கள். 

   தனக்கு ஈடாக தன மருமகள் உரலில் கம்பு இடிப்பதில் அலமேலுவுக்கு ஏகத்தும் பெருமையாக இருந்தது. அந்த நினைவுகளின் ஊடே தன பங்குக்கு  குழம்பு வைப்பதற்கு கம்பு இடிக்கும்போது எடுத்துவைத்திருந்த கம்ம மாவில் கொஞ்சம் அள்ளி அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு கூட்டு மாவு அரைக்கத்தொடங்கினாள் அலமேலு. கூட்டு மாவு அரைத்தபின்னர் ,முருங்கை கீரை பறித்துவந்து ,ஆய்ந்து அந்த பின்னர் கூட்டு குழம்பு வைத்து  சாப்பிட்டு படுத்தால் மணி பத்தாகும்.அப்போதெல்லாம் கடிகாரமெல்லாம் கிடையாது. 

ஊரில் யாராவது ஒருவர் வீட்டில் அது இருந்தாலே பெரிய ஆச்சர்யம்தான்.எல்லாம் தோராயமான கணக்குதான்.பெரும்பாலும் நிழலைவைத்தே பொழுதின் மணித்துளிகள் கணக்கீடு செய்யப்பட்டன.பெரிய மிட்டா மிராசுகள்  ஒரு சிலர் கடிகாரம் அணிந்திருந்தனர்.கடிகாரம் அணிவது ஒரு சமூக கவுரவம்.அலமேலுவுக்கெல்லாம் அந்த பாக்கியமில்லை.ஒரு நேரத்தில் பள்ளிக்கூடத்தில்  தனது ஊரிலுள்ள நொண்டிவாத்தியாரின்  திண்ணை ப்பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்த்துவிட்டு படிக்கவைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

    வாத்தியாருக்கு காசுகொடுக்க தமது கைகளில் அப்போது  காசு கொடுக்க வழியில்லாததால்,வீட்டிலிருக்கும் வரகு ,கடலை போன்றவற்றில் ஒரு மரக்காலோ,இரண்டு மரக்காலோ கொடுத்து சேர்த்து விடவேண்டுமென்று நினைத்து நொண்டி வாத்தியாரிடம் சென்று “ வாத்தியாரே என் மவனையும் பள்ளிக்கொடத்தில சேர்த்துக்க வாத்தியாரே. !பணம் எவ்வளவாம் / என கேட்டாள் அலமேலு. அவரும் ஒரு  வயிற்று பிழைப்பாளிதான், 

ஒரு  ஏழையாய் இருந்தபோதிலும் கொஞ்சமும் யோசிக்காமல்  “பரவாயில்லை அலமேலு, நாளைக்கே உன் மகனை அழைத்துவா! என நொண்டி வாத்தியாரும் சொல்லிவிட்டார்.  இதை தன் கணவனிடம் கொஞ்சமும் கேட்காமல் தன மகனிடம் மட்டும் “தம்பி மணியா !நாளைக்கு நொண்டி வாத்தியாரிடம் பள்ளிக்கூடம் படிக்க போகவேண்டும் என்று கூறியதுதான் தாமதம், திடீரென கதறியழ ஆரம்பித்துவிட்டான் 

   சுப்பிரமணி. "போம்மா ,நானெல்லாம் பள்ளிக்கூடமெல்லாம் போக மாட்டேன்,அந்த வாத்தியார் காதைப்பிடித்து திருவுவாறு, தோப்புக்கரணம் போடச்சொல்லுவாரு’நான் பள்ளிக்கொடமெல்லாம் போகமாட்டேன் !”என கதறியழ ஆரம்பித்துவிட்டான்.ஆனால் அலமேலு விடவில்லை அப்பா! ராசா! கண்ணு “நீ பள்ளிக்கூடம் போனாதான் வாத்தியாரு ஆவலாம்,பெரிய உத்தியோகம் பாக்கலாம்,கையெழுத்து போடலாம் “ என ஆறுதலாக அலமேலு சொல்லி ,தன்னிடம் தனது அம்மா கெஞ்சுவதை கண்டு சற்று மனமிரங்கி ,சரிம்மா ! அந்த குட்ட வாத்தியாரு அடிச்சாருன்னா,நானா ஓடி வந்துடுவேன் என்ற சின்ன ஒப்புதலோடு தன மகன் சம்மதம் தெரிவித்தபின்னர் .அன்று தூங்கபோனாள்.இதயெல்லாம் கண்டும் காணததுபோல படுத்துக்கிடந்த பெருமாளு தன மனைவியிடம் என்ன செய்கிறாள் ,ஏது செய்கிறாள் என்று கேட்கும் ஆர்வமில்லை,

ஆனால் ஏது செய்தாலும் நல்லதுக்குத்தான் செய்வாள் என நம்பும் மனிதராக இருந்தான்.அவனுக்கு அதைபற்றி எல்லாம் கவலையில்லை.அவனது வாழ்நாளும்  எல்லாமும்  அவனுடைய ஆடு மாடுகள் ,அது எப்போது கன்னுக்குட்டி போடும்,அது எத்தனை மாத சினை ,இன்னும் எத்தனை நாள் கழித்து அது கன்னுக்குட்டி போடும் ,நாளைக்கு எந்த கொல்லையில் புல்லு செதுக்கலாம் என்பதைப்பற்றித்தான் கவலையாக இருந்தது. 

மற்றதை பற்றி எல்லாம் பெருமாளுக்கு பெரிதான கவலை ஒன்றுமில்லை. ஆனால் அலமேலு  ஒரு  ஆண்மகனாய் குடும்பத்தில் வலம் வந்தாள்.எதை எப்படி செய்யவேண்டும்என்பதை மிகநுட்பமாக தெரிந்து வைத்திருந்தாள்.யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்க மாட்டாள்.தன் மனதுக்கு பட்டதை மிகவும் தைரியத்தோடு செய்வாள்.அதுவும் எல்லாம்  நல்லபடியாகத்தான் முடியும்.



தொடரும்...

No comments:

Post a Comment