ஊர்வாழ தானுழைக்கும்
உண்மை மனிதர்களுண்டு
ஊருக்கே உரமாகிப்போன
உத்தம பேர்களுண்டு
எத்தனை புயல்வரினும்
எதிர் கொள்ளும் மனமுண்டு
வித்தகம் பல கற்ற
விந்தை மனிதர்களுண்டு !
ஒற்றை தனியுடலில்
ஒளிந்திருக்கும் மச்சம் போல
கற்றாழை மடல்வெளியில்
கண் விழிக்கும் மலரைப்போல
முற்றம் கடந்து பயணிக்கும்
முழுநிலவின் தண்ணொளியில்
சுற்றம்சூழ் வாழ்ந்திருக்க
சேர்ந்திருந்ததால் அழகென்பேன் !
கூவிஅழைக்கும் திசைவழியே
குயில்கள் அணிவகுக்கும் !
தாவித் திரிவதற்கு உயிர்
தாங்கி பிடிக்கும் மரங்களுண்டு !
ஆவிப்பிரிந்து போனாலும்
அப்படியே மாண்டு தீர்ந்தாலும்
கேவியழ நமக்கென்று ஓருயிர்
கானில் உறைந்து வாழ்வதுண்டு !
வாடைக் காலத்தில்
வண்ணம்பூக்கும் மரங்கள் !
ஓடைநீர் ஊர்றெடுத்து
ஓடிக்களிக்கும் வழியெங்கும்
உளுவையுயும் கெழுத்தியும்
ஓடிக் களித்திருக்கும்
இளமைப் பொங்கும் வாழ்வில்
இனிமை நிறைந்திருக்கும் !
குடித்து விளையாட
கிணற்றைபோல மடுவுண்டு!
அடித்து விளையாட
ஆறுபோல ஓடையுண்டு !மீன்
பிடித்து குழம்புவைக்க
பிடித்தமான சட்டியுண்டு
எடுத்து சமையல் செய்ய
எண்ணம்போல அன்னையுண்டு !
தலையில் மண்குடம்
தலைவி நடந்து செல்வாள்
தண்ணீர் சுமந்து கால்நடையாய்
தாவி தாவி சுடு பொடியில்
காலுக்கு செருப்பின்றி
தத்தளித்து நடந்து செல்வாள் !
காததூரம் கடந்து வந்து
கண்ணீர் வழிந்து நிற்பாள் !
உலையரிசி தோள்பையில்
ஊஞ்சலாய் ஓடியாடும் !
ஆய்ந்த காட்டுக்கீரைகள்
ஆவியில் பொங்கும் !
வாழையும் முருங்கையும்
வாய்ருசிக்கும் முசுட்டையும்
கேழ்வரகு கூழோடு
காட்ட வெளியில் மணக்கும் !
புற்றிலிருந்து ஈசல்
புறப்பட்டு வருத்தல்போல
கற்றல் அனுபவமற்ற
கவினுரும் அவள் நெஞ்சில்
கவிவெள்ளம் தோன்றி
காட்டாறாய் பெருக்கெடுக்கும்
காடு கரையெல்லாம் கடந்து
காற்றினில் ஏறி பயணிக்கும் !
மண் சுமந்தாள் ! அன்னை
கண்வழியே எனை சுமந்தாள் !
புண் பட்டாள் வாழ்வில்
துயர் பட்டாள் ! தொடர்ந்து
அல்லலுற்றாள் ! என்னை சுமந்து
அரவணைத்து இன்னலுலகில்
முல்லை க்காடாய் நெஞ்சில்
மணக்கின்றாள் எனத்தன்னை !

No comments:
Post a Comment