Monday, 24 December 2018

மறக்க முடியவில்லை



ஆறாம் வகுப்பு படிக்கும் போது
கிராமத்திலிருந்து
பள்ளிக்கு
வரும் வழியில்
அருகிலுள்ள  கொல்லையில்
கம்பு  கதிரை  திருடி  விட்டு ,
கொல்லைக்காரன்
கை  பாரையோடு
என்னையும்
என் நண்பர்களையும்
மூன்று மைல் தூரம்
துரத்தியதை,


பள்ளிக்கு
போகாமல்
இடையிலுள்ள
உடையான்குடிக்காடு தோப்பேரியில்
தொத்தனாம்புள் விளையாடி ,
மதிய உணவு சாப்பிட்டு  விட்டு,



பள்ளி   முடியும்  நேரத்திற்கு
சரியாக வீட்டிற்கு சென்றதை,



சின்ன வயசு
ராணியை  காதலிக்க
பள்ளிக்கு போகாமல்
ஓராண்டு
ஆடு  மேய்க்க சென்றதை,

அவள் -
என்னை காதலிக்காமல்
இன்னொருவனை  காதலிக்க...
வெறுத்து போய்
அடுத்த ஆண்டு
பள்ளிக்கு சென்றதை,



இரயில்வே  தண்டவாளத்தில்
மைல்  கணக்கில்
கருங்கல் துண்டுகளை அடுக்கி   வைத்து ,
இரயில்  அவற்றில் சத்தத்துடன்  ஏறி,
புகை கிளம்பி...
இரயில்
திடீரென நிற்பதை  கண்டு
பயந்துபோய்
ஊரை  விட்டு  ஓடியதை,


வடை சுட்ட
கடலை என்னையை தலையில் தடவி ,
வாடை  தாங்காமல்
வகுப்பு  தோழர்கள்
என்னை
கேலி செய்ததை,


ஆங்கிலபாடத்தில்
முட்டை  மதிப்பெண்  வாங்கியதை ,
 தமிழில்  மட்டும்
முதல்  மதிப்பெண்  வாங்கியதை,

மறக்க  முடியவில்லை!
சினிமாவில்
நடிக்க  வேண்டும்   என்பதற்காக,
கதை  எழுதி எழுதி
காலத்தை வீணாக்கி,
விழப்புரம் வரை சென்று
வீடு திரும்பியதை,



ராஜேந்திரனை காதலித்த
இளஞ்சியம்
என்னையும்
காதலிக்கிறேன் என்றதை,


அப்பாயியும் நானும்
மாட்டு வண்டியில்
தத்தனூருக்கு
ராத்திரி நேரத்தில்
சென்றதை,
வண்டி குடை  சாய்ந்து
சப்பாத்தி கள்ளியில்
அனைவரும் வீழ்ந்து கிடந்ததை ,


ஆறாம் வகுப்பில்
என்னை  சேர்த்த போது
இது பத்துகாசுக்கு கூட உருப்படாது !
என -
உவப்புடன்
என்
மாமன் என்னை வாழ்த்தியதை,
அலுமினிய தூக்கு வட்டாயில்
வழக்கமாய் கொண்டு வரும்
கம்பு  சோற்றை
என்னுடன் பகிர்ந்து கொள்ளும்
என் தலித் தோழன்
நக்கம்பாடி காமராஜை,

நண்பர் ஒருவர்
தான் காதலித்து
ஏமாற்றிய பெண்ணை
என்னை மனதார
திருமணம் செய்துகொள்ள சொன்னதை,


நாவல் பழம் விற்று
அரிசி வாங்கியதை,

ஒரு கிலோ கோதுமைக்காக
பள்ளிக்கு போகாமல்
ஒரு நாள் முழுதும்
ரேஷன் கடையில்  காத்து கிடந்ததை.


பதினைந்து ரூபாய் பணத்துடன்
பர்ஸ் ஒன்றை
கண்டெடுத்ததை,


கொல்லை வேலி ஓரத்தில்
சாற்றியிருந்த  கம்பந்தட்டையில்
பீடி துண்டால் பற்ற வைத்து
வேலியே எரிந்து சாம்பலானதை,


அப்பாயியோடு
மாட்டு வண்டியில்
உடையார்பாளையம்  சென்று
அந்த  கால
கண்ணன்  டூரிங் கொட்டகையில்
குறத்தி மகன் படம் பார்த்ததை ...


வானொலி பெட்டிக்குள்
ஆட்கள்
இருந்து கொண்டு பாடுகிறார்கள்!
என -
நீண்ட  காலங்கள்
நம்பி கொண்டிருந்ததை,


செலவுக்கு கொடுக்கப்படும்
சில்லறை காசுகளை கொண்டு
மிக சின்ன வயதில்
இலக்கிய இதழ்கள்
வாங்கி வாசித்ததை,


ஊருக்குள் முதன் முதலாக
மின்சாரம் வந்தபோது,
வீட்டுக்கு வீடு சென்று
மின் விளக்கு எரிவதை
வேடிக்கை பார்த்ததை,


கரிசல் காடெங்கும்
காலுக்கு செருப்பின்றி
அணில் அடிக்க
அலைந்ததை,


மறக்க  முடியவில்லை !


No comments:

Post a Comment