Monday, 24 December 2018

தேர்த்திருவிழா




கட்டு   சோறெல்லாம்
தயாராகிவிட்டது !
முந்தரி   கொட்டை  விற்ற  காசுகள்
ரெடியாகவுள்ளன !



குறிச்சிகுளம்
தேர்த்திருவிழா  தொடர்வதற்கு
ஒரு  மாதத்திற்கு முன்பே
சிறுக சிறுக  சேர்த்து
ரூபாய்
ஐம்பது    தேறிவிட்டன!




இன்னும்  பற்றாமைக்கு
ஆயி-
சுருக்கு பையிலிருந்து
ஆயி  தூங்கும்  போது
கொஞ்சம்  திருடிக் கொள்ளலாம் !




பெரிய  பய,
கட்ட பய,
குடியரசு
அவனுங்ககிட்டல்லாம்
நிறை  காசுகள்  உள்ளன!
அனேகமாக
அவர்கள்    முந்தரி  கொட்டைகள்
விற்று நிறைய
காசு  பணம்  வைத்திருந்தார்கள் !




ஒவ்வொருவரும்
ஒருவித
ஒரு கணக்கு போட்டனர் !
குறிச்சிகுளம்
தேர் அன்று இரவு
மாத்தூர்  சினிமா கொட்டகையில்
கண்டிப்பாக
ஒரு -
சினிமா பார்த்து விட வேண்டும் !
கவலையில்லை..!
நிச்சயமாக
அது -
எம்.ஜி.ஆர் .படமாகத்தான் இருக்கும் !


எங்கள்
சின்னவயதில்
எம்.ஜி.ஆர்தான்
எழையைகாக்க வந்த
கடவுளாக
எங்களுக்கு  தெரிந்தார் !




சினிமாவில்
குதிரையில்  வந்து
எதிரிகளை
அவர் பந்தாடுவதை பார்த்து...பார்த்து
நிஜத்திலும்
எங்களுக்கு  ஆபத்து வந்தால்
எம்.ஜி.ஆர்  வந்து காப்பாற்றுவார்
என
நம்பிகொண்டிருந்தோம் !





கடைக்கு கடை
என்னிடம்  இல்லாத
எம்.ஜி.ஆரின்
பழைய
பாட்டு  புத்தகத்தை...
தேடி  கண்டுபிடித்து
வாங்கி சேகரித்து ...



மற்றும் -
சிறு சிறு
எம்.ஜி.ஆர்  போட்டோகளையெல்லாம்
அலைந்து  அலைந்து
விலைக்கு  வாங்கி ...




மாமன்  வீட்டு
பெண்டு பிள்ளைகள்
என-
பெரிய  குடும்பம் !
பஞ்சம்  பிழைக்க போவது போல ...
தலையில்  கட்டு சோறு  மூட்டைகளோடு
ரயில் ரோட்டு  வழியாக
ஆண்டுத்தோரும்
குறிச்சிகுளம்
தேர் - தீமிதிக்கு
நடக்க  தொடங்கிவிடுவார்கள் !




வழக்கம்போல
தேருக்கு முதல்  நாளே
குறிச்சிகுளத்தை  வந்தடைந்து,
இரவெல்லாம்
கடைவீதியில்  சுற்றிதிரிந்து.





ராத்திரிக்கு
கட்டு சோற்று  மூட்டையை
அவிழ்த்து வைத்து,
அனைவரும் சுற்றி அமர்ந்து
தொட்டுக்கொள்ள
திருவிழாவில் விற்கும்
பலகாரத்தை   கடித்து கொண்டு
சோறு சாப்பிட்டு,



ஆங்கங்கே
ஸ்டேன்ட்  வைத்து விற்கப்படும்
மைதா மாவு  பாயாசம்,
கண்ணாடி குவளையில்
கலர்  கலராக  தெரியும்
சர்பத்தை   வாங்கி  குடித்து ...



குத்து கட்டை  போட
நல்ல  நல்ல பம்பரம் ...!


திருவிழாவை சிறப்பிக்க
நல்ல  நல்ல  ஊது குவளைகள்  !


நம்பிக்கைகளை
பல நிறங்களில்  காட்டும்
கலர்  கண்ணாடிகள் !


ஆட்டின் பீடி கட்டுகள்!
வெட்டும்புலி  தீப்பெட்டிகள் !
கூடவே-


லங்கர் கட்டைகள்
மூன்று  சீட்டு ஷோக்கள் !
எண்ணற்ற  சந்தோஷங்கள் !



சட்டிப்பானைகள்  விரைவில்
விற்று  தீர்ந்துவிடும்
என்பதற்காக -
திருவிழாவின்  முதல்  நாளே
ஆயி
அவற்றில்
சிலவற்றை  வாங்கிகொண்டு
வைக்க இடம் கிடைக்காமல்
ஒண்ட வந்த இடத்தில்
உபத்திரம்  செய்வார் !



விடிய விடிய
தெரு கூ த்துகலைஞர்களின்
நாடகத்தை பார்த்துவிட்டு,



படுப்பதற்கு
இடம் கிடைக்காமல்
எச்சிலுக்கும்
மூத்திரத்துக்கும்   இடையில்
இரவெல்லாம்  படுத்து  தூங்கி...




விடிந்ததும்
இருக்கிற  சில்லறையை
எண்ணி  கணக்கு பார்த்து ...
பொரி, பொட்டுகடலை வாங்கி,
ஏலத்தில்   மலிவாக  வாங்கிய.
வாழைப்பழம்
போறவற்றை
புதிதாக  வாங்கிய  முறத்தில்
வைத்து  தலையில்
சுமந்துகொண்டு
பொடி நடையாக  நடந்து ...


சந்தோஷமெல்லாம்  காணாமல் போக,
அலுப்பு கலந்த
சலிப்போடு
குறிச்சிகுளத்தை விட்டு
பிரிய மனமில்லாமல் ...
இலைக்கடம்பூர்
நடந்துபோக...






அடுத்த வருட
தேருக்கு
இன்னும்  எத்தனை  நாட்கள்  இருக்கிறது!
என
இப்போதே
நாட்களை  எண்ணி கொண்டு
இலைக்கடம்பூர்
நடந்து போவோம் !




காலங்கள்  பல கடந்து விட்டன ..!
எனினும்
எப்போதும்   போல குறிச்சிகுளம்
தேர் வழக்கமாக  ஒடிகொண்டிருந்தாலும்...
அன்றைய  நாட்களின்
தேரோட்டம் மட்டும்தான்
இன்னும் -
எனக்குள் இருந்து வருகிறது!



</div>

No comments:

Post a Comment