பார்வதி ஒரு வித படபடப்பில் இருந்தாள்.அவர் என்ன சொல்வாரோ ஏது சொல்வாரோ என்பதை நினைத்தால் அவளை அறியாமலேயே அவளுக்குள் ஏதோ ஒருவித நடுக்கம் ஏற்படுகிறது. அதை அவள் கட்டுப்படுத்த நினைக்கிறாள்.முடியவில்லை. தோட்டத்தில் கொண்டு வைத்த சுடு தண்ணீரில் அவர் குளிக்கும் சத்தம்கேட்கிறது.அண்டா பானைக்குள் சொம்பை விடுவதும் ,தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றுவதும் அது தரையில் விழுகின்ற ஒலி நன்கு கேட்கிறது. அடுப்படியில் பார்வதி உட்கார்ந்திருக்கிறாள். இடையில் ஒரு சுவர்தான் அதை நினைத்தாலே அவளுக்கு பெரிய மன அவஸ்தையாக இருந்தது. திண்ணையில் கலியன் உட்கார்ந்திருக்கிறான். மாடத்தில் சிம்னிவிளக்கு எரிந்துக்கொண்டிருக்கிறது.
எப்படியும் கலியன் நம்மை காப்பாற்றுவான்
என்று அவளுக்குள் ஒரு அசட்டு நம்பிக்கை. கலியனுக்கும் அத்தைக்கு ஏற்பட்டிருக்கும்
இக்கட்டான நிலைமையை புரிந்தவனாகவே இருந்தான். எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என மன
உறுதியோடு திண்ணையில் உட்கார்ந்திருந்தான்
கலியன்.
ஆறுமுகம் குளித்து முடித்தவுடன் உடம்பை
துணியால் துடைத்துக் கொண்டு தோட்டத்திலிருந்து வீட்டின் முன் வாசல் பகுதிக்கு
வந்தார்.சிறிது நேரம்நின்றவர் திண்ணையை திரும்பிப்பார்த்தார்.திண்ணையில் வேற்று
நபர் ஒருவர் உட்கார்ந்திருப்பதை கண்டு துணுக்குற்றவராய் யாரது ? என்றார். நான்தான் மாமா ?” மாமான்னா,யாரு ?” என்றார் ஆறுமுகம்.
நான்தான் மாமா கலியபெருமாள் ஊரிலிருந்து வந்திருக்கிறேன்!” ஓ !புள்ள மகனா?
எப்ப வந்த தம்பி? மத்தியானம் வந்தேன் மாமா !”
“அம்மா நல்லாருக்கா ?” நல்லா இருக்காங்க
மாமா!”
அப்பா நல்லாருக்காரா ?”
நல்லா இருக்காரு !” எப்படி சைக்கிள்ள மூணு
பேரு வந்தீங்க தம்பி?” இல்ல மாமா . அத்தையும் நானும்தான் சைக்கிள்ள வந்தோம்.காவேரி அம்மா கூட ஊரிலேயே இருக்கு.. ரெண்டு நாளைக்கு
காவேரி இங்க இருந்துட்டு போகட்டும்னு அம்மா விரும்புச்சு .
“காவேரி வரலியா !”
“வரல மாமா !”
சிறுது நேரம் ஏதும் பேசாமல் இருந்தார்.
பின்னர் ஏதும் பெரிது படுத்தா தவராக “
“சரி! காவேரி என்ன சொல்லுச்சு மாப்பிள்ள ?
ஒண்ணுமில்ல மாமா ! அது சந்தோஷமாத்தான்
இருக்கு மாமா, “அப்பாக்கிட்ட ஒன்னும்
கவலைப்படாதேன்னு சொல்லு மாமா என என்னிடம் சொல்லுச்சு மாமா !” என்றான் கலியன்.
கதவின் உட்புறத்தே நின்றவாறே இதைக்கவனித்துக்கொண்டிருந்தாள். எப்படியும் நாம்
நினைத்தவாறு ஏதும் விபரீதம் நிகழவில்லை,அதற்காக கடவுளுக்கு ஒரு கும்பிட்டு போட
வேண்டியதுதான் என பார்வதி தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
இருவருக்கும் திண்ணையில் சாப்பாடு
கொண்டுவந்து வைத்தாள் பார்வதி இருவரும் சாப்பிட்டு முடித்தபின்னர்.வாசலில் பாயை
கொண்டு வந்து போட்டாள் பார்வதி . ஆறுமுகமும் ,கலியனும் அதில் உட்கார்ந்துகொண்டு
இரவின் பாதி நேரம்வரும்வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
விடியற்காலையிலேயே எழுந்து “ மாமா நான் ஊருக்கு போயிட்டு வரேன் மாமா !’
என்று சொல்லிவிட்டு சைக்கிளைஎடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்ப தொடங்கினான். பத்திரமா
போய்ட்டு வா தம்பி! நான் சொன்ன மாதிரி பார்த்துக்கு” என்றார் ஆறுமுகம். “சரி மாமா!”
என்று சொல்லிவிட்டு சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஊருக்கு கிளம்பினான்.
“கொஞ்சம் இரு தம்பி போகலாம்!” என வாசலில்
சாணம் தெளித்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றவள்
நீராகாரம் ஒரு சொம்பு கொண்டுவந்து
கலியனிடம் கொடுத்து குடி தம்பி என்றாள். அதை வாங்கியவன் அப்படியே ஒரே மூச்சில்
குடித்துவிட்டு சொம்பை இந்தா அத்தே
என்றான் . அதை வாங்கி கொண்டவள் சரி தம்பி ! பார்த்து பத்திரமாய் போய்வா தம்பி ! என
வழியனுப்பி வைத்தாள்.
வீட்டினுள் சென்ற மனைவியை “பார்வதி நான்
கொல்லைக்கு போயிட்டு வரேன் !”என ஆறுமுகம் சென்றார். அவருக்குள் பல்வேறு விதமாக
நினைவலைகள் ஓடிக்கொண்டிருந்தன. இது நடக்குமா ?
இதை ஏற்றுக்கொள்வார்களா? இதை நான் மட்டும்தான் நினைக்கிறேனா ? என்னைப்போலவே
என் தங்கச்சி நினைக்கிறதா? அப்படி நினைத்தால் அது சாத்தியம்தான். எல்லாம் மொத்தமாக
குடிமுழுகிய பின்னர் .இனி யார் என்மகளை ஏற்றுக்கொள்வார்கள்? ஊராரின்
அவச்சொல்லுக்கும் ,கேலிக்கும் ,கிண்டலுக்கும்
யார் ஆளாகி தீர்ப்பது ? அதை விட செத்தே தீர்ந்து விடலாம் .அப்படி ஒரு
வாழ்க்கை ஒன்று தேவையா ? என மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றும். என்ன செய்வது ?
அப்படி ஒரு வாழ்க்கை தேவைதான் என்ற மனதுக்குள் ஒரு வலுவாக கட்டமைக்கப்பட்ட
நம்பிக்கையின்மீது நின்று கொண்டு நிகழ்கால
வெளிச்சத்தில் என் மகளின் வாழ்க்கையை யாசித்துக்கொண்டிருக்கிறேன்.
யாரிடமும் கட்டாயப்படுத்தி கேட்க இயலாத
ஒரு கருணை மிகுந்த ஆதரவை வேண்டி இரவும் பகலும் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.கடவுள்
கூலி அளப்பான் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு
ராத்திரியும் தலை சாய்க்கிறேன்.ஆயிரம் கடவுளிடத்தில் ஒரு
சாமிக்குக்கூடவா இறக்கம் இல்லாமல் போய் விடும்? நான் பூடகமாக சொன்னதை என் தங்கச்சி
மகன் புரிஞ்சிக்குவான்னு நினைக்கிறேன். என் மகளுக்கு திரும்பவும் ஒரு வாழ்க்கை கிடைக்குமா என்ற
சாத்தியமான அந்த முடிவு என் தங்கச்சி மகன் கையில்தான் உள்ளது.
என் தங்கச்சி கிழிச்ச கோட்டை
மாப்பிள்ளை கலியபெருமாள் தட்டமாட்டான்.
என் தங்கச்சிக்கு என் மேல உசுரு. இன்னைய வரைக்கும் என் மச்சான் என்னிடம் நேருக்கு
நேர் எதிர்த்து பேசியது கிடையாது.அவரே நான் நினைக்கிறத செய்வாருன்னு நினைக்கிறேன்.எது எது எங்கெங்கு
சேரணுமோ அது சரியாத்தான் நடந்துகொண்டிருக்கிறது என தனக்குத்தானே ஆறுமுகம்
சொல்லிக்கொண்டு கொல்லையிலிருந்து வீடு திரும்பிகொண்டிருந்தார்.
கைகளில் தண்ணீர் சொம்புடன் வாசலில்
பார்வதி நின்றுக்கொண்டிருந்தாள்.வீட்டின் படலைத்திறந்து கொண்டு வீட்டின் உள்ளே
சென்றவுடன் தண்ணீரை ஆறுமுகத்திடம் கொடுத்தாள் அதை வாங்கி முகத்தை கழுவிக்கொண்டு இரண்டு மடக்கு தண்ணீர்
குடித்து விட்டு தண்ணீர் சொம்பை பார்வதியிடம் கொடுத்துவிட்டு திண்ணையில்
உட்கார்ந்தார் ஆறுமுகம். பாரவ்தி திண்ணையின் அருகில் நின்று கொண்டிருந்தாள். தன்
கணவன் தன்னிடம் ஏதோ கேட்கப்போகிறான் என்று உள்ளூர மணம் சொன்னது. இன்னும் ஆறுமுகம் காலை
சோறு சாப்பிடவில்லை .இன்னும் காலை சோறு சாப்பிடாமலேயே இப்படி இவர் உட்கார மாட்டார். என்னவோ ஒரே
மர்மமாய் இருக்கிறது.
“ஏன் சோறு சாப்பிடலையா?” எடுத்து
வரட்டுமா? என்றாள். இல்ல அதெல்லாம் இப்ப ஒன்னும் வேணாம். அத அப்புறம்
பார்த்துக்கலாம்.
நீ என் தங்கச்சி வீட்டுக்கு போனீயே,என்
தங்கச்சி ஏதாச்சும் சொல்லுச்சா?” என்றார்ஆறுமுகம்.
இப்படி குத்துமதுப்பா கேட்டா என்னத்த
சொல்றத?வெவரமா கேட்டாத்தானே சொல்லுவேன் !” பார்வதி.
காவேரியை பத்தி அக்கா என்ன சொல்லுச்சு ?
“அது எதுவும் சொல்லல!”
“காவேரி கிட்ட பேசலையா ?”
“நல்லாத்தான் பேசுச்சு! ஊருக்கு போனவுடன்
காவேரிதான் சோறு குழம்பு ஆக்குச்சு. எங்க போனாலும் உங்க அக்காக்கூடத்தான்
போகுது.அவங்களும் காவேரி காவீரின்னு நொடிக்கு நொடிக்கு கூப்பிடுது. அவங்க ஆசையா
இருக்கிரதாலத்தான் காவேரி கொஞ்ச நாளைக்கு
இங்க இருந்துண்டு வரேன்னு சொல்லிடுச்சு! அதனாலத்தான் நானும் எதுவும் பேசாம
புள்ளைய அங்க உட்டுட்டு வந்தேன்!” என்றாள்
பார்வதி.
சிறிது நேரம் ஏதும் பேசாமல் மவுனம்
காத்தார்.பின்னர் எது நடந்தாலும்
நடக்கட்டும் நடக்கவேண்டியது நடக்காமலா போய்விடும்!” என்ற ஒரு வித பூடகமான பேசியபடி அங்கிருந்து
கடந்து சென்றார் ஆறுமுகம்.
ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் அன்றாட பணியில் பார்வதி ஈடுபட தொடங்கினாள்.
உச்சி பொழுது வருவதற்குள் ஊர்போய்
சேர்ந்தான் கலியபெருமாள். வீடுவந்த சேர்ந்த
கலியன் நேரே தோட்டத்துக்கு போயி சிமிட்டி
தொட்டியில் இருந்த தண்ணீரை அள்ளி முகத்தை கழுவி,வாய்க்கொப்பளித்துவிட்டு திண்ணையில்
வந்து உட்கார்ந்தான். அம்மா சின்னப்பிள்ளை மகனுக்கு அலுமினிய தட்டில்
காலையில் ஆக்கிய வரகு சோற்றை போட்டு குழம்பை ஊற்றி கொண்டு வந்து வைத்தாள். அதை
கலியபெருமாள் சாப்பிட்டு முடித்தான் . மகன் சாப்பிட்டு முடிக்கட்டும் என அமைதியாக
காத்திருந்தவள்
“மாமன் என்னப்பா சொல்லுச்சு?”
“அதெல்லாம் ஒன்னும் சொல்லலம்மா!”
“ஏதாச்சும் திட்டுச்சா ?”
திட்டுல ,ஆனால் ஏன் அழைச்சுகிட்டு
வரலைன்னு கேட்டுச்சு, நான் இங்க இருக்கிற நிலமைய சொன்னேன். அப்படியே
அமைதியாகிட்டார்!”
“உடனே நான் சொல்லல,எங்க அண்ணன் ஒன்னும்
சொல்லாது. வீணா போட்டு குழப்பிக்க வேண்டியதில்லை” என்றாள் சின்னப்பிள்ளை.
அருகில் நின்று மாமன் பேசுவதை
கவனித்துக்கொண்டிருந்த காவேரி ஏதும் பேசாமல் மாமனை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை
கவனித்த சின்னப்பிள்ளை
ஏண்டி காவேரி அப்படி என்னடி மாமனை உத்துப்பார்க்கிறே ? என காவேரியை
சுய நினைவுக்குக்கொண்டுவந்தாள். ஒன்னும் இல்ல அத்தை அப்பாவ நினைச்சுக்கிட்டேன்
அதான் என்னையே மறந்துட்டேன்” அப்பா என்ன பார்க்காம ஒரு நாழிகூட இருக்கமாட்டார்
,வந்து ஒரு வாரம் ஆச்சே,அவர் மனசுசில என்ன நினைக்கிறார்ன்னு தெரியல அத்த” என்றாள்
காவேரி. அதனாலத்தான் அப்பா என்ன சொல்லியிருப்பார்ன்னு மனசுக்குள் நினைச்சு
பார்த்தேன். அதை அப்படியே மாமன் சொல்றத
வச்சி அவர் எப்படி சொல்லியிருப்பார்ன்னு கற்பனையில் சினிமா படம் ஓடிக்கிட்டிருக்கு,அதனாலத்தான்
அப்படி பார்த்தேன் அத்தே என்றாள் காவேரி. கலிய பெருமாள் அங்கிருந்து துணியை
அள்ளி தோளில் போட்டுகொண்டு ஏரிக்கு
குளிக்கசென்று கொண்டிருந்தான்.
அன்று இரவு எல்லோரும் சாப்பிட
தயாராகி கொண்டிருந்தார்கள். காவேரி மேற்காலே
தெரு திண்ணையில் சிறு பிள்ளைகளோடு ஏதோ
சிரித்து விளையாடிகொண்டிருந்தாள்.அதன் சிரிப்பொலி எங்கும் கடந்துகொண்டிருந்தது.
கலியபெருமாள் அம்மாவோடு சமையல் கட்டில் நின்றுகொண்டிருந்தான்.
அவள் நான்கைந்து வட்டியை வரிசையாக வைத்து
ஒவ்வொரு தட்டிலும் கம்பஞ் சோற்றினை அகப்பையால் மொண்டு போட்டுக்கொண்டிருந்தாள். அதன்
பின்னர் அதை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று திண்ணையில் கொண்டு சென்று வைத்தான் கலியன்.
கருப்பரும் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
சோற்றுதட்டுகளை வைத்த பின்பு அம்மாவிடம்
சென்ற அவன் “ அம்மா மாமன் ஒரு சேதி
சொல்லிச்சு!” என்றான். என்ன சேதி என்றாள்.
“அது காவேரி பற்றியது !”
“என்ன சொன்னாராம் ?”
“அது காவேரி கல்யாணம் பற்றியதுதான் !”
கல்யாணமா? நீ என்னடா சொல்ற ?” ஆமாம் அம்மா
!” காவேரிய கட்டிக்கொடுக்கணும். ரொம்ப நாளைக்கு வீட்டில சும்மா
வச்சிருக்கக்கூடாது!” அப்பாக்கிட்ட சொல்லி ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லிச்சு !”
இத உன் கிட்டயும்,அப்பாகிட்டயும் சொல்ல சொல்லிச்சி !” என்றான்.
“மெதுவா பேசுடா அவ காதுல விழுந்திட
போவுது!” நாளைக்கு தனியா பேசிக்குவோம்.
நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் எல்லோரும் ஒண்ணா ஒக்காந்து தனியே பேசிக்குவோம்,அது
வரைக்கும்,யாருக்கிட்டயும் எதுவும் சொல்ல வேணும்
நாளைக்கு பேசி முடிவெடுப்போம்!”
எனக்கூறிக்கொண்டு அடுக்களைக்கு சென்றுவிட்டாள் சின்னப்பிள்ளை.
ஆனாலும்
அவள் மனதெல்லாம் ஒரே படபடப்பாயும் ,பரபரபபாயும் இருந்தது. நம்மை ஏன் அண்ணன் காவேரிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிச்சு? அதை ஏன் என்னை வரசொல்லி நேரில் சொல்லாமல்.கலியனிடம்
சொல்லிச்சு? அதற்குள் மறைமுகமாக
ஒளிந்திருக்கும் செய்தி என்ன? அண்ணன் என்ன சொல்ல நினைக்கிறது? என்பது அவளுக்கு இது
பாதி புரிந்தும் ,பாதி புரியாத புதிராக
இருந்தது.
ஆனாலும் காவேரியும் அவளை சுற்றிலும்
சுழன்று கொண்டிருக்கும் அவளின் காயம்பட்ட காலங்கள் புது மருந்திடவேண்டி கெஞ்சுகிறது. அவளின் இளமைக்கால
கனவுகள் வண்ண நீர் குமிழியாய்
அலை அலையாய் இதய வானில் மெல்ல
மெல்ல தவழ்ந்து கைகளுக்கு எட்டாத ஆகாய
வெளியில் நகர்ந்துக்கொண்டிருக்கின்றன.இயற்கையின் கதகதப்பில் அவளின் கரம்பற்றி
செல்ல ஒரு துணை வேண்டி அவள் நிற்பதை சின்னப்பிள்ளை நன்கு அறிந்து
வைத்திருக்கிறாள். அவளின் எல்லையற்ற
வனப்புக்குள் அவள் ததும்பி நிற்கிறாள். புரியாத வயதில் வாழ்க்கையை
தொலைத்தவள்,வாழ்க்கையை விரும்பி பருக விழையும் வேளைகளில் அது தூர விலகி நிற்கிறது.
காவேரி
அத்தை வீட்டின் எதிர்வீட்டு பிள்ளைகளுடன் திண்ணையில்
பல்லாங்குழி ஆட்டாம்
விளையாடிக்கொண்டிருந்தாள். சின்னப்பிள்ளை வீட்டுத்தோட்டத்தில் மட்டுக்கு தொட்டியில் தண்ணீர்
காட்டிக்கொண்டிருந்தாள்.
“தம்பி கலியா “
“என்னம்மா !”
“இங்க வாத்துட்டு போப்பா !”
“சரி வறேம்மா!”
என்றவன்,வீட்டுத்தொடத்த்துக்கு வந்து அம்மாவிடம் “என்னம்மா?” என்றான்.
“அப்பா எங்கே?”
அவரு
பக்கத்து வீட்டு குழந்தைவேலு தாத்தாவீட்டில ,அவரோடு பேசிக்கிட்டு
உட்கார்ந்திருக்காரு, “கூப்பிட்டு வரட்டுமா அம்மா?”
அதெல்லாம் வேண்டாம்!” அவரு வர்றப்ப
வரட்டும். நாம கொஞ்சம் பேசவேண்டியது
இருக்கு, நான் ஒரு விஷயம் கேட்ப்பேன்,நீ மறுக்காம செய்யுணும் !” செய்வியா?” என்றாள்
சின்னப்பிள்ளை.
“என்னம்மா திடீரென கேட்கிற?” நீ எதை சொல்லி ,நான் கேட்காம
போயிட்டேன்?”
நீ எதை சொன்னாலும்,நான் செய்வேன் அம்மா !”
“நீ கேட்கிறத
கேளும்மா ,நான் உயிரே போனாலும் கண்டிப்பா
செய்வேன்” என்றான் கலியன்.
“நீ காவேரிய கட்டிக்கிறியா?” என்றாள்.
கலியன் ஒருகணம் அதிர்ந்து பார்வதியை உற்றுப்பார்த்தான்.
.காவேரி வருவாள் !..
No comments:
Post a Comment