Monday, 28 January 2019

புள்ளின் குரல்

எழுதும் பொழுதுகளின் விழுதுகளில்
எழும்பும் புள்ளின் குரல் ஒலியில்
தொழுதுனை போற்றும் பகலின்
தொலை வெளியின் சுடுமணலில்
தாங்கும் மரங்களின் குளிர்நிழலில்
தகிக்கும் அனலின் நுண்வெளியில்
ஏங்கும் உயிர்நாள தனி வழியில்
ஏகாந்தமாய் கிடக்கின்றேன் !


வீசும் மழலைப் புன்னகையில்
வேயும் காற்றின் தனிமொழியில்,
பேசும் எல்லையற்ற சடப்பொருளில்
பெய்யும் வறுமையின் கண்ணீரில்,
பூசும் மஞ்சள் மாலையில்
புலம்பும் பகலின் பின்னிரவில்
பேசா சொற்களின் வேர்களில்
பேச்சின்றி வெறுமையில் கிடக்கின்றேன் !

அலையும் கடல் நுரைப்பூவில்
அசையும் நீலநிற வெளியில் ,
இசையும் ஞானப் பெருங்காட்டில்
எங்கோ உயிரின் ஒருமூலையில்
தொலைவில் தெரியும் வான்முகட்டில்
தூங்கா விண்மீன் வாய்பரப்பில்
கலையும் மேகப் புகைவெளியில்
கலப்பேன் ஞான உயிர்த்தீயில்.

சீறும் காற்றின் தவிப்புகளில்
சிலிர்க்கும் புனலின் துடிப்புகளில்
ஆறாக் காதலின் கனவுகளில்
அழையா இதழ்களின் மவுனங்களில்
பேரே சூடாத பெரும்பொருளில்
பிறப்பும் இறப்பும் இல்லா பெருவெளியில்
ஆருமற்ற காட்டின் தனிமையில்
ஆருயிர்  உருகிக் கிடக்கின்றேன் !

Image result for voice of  silence in modern paintings

No comments:

Post a Comment