Monday, 24 December 2018


இங்குதான் 


எனது தகப்பனார்    பிறந்தார் !

என்பது  வருடங்கள்

பழைமையானது

எனது  வீடு !

அதுவும்

அழகான  குடிசை வீடு..!



எனது

அத்தை கூட

தன்

மகனை

இந்த  வீட்டில்தான்

பெற்றெடுத்ததாக

பெருமையாக

சொல்லக்கேட்டிருக்கிறேன்.



குடிசை  வீடு

எல்லா விதத்திலும்  நல்லதுதான்  !

ஆனால்

ஆண்டிற்கு  ஒரு முறை

கூரை     வேய்வதற்குள்

அப்பாடா   என்றாகிவிடுகிறது !

சுமார் பத்தாயிரம்

இருந்தால்தான்

கூரை    போடமுடியும் !




வெயில் காலம்  வந்தால்

மிக

வசதியாக  இருக்கிறது !

மழைகாலம்

வந்தால்

இதமாக இருக்கிறது !

கூடவே

அட்டை பூச்சிகளின்

தொல்லைவேறு

குழம்பு சட்டியில்   விழுமோ !...

சோற்று  பானையில்  விழுமோ !...

அப்படி விழுந்தால்

குட்டம் வருமோ!...

என -

என் மனைவிக்கு கவலை !







அட்டையை    தொட்டால்

குட்டம்  வரும்

என்பதை

ஐந்தாம்  வகுப்பு வரை படித்த

என்  மனைவி

அழகாக  தெரிந்தது வைத்திருந்தாள் !







இரண்டு ஆண்டுக்கு

ஒரு முறை

கூரை  வேயவேண்டும் !

கையில் காசில்லாமல்

ஆறு ஆண்டுகள் கூட

கூரை  போடாமல் இருந்ததுண்டு,

அப்போதெல்லாம்

மழைகாலங்களில்

வீடெல்லாம் குளமாகும்.

ஒரு சில இடங்களில்

காளான்கள் கூட முளைப்பதுண்டு.







அடைமழைகாலத்தில்

அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி 

வீட்டில் விளையும் காளானை பிடுங்கி 

குழம்பும்  வைப்பதுண்டு.




ஒரு சில நேரங்களில்

உட்காரவே இடமிருக்காது !

ஈரமான  தரைகளில்

பழைய கித்தான் சாக்கு பைகளை போட்டு,

அதன் மீது  நைந்துபோன

கோரை  பாய்களையும்  பரப்பி ...




பெயருக்கு

தூக்கம்  என்ற

பெயரில் தூங்கி வழிந்து ...

அவ்வபோது  விழும்

மழைத்துளிகளில்  நனைந்து

விழித்தெழுந்து ...



மழைக்காலம்  வந்தால்

கூரை வீடு  வெறுத்து போகிறது!

ஆனாலும்

இதில்

என்

முன்னோர்கள்

வந்து போனார்கள்

என்பதற்காகவும்,

இங்குள்ள

தூணிலும், துரும்பிலும்

இன்றும்

அவர்கள்

உயிருடன்  இருப்பதாகவே

எனக்கு தெரிவதால் ...

வீட்டில்

சேதமாகும்  பொருட்களை

வீட்டிற்கு வெளியே

வெயிலிலும், மழையிலும்

போட  மனமில்லாமல்

தாழ் வாரத்தில்  அடுக்கி வைத்து

அழகு பார்க்கிறேன்!

எனினும்

என் மனைவி

அடுப்பெரிக்க விறகில்லாமல்

அவ்வபோது

அதை எடுத்து

அடுப்பெரித்து  வருகிறாள் !




வாழ்க்கையை போல

மண் சுவர்களில்

ஆங்காங்கே  விரிசல்கள்  தெரிகின்றன !

அதனிடையில்

சிறு  பாம்புகளின்

தோல்கள்  காணப்படுகின்றன !

அதனால்

பாம்பு  கடித்துவிடுமோ

என்ற கவலையில்லை!

ஏனெனில்

நான் -

சிறு வயதிலிருந்தே

இவைகளை

பார்த்து வருகிறேன்.




ஊரெல்லாம்

கான்கிரீட் வீடுகளாக

மாறிவிட்டன!

என்

வீட்டை தவிர...



தனது  அப்பாவால்

ஒரு வீட்டை கூட

கட்டமுடியவில்லையே

என -

எனது  மகன்கள்  நினைப்பதாக

எனக்கு தெரியவில்லை !

வீடு கட்டுவது

ஒன்றும்

வாழ்க்கையின்

பெரிய  சாதனையாக

இருக்க  முடியாது !

என்பது

எனது மகன்களுக்கு

தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு !






என்

ஏகாந்தமான

சிந்தனையை போலத்தான்

என்  வீடும்,

அதில்

புறாவும்

காக்கைகளும்

கோழிகளும்  வந்து

சிதைத்து

ஓட்டைகள் ஏற்படுத்துகின்றன!

அதனால்

மழை வரும்   போது

உள்ளே  விழும்

மழை நீரை

பாத்திரங்களை வைத்து

பிடித்து

அது

டீ  சாயம் போல  இருப்பதை

ஆவலோடு  பார்த்து ...




எனது

தத்தா காலத்திலிருந்து,

எனது

மகன் காலம் வரை

ஒரு   குடிசை  வீட்டில்

பிறந்து,

இன்றுவரை

ஒரு

குடிசை  வீட்டிலேயே

வசிப்பதில்-

எனக்கு எந்த

தாழ்வு மனபான்மையும்  கிடையாது !

தனிச்சொத்துரிமை

சமூகத்தில்

என்னைப்பற்றிய மதிப்பீடுகள்

பற்றியும்

எனக்கு  கவலையில்லை !



குடிசை

என்பது

ஏழ்மையின் குறியீடல்ல,

அது வாழ்க்கையின்  குறியீடாகும் ..!







No comments:

Post a Comment